in ,

முடியாத முடிவு (சிறுகதை – வேறொரு முடிவுடன்) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தோசையை எடுத்துப் போட்டு சட்னி கொஞ்சம் ஊற்றி தட்டை எடுத்துக்கொண்டு மகளைக் கூப்பிட்டபடியே நடந்த தங்கம், எதேச்சையாய் வாசல் பக்கம் பார்க்க, அங்கே ஒரு கார் வந்து வெளிகேட்டை அடைப்பது போல நிற்பதைப் பார்த்துவிட்டாள்.

‘ நமது வீட்டு வாசலில் காரா… யாராக இருக்கும்… ‘ என்று அதிசயித்தபடியே தட்டை அப்படியே அருகில் இருந்த நாற்காலில் வைத்துவிட்டு ஆர்வத்துடன் வேகமாய் நடந்தாள். காரில் ராஜாத்தி அம்மாள் இருப்பதைக்கண்டு இன்ப அதிர்ச்சி மேலோங்கியது.

‘ அம்மா, நீங்களா… என்னம்மா, இந்த நேரத்துல, அதுவும் எங்க வீட்டுக்கு… ‘ என்று தடுமாறிய தங்கம், ‘ வாங்கம்மா… ‘ என்று வரவேற்றாள்.

ராஜாத்தி அம்மாள் காரைவிட்டு இறங்கி வந்தார்கள். காரை திரும்பவும் தங்கம் பார்ப்பதைக் கவனித்த ராஜாத்தி, ‘ நான் மட்டும்தான் வந்தேன்… ‘ என்றுவிட்டு, ‘ சரி, உள்ளே போலாமா… பேச நேரமில்ல… சீக்கிரம் வா… ‘ என்று அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே நடந்தார்கள்.

நமது வீட்டுக்குள் நமது முதலாளியம்மாவா என்ற சந்தோஷ மிகுதியில் தங்கத்துக்கு பேச வாய் வரவில்லை. உள்ளே அவளை கூட்டிக்கொண்டு வந்த ராஜாத்தி தனது கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தார்கள்.

சாப்பாட்டுத் தட்டு அருகில் அப்படியே இருக்க, வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த இனியாவிடம், ‘ செல்லம்… நீ எழுதினது போதும், தோசை ஆறியே போயிடும், எடுத்துக்கிட்டு உள்ளே போயி சாப்பிடு… பாட்டி வந்திருக்காங்க… நான் கொஞ்ச நேரம் அவங்களோட பேசிட்டிருக்கேன்… ‘ என்றுவிட்டு, நாற்காலியை சேலை முந்தானையால் துடைத்துவிட்டு, ‘ அம்மா நீங்க சேர்ல உட்காருங்கம்மா… ‘ என்றாள்.

அதற்குள் நாற்காலியில் உட்கார்ந்துவிட்ட ராஜாத்தியம்மாள் ஒரு மூச்சை இழுத்துவிட்டு, ‘தங்கம்… இது வெளீல யாருக்கும் தெரியக் கூடாது… ‘ என்றுவிட்டு, உடனே குரலையும் தாழ்த்திக்கொண்டு, ‘  இதுல நகைகள் இருக்கு தங்கம்… அய்யாவோட ஆபீஸ்ல ரெய்டு நடக்குது… அவங்க நம்ம வீட்டுக்கு வரவும் சான்ஸ் இருக்குது.  அதான் பணம் நகைகளை பத்திரப் படுத்திக்கிட்டிருக்கோம்… இந்தப் பெட்டியை யார்கிட்ட கொடுத்துவைக்கலாம்னு யோசிச்சப்போ உன் முகம்தான் மனக்கண்ணு முன்னாடி வந்தது… அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்… அதுக்கு காரணமும் இருக்கு. நார்மலா வீட்டுக்கு ரெய்டு வந்தா… சொந்தக்காரங்க, டிரைவர், தோட்டக்காரங்கனு நெருக்கமானவங்க எல்லாரையும் விசாரிக்கவும் செய்வாங்க… அவங்க வீட்டுக்குப் போயி தேடவும் செய்வாங்க… நீதான் வேலையை விட்டு நின்னு ரெண்டு வருஷம் ஆச்சே… அதனால் உன்னைப் பத்தி அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை… இதுல நகைகள் இருக்கு. பத்திரம்… ரொம்பப் பத்திரம்… இதை எங்கே வைப்பியோ… எப்படி வைப்பியோ எனக்குத் தெரியாது… ஆனா பத்திரமா இருக்கணும்… ரகசியமா இருக்கணும்… நான் எப்போ வந்து கேட்கறேனோ அப்போ என்கிட்டே கொடுத்தா போதும்…  சரியா… ‘ என்றவள், ‘ ஸாரி தங்கம்… நேரமாச்சு… நான் கிளம்பறேன்… ‘ என்று படபடத்தபடி எழுந்துகொண்டாள்.

.

.

.

.

அவளிடம் நகைப்பெட்டியை பத்திரமாய் வைத்திருக்கச்சொல்லி கொடுத்துவிட்டு போன முதலாளியம்மாள் திடீரென்று அவர்களும் அவரது கணவரும் ஒரு வாரத்துக்கு முன்னதாக ஒரு கார் ஆக்ஸிடெண்ட்டில் இறந்துவிட்டார்கள்  என்ற செய்தி இடியாய் வந்து விழுந்தது  தங்கத்துக்கு.

‘ ஐயோ. ஐயோ… ‘ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடினாள், தங்கம்.

அவர்களது வீடு அமைதியாக இருந்தது. மகனும் மருமகளும் இருந்தனர். மற்ற சில உறவினர்களும் இருந்தனர். அவர்களது வேலைக்காரி மூலம் லாரி ஆக்ஸிடெண்ட்டில் அம்மாவும் அய்யாவும் இறந்துவிட போலீஸ் கேஸ் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டாள் இவள். அவர்களது மகனிடம் துக்கம் விசாரித்தாள். ஆனால் நகைப் பெட்டிப் பற்றி மட்டும் பேசவே இல்லை.

வீட்டுக்கு வந்ததும் மண்டைக் குழம்பியது, இவளுக்கு.  ‘நான் எப்பொழுது வந்து கேட்கறேனோ அப்பொழுது என்னிடம் கொடுத்துவிடவேண்டும்… வேறு யாருக்கும் தெரியவும் கூடாது… ‘ என்று சொல்லித்தான் பெட்டியைக் கொடுத்தார்கள்.  அம்மாவோ இப்போது உயிருடன் இல்லை.  அது ரகசியம் என்று அம்மா சொன்னதால் வேறு யாரிடமும் சொல்லியிருக்க வாய்ப்புமில்லை. யாரும் வந்து கேட்கப் போவதுமில்லை.

பேசாமல் நாமே அதை வைத்துக்கொள்ளலாமா…

அது அம்மாவுக்கு செய்யும் துரோகமாகிவிடாதா… 

அவளால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை….

இரவு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.

திடீரென்று யோசனை வேறுவிதமாய் ஓட ஆரம்பித்தது.

ஒருவேளை அந்தம்மாள் நம்மிடம் பெட்டி கொடுத்திருப்பதை எங்காவது எழுதி வைத்திருந்து மகன் மருமகளுக்கு அது தெரியவந்து, பிறகு அவர்கள் நம்மிடம் வந்து கேட்டு, நாமும் ஆமாம் என்று சொல்ல, அவர்கள், ‘அப்படியானா அன்னிக்கு  துக்கம் விசாரிக்க வரும்போதே ஏன் இதுபற்றி சொல்லவில்லை… எங்களிடமிருந்து அதை மறைக்க எண்ணினாயா…‘ என்று நம்மிடம் கேட்டால் அப்போது நாம் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வது.

சின்னம்மாவுக்கு நம்மை பிடிக்காமல்தானே வேறொரு வேலைக்காரியை வைத்துக் கொண்டார்கள் அன்றைக்கு.. இதையே சாக்காக வைத்துக்கொண்டு நம்மேல் ஏமாற்றுக்காரி என்று முத்திரைக் குத்திவிட்டால்…?

பேசாமல் முந்திக்கொண்டு நாமே போய் பெட்டியைக் கொடுத்துவிடலாமே…

காலங்கார்த்தாலேயே பெட்டியுடன் கிளம்பிவிட்டாள்.

எதிர்ப்பட்ட சின்னவரிடம் விவரத்தைச் சொல்லி அந்தப் பெட்டியை இவள் கொடுக்க. ‘அப்படியா… இதுபத்தி அம்மா எதுவும் என்கிட்டே சொன்னதில்லை… தேங்க்ஸ் தங்கம்… ‘ என்றபடி பெட்டியை வாங்கிய அவன், தனது மனைவியைக் கூப்பிட்டு, விவரத்தைச் சுருங்கச் சொல்லிவிட்டு, ‘ இதை உள்ளே கொண்டு போய் வை… ‘ என்றான்.

உடனே, புருவங்களைச் சுருக்கிக்கொண்டு ஒரு பெருங்குண்டைத் தூக்கிப் போட்டாள் அவள்.

‘ ஏ… ஒழுங்கா சொல்லு… இந்த ஒரு பெட்டிதான் கொடுத்தாங்களா… இல்ல இன்னும் வேற ஏதும் கொடுத்திருந்து, பெரியம்மா இனிமே திரும்பி வந்து கேட்கவா போறாங்கன்னு நீ திருட்டுத்தனமா எடுத்து வச்சுக்கிட்டியா… ‘

இவளது நேர்மை இப்போது தீப்பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முடியாத முடிவு (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    காணாமல் போன பேப்பர்கள் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு