இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கார்த்திக் பேசிவிட்டு ஃபோன் வைத்ததும் புவனேஷ்க்கு கால் செய்தாள் செண்பகம்.
புவனேஷ் செண்பகத்திடம் நல்லபடியாக பேசினாலும் அவன் பேச்சும் குரலும் ஏதோ சஞ்சலத்துடனே இருந்தது.
“நான் உனக்கு போன் செய்யும்போது யாரிடமும் பேசிட்டு இருந்த போல”
புவனேஷ் பட்டுன்னு இந்த வார்த்தையை கேட்டதும் செண்பகத்தின் மனம் சங்கடத்திற்க்கு உள்ளானது.
‘நீ போன் செய்வேன்னு ரொம்ப நேரம் காத்திருந்தேன் நீ யார் கூடயோ அதிக நேரம் பேசிட்டு இருந்த போல, அதனால தான் கேட்டேன் நீ ஒன்னும் தப்பா நினைச்சிக்காத செண்பகம்’
“புவனேஷ் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா”
“குட் நியூஸா! நானும் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லனும்”
‘என்ன குட் நியூஸ்? புவனேஷ்’
“வர ஞாயிற்றுக்கிழமை என்னை டிசார்ஜ் பண்றாங்க”
‘உண்மையாவா ஐயோ.. சந்தோஷத்துல கையும் ஓடல, காலும் ஓடலையே, அப்படின்னா சனிக்கிழமை நான் வந்து உங்களை ஹாஸ்பிட்டல்ல பார்க்கிறேன்’
“மேனேஜர் லீவு தர மாட்டாரே”
‘மேனேஜர் யார் எனக்கு லீவு கொடுக்க, லீவுக்காக அவர் காலை புடிச்சதெல்லாம் அந்த காலம், இப்ப கதையே மாறிடுச்சு’
“என்ன சொல்ற செண்பகம் ஒழுங்கா புரியிற மாதிரி சொல்லு”
‘நான் ஒரு குட் நியூஸ் என்று சொன்னேனே அது என்ன தெரியுமா? கம்பெனி வேலையை விட்டு நின்னுட்டேன்’
“இது உனக்கு குட் நியூஸா? ஏன் நின்ன? எதுக்கு நின்ன?”
‘எனக்கு 18000 ரூபாய் சம்பளத்தில் புது வேலை கிடைச்சிருக்கு’
என்ன சொல்ற செண்பகம், உண்மையாவா? என்று ஆச்சரியத்துடன் வினவினான் புவனேஷ்.
மேனேஜர் தன்னை வேலையை விட்டு தூக்கியதையும், கார்த்திக் தனக்கு புது வேலை வாங்கி கொடுத்ததையும் செண்பகம் சொன்னதும் புவனேஷின் முகம் மாறியது.
அந்த டாக்டர் எந்த நோக்கத்திற்காக சென்பகத்திடம் பழகுகிறார், செண்பகத்திற்கு மட்டும் ஏன் தேடி தேடி நல்லது செய்யணும் என்ற கேள்விகள் புவனேஷின் மனதை துளைத்து கொண்டிருக்கும் போதே செண்பகம் தொடர்ந்து பேசலாயினாள்.
அவரு ரொம்ப நல்லவர், நீங்கதான் அவரை தப்பா புரிஞ்சுகிட்டு அவர் கூட பேசாத, அவர் வண்டில ஏறாதன்னு சொல்றீங்க, அவர் எவ்வளவு பெரிய டாக்டரு அவருடைய நட்பு கிடைச்சதுக்கு நான் பாக்கியம் செஞ்சிருக்கணும்.
இதைக் கேட்டதும் கார்த்திக்குடைய, கண்கள் சிவக்க ஆரம்பித்தன. அவனது கோபத்திற்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்தால் செண்பகம் இந்நேரம் சாம்பலாகிப் போய் இருப்பாள்.
‘வர வர உன் போக்கே சரியில்ல’ என்று கோபத்துடன் சத்தமாக கத்தினான்.
‘எதுக்கு நாய் மாதிரி கத்துற’
“ஓ… நான் பேசுறது உனக்கு நாய் மாதிரி இருக்கு, அந்த கார்த்திக் பேசினால் கொஞ்சற மாதிரி இருக்கா?”
இந்த வார்த்தையை புவனேஷ் வாயிலிருந்து வந்ததும், கண்ணாடி உடைந்தது போல் அவள் இதயமும் நொறுங்கியது.
“அவரை என் உடன்பிறந்தவன் போல தான் நான் நினைச்சேன், அவரும் என்னை அப்படி தான் நினைச்சாரு ஆனா நீங்க இப்படி தப்பா நினைச்சி என்னையே அசிங்கபடுத்திட்டிங்க. இனியும் உங்ககிட்ட பேசி எந்த பயனும் இல்ல, ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்கிங்க என் உடலைவிட்டு உயிர் பிரியும் வரை நான் உங்கள தவிர வேறு யாரையும் நினைக்க மாட்டேன் ” என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த அவள் போனை கட் செய்தாள்.
தன் முந்தானையை வாயில் வைத்து மூடி கொண்டு, கண்ணில் பெருகும் நீரை துடைத்து கொண்டே சத்தம் வராமல் அழுதாள். தன் உயிரினும் மேலாக நினைத்த தன் காதலன் தன்னை சந்தேகபடும் தோனியில் பேசினால், அவளும் என்னதான் செய்வாள்.
ஐயோ… இப்படி பண்ணிட்டேனே, என் செண்பகத்தை பத்தி தெரிஞ்சும் அவள் உள்ளம் நோகுற அளவுக்கு பேசிட்டேனே, அவள் மனசு என்ன பாடுபட்டு இருக்குமோ, எல்லாம் என் மேல தான் தப்பு என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
இதையே நினைத்து பல மணி நேரம் தூக்கம் வராமல் தவித்த செண்பகம் நேரம் ஆகஆக தூங்கினாள்.
மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் வாசலில் கோலம் போட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி, அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றாள். தன் கஷ்டத்தை எல்லாம் கடவுளிடம் சொல்லி அழுது புலம்பிவிட்டு வீட்டுக்கு வரும்போது எட்டு மணி.
‘ஏம்மா செண்பகம் வேலைக்கு கிளம்புலா’ என்று கேட்டார் செண்பகத்தின் அப்பா.
“நான் தான் நேத்தே சொன்னேனேப்பா, பக்கத்திலேயே துணிகடையில வேலை கிடைச்சிருக்குனு”
“உங்க அம்மா இருந்திருந்தா உன்னை கரை சேர்க்க நாலு நகை நட்டு சேத்து வச்சிருப்பாள், நான் என்ன பாவம் செஞ்சனோ அந்த கடவுள் என்னை ஊணமாக்கிட்டான். நீதாம்மா கண்ணும் கருத்துமா வேலை செஞ்சி உனக்கு தேவையானதை வாங்கிக்கணும், இந்த அப்பாவல ஒன்னும் முடியலம்மா, என்னை மன்னிச்சிடும்மா” என்று தாழ்ந்த குரலில் பேசினார் செண்பகத்தின் அப்பா.
என்னப்பா.. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு, இந்த புது வேலையில நல்ல சம்பளம், நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும், நீ வீணா கவலைபடாதப்பா என்று அப்பாவுக்கு தெம்பினை கொடுத்தாள்.
தன் தம்பிக்கும், அப்பாவுக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு தன் தொலைபேசியை எடுத்து பார்க்கிறாள், புவனேஷிடமிருந்து பத்து மிஸ்டு கால்.
மிஸ்டு காலை பார்த்ததும் புவனேஷ் தன்னை பற்றி பேசிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது, இருந்த போதிலும் செண்பகத்தின் மனம் அவனிடம் பேச வேண்டும் என்று ஆசை தூண்டவை புவனேஷ்க்கு கால் செய்தாள்.
‘செண்பகம்…’
“எனக்கு இங்க அதிக வேலை இருக்கு எதுக்கு போன் பண்ணிங்களோ விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரமா போனை வையுங்க”
‘இன்னும் உன் கோபம் போகலையா?’
“நீங்க சொன்ன வார்த்தையைக் கேட்கும் போது ஒரு கொலையே பண்ணா கூட என் கோபம் போகாது”
‘என் உதடு மட்டும்தான் அப்படி பேசிச்சி, ஆனா என் மனசுல உனக்காக கோவிலே கட்டி வச்சிருக்கேன், நான் தெரியாம பேசிட்டேன் செண்பகம் என்ன மன்னிச்சிடு’
“தீயில பட்ட காயம் ஆறிடும், ஆனா மனசுல பட்ட காயம் ஆராதுனு பெரியவர் ஒருவர் சொல்லிட்டே போயிருக்காரே, அதுல நான் மட்டும் விதிவிலக்கா?”
‘நான் உன் மேல அவ்வளவு காதல் வச்சிருக்கேன் அப்படி இருக்கும்போது நீ வேறு யாரையோ புகழும் போது கோபம் வராதா என்ன? உன் மேல் இருக்கிற அன்பினால் தான் நான் அப்படி பண்ணிட்டேன், நான் செஞ்சது தப்புதான் என்ன மன்னிச்சிடு’ என்று தன் காதலியை சமாதானம் படுத்த ஏதேதோ சொல்லி கொண்டிருந்தான் புவனேஷ்.
இந்த தொடரின் அனைத்து பாகங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings