இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அம்மு! அம்மு! எந்திரிக் கண்ணு. நேரமாச்சு. பொம்பள புள்ள இவ்ளோ நேரமாவா தூங்கறது?”
“ஆத்தா! இன்னிக்கு ஞாயித்துக்கெழமை தான? கொஞ்ச நேரம் தூங்கிக்கறேனே ப்ளீஸ்” என தூக்கக் கலக்கத்தில் கெஞ்சினாள் வைத்தீஷ்வரி.
“உங்கொப்பன் வந்தான்னா, என்னியத்தான் பேசுவான். எந்திரிச்சி குளிச்சி சாப்டுட்டு மறுக்கா வேணா தூங்கிக்குவியாம். இப்ப எந்திரி ராசாத்தி”
“போ ஆத்தா, கொஞ்ச நேரங்கூட தூங்க விட மாட்டேங்கற” என சலித்தவாறே படுக்கையை விட்டு எழுந்தாள். இது வழக்கமாக எல்லா ஞாயிறன்றும் நடப்பது தான்.
பல்துலக்கி விட்டு சிட் அவுட்டில் செய்தித்தாள் சகிதம் வந்தமர்ந்தாள். சிறு வயதிலிருந்து செய்திதாள் படிக்கும் பழக்கத்தை அவள் அப்பா சென்னியப்பன் தான் சொல்லிக் கொடுத்தார். ஆத்தா கொடுத்த காப்பியை குடித்துக் கொண்டே பொழுது புலர்வதை ரசித்தாள்.
வாக்கிங் முடிந்து வந்த சென்னியப்பனும் அவளுடன் சேர்ந்து கொண்டார். தந்தையும் மகளும் சேர்ந்து இயற்கையை ரசிக்க ஆரம்பித்தால், இருவருக்கும் நேரம் போவதே தெரியாது.
“இன்னிக்கு என்ன புரோகிராம் அம்மு?”
“இந்த வாரத்துக்கு தேவையான டிரஸ் அயர்ன் பண்ணனும் அப்பா. லைப்ரரி புக்ஸ ரினிவல் பண்ணனும் அப்புறம் வண்டி கழுவனும் அப்பா. அவ்ளோ தான்”
“என்னது அவ்ளோ தானா?” இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் அம்மா கன்னியம்மாள் கோபமாக அருகில் வந்தாள்.
“மறக்கல அம்மா, சாயந்திரம் துர்க்கைக்கு விளக்கு போடனும் அதான?”
“எனக்காகவா போட சொல்றேன். எல்லாம் உன் நல்லதுக்கு தான்” என்றவாறு அம்மா உள்ளே போனார்.
காலை டிபனை முடித்த பின், “ஆத்தா! நான் லைப்ரரி போய்ட்டு வரேன். உனக்கு ஏதாவது புக் வேணுமா?”
“ருத்ர வீணை கிடைச்சா பாரு, இல்லைனா லக்ஷ்மி நாவல் ஏதாவது எடுத்துட்டு வா”
“அதான் அத டிவிலயே பார்த்துட்டுல்ல, மறுக்கா என்ன?”
“புக்ல இருக்கறது அப்படியே எடுத்து இருக்காங்களா ஏதாவது விட்டுட்டாங்களானு பாக்கனும்”
“சரி ஆத்தா! நான் வரேன்”
லைப்ரரியில் இருந்து திரும்பி வந்த அவள், புத்தக அலமாரியை அடுக்கி கொண்டிருந்தாள்.
“அம்மு! நம்ம அரை நிஜார்ட்ட புதுப்பட கேசட் ஏதாவது இருந்தா கொண்டு வர சொல்லேன்”
ஆத்தா எவ்வளவு புத்தகப் பிரியரோ அவ்வளவு சினிமாவும் பிடித்த ஆள். ஏதாவது சினிமா பார்த்தவாறே இருப்பார். வைத்தீஷ்வரி சிறு பிள்ளையாய் இருக்கும் போதே அவளையும் கூட்டிப் போவார்.
