எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மொபெட் சாவியை எடுத்துக்கொண்டு திரும்பும்போதுதான் செந்திலின் பார்வை காலண்டரில் பட்டது.
‘ ஓ… இன்னிக்கு சம்பள நாளா… ‘ ஆவல் மேலோங்கியது.
ஏற்கனவே மணி எட்டரை ஆகிவிட்டதால் படியில் நின்றபடியே, ‘ லதா… ‘ நான் ஆபீஸ் கிளம்பிட்டேன்… ‘ என்றபடி நகர்ந்தான். உள்ளுக்குள்ளிருந்தே, ‘ சரிங்க… ‘ என்று அவள் குரல் கொடுத்தபோது அவன் மொபெட்டில் ஏறியேவிட்டான்.
ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் கிளார்க்காக எட்டு வருடங்களாக வேலை செய்கிறான். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று கிளைகள். அதன் திருச்சி கிளையில் அவனுக்கு வேலை.
அது ஒரு பிரைவேட் கம்பெனி என்பதால் முப்பத்தொன்னாம் தேதியே சம்பளம் கிடைக்காது. எழாந்தேதிதான் சம்பளம் கிடைக்கும். மொத்த சம்பளம் நாற்பத்தாறாயிரம் ரூபாய். பிடித்தமெல்லாம் போக நாற்பத்தோராயிரம் சொச்சம் கணக்கில் வந்துவிடும்.
ஆபீஸில் போய் நுழைந்தவுடனேயே மொபைலை எடுத்துப் பார்த்தான். வங்கிக் கணக்கில் சம்பளம் வரவானதற்கான எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறதா என்ற ஆவலில். மெசேஜ் எதுவும் வந்திருக்கவில்லை. சிலசமயம் காலையில் வந்துவிடும், சிலசமயம் மதியம் வரும். சிலசமயம் சாயன்காக்கலாம்தான் வரும். ஓரிருதடவை இரவு நேரங்களில் கூட வந்திருக்கிரத். அப்போதெல்லாம் பேங்க் சர்வர் பிரச்சினை என்பார்கள்.
வரும்போது வரட்டும் என்றெண்ணி வேலையில் மூழ்கிவிட்டான்.
டீ குடிக்கும்போது மறுபடியும் மொபைலை எடுத்துப் பார்த்தான். இன்னும் மெசேஜ் எதுவும் வந்திருக்கவில்லை. ஒருமுறை இப்படித்தான் மொபைலை பார்த்து பார்த்து வெறுத்துப் போய் விசாரித்ததில், ஆபீசிலிருந்து பேங்க்கிற்கு லிஸ்ட் அனுப்பியிருந்தும் பேங்கில் லேட் செய்துவிட்டார்கள் என்று தெரியவந்தது. அன்று இரவு ஏழு மணிக்குத்தான் சம்பளம் வரவாகிவிட்டதற்கான மெசேஜே வந்து சேர்ந்தது.
சாப்பாட்டு நேரத்தில் நண்பர்களிடம் கேட்கலாமா என்று யோசித்தான். ஒருவேளை அவர்களிடம் கேட்டால், நம்மை அவர்கள் ஏளனமாக பார்ப்பார்களோ என்று நினைப்பு வர கேளாமல் விட்டான்.
‘ சரி… இப்போதும் பேங்க்கில்தான் பிரச்சினையோ, என்னவோ… ‘ என்று நினைத்தபடி மறுபடியும் வேலையில் மூழ்கிவிட்டான்.
நாற்பத்தொராயிரம் கிடைக்கும். அடுத்த வருடம் பதவி உயர்வு கிடைத்தால், இன்னும் ஒரு ஐயாயிரம் கூடுதலாக கிடைக்கும். அப்போது பேங்க்கில் போடும் ரிக்கரிங் டெபாசிட்டை இன்னும் கொஞ்சம் சேர்த்து போடவேண்டும் என்ற நினைப்பு திடீரென்று தோன்றியது..
இத்தனை காலம் வாடகை வீட்டிலேயே இருந்தாகிவிட்டது. ஒரு சொந்த வீடு வாங்கவேண்டும். மாதா மாதம் பத்தாயிரம் ரிக்கரிங் டெபாசிட் போடுகிறான். நடுத்தர வர்க்கத்துக்கு, பணம் சேர்த்து சொத்து வாங்குவதெல்லாம் நடக்காத காரியம். பேங்க் லோன் போட்டால்தான் உண்டு. அங்கேயும் முழு பணமும் கொடுக்கமாட்டார்கள், உங்கள் கையிலிருந்து எவ்வளவு போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்காகத்தான் அந்த ரிக்கார்டிங் டெபாசிட்.
ஆபீஸ் விட்டு எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தனர். மறுபடியும் ஒருதடவை மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டான். ஏமாந்து போனதுதான் மிச்சம். எப்படியும் ஏழு எட்டு மணிக்குள் வரவாகிவிடும் என்று தனக்குத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு கிளம்பியும் விட்டான்.
வீட்டுக்குப் போனதும், முகம் கைகால் அலம்பிக்கொண்டு வந்து லதாவிடம் டீ கேட்டபடி சோபாவில் உட்கார்ந்தான். பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரில் அவனது பார்வை தானாகச் சென்றது.
சம்பளத் தேதியை நம்பித்தானே எல்லோரும் இருக்கிறார்கள், இவர்கள் ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்கள்.
அதற்குள் டீ வந்தது.
இனியும் புலம்பி பலனில்லை, யாரையாவது கேட்டுப் பார்க்கலாம் என்று எண்ணியபடி டீயைக் குடித்துக்கொண்டே ராஜேஷின் நம்பரைத் தேடினான். ராஜேஷ்தான் அக்கவுண்ட்ஸ் பார்க்கிறான். அவனுக்கு தெரிந்திருக்கும்.
ஒரு கையில் டீ குடிப்பதும் மறுகையில் போன் நோண்டுவதுமாக இருக்க, கொஞ்சம் நிதானம் தவறி டீ கொட்டப்போக, எதேச்சையாய் அங்கே வந்த லதா, ‘ பார்த்துங்க… என்னவோ டென்ஷனாவே இருக்கீங்க போல. ஒன்னு டீ குடிங்க. இல்லே மொபைலை பாருங்க. ரெண்டையும் ஒரே நேரத்துல ஏன் செய்யறீங்க… அப்படி என்ன தலை போகிற காரியம் போனுல…. ‘ லதா செல்லமாய் கடிந்து கொண்டாள்.
‘ இல்ல… இன்னிக்கி சம்பளம் வந்திருக்கணும்… இதுவரை வரலை. மணி ஏழாகப் போகுது. இதுக்கு மேலேயும் மெசேஜ் வருமான்னு தெரியலை. ஏன் இப்படி லேட் பண்றாங்கன்னும் தெரியலை… அதான் ராஜேஷ்க்கு போன் போட்டு கேட்கலாம்னு… ‘ என்று இழுத்தான்.
உடனே தாமதிக்காமல், ‘ நாளைக்குத்தானே சம்பள நாள்… ‘ என்றாள் சிரித்தபடி.
‘ பைத்தியமா உனக்கு. இதுவரை எழாந்தேதிதானே சம்பளம் கொடுத்துக்கிட்டிருந்தாங்க. இப்போ திடீர்னு எட்டாம் தேதின்றே… ‘ என்றான் வியப்பும் திகைப்புமாய்.
மறுபடியும் சிரித்தாள். ‘ ஓ… நீங்க காலண்டரைப் பார்த்துதான் இன்னிக்கு சம்பளம் வரலையேனு புலம்பறீங்களா… ‘ என்றவள், கீழே குனிந்து ஒரு சீட்டை எடுத்தாள்.
‘ ஸாரிங்க… காலையில சீட்டை கிழிக்கும்போது ஒரு சீட்டு சேர்ந்து வந்திடுச்சு. அதான் ஏழு காட்டுது… இன்னிக்கு தேதி ஆறுதான். கிழிஞ்ச சீட்டை ஒட்டிவச்சேன். அது நிக்கலை… இப்போதான் பார்க்கறேன் அது கீழே கிடக்கறதை… ‘ என்றாள் சர்வசாதாரணமாக.
இவன்தான் டென்ஷனாகிப் போனான்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
Sema twist. Velu,
Now a days your stories are very interesting and with a twist.
Keep it up.
All the best.
நன்றி நண்பரே… உங்கள் மேலான கருத்துக்களை என்றும் எதிர்பார்க்கிறேன்… நன்றி மறுபடியும்..