இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரயில் நிலையத்திற்கு வெளியில் வந்த அவள் சாலையைக் கடந்து அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு வெளிவரும் போது, ஈரோட்டில் சந்தித்த அந்த இளைஞன் எதிர்பட்டான். இவள் முறுவலித்தபடி அவனைக் கடந்து சென்றாள்.
அலுவலகத்தில் இவளுக்கு முன்னமே சீனியர் யுவராணி வந்திருந்தாள். வந்த முதல் நாளிலிருந்தே ஏனோ யுவராணிக்கு இவளை பிடிப்பதில்லை. இவளுக்கும் தான்.
நொடுக்கென்று பேசுவதுமாகவும் வெடுக்கென முகம் காட்டவுமாகவும் இருக்கிறாள். ஏற்கனவே நொந்த மனம் சீனியரைக் காணும் போதெல்லாம் அயர்ச்சி அடைகிறது.
சரி நாமென்ன நிரந்தரமாக இங்கே யா பணிபுரிய போகிறோம். இங்கிருந்தபடியே வேறு வேலை தேடிக் கொண்டு மாறிக் கொள்வோம். அதுவரை இவளை சகிக்கத்தான் வேண்டும் என எண்ணிக் கொள்வாள். இவளுக்காக ஒதுக்கப்பட்ட வேலைகளுடன் யுவராணியின் சிறு சிறு வேலைகளையும் இவள் தான் செய்கிறாள்.
மாலை அலுவலகம் முடிந்து ரயில் நிலையம் வந்தடைந்தாள். அப்போது தான் வண்டி உள்ளே வர ஆரம்பித்தது. இவள் பரபரப்பாக ஓடி நடை பாலத்தில் ஏற ஆரம்பித்தாள்
அது ஏதோ எக்ஸ்பிரஸ் என தெரிந்தவுடன் மெதுவாக நடந்தாள். பிளாட்பாரத்தில் இருந்த ஒரு திட்டில் ஒரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்தாள்.
அந்த எக்ஸ்பிரஸ் மெல்ல ஊர்ந்து வேகமெடுப்பதை கவனித்தாள். அப்போது, “என்னங்க டிரெயின் மிஸ் பண்ணிட்டீங்களா?” என்ற குரல் கேட்டு திரும்பவும், அந்த இளைஞன் நின்றிருந்தான்.
“இல்லைங்க. அது எக்ஸ்பிரஸ்னு நாந்தான் ஏறலை”
“நீங்க வெச்சிருக்க சீசன் டிக்கெட்ல பாசஞ்சர், எக்ஸ்பிரஸ்ல போய்க்கலாம். சூப்பர் பாஸ்ட் டிரெயினா இருந்தா, சப்ளிமென்டரி டிக்கட் வாங்கிக்கலாம். “
“தேங்க்ஸ்ங்க. எனக்கு தெரியாதே. இல்லைனா அதுலயே போயிருப்பேன்”
டீ, காபி, சமோஸ்ஸாய்ய்… குரல் கேட்டு “காபி சாப்பிடலாமா?” என்றாள்.
“இந்த காபி சலசலனு இருக்கும். வெளிய தான் நல்லா இருக்கும் “
“பாசஞ்சர் அதுக்குள்ள வந்திடாதே?”
“வண்டி இப்பதான் பாலக்காட்டுல இருந்து கோயம்புத்தூரு உள்ளயே வந்துருக்கு. இங்க வர ரெண்டு மணி நேரமாகும்.”
“பாலக்காடா?”
“ஆமாங்க, கோயம்புத்தூர் போன பின்னாடி, அங்கருந்து கோயம்புத்தூர் பாலக்காடு பாஸ்ட் பாசஞ்சர்ங்கிற பேர்ல போய்ட்டு வரும்”
“ஓ! அப்படியா? நீங்க எவ்ளோ நாளா திருப்பூர்க்கு டிரெயின்ல வரீங்க?”
“அது இருக்கும்ங்க, நாலஞ்சு வருசம். உங்கள இப்பதான் பத்து நாளா பாக்கறேன்”
பேசிக்கொண்டே வெளியிலிருந்த ஹோட்டலில் காபி சாப்பிட வருகின்றனர்.
“ஆமாங்க, ஒரு மாசமா தான் திருப்பூர் வரேன். பஸ்லதான் வந்துட்ருந்தேன். அலைச்சல், கூட்டம். அதான் டிரெயின்ல வரேன். உங்க பேர் ப்ரேம் தான?”
“என் பேரு மகேஷ்வரன். நான் வேலை செய்ற கம்பெனி பேருதான் ப்ரேம் சைசிங்”
இருவரும் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் தங்களது வேலை விவரங்களையும் அலைபேசி எண்களையும் பகிர்ந்து கொண்டனர். மெல்ல மெல்ல இருவருக்குள்ளும் நட்பு மலரத் தொடங்கியது. ரயில் தாமதமாக வரும் தருணங்களில் எல்லாம் ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்துக் கொண்டனர்.
சில தினங்களுக்கு பின் ஒரு காலை நேரம்…
அவளுக்கு ஏனோ லேடிஸ் கம்பார்ட்மென்ட்டை விட ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் பயணம் செய்யலாம் எனத் தோன்றியது. அது ஏதோ அடைத்து வைக்கப்பட்டிருந்தை போலத் தோன்றியது.
ஜென்ரல் பெட்டியில் ஏறி, நல்லதாக ஜன்னலோர இடம் தேடினாள். அப்போது, “என்னங்க இந்தப் பக்கம்?” என குரல் வந்த திசையை நோக்கினாள்.
மகேஷ் அங்கே சிரித்தபடி உட்கார்த்திருந்தான்.
“சும்மாதான். ஒரு மாற்றத்துக்காக வேண்டி”
“இங்க உக்காருங்க” என தனது ஜன்னலோர இருக்கையை அவளுக்காக விட்டுக் கொடுத்து எதிரில் உட்கார்ந்தான் மகேஷ். அவனுக்கு நன்றி சொல்லியவாறு அமர்ந்தாள்.
கொண்டு வந்திருந்த செய்தித்தாளை பிரித்தது தான் தாமதம், புற்றீசல் கிளம்பியதை போல நாலைத்து தலைகள் அவளை சுற்றி முளைத்தன. அவர்களகாவே அவள் கையிலிருந்த செய்தித்தாளின் ஒவ்வொரு பக்கமாக வாங்கி படிக்க ஆரம்பித்தனர். இவள் சிரித்துக் கொண்டே மீதமிருந்த தாள்களையும் அவர்களிடமே கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“நீங்க டெய்லி நியூஸ் பேப்பர் படிப்பீங்களா?”
“ஆமாம். காலைல சீக்கிரம் கிளம்பறதால இங்க படிக்கலாம்னு வாங்கினேன்.”
“படிச்ச மாதிரிதான். உங்க வேலை எப்படி போகுது? புது ஊர் புது வேலை”
“வேலை இன்ட்ரஸ்டிங்காதான் போகுது. ஆனா நான் வேற வேலை தேடிட்டு இருக்கேன்”
“உங்க ரெஸ்யூம் கொடுங்க, நான் ட்ரை பண்றேன்”
உடனே பேகிலிருந்து தனது ரெஸ்யூமைக் கொடுத்தாள்.
மதிய நேரம். அலுவலகத்தில் …..
“இங்க பாரு, இந்த ஃபைலை இன்னிக்குள்ள முடிச்சுட்டு தான் கிளம்பற” என்றபடி யுவராணி ஒரு பைலை அவள் டேபிளில் வைத்தாள்.
அவளின் பதிலை எதிர்பார்க்காமல் யுவராணி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
காலையிலிருந்து தலைவலி. சாயந்திரம் சீக்கிரம் போலாம்னா, இவ வேற என்று நினைத்துக் கொண்டே முடிக்க வேண்டிய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மேடம்! நீங்க சொன்ன ஃபைலை முடிச்சுட்டேன். எனக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் வேணும்”
“சரி கிளம்பு” என்றாள் யுவராணி.
அலுவலகத்திலிருந்து வெளிவந்த அந்த யுவதி பத்து நிமிடத்தில் ரயில் நிலையம் வந்தாள்.
மும்பை CST எக்ஸ்பிரஸ் வண்டி பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. வேகமாக ஒடி வந்தாள். இந்த தலைவலியோடு பாசஞ்சருக்கு காத்திருக்க முடியாது. எப்படியாவது இதுல ஏறிட்டா இருபது நிமிஷத்துல ஈரோடு போய்டலாம் என நினைத்தவாறே ஓட ஆரம்பித்தாள்.
ஆனால் அதற்குள் சிக்னல் விழுந்ததால், இவளுக்கு பின்னேயே ஓடி வந்த ஒரு கும்பல் கடைசி பெட்டியில் ஏறியதைக் கண்டவுடன், இவளும் அவர்களுடனே ஏறிவிட்டாள். அந்த பரபரப்பிலும் அக்கூட்டத்தில் ஒருவன் டைமிங்காக “துஜே தேக்கா தோயே ஜானா சனம்” என பாடினான்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings