இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பிரதோச நாள் சிவனின் தரிசனம் வேண்டிக் காத்திருந்தோம். கருவறையில் இருக்கும் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன.
அங்கே சென்றால் என் வயிற்றில் இடித்து விடுவார்கள் என்று கோவிலுக்கு பின்னே மரத்தடியில் அமர்ந்திருந்தேன். பூஜை முடிந்த பின்பு பொறுமையாக வலம் வந்து கொள்ளலாம் என்று.
மரத்தடியில் ஒரு குட்டி சிவன் சிலை இருந்தது. அதற்கு ஒரு சிறுவன் அபிஷேகம் செய்து பொட்டு வைத்தான்.
எல்லோரும் கருவறை சிவனைக் காண சென்று விட்டார்களே. இங்கே இவ்வளவு அழகான ஒரு சிலைக்கு அபிஷேகம் நடப்பதை யாரும் காணவில்லையே.
நானும் அம்மாவும் கீழே அமர்ந்து பொறுமையாக மரத்தடி சிவனை வழிபட்டோம். மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
சூழல் அமைதியாக இருந்த சமயத்தில் எனக்குள் பல சிந்தனைகள். என்னால் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்துப் பார்த்துக் கொள்ள முடியுமா! குழந்தை இல்லையென்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்?
குழந்தை வேண்டி கடவுளின் முன் அமர்ந்து இருப்பேன். இப்படித்தானே நம் உலக வழக்கம் இருக்கிறது. குழந்தை இல்லாத வாழ்க்கையும் வெறுமையாகத்தான் இருக்கும்.
என் அருகில் அம்மா அமர்ந்து கொண்டிருந்தார். கண்களை மூடி தீவிரமாக எதையோ வேண்டிக் கொண்டிருந்தார். நிச்சயம் அவர் எனக்காகவும் பிராத்திப்பார்.
எனக்காக என் அம்மா சிறுவயதில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். ஆனால் இன்று நான் என் கணவர் என் குழந்தை என்று மாறி விட்டேன்.
அம்மாவின் மேல் பாசம் இருக்கிறது தான். ஆனாலும் இப்பொழுது என் வேண்டுதல் என் ஆசையெல்லாம் ஆரோக்கியமான குழந்தை பெற்று நல்லபடியாக வளர்க்க வேண்டும்.
இதில் மற்றொரு உண்மை என்னவென்றால் என் மகளோ மகனோ நாளை வளர்ந்து பெரியவர் ஆனாலும் அவர்களுடைய குழந்தைகளுக்காக அவர்கள் வாழத் தொடங்கி விடுவார்கள். இதுதான் வாழ்க்கையா!
எல்லாவற்றிலுமே சாவல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பார்த்துக் கொள்வோம்.
இருபத்தி எட்டு வயதாகிறது. இன்னும் வாழ்க்கைப் பற்றிய குழப்பமும் குழந்தை வளர்ப்பு பற்றிய பயங்களும் எதற்கு. போகிற போக்கில் யாவையும் பார்த்துக் கொள்ளலாம். காலம் அந்த தைரியத்தை அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருக்கும்.
* * *
எல்லாரும் சிற்பிகள் எனினும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேலையில் தேர்ந்தவர்கள். தூண் வடிப்பவர், பலகை வடிப்பவர், சாந்து வைப்பவர், கோஷ்டச் சிலைகள் செய்பவர், கருவறை சிற்பி, கோபுர சிற்பி, விமானக் கட்டுமானம் என்று பல்வேறு வித்தைகள் செய்பவராக இருந்தார்கள். எல்லோரும் எல்லா வேலையும் செய்ய முடியும். ஆனாலும் ஒரு வேலையை தேர்ந்தெடுத்து அந்த வேலையினுடைய உச்சத்தை தொட முயற்சிப்பது தான் நல்லது.
ஆனாலும் பெருந்தச்சர் எல்லா வேலைகளிலும் திறம்பட செய்தார் எப்படி என்று கேட்க எந்த மந்திர சக்தியும் இல்லை மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த வேலையின் மீது முழுமையாக ஈடுபட்டால் எந்த வேலையையும் செய்ய முடியும். இந்த வேலை என்னுடைய வேலை என்ற விருப்பதோடு மனம் முழுமையோடும் இந்த வேலையைத் திறம்பட செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் செய்ய வேண்டும் என்று பெருந்தச்சார் கூறுவதாய் ஆசிரியர் பாலகுமாரன் கூறுகிறார்.
உடையார் புத்தகத்தில் மூழ்கித் திளைத்தேன். கோவில் கட்டும் விதத்தை தெளிவாக விவரிக்கிறார் ஆசிரியர்.
பல இடங்களில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன. கதையோடு இயைந்து ஒவ்வொரு பாகங்களாகப் படித்தேன்.
“வந்து சாப்புடுடி.. காலைல இருந்து புத்தகத்தையே கைல வெச்சிட்டு இருக்க”
“வரேன் மா”
சாப்பிட்டு முடித்து விட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று அமர்ந்தேன்.
அப்பா செய்தி ஓடும் சேனலை வைத்தார்.
சிறு வயதில் ஆசிரியர்கள் செய்திகளைப் பார்த்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள அறிவுறுத்தினார்கள்.
இன்று செய்திகளைப் பார்த்தால் அப்படியா இருக்கிறது. எல்லாம் பதட்டப்படுத்தும் அச்சுறுத்தும் செய்திகளாக இருந்தன.
எத்தனை வாகன விபத்துகள் நடக்கின்றன. எத்தனை கொலைவெறி செயல்கள். எத்தனை எதிர்பாராத இழப்புகள் நிகழ்கின்றன. ஏன் இந்த பிரபஞ்ச சக்தி மனித உயிர்களோடு இப்படி விளையாடுகிறது.
இதில் இன்னொரு செய்தியை நான் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பா வேகமாக தொலைக்காட்சியை மாற்றினார்.
கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கும் பொழுது அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு உயிர்இழப்பு. இதை பார்த்ததும் என் இதயத்துடிப்பு அதிகரித்தது. பயஉணர்வு அதிகமானது.
“நியூஸ் போட்டா எதாவது நல்லதா காட்றானா” என்றார் அம்மா.
“நடக்கறது காட்றான்.. நம்ம எதும் அதெல்லாம் யோசிச்சிட்டு இருக்கக் கூடாது. செய்திய செய்தியா பார்த்துட்டு போயிரணும்” அப்பா பதிலத்தார்.
“அதெப்படி முடியும். அவுங்களும் நம்மல மாதிரி தான். அவங்க வீட்ல இருக்கவங்களும் மனுசங்க தான.. எவ்ளோ கஷ்டப்படுவாங்க.. பாவம்”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் எழுந்து உள்ளே சென்றேன்.
“ஏண்டி நீயும் ஏன் புள்ளைய பயம் புடுத்துற மாதிரி பேசுற.. நீதான் அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு அவளுக்கு சொல்லணும்.. கவிய பாரு எழுந்து போய்ட்டா”
நான் அறைக்கு வந்த பிறகும் அவர்கள் பேசியது காதில் விழுந்தது.
மருத்துவமனைக்குச் செல்லாத நோயில்லாத வாழ்க்கை எத்தனை வரமானது. அதுதானே உலகின் மிகப்பெரிய செல்வம்.
நன்றாக இருந்த மனம் சோர்வடைந்தது. மனசே சரியில்லாமல் போனது. பிரசவத்தை நினைத்து பயம் அதிகமானது.
ஆதியிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அலைபேசியில் அழைத்தேன்.
“ஆதி எங்க இருக்கீங்க”
“கவி இரு நான் கூப்பட்றேன். ஒரு சின்ன ஆக்சிடன்ட்”
“என்ன சொல்ற ஆதி? என்னாச்சு?”
நான் பேசப் பேச ஆதி அலைபேசியைத் துண்டித்தார். மீண்டும் அழைத்தேன். மணி அடித்துக் கொண்டே இருந்தது. பதில் வரவில்லை.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings