in ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஏதோ சந்தேகம் கேட்க வாயைத் திறந்த ரேஷ்மா, வாய்மேல் விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி ரிஷி காட்டிய மௌன பாஷையால் ‘டக்’கென்று அமைதியானாள்.

“ஏதாவது வேறு பாட்டு பாடேன் ரேஷ்மா, அம்மா  அப்பா  மூட் மாறும்” என்றாள் சௌம்யா மெதுவாக.

சுவாமி பாட்டுப் பாடினால் அவர்கள் மனநிலை மாறும் என்று நினைத்து, “அழைக்கிறான் மாதவன்” என்று மனம் உருகப் பாடினாள். பெரியவர்கள் இருவரும் அமைதியானார்கள்.

எல்லோரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் அம்மா. வெஜ், நான்-வெஜ் இரண்டும் செய்திருந்தனர். சாப்பாட்டின் வாசனையும் ருசியும் மிக அருமை.

இவ்வளவு ருசியான உணவை, அவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலும் சாப்பிட்டதில்லை ரேஷ்மா. கூடவே ஹெல்த் கான்ஷியஸ் வேறு. நிறைய சாப்பிட்டால் எடை கூடி விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு, ஆனாலும் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டாள்.

இருந்தும்  ரிஷியின் அம்மா அவளை கோபித்துக் கொண்டார். “வயசுப் பொண்ணு, வளரும் வயதில் இப்படிக் கொரித்தால் எப்படி? இவ்வளவு ஒல்லியாக இருந்தால் என்ன செய்வது? ஒரு நோய் வந்தால் கூட உடம்பில் எதிர்ப்பு சக்தி இருக்காது” என்றவர், கறியையும், மீன் வறுவலையும் அள்ளி அள்ளி வைத்தார்.

“அம்மா, இப்படி சாப்பிட்டால் நான் சென்னை போகும் வரை தூங்கிக் கொண்டே தான் போக வேண்டும். இன்னும் இரண்டு நாட்களுக்கு லங்கணம் தான் போட வேண்டும்” என்றாள்

அப்போது ரிஷி அவர்களோடு சென்னை செல்வதாக கூறினான். 

“நீ ஏன் சினிமாக்காரர்களுடன் சேர்ந்து போக வேண்டும்?” எனக் கேட்டார் அம்மா.

ரிஷி அப்போது தான் அவள் எப்படி சினிமாவில் சேர்ந்தாள் என்றும், அவளுக்கு தற்போது மிக உயர்ந்த சூப்பர் ஸ்டாரான அஷோக்கால் ஏற்படும் இடைஞ்சல்களையும் விளக்கினான்.

“சென்னைக்கு எப்போது கிளம்ப வேண்டும்?  டேய் ரிஷி, நானும் உங்களுடன் வரட்டுமா? எனக்கும் போர் அடிக்கிறது, எவ்வளவு நேரம் இந்த வயலையும் டி.வி.யையும் பார்த்துக் கொண்டிருப்பது? என்னங்க நீங்களும் வருகிறீர்களா?” என்றாள் ஆவலுடன்.

“நீ தனியாகச் சென்று யாரும் துணையில்லாமல் என்ன செய்ய முடியும்? நானும் உன்னுடன் வந்தால் உதவியாக இருக்கும்” என்றாள் அவன் அம்மா.

“நீ என்னம்மா செய்ய முடியும்? நீயே ஷுகர் பேஷன்ட், தினமும் இன்சுலின் போட வேண்டும்” என்றாள் சௌம்யா.

“சரி, அம்மா எங்களுடன் வரட்டும். சமையல்காரர்கள், மற்ற வேலையாட்கள் எல்லோரும் இருக்கிறார்களே” என்றான் ரிஷி.

“நீ போய்ட்டு வா காமாட்சி. நான் இந்த வய,லையும், வேலை செய்யும் ஆட்களையும் விட்டுவிட்டு எங்கும் வரமாட்டேன். நீ வேண்டுமானால் போய் ஒரு வாரம் இருந்து விட்டு வா” என்றார் ரிஷியின் தந்தை.

கணவர் இல்லாமல் போக மறுத்த அந்த அம்மாவை சௌம்யாவும் அவள் கணவரும் தொந்தரவு செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

கடைசி நேரத்தில் சௌம்யாவும் அவர்களுடன் காரில் ஏறிக் கொண்டாள். சௌம்யா ரிஷியின் பக்கத்தில் உட்கார, பின் ஸீட்டில் அவன் அம்மாவும் ரேஷ்மாவும் உட்கார்ந்தனர். மற்றவர்கள் இன்னொரு காரில் வந்தனர்.

“ரிஷி, அங்கே சமையல்காரம்மாவை ஏதாவது செய்து வைக்கச் சொல்ல வேண்டாமா?” என ரேஷ்மா கேட்க

“அம்மாவைக் கேளுங்கள் ரேஷ்மா” என்றான் குறும்பு புன்னகையுடன்.

‘இவன் ஏன் எப்போது பார்த்தாலும் சின்னக் குழந்தையிடம் கேலி செய்வது போல் சிரிக்கிறான்’ என்று லேசான கோபத்துடன் கேள்விக்குறியுடன் பக்கத்தில் இருந்த அவன் அம்மாவைப் பார்த்தாள்.

“யாரும் எதுவும் செய்ய வேண்டாம் பெண்ணே. மத்தியானம் தான் யாரும் ஒழுங்காகவே சாப்பிடவில்லையே, அதனால் அங்கே செய்த எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து வந்தேன். மத்தியானம் செய்த சாப்பாடு இரவில் சாப்பிடுவாயா? இல்லையென்றால் உனக்காக ஏதாவது செய்து தருகிறேன்” என்றார் ரிஷியின் அம்மா காமாட்சி.

“அம்மா… நான் எனது பதினைந்து வயது வரையில் ஹோமில் வளர்ந்தவள், அதனால் எங்களுக்கு எல்லா நல்ல உணவுகளும் ஒத்துப் போகும்” என்றாள் ரேஷ்மா சிரித்துக் கொண்டே.

“அங்கே மாப்பிள்ளைக்கும் ரிஷியின் அப்பாவிற்கும் கொஞ்சம் ஹாட் பேக்கில் எடுத்து வைத்துவிட்டு, நமக்கும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மீதி உள்ள சாப்பாட்டை வேலைக்காரங்களை எடுத்துக் கொள்ளச் சொல்லிட்டேன்” என்றார் காமாட்சி.

லொடலொடவென்று பேசிக் கொண்டு வந்த பின் சீட்டில் உள்ள இருவரும் திடீரென்று அமைதியாகி விட, ரிஷி மெதுவாக பின்னால் திரும்பிப் பார்த்தான்.

சின்னக் குழந்தை போல் வாயை லேசாகத் திறந்தபடி, அம்மாவின் தோள்மேல் சாய்ந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் ரேஷ்மா. அம்மாவும், ரேஷ்மாவின் கையைப் பிடித்தபடி தூங்கி விட்டிருந்தாள்.

‘தூங்கும் போது இந்த ரேஷ்மா தான் எவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று வியந்தவாறு பின்னால் திரும்பித் திரும்பிப்  பார்த்தவாறு காரை ஓட்டினான் ரிஷி.

சௌம்யா அவன் தோளைத் தட்டி, “ரிஷி, காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு ரேஷ்மாவின் அழகை நன்கு தரிசித்து விட்டுப் பிறகு வண்டியை ஓட்டு. இப்படிப் பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டு காரை ஓட்டனால் கபாலமோட்சம் தான்” என்றாள் கேலியாக. 

சுற்றுப்புறம் எல்லாவற்றையும் மறந்து ரேஷ்மாவின் அழகை ரசித்து வந்த ரிஷி, சௌம்யா தன்னை கவனித்து விட்டாள் என்றவுடன் லேசாக வெட்கத்துடன் சிரித்தான்.

“தூங்கும் போது எவ்வளவு அழகாகப் பூப்போல இருக்கிறாள் இல்லையா அக்கா?” என்றான்.

“ரிஷி, நீ அவளை விரும்புகிறாயா?” எனக் கேட்டாள் சௌம்யா.

“அது தெரியவில்லை, ஆனால் அவள் அருகில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா” என்றான், எங்கோ கனவில் மிதப்பவன் போல்.

“டேய், அவள் சினிமா நடிகை. நிலையில்லாத மனதும், நிதானமில்லாத ஆடம்பர வாழ்க்கையும் வாழ்பவர்கள். ரேஷ்மா வீணை வாசித்துக் பாடியவுடன், அம்மா எப்படி உணர்ச்சி மயமானார்கள் பார்த்தாயா. அப்பாகூட ஏதோ நினைவில் என்ன சொன்னார் என்று ஞாபகம் இருக்கிறதா? அவர்கள் இருவராலும்  அந்தக் காவ்யாவை இத்தனை வருடங்களானாலும் இன்னும் மறக்க முடியவில்லை பார்த்தாயா? அந்த சினிமாவால் ஒருத்தியை இழந்தது போதும், இன்னொரு சினிமா நடிகை நம் வாழ்க்கையில் வேண்டாம்” என்றாள் சௌம்யா.

அதுவரை சந்தோஷமாக இருந்த ரிஷியின் முகம், “காவ்யா” என்ற பெயரைக் கேட்டவுடன் உணர்ச்சியற்ற கருங்கல் சிலை போல் ஆனது.

“ஆனால் இப்போது எங்கிருக்கிறாளோ? உயிரோடு தான் இருக்கிறாளோ இல்லையோ” என்றான் ரிஷி, வறட்சியான குரலில்.

“அப்படியெல்லாம் சொல்லாதே ரிஷி. எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்கட்டும். நமக்கே அவள் இங்கிருந்து போகும் போது விவரம் புரியாத வயது” என்றாள் பெருமூச்சு விட்டவாறு.

பேசிக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. முன்னால் சதீஷ் கார் போக, பின்னால் இவர்கள் வந்த கார் சென்றது. சதீஷ் முன்னாலேயே போன் பண்ணிச் சொல்லி விட்டதால், சமையல்காரர்கள் உட்பட எல்லா ஆட்களும் நின்றிருந்தனர்.

“இவ்வளவு ஆட்களா?” என்று வாயைப் பிளந்தனர் ரிஷியும் அவன் அம்மாவும்.

சதீஷ் தான் கதவைத் திறந்தான். வீட்டைப் பூட்டி விட்டு வந்து ஒருநாள் அதன் ஆனதால், அழுக்கோ தூசியோ இல்லை. இருந்தாலும் ரேஷ்மா ஒரு டவலால் சோபாவைத் தட்டி விட்டு, சௌம்யாவையும் அம்மாவையும் உட்காரும்படி கேட்டுக் கொண்டாள்.

“ரிஷி சார், நீங்களும் உட்காருங்கள்” என்று உபசரித்தாள். ரிஷியும் சதீஷும் ஒரு சோபாவில் உட்கார்ந்தார்கள்.

சமையல்காரர்கள் இருவர், தோட்டக்காரர் இருவர், டிரைவர் இரண்டு பேர், மேல் வேலைக்கு நான்கு பேர் என்று வரிசையாக வந்து அவர்களே அறிமுகம் செய்து கொண்டனர்.

அதில் ஒரு துடுக்கான வேலைக்காரி, “நீங்கள் எல்லாம் அம்மாவிற்கு சொந்தக்காரர்களா அம்மா?” என்று கேட்டாள்.

“ஆமாம், சொந்தக்காரர்கள் தான். வேறு ஏதாவது விஷயம் தெரிய வேண்டுமா?” என்றாள் காமாட்சி அம்மா வெடுக்கென்று.

“இல்லையம்மா… ஸாரி அம்மா” என்றவள், மேற்கொண்டு ஏதும் பேசாமல் தன் வேலையை கவனிக்கச் சென்று விட்டாள்.

ரேஷ்மா அவர்களில் ஒருத்தியை அழைத்து மாடியில் உள்ள மூன்று படுக்கை அறைகளை ரெடி பண்ணி ஏ.சி.யும் கொஞ்ச நேரம் போட்டு விட்டு வரும்படிக் கூறினாள். பிறகு, அன்று வந்த கடிதங்களைப் பார்த்தாள்.

அப்போது ஒரு டிரைவர் வந்து, “அம்மா, நீங்கள் யாரிடமும் ஏதும் சொல்லாமல் கால் டிரைவரை அழைத்துக் கொண்டு சென்றதால் அஷோக் ஸார் ரொம்ப பயந்து விட்டார் அம்மா. ஏன் சரியாக விசாரிக்காமல் உங்களைப் போக விட்டோம் என்று எங்களையும் திட்டினார் அம்மா, அதனால் நீங்கள் அவரிடம் கொஞ்சம் பேசி விடுங்கள் அம்மா” என்றான்.

காரிலிருந்து எல்லாப் பொருட்களையும் டிரைவர்கள் இருவரும் கொண்டு வந்து வைத்தனர். ஒரு பெரிய தெர்மோஸ் பாக்ஸ் ஒன்றை கொண்டு வந்து வைத்தனர். அதை சதீஷ் திறந்து அதிலிருந்த ஹாட் பாக்ஸ்களை வரிசையாக எடுத்து வைத்தான்.

ஒரு சமையல்காரி வந்து எல்லாவற்றையும் மைக்ரோ ஓவனில் சூடு செய்யப் பார்த்தாள்.  உடனே சௌம்யா எழுந்து வந்து, “மைக்ரோஓவனில் சூடு செய்தால் அம்மாவிற்குப் பிடிக்காது, அடுப்பில் தான் சூடு செய்ய வேண்டும்”  என்றாள்.

அதற்கே அவள் இவர்களைப் பட்டிக்காடு என்பது போல் பார்த்தாள். பிறகு அவள் செய்து வைத்திருந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை மைக்ரோ-ஓவனில் சூடு பண்ணி வைத்தாள்.

“இந்தக் குழம்பு நம் ரேஷ்மா அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும்” என்றாள். 

அம்மா உட்கார்ந்து கொண்டே, “அதைக் கொஞ்சம் இங்கே கொண்டு வா” என்றாள்.

அதைப் பார்த்த அம்மா, “இது என்ன குழம்பு? இப்படி ஒரே எண்ணெயாக மிதக்கிறதே, இதைச் சாப்பிட்டால் ஜீரணமே ஆகாதே. இப்படித்தான் உங்கள் இஷ்டத்திற்கு சமைப்பீர்களா?” என்று கடிந்து கொண்டாள்.

அதேப் போல் தான் எல்லா சமையலும் ஏடாகூடமாக இருக்க அம்மாவும், டாக்டர் என்ற முறையில் சௌம்யாவும் கோபித்துக் கொண்டனர்.

அதிலும் அந்த வாயாடி சமையல்காரி, “அவ்வளவு பெரிய நடிகையே அமைதியாக சாப்பிடுகிறார்கள், நீங்கள் என்னம்மா சும்மாவே தப்பு கண்டுபிடிக்கிறீர்கள்?” என்றாள் கொஞ்சம் கோபமாக.

அத்தோடு, “பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள், நாளையிலிருந்து நாங்கள் வரவில்லை” என்றாள்.  அதைக் கேட்டுக் கொண்டே வந்த ரேஷ்மாவிற்குக் கோபம் வந்தது.

“வயதில் பெரியவர்கள், அவர்களிடமே நீ கோபமாகப் பேசுவாயா? நாங்கள் சொல்வது போல் தான் சமையல் செய்ய வேண்டும். இப்படி மரியாதையில்லாமல் பேசும் ஆள் எங்களுக்கு வேண்டாம். நீங்கள் இன்றே வேலையிலிருந்து நின்று கொள்ளுங்கள்” என்ற ரேஷ்மா, அப்போதே கணக்குப் பார்த்து அவள் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டாள்.

சிறிது நேரத்தில் ரேஷ்மாவின் செல்போன் அழைத்தது, அஷோக் தான் அழைத்தான்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நல்ல மூஞ்சி குரங்கு (சிறுகதை) – அர்ஜுனன்.S

    புதிய கணக்கு (கவிதை) – திருவுடையோன் குமரன்