எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ ஏங்க… உங்க போன் அடிக்கிதே, காதில் விழலையா…’ என்று காமாஷி கூப்பிட்டுச் சொன்னவுடன்தான் கொஞ்சம் உற்றுக் கவனித்தான் ராஜா. அதற்குள் போன் ரிங் சத்தம் நின்றுவிட்டது.
‘ உங்க போன்தான் அடிச்சது… போய் யாருன்னு பாருங்க… ‘ என்று மறுபடியும் குரல் கொடுத்தாள் அவள்.
‘ வர வர இந்த போன் அடிக்கறதே தெரிய மாட்டேங்குது…எத்தனை தடவை கழட்டி மாட்டியாச்சு… கடைக்காரன்கிட்டே கொடுத்தா இது ரொம்ப பழைய மாடல். எதுவும் மாத்தமுடியாது. எங்ககிட்டயே புதுபுது மாடல்ல ஃபோன் இருக்கு, வேண்ணா ஒன்னு வாங்கிக்கங்க… ‘ என்று சொல்லி ரிப்பேர் செய்ய மறுத்து, தனது போனை நமக்கு விற்கப் பார்க்கிறான் ‘ என்று பலமுறை வெறுப்பை உமிழ்ந்திருக்கிறான் அவன்.
ஒருவழியாய் அங்கே இங்கே என்று தேடி போனைக் கண்டுபிடித்துவிட்டான். டீப்பாயின் அடிப்பகுதியில் கிடந்தது அது. ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லை, அதனால் அது விடும் ரிங் சத்தம் சரியாக கேட்கவில்லை. அது வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த கதை.
‘ இந்த தடவை போனஸ் வந்ததும் ஒரு ஃபோன் வாங்கியே தீரனும். இனிமேலும் தள்ளிப் போடறதுல அர்த்தமே இல்லை…இதை வெச்சிக்கிட்டு கேவலப் படவேண்டியிருக்கு…’
அப்போதுதான் பார்த்தான். ஆஃப் ஆகிக் கிடந்தது.
இப்படித்தான், திடீர் திடீரென்று ஆஃப் ஆகிவிடும். பேட்டரியை மாற்றியெல்லாம் பார்த்தாகி விட்டது. ‘ யாருங்க போன்ல…’ என்று குரல் கொடுத்தாள், காமாக்ஷி. ‘ ஏ.. யாருன்னு நான் கண்டேன்… கால் வந்ததும் போன் ஆஃப் ஆகிடுச்சு போல… இப்படித்தான், ஏதாவது கால் வந்தா தானா ஆஃப் ஆகிடுது, சனியன்… ’ என்று சலித்துக் கொண்டான்.
‘ தூக்கி குப்பைல போடுங்க உங்க போனை… நீங்களும் உங்க போனும்…’ என்று பரிகசித்தாள் அவள். கூடவே, ‘ போனஸ் வருதுன்னீங்கள்ல. எனக்கு புடவையெல்லாம் எடுக்கவேண்டாம். நீங்க ஒரு புது மொபைல் வாங்கிக்கங்க… ’ என்று அழுத்திச் சொன்னாள் காமாக்ஷி. அவளது பெருந்தன்மையை மெச்சியபடி நகர்ந்தான், அவன்.
xxxxxxxxx
மறுநாள் ஆபிஸ் போனதுமே ஒரே பரபரப்பு. ‘ இன்னிக்கு போனஸ் கிரிடிட் ஆகிடுமாம்… யூனியன்ல சொல்லியிருக்காங்க… ‘ என்றார் எதிரில் வந்த ரெங்கசாமி.
அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருத்தர் மொபைலுக்கும் மெசெஜ் வர ஆரம்பித்தது. ராஜா ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க மொபைலை எடுத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது மறுபடியும் ஆப் ஆகி கிடந்தது.
‘ என்னாச்சு ராஜா… ‘ என்று நெருங்கி வந்த செந்திலிடம், ஃபோனை எடுத்துக் காட்டினான். ‘ என்ன, வழக்கம் போல ஆப் ஆகிக் கிடக்கா…. இந்த பாழாய் போன மொபைலை மாத்துப்பா… ‘ என்று விட்டு நகர்ந்தான் அவன்.
மொபைலை எடுத்து ரீஸ்டார்ட் செய்தான். இப்போது 50% அளவுக்கு பேட்டரி இருந்தது. ‘ சனியன்…. 50% இருக்கே… அப்புறம் ஏன்தான் ஆஃப் ஆச்சோ…’ என்று தனக்குள், திட்டிக்கொண்டே கொஞ்சம் வேகமாய் டேபிள் மேல் போனை லொட்டென போட்டான். அப்போதுதான் மெசேஜ் டோன் கேட்டது. கணக்கில் பத்தாயிரத்து தொள்ளாயிரம் வரவானதற்கான மெசேஜ் அது.
‘ அப்பாடா… இன்னிக்கு சாயங்காலம் காமாட்சியை கூட்டிக்கிட்டுப் போய் ஒரு சேலை எடுத்துக் கொடுத்துட்டு, அப்படியே ஒரு மொபைலும் வாங்கிடவேண்டியதுதான்…’ என்று அப்போதே முடிவு செய்துகொண்டான்.
சாயங்காலம் வீட்டை நெருங்கும்போது வீட்டுக்கு வெளியே வாசலில் நிறைய செருப்புகள். கொஞ்சம் பகீர் என்றது. மொபெட்டை நிறுத்திவிட்டு தவிப்புடன் உள்ளே ஓடினான். எதிரே வந்தாள் காமாட்சி.
‘ ஏங்க…. நம்ம தாரிணி….’
‘ ஐயய்யோ என்ன ஆச்சு…’
‘ இருங்க…பதறாதீங்க… ‘ என்றவள் புன்னகைத்தபடி, ‘ நல்ல விஷயம்தான். தாரிணி பெரிய மனுஷியாயிட்டா… என்னை அரப்பெல்லாம் வெச்சுக் குளிப்பாட்டி உள்ளே உக்கார வெச்சிருக்கோம்… மாமனுக்கு சொல்லனுமே, உடனே திருச்சிக்கு போன் போட்டு சொல்லிட்டேன். உங்களுக்கு போன் போட்டா போகவே மாட்டேங்குது…. என்னாச்சு உங்க ஃபோனுக்கு…’ என்று அவள் முறைக்க, ‘ எனக்கு போன் எதுவும் வரவே இல்லையே…’ என்றபடி பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தான். அது ஆப் ஆகிக் கிடந்தது.
‘ சனியன் ஆஃப் ஆகிக் கிடக்குது… ‘ முனகினான் அவன்.
‘ ஹூம், அதான் தெரியுமே… ‘ என்று சிரித்தவள், ‘ அப்புறம் சொல்ல மறந்துட்டேன். தாரிணிக்கு சுத்தனுமே… எப்படியும் ஒரு பத்தாயிரம் ஆகும். ரெடிபண்ணிா வெச்சிக்கங்க….’ என்றாள்.
கையிலிருந்த ஃபோனை விரக்தியுடன் பார்த்தான் அவன்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings