எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நான்கைந்து நாட்களாக பேப்பர் வரவில்லை. செந்திலுக்குப் புரியவில்லை.
‘பேப்பர்காரன் போடவே இல்லையா… அல்லது போட்ட பேப்பர் காணாமல் ஏதும் போகிறதா…‘ ஒன்றுமே புரியவில்லை.
அவர்கள் இருப்பது மூன்றாவது மாடி. ஒவ்வொரு மாடியிலும் இரண்டிரண்டு பிளாட்டுகள், எதிரும் புதிருமாக. இவர்களுடையது 3A எதிர்புறம் 3B.
எப்போதும் பேப்பர்காரன் லிஃப்டில்தான் வருவான், லிஃப்டிலிருந்தபடியே பேப்பரை வீசிவிட்டு, அப்படியே அடுத்த மாடிக்குச் சென்றுவிடுவான். இதுவரை பேப்பர் மிஸ் ஆனதில்லை. நான்கைந்து நாட்களாகத்தான் பேப்பர் வரவில்லை. ஏஜென்ட்டுக்கு ஃபோன் போட்டான் செந்தில்.
‘ஓ… அந்த அப்பார்ட்மென்ட்டா… ரவிதானே அங்கே பேப்பர் போடறான். போடாம விட மாட்டானே… இதுவரைக்கும் ரிட்டன் எதுவும் வந்ததில்லையே… எதுக்கும் பையனைக் கேட்டு சொல்லட்டுமா… ‘ என்றார், அவர்.
அவர் சொன்னதைப் பார்த்தால் பையன் பேப்பர் போட்டுக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் கடைசிவரை ஏஜென்ட் திருப்பி கூப்பிடவே இல்லை என்பது வேறு விஷயம்.
யோசித்தான். வீட்டில் இருப்பவர்களிடமும் சொன்னான். வானதியோ அவனையே குறை சொன்னாள், ‘ ஏங்க… நீங்க ஒழுங்கா தேடியிருக்க மாட்டீங்க… ‘
இவன் கோபமானான், ‘ ஆமா நீ என் மேல மட்டும்தான் குறை சொல்லுவே… பேப்பர்காரன் பேப்பர் போடாம போயிருக்கான்… அவனை குறை சொல்லமாட்டே… ‘
இதற்கு மேல் பேசினால் அவன் கடித்துக் குதறிவிடுவான் என்பதால் பேசாமல் விட்டு விட்டாள். பாபுவும் மகிழ்வாணியும் கூட, ‘ அப்பா… யாரோ வேணுமின்னே நம்ம பேப்பரைத் திருடுறாங்க போல… எதுக்கும் ஆதவன் படத்துல சூரியா சூயிங்கத்துல மொபைலை நிக்க வச்சு வீடியோ எடுப்பாரே… அந்த மாதிரி உங்க மொபைலை நிக்க வச்சிடுங்களேன்… வீடியோ ஓடிக்கிட்டே இருக்கும்… பேப்பர் திருடன் கண்டிப்பா மாட்டிக்குவான்… ‘ என்றார்கள்.
‘ஐயோ… இருபதினாயிரம் ரூபா மொபைலு… எவனாவது அதையும் சுட்டுக்கிட்டு போயிட்டா… ‘ பதறினான் இவன்.
‘அப்போ அம்மாவோட மொபைலை வச்சிடுங்க… இருக்கறதுலேயே அதுதான் பழையது… ‘ என்றார்கள் கோரஸாய்.
உள்ளேயிருந்தே வந்தன அம்புகள். ‘அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசியில என் தலையில கைவச்சிடுவீங்களே… ‘
தொடர்ந்தாள் வானதி, ‘வேணா அதை வச்சுக்கங்க… ஆனா அப்புறம் புது மொபைல் வாங்கித் தந்துடணும்… அதுவும் லேட்டஸ்ட் மாடலா… சரியா… ‘
பேச்சு மூச்சு இல்லை.
காலையில் பெரும்பாலும் ஏழு மணிக்குள்ளாகவே பேப்பர் வந்துவிடும். ஆறரை போல வெளியே வந்தவனுக்கு லேசாய் நாற்றம் தெரிந்தது. லைட்டை போட்டுப் பார்த்தான். அப்போதுதான் தெரிந்தது சுவர் மூலையில் நாய் எச்சம் போல ஏதோ கிடந்தது. உற்றுப் பார்த்தான், நாயின் எச்சம்தான்.
எதிர்த்த பிளாட்காரனின் நாய்க்குட்டிதான் அதைப் பண்ணியிருக்க வேண்டும். அவன் சுமார் ஒரு வாரமாக நாய் வளர்க்கிறான். கோபம் மண்டைக்குள் ஏற… அவர்களது காலிங் பெல் பட்டனை அழுத்த்த்த்த்தினான்.
‘யாரது… இந்த அடி அடிக்கறது… ‘ என்றபடியே கதவைத் திறந்து கொண்டு வேகமாய் வெளிப்பட்டான் கோபிநாத். எதிர்பிளாட்காரன். வாடகைக்குத்தான் இருக்கிறான். ஓனர் பம்பாயில் இருக்கிறார்.
‘ இது யார் வேலை… உங்கக் குட்டியாத்தான் இருக்கும்… ‘ என்றான் இவன்.
‘சாரே… குட்டியல்லா… பப்பி… எங்க பப்பி இங்கெல்லாம் வந்து ‘ இரு ’ க்காது… ‘ என்றான். நாகர்கோவில் காரன். கொஞ்சம் மலையாள வாசனையும் அடிக்கும்.
‘ஸார்… இந்த அப்பர்ட்மெண்ட்டுல பத்து பிளாட் இருக்கு. நீங்க மட்டும்தான் நாய் வளர்க்கறீங்க… உங்க பப்பி இல்லேன்றீங்களே… அப்போ யாரு… ‘ கத்தினான் இவன்.
‘இது பப்பியோடது மாதிரி தெரியலையே… ‘ மறுபடியும் மறுத்தான் அவன்.
‘வேறென்னவா இருக்கும்னு நீங்களே கிளறிப் பார்த்துச் சொல்லுங்க… ‘ நக்கலடித்தான் இவன்.
முதலில் எரிப்பது போல பார்த்த அவன், தயக்கத்துடன், ‘ சரி… சரி… கார்ப்பொரேஷன் காரங்க குப்பை எடுக்க வருவாங்க… வந்தா இதையும் எடுக்கச் சொல்றேன்… ‘ என்றான் அவன்.
இவன் உடனே ‘அதை’ ஒரு வீடியோ எடுத்தான். அவன் ஓடிவந்து மொபைலை மறைத்தான்.
‘இப்போ எதுக்கு விடியோ எடுக்கறீங்க… ‘ என்றான் சற்றே கோபமாய்.
‘இன்னிக்கு சுதந்திர தினம், நாளைக்கு கிருஷ்ணஜெயந்தி, நாளை மறுநாள் ஞாயிறு… குப்பை எடுக்கறவன் வரமாட்டன். அப்போ அதுவரை இந்த கன்றாவி நாறிக்கிட்டு கிடக்கணுமா… இதோ இப்போவே போயி கார்ப்பொரேஷன் ஆபீஸ்க்கு மெயில்ல அனுப்பறேன்… அதோட அசோஸியேசன் செக்ரடரிக்கும் அனுப்பறேன்… அபார்ட்மென்ட்ல இனிமேல் யாரும் நாய் வளர்க்கக் கூடாதுன்னு கண்டிஷன் போடச் சொல்றேன்… அடுத்த மீட்டிங்ல இந்த வீடியோவ போட்டுக் காட்டி நாறடிக்கறேன்…‘ சொல்லிக்கொண்டே மடமடவென உள்ளே திரும்பினான், இவன். பின்னால் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளும் பின்னாலேயே ஓடினர்.
‘ நிக்க வச்சாச்சா… ‘ என்றாள் வானதி உள்ளேயிருந்தே.
‘ இல்ல இல்ல… வெளீல போகும்போதே நாறுது… அங்க நிக்க முடியல… ‘ என்றுவிட்டு நாறும் விவரத்தைச் சொன்னான்.
‘ அப்போ… நீங்க மொபைலை நிக்க வைக்கலை… ‘ என்றவள், ‘ உங்களால உருப்படியா ஒரு வேலை பண்ணமுடியுதா… இல்லை அதுக்கு துப்புதான் இருக்கா… ‘ என்று முடித்தாள்.
அவள் சொன்னது இவனை சுருக் என்று குத்த, அதே வேகத்துடன் திரும்பி வெளியே வந்தான். எதிர்பிளாட்டுக் காரன் அப்போதுதான் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு தூர நின்றபடி அவனைது பப்பி “இரு”ந்ததை அகற்றிக்கொண்டிருந்தான். அரவம் இன்றி அதே வேகத்தில் திரும்பிவிட்டான், இவன். அந்த களேபரத்தில் மொபைலை நிற்க வைக்கவும் மறந்தே போனான்.
ராத்திரிதான் அது நினைவுக்கு வந்தது. ஆனாலும் இரவு முழுவதும் வானதி படுத்துக் கொண்டே மொபைல் பார்த்துக்கொண்டிருப்பாளே, மொபைலைக் கொடுப்பாளா… என்ன செய்வது. யோசித்தான்.
அலமாரியில் ஒரு பழைய மொபைல் இருந்தது. அதை எடுத்து ஆன் செய்தான். அதில் சிம்தான் இல்லை. மற்றபடி வேலை செய்யும்.
கேமிரா வேலை செய்கிறாதா என்று பார்த்தான். வேலை செய்தது. இரண்டுபக்கமும் ஒட்டும் ஸ்டிக்கரை தேடி எடுத்துக் கொண்டான். ஒரு ஸ்டூலை எடுத்துக்கொண்டு வெளியே போனான். ஒரு ஸ்டேண்ட் வைத்து அதில் இன்டர்நெட் மோடத்தை வைத்திருந்தார்கள். அதையொட்டி ஸ்டிக்கரை ஒட்டி வீடியோ ஆன் செய்திருந்த மொபைலை ஸ்டிக்கரில் நிற்க வைத்தான். கம்பீரமாய் நின்றது, அது. நிம்மதி பெருமூச்சுடன் திரும்பினான், செந்தில்.
காலையில் எட்டுமணிக்கு வெளியே போனான். ஸ்டூல் போட்டு ஏறி மொபைலை எடுத்தான். வீட்டுக்குள் வந்து வீடியோவை ஓடவிட்டான்.
ஆறே முக்காலுக்கு பேப்பர்காரன் பேப்பர் வீசுகிறான். அடுத்த நிமிடம் எதிர்வீட்டு கிரில்கேட் சந்தில் நுழைந்து எட்டிப்பார்க்கும் அவர்களது பப்பி வெளிப்பட்டு பேப்பரை கவ்விக் கொண்டு உள்ளே போகிறது.
மொபைலை எடுத்துக்கொண்டு வெறியுடன் வெளியே வந்து எதிர்வீட்டு காலிங் பெல்லை அழுத்த்த்த்த்த்தினான்.
‘அடடடா… காலங்கார்த்தால யாரது… ‘ என்றபடி கோபமாய் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டான் கோபிநாத்.
‘இதைப் பாருங்க… ‘ என்றபடி மொபைலில் வீடியோவை ஓடவிட்டு காட்டினான் இவன். பார்த்துவிட்டு, திகைப்புடன், ‘ ஆமா… இன்னிக்கு ஒரு பேப்பர் உள்ளே கிடந்தது… ‘ என்றான் அவன் ரொம்பவும் சாதாரணமாய், ஏதோ இன்றுக்குமட்டும்தான் ஏதோ பேப்பர் அவர்கள் வீட்டுக்குள் கிடந்ததைப் போல.
‘ இன்னிக்கு மட்டும்தானா… நாலஞ்சு நாளா பேப்பர் காணலை… ‘
‘ சாரே… இன்னிக்கு உங்க பேப்பரை எங்க பப்பிதான் கவ்விட்டு வந்து போட்டிருக்கு போல… இதோ கொண்டு வந்து கொடுத்தடறேன்… ஆனா நாலஞ்சு நாளா உங்க பேப்பர் எங்கே போச்சுன்னு எனக்குத் தெரியாது… ஸாரி… ‘ என்றபடி மடமடவென உள்ளே போய் கலைந்த நிலையிலிருந்த பேப்பர்களை அள்ளிக்கொண்டு வந்து அப்படியே நீட்டினான் அவன். இவன் அதை வாங்கிக்கொள்ள… அதேவேகத்தில் உள்ளே ஓடிய அவன் கத்துவது இங்கே கேட்டது.
‘பப்பி வளர்க்கறேன் குப்பி வளர்க்கறேன்னு உங்க ஆத்தா வீட்டிலேர்ந்து தூக்கிட்டு வந்தேல்ல… அது அடிக்கற லூட்டிகளைப் பாரத்தேயல்ல… இந்த லட்சனத்துல பேப்பர் கிடைச்சதுன்னு கிச்சன் ஷெல்ஃபு அங்கே இங்கேன்னு மூணு நாளா பேப்பரா விரிச்சு விரிச்சுப் போட்டே… இப்போ பாரு உங்க பாட்டன் வீடியோ போட்டு ப்ரூஃப் பண்ணிக் காட்டறான்… இனிமே பப்பி கொண்டு வந்ததுன்னு சொல்லி பேப்பர்ல கையி வைப்பே… ‘
உள்ளே அவன் தன் மனைவியை திட்டிக்கொண்டிருந்தது இவனுக்கு கேட்காமல் இல்லை.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings