பூஜையை யார் செய்யலாம்
பூஜையில் ஆண், பெண் இருபாலாரும் பங்கெடுத்துக் கொண்டு செய்யலாம்.
பெரும்பாலான வீடுகளில், கொலுவில் செய்யும் அம்பிகைக்கான பூஜையை ஆண்களே செய்வார்கள். அல்லது பூஜை செய்யும் பெண்களுக்கான உதவிகளை ஆண்கள் செய்யலாம்.
சின்னஞ்சிறு குழந்தைகளை ஆண்களானாலும், பெண்களானாலும் விதம் விதமாக அலங்கரித்து அனுப்புவது வழக்கம்.
கிருஷ்ணர் வேஷம், (நான் நிறையக் கிருஷ்ணர் வேஷம் போட்டிருக்கேன்.) ராதா வேஷம், ராமர் மாதிரி, அம்பிகை மாதிரி எல்லாம் வேஷம் போட்டு அலங்கரிக்கலாம்.
அதிலும் பெண் குழந்தைகள் அந்தப் பத்து நாட்களும் அம்பிகையாகவே ஆராதிக்கப்படுவார்கள்.
பூஜை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டியவை
கொலு வைக்கும் இடம் தேர்ந்தெடுத்ததும், அந்த இடத்தில் (பச்சரிசியை ஊற வைத்து அரைத்து), மாக்கோலத்தினால் முடிந்த அளவு பெரிய கோலத்தை, படிகள் அமைக்கும் முன்னரே போட்டு விட வேண்டும்.
கோலம் காய்ந்ததும் படிகளை அமைத்து, ஓர் அழகான வெள்ளைத் துணியால் அல்லது நல்ல பட்டுத்துணியால் அல்லது சுத்தமான பட்டுப் புடைவையால் படிகளை மூட வேண்டும்.
படிகளில் இடைவெளி தெரியாமல் துணியால் நன்கு மூடி விட்டுக் கீழ்ப்படியிலிருந்து பொம்மைகளை வைக்க ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் ஏதேனும் ஒரு பிள்ளையார் பொம்மையை வைத்து விட்டுப் பின்னர் மற்ற பொம்மைகளை வைக்க ஆரம்பிக்கலாம்.
கலசத்தை அன்றே வைப்பது எனில், யார் நவராத்திரி பூஜை செய்யப் போகிறார்களோ, அவர்கள் சுத்தமாக இருந்து கலசத்தை ஸ்தாபனம் செய்து விடலாம்.
அதன் பின்னர் படிகளில் பொம்மைகளைத் தொடவோ இடம் மாற்றவோ கூடாது. கொலுப்படிகளில் வண்ண விளக்குகளாலோ, தோரணங்களாலோ அலங்கரிக்கலாம்.
கொலு வைக்கும் அறை வாயிலிலும்./அல்லது வீட்டு வாயிலில் மாவிலைக்கொத்துத் தோரணம் கட்டலாம்.
எல்லாப் படிகளிலும் பொம்மைகளை வைத்து முடித்த பின்னர் கீழே பூங்காக்கள், மலைகள், தெப்பக்குளங்கள் போன்ற அலங்காரங்கள் செய்வதாக இருந்தால் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி வைத்துக் கொண்டு முடிந்த போது அலங்காரத்தை ஆரம்பிக்கலாம்.
பூஜை செய்ய உகந்த நேரம்
நவராத்திரி பூஜையை எப்போது செய்வது?
காலையிலும் செய்யலாம், மாலையிலும் செய்யலாம். நவராத்திரி வழிபாட்டுக்கெனத் தனிப் புத்தகங்கள், இப்போதெல்லாம் நிறைய வந்து விட்டன.
அவற்றின் துணை கொண்டும் பண்ணலாம். அல்லது தினம் தினம் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியும் வழிபடலாம். அன்றன்று ஒரு தேவியாக அன்னையை வழிபட்டும் பண்ணலாம்
நம் வசதியைப் பொறுத்து, சிறு குழந்தைகளை அம்பிகையின் ஒவ்வொரு பருவத்தில் உள்ள தேவியாக வழிபட்டால், அதற்குக் காலை வேளையே சிறந்தது.
சின்னக் குழந்தைகள் தூங்கிடும் சீக்கிரமே! ஆகவே காலை வேளையில் செய்யலாம்
முதல் நாள் நல்ல நேரம் பார்த்துப் பூஜையை ஆரம்பித்துப் பண்ணிவிட்டால், பின்னர் வரும் நாட்களில் கொஞ்சம் முன்பின்னாக ஆனாலும் பரவாயில்லை.
பூஜைக்கு தயார் செய்ய வேண்டியவை
பூஜைக்கு முன்னர், அன்றைய நிவேதனம், அர்ச்சனைக்கு உரிய பூக்கள் ஆகியவற்றை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
இதில் சொல்லி இருக்கும் பூக்கள் கிடைக்கவில்லையெனில் கவலைப்பட வேண்டாம். ரோஜா, மல்லி, முல்லை, மரிக்கொழுந்து, விருட்சி ஆகிய வாசனைப் பூக்கள் உத்தமம்.
தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள்பொடி (பிள்ளையார் பிடிக்க), பயன்படுத்தாத குங்குமம் (அர்ச்சனைக்கு), எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூ, குங்குமம் இரண்டாலும் அர்ச்சிக்கலாம்.
பூஜை செய்யும் முறை – வரிசைக் கிரமம் (Sequence)
- மஞ்சள் பிள்ளையார் செய்து கொண்டு, முதலில் பிள்ளையார் பூஜை முடித்து விட வேண்டும்
- பின் அம்பிகையை ஏதேனும் ஒரு உருவத்தில், ஆவாஹனம் செய்து கொள்ளுங்கள். (கொலுவிலிருந்து ஏதேனும் அம்பிகை பொம்மை, அல்லது வெண்கலத்தால் / ஐம்பொன்னால் ஆன சின்ன விக்ரஹமாய் இருந்தால் கூடப் போதும்)
- ஆவாஹனம் செய்த அம்பிகைக்கு உள்ள விசேஷ ஆராதனைகளை, முறைப்படி செய்ய வேண்டும். அதாவது, அந்த தேவிக்கு உரிய பாராயணம் சொல்லி வழிபடுதல் (நவராத்திரி பூஜை முறைக்கென உள்ள புத்தகங்களில் விளக்கமாக கொடுக்கப்பட்டிருக்கும்)
- பின்னர், அன்றைய தினம் என்ன நிவேதனமோ, அதை முறையாக செய்து, அதன் பின் அம்பிகைக்குக் கற்பூரம் காட்ட வேண்டும்
- பின் இறுதியாக , தாம்பூலம் கொடுத்து உபசாரங்கள் செய்து, அன்றைய பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
வைத்து கொடுக்கும் வழிமுறை
அம்பிகைக்குச் சார்த்தும் துணியை, யாரேனும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, தேங்காய் பழத்துடன் வைத்துக் கொடுக்கலாம். இது காலையில் செய்யும் பூஜை.
மாலை எனில், லலிதா சஹஸ்ரநாமம் மட்டும் சொல்லி வழிபடலாம். ஆனாலும் நிவேதனம் இரு வேளையும் கட்டாயம் உண்டு.
துர்கா ஸ்துதி, துர்கா சப்த சதீ ஆகியன படித்தும், பூஜையை நிறைவு செய்யலாம்.
பூஜையை எந்த முறைப்படி செய்தாலும் கட்டாயமாய் யாரேனும் ஒருவருக்கேனும் வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை அம்பிகையாய் வழிபடுதல்
- சின்னக் குழந்தைகளை வழிபடுவதெனில், அந்தக் குழந்தையை அவர்கள் வீட்டிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரச் சொல்ல வேண்டும்
- அதற்குத் தேவையான எண்ணெய், சீயக்காய், மஞ்சள் பொடியை முதல் நாளே கொடுத்து, குழந்தையை அன்றைய தினம் எண்ணெயில் குளிக்க வைத்து, பின்னர் வீட்டுக்கு வரவழைக்க வேண்டும்.
- ஒரு மணையில் கோலம் போட்டு, குழந்தையை அதில் கிழக்கு நோக்கி உட்கார்ந்து கொள்ளச் சொல்ல வேண்டும்.
- பின்னர் அன்றைய தினம் எந்த தேவி ஆவாஹனமோ, அவளுக்கு உள்ள மந்திரங்களைச் சொல்லி, குழந்தையை அந்த தேவியாக ஆவாஹனம் செய்து விட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும்.
- குழந்தைக்கு நலுங்கு இட்டு விட வேண்டும்
- முதலில் மஞ்சள் பொடியை நீரில் குழைத்துக் கொண்டு, அதில் கொஞ்சத்தில் சுண்ணாம்பு சேர்த்து, சிவப்பு நிறத்தில் தயார் செய்து கொண்டு, குழந்தையின் கால்களில் முதலில் மஞ்சள் தேய்த்து விட்டு, பின்னர் சிவப்பு நிறத்தில் உள்ளதை மருதாணி வைப்பது போல் சுற்றிலும் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
- கைக்கு, காலுக்கு மருதாணியும் கொடுக்கலாம். சந்தனம், குங்குமம் கொடுத்துக் கைக்கு வளைகள் கொடுக்கலாம். வசதி இருந்தால் காலுக்குக் கொலுசு, துணிகள் கொடுக்கலாம்.
- எல்லாம் முடிந்ததும், குழந்தைக்கு தீப ஆராதனை எடுத்து, பின்னர் அம்பிகையையும் வழிபட்டு, அவளுக்கும் தீப ஆராதனை செய்து பூஜையை முடிக்க வேண்டும்.
குழந்தைக்கு கொடுக்க
பின்னர் குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்துக் கிளம்பும் போது, வெற்றிலை, பாக்கு, தின்பண்டங்கள், குழந்தைக்குப் பிடித்த உடைகள், விளையாட்டுப் பொருட்கள் எனக் கொடுத்து அனுப்பலாம்.
இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவத்தில் உள்ள குழந்தையை அந்த அந்த வயசுக்கேற்ற உடைகள், உணவு கொடுத்து அந்தப் பருவத்துக்கு உள்ள தேவியை ஆராதிக்கும் போது செய்வார்கள்.
அம்பிகைக்கு ஆரத்தி
தினமும் இரவு நேரத்தில் கொலுவுக்கும் அம்பிகைக்கும் ஆரத்தி எடுக்க வேண்டும்.
முன்னெல்லாம் ஆரத்தி எடுத்துக் கொட்டி விட்டால், அதன் பின் கொலுவுக்கு வருபவர்களுக்கு, குங்குமம் மட்டும் கொடுப்பார்கள்.
நாளாவட்டத்தில் இது சரியாக இருக்காது என்பதால், சிலர் கடைசி நாளான விஜயதசமி அன்று ஆரத்தி எடுக்கின்றனர்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூப வழிபாடு
ஒவ்வொரு நாளும் தேவியை ஒவ்வொரு ரூபத்தில் வழிபட்டு, பின்னர் பத்தாம் நாளான விஜயதசமி அன்று, அம்பிகையை ஸ்ரீராஜராஜேஸ்வரியாக நினைத்து வழிபட வேண்டும்.
மூன்று தேவியரும் சேர்ந்த கோலமான விஜயா என்னும் தேவியாகவும் வழிபடுவார்கள்.
அன்றைய தினம் வாசனைப் பூக்கள், அரிசிமாவு, மஞ்சள் பொடி ஆகியவற்றால் கோலம் போட்டு ஒன்பது நாட்களும் பூஜை செய்த சின்னஞ்சிறு பெண்களை அழைத்து, எல்லா மலர்களாலும் அர்ச்சித்துப் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம், லலிதா நவரத்ன மாலை, துர்கா, லக்ஷ்மி ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றால் அம்பிகையைத் துதிக்க வேண்டும்
காலையில் பால் பாயசம், தயிர் சாதம் ஆகியவற்றை நிவேதனம் செய்து, குழந்தைகளுக்கு விநியோகிக்கலாம்.
குழந்தைகளுக்குப் பிரியமான பொருட்கள், படிக்க பயன்படும் பொருட்கள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
அன்றைய தினம் இரவு, ஒரு பொம்மையைப் படுக்க வைத்து விட்டு கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இல்லை எனில், அன்றே கொலு பொம்மைகளை எடுத்து வைக்கலாம். இல்லையெனில் மறுநாள் தான் எடுத்து வைக்க வேண்டும்.
#ads
இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு
- நவராத்திரி வழிபாடு உருவான கதை
- கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
- நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
- நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
- நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
- நவராத்திரிக்கான பாமாலை
- நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
- லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள்
- அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள்
- அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்
கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
மறுநாள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இல்லை எனில் அன்றே பொம்மைகளை எடுத்து வைக்கலாம். என்று வர வேண்டும். நடுவில் “இல்லை”என்பது விடுபட்டிருக்கிறது ஏடிஎம். அதைச் சரி செய்ய முடிந்தால் செய்து விடவும். இல்லைனா யாராவது பார்த்துட்டுச் செவ்வாய்க்கிழமை (இந்த முறை விஜயதசமிக்கு மறுநாள்) பொம்மைகளை எடுத்து வைச்சுடப் போறாங்க. தவறு நேர்ந்திருக்கு! மன்னிக்கவும். _/\_
மன்னிக்கவும், சரி செஞ்சுட்டேன் மாமி. பார்த்து சொன்னதற்கு நன்றி