in ,

யதார்த்தத்தின் வலி (சிறுகதை) – மீனாக்ஷி சேகர்

எழுத்தாளர் மீனாக்ஷி சேகர் எழுதிய  சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

காலையில் அலாரம் அடித்த போது கவிதாவிற்கு எழுந்திருக்கவே மனமில்லை. கண்கள் திகுதிகு என்று எரிந்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்றிருக்கிறது. ராத்திரி சரியான தூக்கமில்லை. மணி 5. அரவிந்த் ப்ளஸ் 2 பரீட்சைக்காக 4:00 மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டான். 

அனிச்சையாக மகேஷின் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். நீல விளக்கின் ஒளியில் அசைவற்று அவன் உறங்குவதை பார்க்கும் போது வயிற்றுக்குள் சொரசொர வென்றது. இன்றோடு ஒரு வருஷம் ஆகிறது. இப்படி உணர்வின்றி அவன் படுக்கையில் விழுந்து…

பெருமூச்சு விட்டபடி பல்லைத் தேய்த்து முகத்தை கழுவும் போது கண்ணீரும் சேர்ந்து வழிகிறது. போன வருஷம் இதே நாளில் மகேஷுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு . மறு நாள் சந்தோஷமாக கோவிலுக்கும் ஹோட்டலுக்கும் போக கிளம்பினார்கள் . வண்டியை உதைத்து ஸ்டார்ட் பண்ணி சில வினாடிகளில் லேசாக தலை சுற்றி கட்டுப்பாட்டை இழந்து மகேஷ் சரிந்து விழுந்தான். 

பின்னாடி அரவிந்தோடு தன்னுடைய வண்டியில் வந்த கவிதா பதறிப்போனாள். விழுந்த வேகத்தில் பக்கத்தில் இருந்த ஒரு கல்லில் மோதி,தலையில் பலத்த அடி . உதவிக்கு வந்த சில பேர், தண்ணீர் தெளித்து எழுப்பியும் அவனுக்கு தெளியவில்லை.. அவசரமாக ஒரு ஆட்டோவை பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடினாள். 

பல வாரங்கள் ஆஸ்பத்திரி வாசம்.என்னென்னவோ பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே, மருந்து… ஒன்றும் பிரயோஜனமில்லை. சம்பளத்தோடு இருந்த விடுப்புகளெல்லாம் தீர்ந்தது. இப்போது சம்பளமில்லா லீவ்.

” அம்மா குட் மார்னிங்…காப்பி தறியா” 

 “குட் மார்னிங்.அரவிந்த் ..தோ வரேம்பா…”

கவிதாவுக்கு பேசும் கண்கள், நிமிர்ந்த நடை, சிவந்த , ஒடிசலான மேனி.. அலங்காரப் பிரியா.. மொத்தத்தில் வசீகரி!.. இப்போ? கண்ணாடியில் தன்னை பார்த்த கவிதா ஒரு கணம் திகைத்துப் போனாள்!கண்களை சுற்றி கருவளையம்.ஒளி இழந்த விழிகள். ஒப்பனை காணாத முகம்…அவள் சிரித்து ஒரு வருஷம் ஆகிறது.

 அடுப்பில் பாலை ஏற்றிவிட்டு காய்களை நறுக்க ஆரம்பித்தாள். 

ஆதிராவுக்கு ஏழரை மணிக்கு காலேஜ் பஸ். அரவிந்த் எட்டு மணிக்கு கவிதா 8:45க்கும் கிளம்பி ஓடுவார்கள். டிபன் சமையல் இரண்டும் முடித்து டப்பா கட்டி, மகேஷுக்கு தேவையான ஜூஸ் இளநீர் மோர் எல்லாவற்றையும் ரெடி செய்து, அவசரமாக நெற்றியில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு ஓடுவது வழக்கமாகிவிட்டது.

மகேஷை கவனித்துக் கொள்ள ஏஜென்சி மூலமாக சரவணனை அமர்த்தியிருந்தாள். காலை ஐந்து முதல் 12 மணி வரை அவன் பார்த்துக் கொள்வான். பிறகு கவிதாவின் நாத்தனார் சுஜாதா வந்து உதவியாக இருப்பாள். நாலு மணிக்கு வரும் பிள்ளைகள் இருவரும் அப்பாவை மாற்றி மாற்றி பார்த்துக் கொள்கிறார்கள்.

பள்ளி வேலை முடிந்து டியூஷன் எடுத்துவிட்டு கவிதா வர ஆறு மணியாகிறது. அவசரமாக சமையலை முடித்து விட்டு அவள் கவனித்துக் கொள்கிறாள். 

முழு நேரம் சரவணனை அமர்த்தி கொள்ள பொருளாதார இடம் கொடுக்கவில்லை. அந்த சில நாட்களிலே குடும்பத்தில் சரவணன் ஒட்டிக் கொண்டான் கவிதாவிடம் ரொம்ப மரியாதை.

கட்டு செட்டாக குடித்தனம் செய்தும் சமாளிக்க முடியாமல் மருத்துவ செலவு போய்க் கொண்டிருக்கிறது. சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணம், அலுவலகத்தில் மகேஷுக்கு கிடைத்த பிஎஃப் பணம் அவளது நகைகள் எல்லாம் கரைந்து விட்டது. நெருங்கிய சொந்தம், நட்புகள், ஓரளவுதான் செய்யலாம் .இப்போ குடியிருக்கும் வீடு மிஞ்சியி ருக்கிறது.

குக்கர் விசில் எண்ணத்தை கலைத்தது. சரவணனுக்கும் காப்பியை கொடுத்த போது “அக்கா இங்க வாங்களேன்… சாருக்கு மூச்சு விடுறது கஷ்டமா இருக்காப்ல தெரியுது.. ராத்திரி நீங்க ஏதும் கவனிச்சீங்களா ” என்றான் கரிசனத்தோடு.

“சரியா தூக்கம் இல்லப்பா… இருமல் அதிகமா இருந்தது. கொஞ்ச நேரம் பொறுத்து டாக்டரிடம் கேட்கலாம்னு இருக்கேன் ” என்றாள் 

சரவணனுக்கு 32 வயது.மதுரை பக்கம் . பெற்றோர், அக்கா தம்பி தங்கை என்று குடும்பம் அவன் தோள்களில். கவிதா அவனுக்கு மாதம் 15,000 கொடுக்கிறாள். இன்னொரு இடத்தில் இருபதாயிரம் கிடைக்கிறது. கடந்த பத்து வருஷமாக இப்படித்தான் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறான். தங்கையின் கல்யாணம் தம்பியின் படிப்பு என்ற, பொறுப்புகளில் வயதுக்கேற்ற வாலிபக்கனவுகளை வாசலிலே நிறுத்தி வைத்திருக்கிறான். 

அவசரமான இந்த காலைப் பொழுதுகளை கொக்கி போட்டு நிறுத்தி வைத்து விட ஏங்குகிறாள் கவிதா. நிம்மதியான தூக்கம், ருசிக்கும் உணவு, குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம்… இதெல்லாம் கனவாகவே போய்விட்டது.

குழந்தைகள் இருவரும் கிளம்பி விட்டார்கள்.ஆதிராவிற்கு இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது. காலேஜ் முடிய. மேலே படிக்க ஆசை என்றாலும் குடும்ப சூழ்நிலை புரிந்த பெண். நல்ல வேலை கிடைத்து அம்மாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே இப்போதைய குறிக்கோள்.

டாக்டருக்கு விவரம் சொல்லி மருந்துகளைக் கேட்டு, சரவணனுக்கு தெரிவித்து, கணவனின் கரங்களை பரிவுடன் தடவி கொடுத்துவிட்டு கிளம்பினாள் கவிதா. வண்டியில் போகும்போது, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என்கிற கவலையின் அடிநாதமாக, முதல் முறை உணர்ந்த சலிப்பில் திடுக்கிட்டுப் போனாள். மெல்லிய அதிர்ச்சியோடு அந்த உணர்வை இன்னும் ஆழ்ந்து நோக்கினாள்.

இத்தனை நாள் பட்டுக் கொண்டிருக்கிற துன்பத்திற்கு சிகரம் வைத்தாற் போல் அந்த உணர்வு நெஞ்சம் முழுதும் வியாபித்தது. குற்ற உணர்ச்சியுடன், இயலாமையும், அவநம்பிக்கையும் மனதை அறுத்தது.

பள்ளியில் பாடம் எடுக்கும் போதும் மனம் லயிக்கவில்லை. அவள் மீது மரியாதையும் அன்பும் கொண்ட மாணவிகள், “மேம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.. உடம்பு சரியில்லையா” என்று கேட்டபோது, தன்மீதே எரிச்சலும் கழி விரக்கமும் கொண்டாள்.

உடன் பணிபுரியும் ஆசிரியைகள் மகேஷ் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் எங்கே அவர்களிடம் உதவி கேட்டு விடுவோமோ என்ற அச்சமும் இருந்தது. 

மாலை சரவணன் போன் செய்து ” அக்கா காலைல ரெண்டு தடவ சார் வாந்தி எடுத்தாங்க…. ஸ்கூல்ல உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்னு இருந்துட்டேன்.. கொஞ்சம் ரத்தம் வேற சேர்ந்து போகுது… எதுக்கும் டாக்டர் கன்சல்ட் பண்றது நல்லது”

“ஐயோ!… ஏம்பா எனக்கு மெசேஜ் போடக்கூடாதா?

 “பயப்படாதீங்க… டாக்டரை கேட்கலாம்… இன்னொரு விஷயம்கா எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும் அம்மாக்கு உடம்பு செரியில்ல ..” என்றவன் சற்றே தயங்கி, “எனக்கு ஒரு பத்தாயிரம் தாங்கக்கா..சம்பளத்தில் கழித்துக்கோங்க” என்றான் 

ஊருக்கு பஸ் ஏறியவன், கவிதாவுக்காக வருந்தினான். “பாவம் இழுத்து புடிச்சிட்டு செய்றாங்க எத்தனை நாளைக்கு செய்ய முடியுமோ தெரியல…சார் அவங்களுக்காகவாது எழுந்துட்டா பரவால்ல” என்ற நினைப்பினூடே இன்னோர் எண்ணமும் பளிச்சென்று வெட்டியது.

அப்ப நான் இன்னொரு இடம் பார்க்க வேண்டியிருக்கும்… ஒரு வருஷமா இந்த வருமானம் எவ்ளோ கை கொடுத்துச்சு .. சார் கொஞ்சம் நல்லா யிட்டா போதும்… ஆனா என்னையே வேலைக்கு வச்சுக்கணும்…” முற்றிலும் முரண்பட்ட இந்த சிந்தனைகள் அவனுக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது.

அடுத்த வாரம் கவிதா குடும்பத்திற்கு எதிர்பாராத பெரும் சந்தோஷம். ஆம்!மகேஷுக்கு ஓரளவு நினைவு வந்திருக்கிறது ! பக்க வாதம் இருந்தாலும் நாக்கு குழறி, எச்சில் வழிய….ஏதோ சொல்ல முயற்சிப்பது அடுத்த சில தினங்களில் தெரிந்தது… கண்களில் நீர்வழிய அவன் சைகை செய்து சொன்னது “ரொம்ப தொண்டை வலிக்கிறது முடியல….!”

 அந்த நிமிடம் கவிதாவிற்கு நெஞ்சமே நொறுங்கினாற் போல் இருந்தது.

தொண்டை ரணமாக இருக்கிறது. நெஞ்சில் சளி சேர்ந்து போய் மூச்சு திணறல் இருந்தது டாக்டர் அதுக்கு தகுந்த மருந்துகளை கொடுத்து பத்து நாள் பொழுது போயிற்று. அடுத்த மாதம் வலி நிற்காமல் அவன் அழுகை அதிகரிக்கவே இன்ன பிற டெஸ்டுகளுக்கு எழுதிக் கொடுத்தார்கள். வலி! வலி! 

பணத்தை கொடுக்கலாம் ஆறுதல் கொடுக்கலாம். அன்பு மேலிட உயிரையும் கொடுப்பேன் என்றும் சொல்லலாம்… ஆனால் ஒருவர் வலியை இன்னொருத்தர் வாங்கவே முடியாது. பெற்ற தாயாக இருந்தாலும் கட்டின காதல் மனைவி இருந்தாலும்.அவனவன் வலியை அவன் தான் அனுபவிக்க வேண்டும்.

பரீட்சை சமயம் ஸ்கூலில் லீவு எடுக்க முடியவில்லை. ஆஸ்பத்திரிக்கும் ஸ்கூலுக்கும் அலைந்து களைத்து, இளைத்துப் போய்விட்டாள் கவிதா. பயாப்சி எடுக்கச் சொல்லி விட்டார்கள். அவள் வேண்டாத தெய்வமென்று எதுவுமே இல்லை.

ஒரு வாரம் கழித்து வந்த ரிப்போர்ட்டில் அவள் பயந்தது நடந்தது . தொண்டையில் கேன்சர். மூன்றாம் நிலை.இந்த வலிகளை அனுபவிக்கத்தான் அவருக்கு மீண்டும் நினைவைக் கொடுத்தாயா முருகா என்று கதறினாள் கவிதா. குடும்பமே நிலை குலைந்து போனது. இந்த மனநிலையில் குழந்தைகள் எப்படி பரீட்சை எழுதுவார்கள் என்று மனம் தவித்தது. உடன்பிறந்தவன் போல் சரவணன் தான் அவளுக்கு சற்று ஆறுதலளித்தான்.

அடுத்த வாரம் சிகிச்சை ஆரம்பித்தாயிற்று.மருந்துகள் மாத்திரைகள்… கிமோதெரபி…. அவள் கேட்காவிட்டாலும் சொந்த பந்தங்களும் நட்புகளும் தங்களால் முடிந்த பண உதவியை செய்தார்கள்.

செலவு கட்டுக்கடங்காமல் போனது. இன்சூரன்ஸ் தொகையெல்லாம் போதவில்லை. மகேஷ் ஆசையாக வாங்கிய காரையும், சொந்த கிராமத்தில் அப்பா அவளுக்கு கொடுத்த வீட்டு மனையையும் விற்று விட்டாள். 

ஸ்கூல் லீவ் விட்டதும் கணவன் அருகிலேயே பழியாகக் கிடந்தாள். இடையில் அரவிந்தனுக்கு காலேஜ் அட்மிஷன், அதற்குண்டான செலவுகள் என்று பிரச்சனைகள் பூ தாகாரமாய் நின்றன…

 பிரார்த்தனைகள் தியானங்கள் என்று மனதை நிலைப்படுத்த முயற்சித்தாள் . ஆயாசமாக இருந்தது. மறுபடியும் அந்தக் கேள்வி தினமும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது இன்னும் எத்தனை நாளைக்கு!..

எப்படியாவது அவர் கண்விழிக்க வேண்டும் முன்பு போல் இல்லாவிட்டாலும் தன் குடும்பத்தையாவது அடையாளம் புரிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொண்டிருந்த கவிதாவின் பிரார்த்தனை இப்போ வேறு விதமாகிவிட்டது. போதும் முருகா எங்களால் முடியவில்லை அவரை அழைத்துக் கொள் என்று!

ஒரு வருடம் இப்படியே கடந்தது கடைசி நாட்களின் வலிகள் கொடூரமாய் இருந்தது. மகேஷ் தோற்று விட்டான். அவள் மகேஷை தோற்று விட்டாள்.. 

போதும் இனி செலவுக்கு என்ன செய்வது என்று தவிக்க வேண்டாம்.. அவளை மீறி ஒரு விடுதலையுணர்ச்சியில் .. அழக் கூட தென்பில்லாமல் இறுகிப் போயிருந்தாள். ஆறுதல் சொல்ல வந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

மகேஷின் ஆபீசிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் சற்று இங்கிதம் இல்லாமல் “பாவம் மகேஷ் .. ப்ரோமோசனக் கூட அனுபவிக்க முடியல … இப்ப அவர் போஸ்ட் காலி ஆயிடுச்சுனா எனக்கு கொடுக்கிறேன்னு இருக்காங்க ” என்று யாரோ ஒருவரிடம் தணிந்த குரலில் சொன்ன போது… திடுக்கிட்டு நிமிர்ந்தவள் பீறிட்டு வந்த துக்கத்தோடு பெரும் குரலெடுத்து… ” என் தங்கமே….” என்று மகேஷை கட்டிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். சரவணனும் சேர்ந்து கொண்டான்.

எழுத்தாளர் மீனாக்ஷி சேகர் எழுதிய  சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

.(முற்றும்)

                      

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தனிக்குடித்தனம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி