நவராத்திரி முதல் நாள்
சக்தியின் வெளிப்பாடே இந்த வழிபாட்டில் முக்கியம்.
அன்னையின் தசமஹா சக்திகளையும், இந்த நாட்களில் விசேஷமாகக் கொண்டாடுவார்கள் சக்தி உபாசகர்கள்
முக்கியமாய், மஹிஷனை வதம் செய்த துர்கைக்கே முதலிடம்
ஆகவே, நாம் இப்போது துர்கையின் பல்வேறு வடிவங்களையும், நவராத்திரியின் முதல் நாளுக்கான வழிபாட்டு முறைகளையும் பார்ப்போம்
சித்தாத்ரி மாதா
நவராத்திரி முதல் நாளில் வழிபட வேண்டியவள் சித்தாத்ரி மாதா ஆவாள். பொதுவாக சனிக்கிழமைகளிலேயே இவள் வழிபடப்படுவாள்.
இந்த வருஷம் நவராத்திரி ஆரம்பம் சனிக்கிழமை என்பதால், இவளை வழிபடப் பொருத்தமான தினம் சனிக்கிழமையும், முதல்நாள் நவராத்திரி தினமும் ஆகும்.
இந்த தேவி அஷ்டமாசித்திகளான அணிமா, மஹிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளையும் அளிப்பதால், இவள் சித்தாத்ரி எனப்படுகிறாள்.
நவரசங்களையும் வெளிப்படுத்தும் நாட்டியங்களில் ஒன்றான, சிருங்கார தாண்டவத்தை ஈசன் ஆடிய போது, தோன்றியவள் இந்த சித்தாத்ரி என்பார்கள்
காலி
இவளை, “காலி” எனப்படும் மஹாகாளியாகவும் வழிபடலாம். (காலி என்பதே சரியான உச்சரிப்பு). இவளும் சனிக்கிழமைக்கு உரியவளே!
காலத்தைக் குறிப்பதால் காலி என்ற இந்தப் பெயர் என்பதோடு அல்லாமல், காற்றின் வேகத்தில் நமக்கு வேண்டியதைச் செய்ய நம்மை வந்தடைவாள் என்பதாலும் இந்தப் பெயர் என, சக்தி உபாசகர்கள் சொல்லுவார்கள்.
காலத்தை வென்றவளான இவள், தன் கரிய நிறத்தாலும் “காலி” எனப்படுகிறாள்.
அச்சமூட்டும் தோற்றத்துடன் விளங்கினாலும், தன்னை நம்பியவர்களுக்குக் காற்றை விடக் கடுகி வந்து வேண்டியன செய்வாள்.
“கால ராத்ரி” எனும் பெயரிலும் அழைக்கப்படும் இவள், தன்னை அண்டியவர்களுக்கு மங்களங்களை அள்ளித் தருவாள்.
சனிக்கிழமைகளில் இவளை வணங்குபவர்களுக்கு, சனீஸ்வரனின் தாக்கம் குறையும்.
தாருகா வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட கஜமுகாசுரனைக் கொன்று, அவன் தோலைப் போர்த்திக் கொண்டு, ஈசன் ஆடிய பூதத் தாண்டவத்தின் போது தோன்றியவள் இவள்
அதனாலும் இவள் பெயர் காலி எனப்படுகிறது
முதல் நாள் வழிபாடு (அலங்காரம் – பூமாலை – பாமலை- நிவேதனம்)
அலங்காரம்
- நவராத்திரி முதல் நாளன்று, கொலுவில் தேவியை ஶ்ரீதுர்கையாக அலங்கரிக்கலாம்.
- அதோடு, பொட்டுக்கோலம் போட்டு அம்பிகையை “பாலை”யாக நினைத்து, ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும்
- குமாரி எனவும் அழைக்கலாம். இரண்டு வயதுப் பெண் குழந்தையை “பாலை”யாக நினைத்தும் வழிபடலாம்.
- அதற்குப் பிடித்த ஆகாரங்கள், பொம்மைகள், துணிகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம். குறிப்பாக மஞ்சள் நிறம் கொண்ட துணிகளைக் கொடுப்பது சிறப்பு.
பூமாலை
- மஞ்சள் சாமந்திப்பூவால் வழிபாடுகள் செய்யலாம்
- மஞ்சள் முல்லையும் மிகச் சிறப்பு.
- செவ்வரளியும் உத்தமம்.
- சிலர் மல்லிகைப் பூவும் கொடுப்பார்கள்.
பாமலை
- லலிதா நவரத்ன மாலையால் பாடிக் குழந்தையை ஆராதிக்கலாம்.
- மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தையும் சொல்லலாம்.
நிவேதனம்
குழந்தைக்குப் பிடித்த சாப்பாடு கொடுக்கலாம் எனினும், மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சைச் சாதம் நிவேதனத்துக்குச் சிறப்பு. முதல் நாளுக்கான மற்ற நிவேதனங்கள் குறித்தும் பார்க்கலாம்
- எலுமிச்சைச் சாதம்
- வெண் பொங்கல்
வெண் பொங்கலில் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்துச் செய்தும் கொடுக்கலாம். மஞ்சள் நிறம் சிறப்பு.
- பச்சைப்பயறுச் சுண்டல்
- முதல் நாள் என்பதால், இனிப்புச் சுண்டலான பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம்.
- பச்சைப் பயறை முதல் நாளே ஊற வைத்துக் கழுவி, அரை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
- வாணலியில் நெய் ஊற்றிக், கடுகு மட்டும் தாளித்துக் கொண்டு, வெந்த பயறைப் போட்டு, வெல்லத்தூள் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து, ஏலக்காய்ப் பொடியும் போட்டுக் கிளற வேண்டும்.
- இதை கொலுவுக்கு வருகிறவர்களுக்கு விநியோகிக்கலாம்.
- மொச்சைச் சுண்டல்
- இந்த நாளில், மொச்சைச் சுண்டலும் செய்யலாம்
- மொச்சையை முதல் நாளே ஊற வைத்து, மறுநாள் வாயகலமான அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் தேவையான உப்பைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- பின்னர் வெந்த பருப்பை வடிகட்டி, வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை தாளித்துக் கொள்ளவும்
- பின், அதில் வெந்த மொச்சையைப் போட்டுக் கிளறவும். மறுபடியும் உப்புப் போடக் கூடாது.
- மிளகாய் வற்றல்+கொத்துமல்லி விதையக் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால், சுண்டலில் மிளகாய் வற்றலை குறைத்துக் கொண்டு, இந்தப் பொடியைப் போட்டுக் கிளறலாம்.
- பின்னர் துருவிய தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி, விநியோகம் செய்யலாம்
#adsஇந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு
- நவராத்திரி வழிபாடு உருவான கதை
- கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
- நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
- நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
- நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
- நவராத்திரிக்கான பாமாலை
- நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
- லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள்
- அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள்
- அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்
கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
இது சரியா இருக்கு நல்லவேளையா!
Thank you