இப்போது அவ்வளவாக தியேட்டர் போவதில்லை. காலை மகனும் பேத்தியும் கிளம்பிய பின் டான் என்று டிவி முன் உட்கார்ந்து கொள்வார். ஒன்பது மணிக்கே டப்பிங் படம் பார்ப்பார். அவர் வளர்த்த பிள்ளை என்பதால், வைத்திஷ்வரியும் ஆத்தாவின் நகலே.
ஆத்தாவும் பேத்தியும் சேர்ந்து எல்லார்க்கும் நல்ல பட்டப்பெயர் வைப்பார்கள். சொந்தக்காரர் ஒருவர் எப்போதும் ஷார்ட்ஸ் அணிந்தவாறே இருப்பார். அவர் பெயர் தான் மேலே சொன்ன அரைநிஜார். மொத்தத்தில் நம்ம ஆத்தா ரொம்ப அப்டேட்டடு அண்ட் மாடர்ன்.
போனை எடுத்தவளுக்கு அப்போதுதான் ஞாபாகம் வந்தது, லைப்ரரியில் இருந்த போது லைசலண்ட் மோடில் போட்டவள், அதை மாற்றாமல் விட்டுவிட்டாள். போனை செக் செய்ததில் ஒரு புது நம்பரிலிருந்து நான்கு மிஸ்டு கால்கள்.
யாராக இருக்கும் என யோசித்தவாறே திரும்ப அழைத்தாள். ராஜ ராஜ சோழன் நான்… காலர் டியூனில் ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். அவளுக்கு மிக பிடித்த பாடல் என்பதால், யாரென்று தெரியாமலேயே அந்த நம்பர் மேல் நல்ல அபிப்ராயம் வந்திருந்தது.
“ஹலோ! இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்துச்சு, நீங்க யாருங்க?”
“மிஸ்டு கால் இல்லை, நான் கூப்பிட்டு நீங்க மிஸ் பண்ண கால். நான் வேலன் பேசறேன் அம்மிணி”
“யாருனு தெரியலங்களே”
“நான் சிங்கார வேலவன், நேத்து கூட பஸ் ஸ்டான்ட்ல இறக்கி விட்டீங்களே”
“ஐய்யோ சாரிங்க. வேலன்னு சொன்னவுடன் டக்ன்னு நினைவுக்கு வரல. நேத்து நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க”
“பரவால்லங்க. பஸ் ஸ்டான்ட்லயே எட்டே முக்கா ஆச்சா, அதான் நீங்க பத்திரமா வீட்டுக்கு போயிட்டீங்களானு தெரிஞ்சிக்க தான் இன்னைக்கு கூப்பிட்டேன்”
“எனக்கு வீடு பக்கந்தான். ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க கூப்பிட்டப்ப லைப்ரரில இருந்தேன். ஃபோன் சைலன்ஸ். என் நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும்?”
“உங்க ரெஸ்யூம் மகேஷ்ட்ட கொடுத்தீங்களே அவர் என்ட்ட தான் தந்திருந்தார். அதுல பார்த்தேன்.”
“ஓ நீங்க மகேஷ் ப்ரண்டா?”
“அப்படினும் வெச்சுக்கலாம். நான் ஒரு ஈ.எஸ்.ஐ, பி.எஃப் கன்சல்டன்ட்கிட்ட வேலை பார்க்கிறேன். மகேஷோட கம்பெனிக்கும் நாந்தான் போவேன். ஒரே டிரெய்ன். அப்படி பழக்கம் ஆனோம்”
“சாப்பிட்டாச்சாங்க? இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?”
“ஸ்பெஷல்லாம் இல்லைங்க, கத்தரிக்கா சாம்பார் உருளைக்கிழங்கு பொரியல்”
“என்னங்க இது? சண்டே அதுவுமா சாம்பாரா? மட்டன் சிக்கன் இல்லையா?”
“நாங்க சுத்த சைவம்”
“ஓ! எனக்கெல்லாம் ஞாயித்துக்கெழம கறி மீன் இல்லாம சோறு இறங்காது”
“அப்பா வந்துட்டாருங்க, நான் வெச்சுடட்டுமா?”
“நான் உங்கள அப்புறம் கூப்பிடறேன்” என்றவாறு லைன் கட் செய்தான்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings