எழுத்தாளர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாசலின் பெரிய முற்றத்திலிருந்த வேப்பமரத்திலிருந்து குயில் அந்த அதிகாலை வேளையில் கூவிக்கொண்டிருந்தது. கடிகாரத்தில் அலாரம் அடித்து மணி நான்கு என்றது
இப்போது எழுந்தால்தான் வேலைகளை முடித்துவிட்டு ஏழு மணிப் பேருந்து பிடிக்கச் சரியாக இருக்கும் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை அந்தந்த மாவட்டத்தில் அல்லாமல் அருகாமையிலிருந்த மாவட்டத்திலிருந்து நியமித்திருந்தனர். மேகலாவும் அவளது தோழியர் மூவரும் காங்கேயம் செல்ல வேண்டியிருந்தது.
ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்ல பழனி அல்லது தாராபுரம் பேருந்து பிடித்தால்தான் சரியாக இருக்கும். மூன்று நாள் சென்று வந்தாகிவிட்டது. இன்று நான்காம் நாள். தொலைபேசி கிணுங் கிணுங் என்று அழைத்தது. இந்த அழைப்பு கணவர் ராஜனுடையது என்று அறிவாள்.
”ஹலோ சொல்லுங்க”
”எழுந்துட்டியா, எழுப்பதான் போன் பண்ணேன்”
சரி என்று சொல்லி ரிசீவரை வைத்துவிட்டு வந்து பல்தேய்த்து முகம் கை கால் கழுவிக்கொண்டு சாமியறை சென்று எல்லா தெய்வங்களையும் இன்றைய நாள் நல்லதாக அமைந்திட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வந்து அடுக்களை புகுந்தாள்
மேகலா பள்ளி ஆசிரியை, கணவருக்கு நிலைய மேலாளராக இரயில் நிலையத்தில் பணி. வேலைநேரம் பகல், இரவு என்று மாறி வரும். இப்போது இரவுப்பணி (இரவு 8 மணிமுதல் மறுநாள் காலை 7 மணிவரை) மேகலா காங்கேயம் செல்வதால் இன்று ஆறு மணிக்கு வருவதற்காக நேற்று பிற்பகல் பணியில் இருந்த நண்பர் சிவாவை ஒரு மணிநேம் முன்னதாக அனுப்பி விட்டார் ராஜன். மகள் லதா பொறியியல் இரண்டாமாண்டு பயில்கிறாள். அவளுக்கு 7.15 மணிக்கு கல்லூரிப் பேருந்து வரும். அந்த நிறுத்தத்திற்கு அவளை அழைத்துச் சென்று விடவேண்டும்.
இப்போது மேகலாவை 6.45 மணிக்கு பங்க் நிறுத்தத்தில் விடவேண்டும். மற்ற நாட்களில் 8.00 மணிக்குப் புறப்படுவாள் இவர்கள் இல்லம் இருப்பது இரண்டு நிறுத்தங்களுக்கும் இடையில் உள்ள ரெயில்வே காலனியில்..
முதலில் தேனீர் போட்டாள் மேகலா, தனக்கு பூங்கான் கோப்பையில் வடிகட்டி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து தொலைக்காட்சியில் பக்திப்பாடல்களை மெல்லியதாக ஓடவிட்டாள். மகளுக்கும், கணவருக்கும் எலுமிச்சை சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் செய்தாள். காலைச் சிற்றுண்டியாக இட்டிலி வேகவைத்து ஹாட் கேசில் அடுக்கினாள். மகளுக்குப் பிடித்த வேர்க்கடலைச் சட்டினியும் அரைத்தாள், மகளுக்கு டிபன் பாக்சில் மதியத்திற்கு எடுத்து வைத்து, தண்ணீர் பாட்டிலும் அவளுக்கும் தனக்குமாக நிரப்பி வைத்தாள். லதாவை எழுப்பி விட்டு குளிக்கச் சென்றாள் மேகலா. கல்லூரிக்குப் போகும் பெண்ணாக இருந்தும் இன்னும் அம்மாதான் தலைவாரிப் பின்னலிட வேண்டும் லதாவிற்கு.
ராஜனை சிவா ஆறுமணிக்கு ரிலீவ் செய்து விட்டார். 6.10 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டார். இரவு முழுவதும் சற்றேறக்குறைய 60 வண்டிகள் ஓடுகின்றன. அதனால் சற்றும் ஓய்வெடுக்க இயலாது.
”மேகலா எல்லாம் முடிச்சிட்டியா”
‘ஆமாங்க, இந்தாங்க ‘ என்று அவரிடம் தேனீர்க் கோப்பையைத் தந்தாள்
மேகலா தனது ஹாண்ட் பேகில் வயலெட் நிறத் தண்ணீர் பாட்டிலையும் இட்டிலி, சட்டினி எடுத்து வைத்த சிறிய டிபன் பாக்சையும் வைத்தாள். . இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாங்கிய நீளமான அழகிய பர்சில் நான்கு ஐந்நூறு ரூபாய் நோட்டுகளையும் தேர்வறைக்கான அடையாள அட்டையையும், சிறிய நோக்கியா செல்போனையும் வைத்து உட்புறம் வைத்தாள். மற்றபடி இரண்டு நூறுரூபாய் நோட்டுகளும், சில பத்து,இருபது ரூபாய்த் தாள்களும் கைப்பையின் வெளிப்புறப் பகுதியில் இருந்தன. இவை போக, வர பயணச்சீட்டு எடுக்க உதவும்.
8.15 மணிக்கு சென்று சேர்ந்து விடுவதால் காலைச் சிற்றுண்டி மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறாள். தேர்வுப்பணி முடிந்து வெளியில் வருவதற்கு எப்படியும் 1.30 ஆகிவிடும், போகும் போது பள்ளியின் எதிரிலேயே இறங்கி விடலாம் ஆனால் வரும்போது பழனியிலிருந்து வரும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏறுவது கடினம். அதனால் பேருந்து நிலையத்திற்குச் சென்று ஏற வேண்டும். வீடு வந்து சேர 4.30 மணி அல்லது 5.00 கூட ஆகி விடும். . அதனால் இவர்கள் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள அபர்ணா ஹோட்டலில் மதிய உணவு அருந்திவிட்டு வருகிறார்கள்.
இத்தனை தூரம் தோழியர் ஒன்றாகச் சென்று வருவது கூட இனியதாகவே இருந்தது இவர்களுக்கு. தினம் ஒருவர் மதிய உணவுச் செலவை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்று மதிய உணவு இவள் ஏற்பதாக நேற்றே சொல்லிவிட்டாள்.
வழக்கமாக இவர்கள் பள்ளிக்குச் செல்வதும் 8.15 மணிக்குப் புறப்படும் பழநிப் பேருந்தில்தான், அந்தப் பேருந்து ஓட்டுநர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். சமயத்தில் வழக்கமாகப் பயணிக்கும் ஆசிரியைகள் நிறுத்தத்திற்கு வந்து சேரத் தாமதமாகி வழியில் கைகாட்டினாலும் நிறுத்தி ஏற்றிச் செல்வார்கள். ஒருநாளும் உட்கார்வதற்கு இடம் இருக்காது. ஓட்டுநருக்கு அருகில் உள்ள எஞ்ஜின் பெட்டியின் மீதும், முகப்பில் உள்ள கண்ணாடியின் அருகில் உள்ள இடத்திலும் ஆசிரியைகளின் ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பார்கள் ஓட்டுநரும் நடத்துநரும்
இப்போது ராஜன் மேகலாவை அழைத்துக்கொண்டு பங்க் நிறுத்தம் வந்து சேரவும், தாராபுரம் பேருந்து வரவும் சரியாக இருந்தது.
‘மேகலா இதுல ஏறேன்’
‘இல்லீங்க இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு பழனி வரும்’
‘சரி உன் விருப்பம், காலியா இருக்கேன்னு சொன்னேன் என்றார். நான்கு பெண்கள் ஏறினர், உடனே என்ன நினைத்தாளோ மேகலாவும், ”இதிலயே ஏறிக்கறேன். வரேங்க” என்று ஏறினாள்.
ஓட்டுநரின் பின்புறம் இரண்டாவது வரிசையில் சன்னலின் ஓரத்தில் அமர்ந்தாள் மேகலா. தோழியர் அடுத்து வரும் பழனியில்தான் வருவார்கள், பெரிதாக வித்தியாசம் இருக்காது நாம் ஒரு பத்து நிமிடம் முன்னால் செல்வோம் என்று நினைத்துக் கொண்டாள். நடந்துநர் வந்து பயணச்சீட்டு தந்தார், அவல் பூந்துறையில் நான்கைந்து பேர் ஏறினர்.
ஒரு கிராமத்துப் பெண்மணி) வந்து மேகலாவின் பக்கத்தில் அமர்ந்தாள். இப்போது பழனிப் பேருந்து இதை முந்திக்கொண்டு சென்று விட்டதைக் கண்டாள். போகட்டும் என்று வெளியில் பச்சை பசேலென வளர்ந்திருந்த மஞ்சள் வயல்களில் கண்களை ஓடவிட்டாள். அறச்சலூர் கடந்து நத்தக்காடையூரையும் தாண்டிவிட்டது பேருந்து .
திடீரெனப் படாரென ஒரு சத்தம். வண்டி அதிர்ந்து தடுமாறி நின்றது. முன்பக்கத்து சக்கரத்தின் டயர் வெடித்து விட்டது. ‘அடக்கடவுளே, மற்ற நாட்கள் என்றாலும் பரவாயில்லை தேர்வுப்பணி ஆயிற்றே’ என்று பதற்றம் அடைந்தாள். வேறு ஏதாவது பேருந்து வந்தால் அதில் ஏறிவிடுவோம் என்று பார்த்தாள் ஒன்றும் வரவில்லை.
நடத்துநரும் ஓட்டுநரும் இறங்கி வேறு டயரை மாற்றிக் கொண்டிருந்தனர். தோழியருக்கு இதைச் சொல்லி அலுவலகத்தில் தெரிவிக்கச் சொல்லவோம் என்று ஹாண்ட் பேக்கைத் திறந்து அலைபேசியைத் தேடினாள். அலைபேசியும், பர்சும் காணவில்லை, நன்றாகத் தேடினாள். இல்லவே இல்லை.
அப்போதுதான் பார்த்தாள் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த கிராமத்துப் பெண்ணையும் காணவில்லை. முன் இருக்கையில் இருந்த அம்மாளிடம், ”அம்மா இங்க என் பக்கத்துல இருந்தவங்களைப் பார்த்தீங்களா”
‘ஆமா அவங்க நத்தக் காடையூருல எறங்கிட்டாங்களே, எதுக்குமா கேக்கறே”
‘என்னோட பர்ஸ், பணம், செல்போன் எல்லாம் எடுத்துட்டாங்க”
சொல்லும் போதே கண்கள் குளமாகிவிட்டது மேகலாவிற்கு. எப்படி எடுத்திருப்பாள் என்று யோசித்த போதுதான் தெரிந்தது மூன்று பேர் இருக்கையில் சன்னலோரம் இருந்த மேகலா, நடுவில் ஹாண்ட்பேகை வைத்திருந்தாள் அதுதான் அவள் எடுப்பதற்கு வசதியாகி விட்டது, எவ்வளவு எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இருந்திருக்கிறோம் என்று நினைத்து வேதனைப்பட்டாள்.
அதோடு அதில்தான் தேர்வுப்பணிக்கான அடையாள அட்டையும் இருந்தது. மனதில் வேண்டாத தெய்வம் இல்லை, சீக்கிரமாகச் சென்று சேரவேண்டும் என்று, ஒருவழியாகப் பேருந்து புறப்பட்டது.
ஓட்டுநரிடம் சொல்லி பள்ளிக்கூட வாசலில் நிறுத்தி இறங்கினாள், ஒரே ஓட்டம்தான். இவளைக் கண்டதும் மல்லிகா ஓடி வந்தாள். மேகலாவின் பள்ளி அலுவலகத்தின் தலைமை எழுத்தர் இவர். ஆளுமையும் திறமையும் ஒருங்கே பெற்ற எவரிடமும் கடிந்து பேசாத ஆனால் கண்டிப்பானப் பெண்மணி.
‘ டீச்சர், நீங்க வர , ஏதோ தாமதம்னு சியாமளா சொன்னாங்க’
‘மேடம் , என்னோட ஐ.டி.கார்டும் இல்லை’
‘உங்க ஹாலுக்கு இன்னொருத்தர் போயிருக்காங்க, பதறாம போங்க’ என்று எண்ணைச் சொல்லி அனுப்பினார். மேகலா விரைந்தாள்.
அடுத்த பத்தே நிமிடத்தில் புதிய அடையாள அட்டையுடன் வந்து தண்ணீர் பாட்டிலைத் தந்து, ‘மொதல்ல தண்ணி குடிங்க, நிதானமா பணியைப் பாருங்க ‘ என்று ஆதரவாகச் சொல்லிச் சென்ற மல்லிகா தெய்வமாகத் தெரிந்தாள்.
எழுத்தாளர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings