in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 40) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இதுவரை :

இனி தேவையில்லாத பயணங்களை கர்ப்ப காலம் முடியும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று கவியினியாள் முடிவு செய்தாலும் ஏதோ ஒரு குழப்பம் அவளை வருத்தியது. அதில் இருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதை காண்போம்.

இனி :
குளிர்ந்த காற்று வீசும் மாலைப் பொழுது. சூரியனின் பிம்பம் ஆற்றின் நீரில் விழுந்து சிவந்து இருந்தது. மெல்ல மெல்ல அந்த ஆற்றுக்குள் மூழ்கவும் செய்தது சூரியன். இன்னும் சில நிமிடங்களில் முழுவதுமாக மூழ்கி விடும். அதற்குள் நாங்கள் கிளம்ப வேண்டும்.

பாட்டி உலர்ந்து கொண்டிருந்த துணிகளை தொட்டுப் பார்த்தார். ஓரளவிற்கு காய்ந்து இருந்தது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தொட்டுப் பார்த்தார்.

காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தார். கிளம்பத் தயாரானார்.

நானும் அமுதினியும் பாறை மேல் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம். காலை அவ்வப்போது நீரில் நனைத்துக் கொண்டோம்.

இது நடந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் இருக்கும். எனக்கு அப்பொழுது பதிமூன்று வயது இருக்கும்.

நானும் அமுதினியும் கோடை விடுமுறைக்கு பள்ளிப்பாளையத்தில் இருந்த பாட்டி வீட்டில் தங்கி இருந்தோம்.

மதியம் சாப்பிட்டு முடித்ததும் மூன்று மணி அளவில் என்னையும் அமுதினியையும் எங்கள் அழுக்கு துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார் பாட்டி.

“ஆத்துக்கு போலாம் துணிலாம் எடுத்துட்டு வாங்க”

“எங்கம்மா வீட்டுலயே துவைப்பாங்க.. நீங்க என்ன பாட்டி ஆத்துக்கு கூப்பட்றீங்க”

“நல்ல தண்ணீ வரதே பெருசு அதையும் துவைக்கவா வெச்சிக்க முடியும்.. இங்க இதுதான் பழக்கம் ஆத்துக்கு வந்து பாருங்க ஊர் ஜனமே துவைக்கும்..”

அதே போல் நாங்கள் ஆற்றிற்க்கு சென்ற பொழுது அங்கு பலர் குளித்துக் கொண்டும் துணிகளை துவைத்துக் கொண்டும் இருந்தார்கள்.

எங்கள் துணிகளை அங்கிருந்த பாறைகளில் குப்பி ஆற்றில் அலசினார். துவைத்ததை பாறைகளில் போட்டு உலர விட்டிருந்தார்.

உலரும் நேரத்தில் அவர் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டு துணிகளை மாற்றிக் கொண்டார்.

எங்களையும் குளிக்கச் சொன்னார். ஆனால் எங்களுக்கு குளிக்க என்னவோ போல் இருந்தது. அதனால் கால்களை நனைத்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தோம். பின் துணிகள் காய்ந்ததும் மடித்து எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

பதினைந்து வருடங்கள் கழித்து நானும் ஆதியும் பள்ளிப்பாளைய ஆற்றுக்கு வந்தோம். இப்பொழுது யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது ஆறு.

வாஷிங் மெஷினில் துணிகள் துவைக்கும் காலம் ஆயிற்றே. அதுவும் ஆட்டோமேட்டிக் வந்துவிட்டது. இப்பொழுது யார் துணிகளை தூக்கிக் கொண்டு ஆறு வரை வருவார்கள்.

அடுத்த தலைமுறைகளுக்கு ஆற்றில் சென்று நாங்கள் துணிகளை துவைத்து இருக்கிறோம் என்று சொன்னால் அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்.

யோசனைகளோடு ஆற்றைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். பழைய செழிப்பில் ஆறு இல்லை. ஆற்றோரத்தில் சாக்கடைகளை கலக்கச் செய்து விட்டார்கள்.

சற்று தள்ளி நடந்து சென்று சுத்தமான பாறை ஒன்றின் மீது நானும் ஆதியும் அமர்ந்தோம்.
சூரிய அஸ்தமனம் பார்த்தோம். இன்றும் அழகாகத் தான் இருந்தது. ஆற்றில் விழுந்த சூரியனின் செங்கதிர்கள்.

‘வாழ்க்கைக்கு நிறைவைத் தேடுவதாகப் பேசுவதெல்லாம் பொய். வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்கோ மேலும் மேலும் குறைகள் வேண்டும்’
-ஜெயகாந்தன்.

“வெளியூர் போக முடிலைன்னா என்ன.. பக்கத்துல உனக்கு எங்கயாவது போகணும்னா சொல்லு கூட்டிட்டுப் போறேன்.. இனிமே நீ வாக்கிங் போகனும் சொன்னாங்கள்ல டாக்டர்.. பார்க் கூட்டிட்டு போறேன் அங்க போய் தினம் நடக்கலாம்.. பக்கத்துலயே எப்படி சூப்பரா போய்ட்டு வர முடியுமோ போலாம் கவி”

ஆதி இப்படி கூறியதும் எனக்குள் ஏதோ ஒரு பெரும் தெளிவு ஏற்பட்டது. இனி மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

அதுவும் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரையில் இத்தனை நாள் ரசிக்காத சூரியனை இன்று கண் இமைக்காமல் பார்க்கும் பொழுது தான் புரிந்தது எங்கேயோ படித்த ஜெயகாந்தனின் வரிகள் வாழக்கை நிறைவாகத்தான் இருக்கிறது.

     * * *

புதன்கிழமை காலைப் பொழுது. எழுந்திருக்கும் பொழுதே தலைவலி உடல் சோர்வு மற்றும் காது வலி இருந்தது. பக்கத்தில் ஆதி இல்லை. நேரம் பார்த்தேன் மணி எட்டு.

இரவில் வெகுநேரம் உடையார் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். விறுவிறுப்பாக கதை நகர்ந்தது. மொத்தம் ஆறு பாகத்தில் இரண்டாவது பாகம் முடிக்கப் போகிறேன். எப்படி ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

ஆதி என்ன செய்கிறார் என்று பார்த்தேன். சமையல் அறையில் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக என் காது வலி அதிகரித்தது.

“ஆதி எனக்கு இடது பக்கம் காது ரொம்ப வலிக்குது”

“ஏன் என்னாச்சு”

“ஒரு வாரமா சின்னதா வலி இருந்துச்சு.. இப்போ ரொம்ப வலிக்குது ஆதி”

“லைட்டா வலிக்கும்போதே சொல்ல மாட்டியா”

“இல்லை சரி ஆயிடும்னு நினைச்சேன்”

“ஹாஸ்பிடல் போலாமா”

“ஆபீஸ் போய்ட்டு வரேன். சாயங்காலம் போலாம் ஆதி”

“முடியுமா உன்னால”

“பரவால்ல போய்ட்டே வரேன்”

ஆதியிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். எனினும் அலுவலகத்தில் சென்று என்னால் அமரவே முடியவில்லை. வலி வாட்டி எடுத்தது.

அரை மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் அமர முடியவில்லை. விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பி வந்தேன்.

“போகும் போதே வேணாம்னு சொன்னேன்ல”

“தாங்கிக்கலாம்ன்னு நினைச்சேன் ஆதி.. சுத்தமா முடில.. இந்த பக்கம் முழுசா வலிக்குது.. சாப்பிட முடில தண்ணி குடிக்க முடில.. ஒன்னுமே முடில”

பேசப் பேச வலி தாங்காமல் அழுதேன்.

“இங்க எந்த ஹாஸ்பிடல் போலாம்ன்னு தெரில.. விசாரிச்சு பாக்கறேன்.. ஓபன்ல இருக்கான்னு பாக்கறேன். கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ”

படுக்கையில் வலி தாங்காமல் படுத்தேன்.

“ஏன் தான் இந்த நோயெல்லாம் வருதோ கடவுளே” கண்ணீர் கசிந்தது.

அப்பொழுது என் வயிற்றில் இருந்து ஒரு உயிர் என்னை மெல்லியதாய் வருடியது. ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தேன்.

“என்ன நிகழ்ந்தது.. என் குழந்தை என்னை வருடிக் கொடுத்ததா! என் குழந்தையின் அசைவை நான் உணரத் தொடங்கி விட்டேனா” ஆனந்தத்தில் உறைந்தேன்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 39) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 41) – ரேவதி பாலாஜி