நூல் விமர்சனம்
நூல் : நகுலனின் நாலு கட்டு வீடு
ஆசிரியர் : குமரி உத்ரா
பதிப்பகம் :வேரல் புக்ஸ்
பக்கங்கள்: 98
விலை : ரூ140
பதிப்பு :ஜனவரி 2026
குமரி மாவட்டத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி தன் மாவட்டத்தின் பெயரால் குமரி உத்ரா என்று அழைக்கப்படுகிறார். மிகச் சிறந்த கவிஞர் மற்றும் மேடைப் பேச்சாளர். இச் சிறுகதை தொகுப்பு சென்ற வாரம் நெல்லை புத்தகக் கண்காட்சியில் வேரல் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது
இத்தொகுப்பு பதினொன்று சிறுகதைகளைக் கொண்டது . அனைத்தும் குமரி மண்ணின் மணம் கொண்ட கதைகள்..
இக்கதைகள் அனைத்தும் போட்டிகளில் வெற்றி பெற்றவை. ஒவ்வொரு கதையும் தன் அழகான நடையாலும், அழுத்தமான கதை கருவாலும், நம் மனதில் அழுத்தமான ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது. கிராமப்புறங்களில் உலவும் சில வார்த்தைகளையும், சில நடைமுறைகளையும் , பழக்கவழக்கங்களையும் இவர் தம் கதாபாத்திரங்களின் மூலம் நம் முன் காட்சிப்படுத்துகிறார். நாம் அறிந்து கொள்ளாத கிராமத்து பழக்க வழக்கங்களையும் கிராமத்து சொற்களையும் புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது . வவுலாடி.. மஞ்சாடி முத்துக்கள் ..போன்ற சொற்களை உதாரணமாக கூறலாம்
ஒவ்வொரு கதையும் ஒரு ஆழமான கருத்தை இயல்பாக போகிற போக்கில் வலியுறுத்தி செல்கிறது. நகுலனின் பழைய காலத்து நாலு கட்டு வீடு அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் இளமைக்கால நினைவுகளை மீட்டுகின்றது.
சிறுவயது தோழியை பல வருடங்கள் கழித்து சந்திக்கும் வான்மதி மனதைக் கவர்கிறாள். அவர்களுடைய இளமை கால சம்பவங்கள் அனைத்தும் அருமை கஞ்சியும், கானத்துவையலும், எழுத்து என்றாலும் நம்மை சாப்பிட அழைக்கிறது.. அனைத்தும் மண்மணம் வீசும் கதைகள்.
ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் ரசித்து எழுதியிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார்.. என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய அழகிய எழுத்து நடை, கதைக்குள் நம்மை இழுத்து செல்கிறது. தாயின் மணத்தை அவள் நூல் புடவையில் உணரும் மகள் நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறாள். மனம் கனக்கிறது. நம் உணர்வுகளை அசைத்துப் பார்ப்பதே எழுத்தாளரின் கதைக்கு கிடைத்த வெற்றி.
இக்கதைகள் அனைத்தும் கிராமத்து மண்ணின் மணம் கமழ எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. அங்கங்கே வரும் குமரி மாவட்ட வட்டார வழக்கு சொற்கள் ரசிக்க வைக்கிறது..
கிராமத்திற்கே உரிய பல விஷயங்கள் இக்கதைகளில் தூவப்பட்டிருக்கிறது அதுவும் இயல்பாக இருப்பதால் ரசிக்க முடிகிறது ..
அனேக இடங்களில் ஆசிரியரின் சொல் விளையாட்டு நம்மை பிரமிக்க வைக்கிறது
சுத்தம் கதையில் “ஒவ்வொரு வீட்டின் குப்பை கூடையும் சுத்தமானது அவளும் அவள் வண்டியும் அழுக்கானார்கள்..” ரசிக்க வைக்கும் சொற்கோர்வை
வவுலாடி.. பெண்மை தலைதூக்கும் சங்கரனின் பிரச்சனையை ஒரு கவிதையாய் சொல்கிறது. மூன்றாம் இன சிறுவர்களின் பிரச்சனையை அழகாக கொண்டு செல்வது ஆசிரியரின் திறமைக்கு வெளிப்பாடு
கவிதை உலகில் தன் தடத்தை பதித்து வரும் குமரி உத்ரா சிறுகதை பிரிவிலும் தன் முத்திரையை பதிக்கிறார்.. மொத்தத்தில் அனைத்து கதைகளும் மிக அருமையாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை தருவதாக எழுதப்பட்டுள்ளது.
அழகிய வார்த்தை பூக்களால் கட்டப்பட்ட பூமாலை இத்தொகுப்பு.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings