in ,

ரகசியமானது காதல் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்            

“அம்மா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“பேசலாமே கவிதா. அதுக்கு ஏன் புதிர் போடறே? நான் துணி எல்லாம் மடிச்சுட்டு இருக்கேன். நீ பேசு, நான் கேட்கறேன்”

“இல்ல மா, நானும் கல்யாணமாகிப் போயிட்டா உன்னை யாருமா கவனிச்சுப்பா?”

“இது என்னடி கேள்வி?”

“இல்லமா, என்னோட கவலையை நான் கேட்கறேன்.”

“கல்யாணமாகி நீதான் வேற வீட்டுக்குப் போகப் போறே. உன்னை யார் ஒழுங்கா கவனிச்சுப்பான்னு நான் கவலைப்பட்டுட்டு இருக்கேன். என்னை யார் கவனிச்சுப்பான்னு நீ எதுக்குக் கவலைப்படறே? அதான் உங்க அப்பா இருக்காரே“

“யாரு அப்பாவா? அப்பா எப்படினு இவ்ளோ வருஷமா பார்த்துட்டு தானே மா இருக்கோம். இவ்ளோ வருஷமா நானும், அக்காவும் தான் நீ சாப்ட்டியா, மருந்து நேரத்துக்கு எடுத்துக்கிட்டியா, சரியா தூங்கினியா எல்லாம் கேட்டுட்டு இருக்கோம். அக்கா கல்யாணமாகிப் போய்ட்டா. இவ்வளவு நாள் நான் பார்த்துட்டேன்.

அடுத்த வாரத்துல எனக்கும் கல்யாணம். நானும் போயிட்ட பிறகு அந்த மாதிரி எல்லாம் உன்னைக் கேக்கறதுக்கு யாருமே இல்லையே மா. அப்பா வாயைத் திறந்து இவ்வளவு வருஷத்துல உன்கிட்ட அந்த மாதிரி எல்லாம் விசாரிச்சதே இல்லையே மா.

நீதான் அப்பாவைப் பார்த்துப் பார்த்து மருந்து போட்டுட்டீங்களா, தலை ஈரத்தைத் துவட்டினீங்களா, நல்லா போர்த்திட்டுத் தூங்குங்க, குளிக்கும்போது வெந்நீர் நல்லா சூடா விடுங்க, மிளகாய்ப் பொடி நைட்ல ரொம்ப சாப்பிடாதீங்க, உங்களுக்குன்னு தனியா நான் காரம் இல்லாம சட்னி அரைச்சுத் தரேன், இப்படி ஒவ்வொண்ணும் அப்பாவுக்காக நீதான் மா பார்த்துப் பார்த்து பண்ணியிருக்கே.

ஆனா அவர் ஒரு நாளும் வாயைத் திறந்து நீ சாப்பிட்டியா மரகதம், மருந்து போட்டுக்கிட்டியான்னு எதுமே கேட்டு நாங்க பார்த்ததே இல்லையே மா. அப்போ எனக்குக் கவலையாத் தானே இருக்கும். அக்காவும் இதேதான் ஃபோன்ல புலம்பிட்டு இருக்கா.”

“அடி போடி, உங்க அப்பாவை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். நான் அவரை கவனிச்சுக்கறதை விட அவர்தான் என்னை ரொம்ப நல்லா கவனிச்சுப்பார். ஆனா அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது.”

“அப்பாவை விட்டுக் கொடுக்காம இருக்கறதுக்காக நீ சும்மா இப்படிப் பேசாதே மா. இவ்வளவு வருஷம் கூடவே இருந்து பார்த்திருக்கோம், எங்களுக்குத் தெரியாதா?”

“தெரியாது கவிதா. வாயைத் திறந்து உங்க அப்பா பேசினதில்லையே தவிர, அவருடைய செயல்களிலேயே அவரோட காதலை எனக்குப் புரிய வச்சுடுவார். அது எனக்கு மட்டும்தான் புரியும். உங்களுக்குப் புரியாது. நீ கல்யாணமாகிப் போகப் போறே இல்ல, உன்னைக் கட்டிக்கப் போறவர் அந்த மாதிரி இருந்தா ஒருவேளை உனக்குப் புரியறதுக்கு வாய்ப்பிருக்கு.”

“என்னம்மா சொல்ற? அப்பாவுக்கு உன் மேல காதல் அதிகமா? சிரிப்புதான் வருது எனக்கு.”

“நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். அதனால உனக்கு சிரிப்பு வருது.”

“என்ன மா புரிஞ்சுக்கல? அப்பா என்னிக்குமே உன்கிட்ட ஆசையாப் பேசினதேயில்லையே மா. விவரம் தெரியாத வயசா எங்களுக்கு? அக்கா கல்யாணமாகிப் போன மூணு மாசத்துலயே இதைப் பத்தி என்கிட்ட பேசினா. மாமா ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவகிட்ட ஐ லவ் யூ’னு சொல்றாரு. இந்த ட்ரெஸ் உனக்கு நல்லாயிருக்கு, இந்தக் கலர்ல நீ அழகாயிருக்கே, ஹேர் ஸ்டைல் இப்படிப் பண்ணா ரொம்ப சூப்பராயிருக்கு இப்படி அக்காகிட்ட ஆசையா சொல்றதை நானே கேட்டேன் மா.

அது மட்டுமா? அவளுக்குப் பிடிச்ச மாதிரி சாப்பிட வெளில கூட்டிட்டுப் போறது, வெளியூர் போய் சுத்தறது, வாரக் கடைசில சமையல் செஞ்சு கொடுக்கறது, வீட்டு வேலைல உதவி செய்யறது இப்படி சொல்லிட்டே போகலாம் மா.

சரி, அக்கா கதையை விடு. எனக்கும் நவீனுக்கும் இன்னும் கல்யாணமே முடியல. ஆனா நிச்சயம் முடிஞ்சதுல இருந்து தினமும் ஃபோன்ல பேசிக்கறோம். என் மேல எவ்வளவு அக்கறையா இருக்கார் தெரியுமா?

ஃபோன்ல பேசும் போதே என் குரலை வச்சு நான் டயர்டா இருக்கேன்னு கண்டுபிடிக்கறார். ஜூஸ் குடி, ரெஸ்ட் எடு, உனக்குப் பிடிச்ச மியூசிக் கேளுன்னு எவ்வளவு அக்கறையா அட்வைஸ் பண்றார் தெரியுமா?

இதெல்லாம் அப்பா ஒருநாள் கூட செஞ்சதில்லையே மா. அன்பா அக்கறையா ரெண்டு வார்த்தை பேசினதில்லையே மா. உனக்கு எந்த உதவியும் பண்ணதில்ல. உதவி பண்ணலேன்னாலும் பரவாயில்ல, அன்பா காதலோட ஐ லவ் யூ எப்பவாவது சொல்லியிருக்காரா?

நீ மட்டும்தான் விழுந்து விழுந்து பதி சேவை பண்றேன்னு அவரை கவனிச்சுக்கறே. அவர் அப்படியில்லையே மா. ஆனாலும் நீ உன் புருஷனை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு எல்லாத்தையும் அனுசரிச்சுட்டிருக்கே. அந்தக் கால சராசரி குடும்பத் தலைவியா இருக்கறது உனக்கு வேணும்னா பெருமையா நிறைவா இருக்கலாம்.

ஆனா எங்க நிலைல இருந்து யோசிச்சுப் பாரு மா. எனக்கும் அக்காவுக்கும் நீதான் எல்லாமே பார்த்துப் பார்த்து செஞ்சிருக்கே. இனிமே நாங்க உன்னை கவனிச்சுக்கணும். ஆனா கல்யாணமானதும் எங்க குடும்பம்னு தனியா நாங்க போயிடுவோம். நீ மட்டும் தனியா காலம் முழுக்க அப்பாவை கவனிச்சுட்டிருப்பே. ஆனா உன்னை யாரு மா பார்த்துப்பா?”

“என்ன கவிதா, இவ்வளவு வருஷம் ஏதோ நீயும் உங்க அக்காவும் தான் என்னைப் பார்த்துட்ட மாதிரி பேசறே. உங்க அப்பாவுக்கு என்மேல அக்கறையே இல்லாத மாதிரி சொல்றே.

உன் வயசுல இருக்கற இந்தக் காலப் பொண்ணுங்களுக்கு உண்மையான காதல்னா என்னன்னே புரியல. தினம் பத்து தடவை ஐ லவ் யூ சொல்லணும், சந்தோஷத்துல உங்களைத் தூக்கி சுத்தணும், நீங்க விரும்பின நேரத்துல உங்க விருப்பப்படி வெளில கூட்டிட்டுப் போகணும், உங்களைப் பாராட்டிட்டே இருக்கணும்னு இப்படி நிறைய எதிர்பார்ப்புகள், நிபந்தனைகளை நிறைவேத்தினா அது உண்மையான காதல்னு ஒரு மாயைல இருக்கீங்க.

அதெல்லாம் செய்யலேன்னா ஒத்து வரலைன்னு ரொம்ப சுலபமா டைவர்ஸ்னு ஒரு ஆயுதத்தை எடுக்கறீங்க. அதனால எனக்கும் உங்க அப்பாவுக்கும் இடையிலான காதல் உனக்கெல்லாம் புரியாது.

காலைல காஃபில ஆரம்பிச்சு நைட் தூங்கற வரைக்கும் நான் உங்க அப்பாவை கவனிக்கறதைவிட அவர்தான் என்னை ரொம்ப அக்கறையா பார்த்துப்பார். நானாவது நிறைய முறை சலிச்சுப்பேன். அவர் இதுவரைக்கும் எனக்கு செய்யறதுக்கு சலிச்சுகிட்டதே இல்ல.

தினமும் காலைல உங்க எல்லாருக்கும் காஃபி கொடுத்துட்டு நான் குளிக்கப் போயிடுவேன். குளிச்சுட்டு வந்து தான் காஃபி குடிப்பேன். உங்களுக்கெல்லாம் காஃபி கலந்த பிறகு அந்த டிக்காஷன் ஸ்ட்ராங்கா இல்லாம லைட்டா இருக்கும்ங்கறதால, நான் குளிக்கப் போன பிறகு உங்கப்பா கொஞ்சமா பொடி போட்டு எனக்கு தனியா ஸ்ட்ராங்கா டிக்காஷன் போட்டு வைப்பார். பால் சூடு கம்மியாயிடக் கூடாதுன்னு மறுபடியும் லேசா சுட வச்சு வைப்பார்.

நான் குளிக்கப் போறதுக்கு முன்னாடி பாத்ரூம்ல வெந்நீர் நல்லா வருதான்னு தினமும் செக் பண்ணுவார். வாளில பச்சைத் தண்ணீர் அதிகமா இருந்தா, வெளாவிக் குளிக்க எனக்கு சிரமமா இருக்கும்னு அந்தத் தண்ணியை வேற வாளில இறைச்சு வைப்பார்.

சோப்பு, ஷாம்பூ எல்லாம் இருக்கான்னு அவர்தான் செக் பண்ணுவார். சோப் காலியாகற மாதிரி இருந்தா புது சோப் உங்க அப்பாதான் எடுத்து வைப்பார். நான் குளிக்கப் போற அவசரத்துல மறந்துட்டுப் போய்டுவேன். ஆனா அவர் மறக்காம எடுத்து வச்சுடுவார்.

மருந்து போட்டுட்டியான்னு என்னைக் கேட்டதில்லைன்னு சொல்றியே, மருந்து காலியாகறதுக்கு முன்னாடி வாங்கிட்டு வந்து, காலைல என்ன மாத்திரை போட்டுக்கணும், ராத்திரி என்ன போட்டுக்கணும்னு கட் பண்ணி அதை டப்பால போட்டு வச்சு, தினமும் அந்த டப்பாவில் மருந்து காலியாகுதான்னு பார்ப்பாரு. நான் போட மறந்துட்டா டப்பாவைக் கொண்டு வந்து என் கைல கொடுப்பாரு. மறுநாளைக்கு அவர்தான் மருந்தைப் பிரிச்சுப் போட்டு வைப்பார்.

உங்க அப்பாவை மருந்து போட்டுக்கிட்டீங்களான்னு நான் வெறுமனே கேட்கறேன். அது உங்களுக்குத் தெரியும். ஆனா அவர் எனக்காக இவ்வளவு செய்றார்… மத்தவங்க கவனிக்காத மாதிரி.

தோசை சப்பாத்தி இதெல்லாம் சாப்பிடும் போது அவர் எழுந்து சமையலறைக்கு வருவாரே. நீங்க கேட்டாக்கூட மிளகாய்ப் பொடி எடுக்கப் போறேன், வெல்லம் எடுத்துக்கப் போறேன்னு ஏதோ ஒரு காரணம் சொல்லிட்டு அவர் உள்ளே வருவார். அது எதுக்குத் தெரியுமா?

சுடச்சுட எனக்கு நாலு வாய் ஊட்டி விட்டுட்டு அப்புறம் திரும்பி வந்து அவர் சாப்பிடுவார். நீயும், வனிதாவும் நான் சாப்பிட்டாச்சான்னு விசாரிச்சிருக்கீங்க. ஆனா நான் முதல்ல சாப்பிட்டேனா, சூடா சாப்பிட்டேனான்னு நீங்க கவனிக்கல. உங்க அப்பாதான் அதை கவனிச்சுகிட்டார்.

எனக்கு முன்னால அவர் படுத்துத் தூங்கிட்டாலும், தினமும் பதினோரு மணிக்கு எழுந்து, நான் தூங்கிட்டேனா, போர்த்திட்டிருக்கேனா, எனக்கு ஃபேன் காத்து ஒழுங்கா வருதான்னு எல்லாம் சரி பார்ப்பார். இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் அவர் எனக்காக மெனக்கெடறது எனக்கு மட்டும்தான் தெரியும். இதுவும் காதல்தான். அது புரிதல் இருக்கறவங்களுக்கு மட்டும் தெரியும்.

இதெல்லாம் ஆரம்பத்துல நான் வேண்டாம்னு தடுத்திருக்கேன். ஆனா அவருக்கு அதுதான் திருப்தினு தெரிஞ்ச பிறகு நானும் அதையெல்லாம் ரகசியமா ரசிக்கப் பழகினேன்.

சொல்ற காதல் ஒருவித அழகுன்னா சொல்லாத காதல் தனி அழகு. உங்க அப்பாவோட இந்த ரகசியக் காதல் தான் என்னை இன்னும் சுறுசுறுப்பா வச்சிருக்கு. உனக்குப் புரியறதுக்கு இன்னும் கொஞ்சம் காலமாகும்.”

சொல்லி முடித்தபோது அம்மாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தில் காதல் கரை புரண்டதைப் பார்த்த கவிதாவுக்கு அப்பாவின் மேல் மரியாதை அதிகமானது.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சரண்யா எங்கே? (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 17) – ஜெயலக்ஷ்மி