2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
இதுவரை:
கர்ப்ப காலத்தில் வேலைக்காகப் பெற்றோருடன் இருந்த கவியினியாள் வார விடுமுறையில் தன் வீட்டிற்குச் செல்கிறாள். கணவரிடம் உணவின் மீதான விருப்பு வெறுப்பைப் பகிர்கிறாள். மருத்துவரின் அறிவுரைப்படி இரத்தப் பரிசோதனை எடுக்க திட்டமிடுகிறார்கள். பின் என்ன நிகழ்ந்தது என்பதை காண்போம்.
இனி:
கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு இடது புறம் திரும்பிக் கொண்டேன். வலது கையில் பெல்டில் இறுக்கிக் கட்டி நரம்பில் ஊசி குத்தி இரத்தம் எடுத்தனர்.
ஊசியை இழுக்கும் பொழுது இன்னும் அதிகம் வலித்தது. முகத்தை சுளித்தேன். இரத்தம் எடுத்து முடித்ததும் கண்களை திறந்தேன். எதிரிலே இரத்தம் எடுத்தப் பெண் ஒரு நிமிடம் என்னை அலட்சியமாய் பார்த்தார். இதற்கே இந்த முகச்சுளிப்பா இன்னும் எவ்வளவோ இருக்கிறதே என்பது போல் இருந்தது. அதெல்லாம் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது இதுவும் வலி தானே.
அதை எடுத்து தனியாக வைத்துக் கொண்டு மீண்டும் ஊசியில் விரல் நுனியில் குத்தினார்.
“ப்ளீடிங் டைம் கிலாட்டிங் டைம் டெஸ்ட் எழுதி குடுத்துருக்காங்க.. அதாவது உங்களுக்கு காயம் ஆனா ரத்தம் எவ்ளோ நேரம் வரும்.. எவ்வளவு நேரத்துல உறையுதுனு பாக்கணும்”
சரி என்று தலையசைத்துவிட்டு விரலை நீட்டியே வைத்திருந்தேன்.
சில நொடிகளில் இரத்தம் வருவது நின்றது.
“அவ்ளோ தான் கிளம்பலாம்”
“சுகர் எழுதிருக்காங்க.. சாப்பிட்டு வரணுமா திரும்ப டெஸ்ட் எடுக்க” ஆதி கேட்டார்.
“இல்லை வேணாம்.. ரேண்டம் சுகர் தான் இப்போ பாக்கறோம்.. அடுத்த டைம் குளுக்கோஸ் குடிச்சி எடுக்கணும் அப்போ பாத்துக்கலாம்.. இப்போ அவ்ளோதான்”
“ரிப்போர்ட் எப்போ கிடைக்கும்”
“தைராய்டும் எழுதிருக்காங்க… அதுக்கு ரெண்டு நாள் ஆகும்.. இன்னிக்கு செக்கப் போணும்னா மீதி ரிசல்ட் கொடுத்துருவோம்”
“அப்படியா.. நாங்க ஊருக்கு போணுமே.. இன்னிக்கு மீதி குடுத்துருங்க.. தைராய்டு அப்புறம் கூட வாங்கிக்றோம்”
இரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுத்துவிட்டு மேலே சென்று பைலை கொடுத்து டோக்கன் வாங்கினோம். டோக்கன் நம்பர் பதினைந்து. வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மூன்று மணி நேரம் கழித்து வந்தோம். இரத்த பரிசோதனை முடிவு வந்திருந்தது. அதை எடுத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றோம். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல் தெரிந்தது சூழலில். அதற்குள் என்னுடைய எடை மற்றும் இரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டது.
காத்திருந்த சமயத்தில் என் இரத்த பரிசோதனை முடிவில் இருக்கும் ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கிறதா என்பதை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஹீமோகுளோபின் பதினொன்று இருந்தது. பன்னிரண்டு இருக்க வேண்டுமாம். பரவாயில்லை கொஞ்சம் தானே வித்தியாசம். இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
“அதெல்லாம் பாக்காத கவி.. டாக்டரே சொல்வாங்க சரியா இருக்கா என்னன்னு”
“லைட்டா பாத்தேன். அடுத்து நம்பதான்”
“இன்னிக்கும் என்னை உள்ள விடுவாங்களா..”
“தெரில ஆதி”
நாங்கள் பேசிகொண்டிருந்த சமயத்தில் என் பெயர் அழைக்கப்பட்டது.
“பேபி ஹார்ட் பீட் நல்லாருக்கு.. குரோத் நல்லாருக்கு.. உங்க வெயிட் ஏறவே இல்லையே” வயிற்றில் கை வைத்தும் குழந்தையின் இதயத் துடிப்பை கருவியிலும் சோதித்துவிட்டு மருத்துவர் கூறினார்.
“வாமிட் இருக்கு மேம்.. எதுமே சாப்பிட புடிக்கல”
“ஒரு வாமிட் மாத்திரை எழுதுறேன். சாப்பிடறதுக்கு முன்னாடி இத போட்டுக்கோங்க.. அடுத்த முறை வரும் போது வெயிட் கூடி இருக்கணும்”
“ஓகே மேம்”
“ஹிமோகுளோபின் அளவும் பார்டர் தான். பி.சி.வியும் முக்கியம் நல்லா கேரட் பீட்ரூட் அத்திப் பழம் டேட்ஸ்லாம் சாப்பிடுங்க”
தலையசைத்து கொண்டே அமர்ந்து இருந்தேன்.
“இரும்பு சத்து மாத்திரை எல்லாம் எழுதி இருக்கும் இதும் முழுங்குங்க.. கூட யார் வந்துருக்கா”
“ஹஸ்பண்ட் வந்துருக்காரு”
“அவர கூப்புடு மா”
ஆதியை அழைத்து வந்தார் உதவிக்கு நின்று இருந்த பெண்.
“பேபி நல்லாருக்கு.. அம்மா தான் சாப்பிடறதே இல்லையா..” என்று கேட்ட மருத்துவரிடம் எந்த பதிலும் கூறாமல் சிரித்துக் கொண்டே நின்றார் ஆதி
“தைராய்டு டெஸ்ட் குடுத்துருக்குள்ள.. தைராய்டு நார்மல்னா ஓகே.. இல்லனா ஹாஸ்பிடல்ல இருந்து போன் வரும் வந்து பாத்துட்டு டேப்லட் வாங்கிக்கோங்க அப்பறம் மூணாவது மாசம் முடியம்போது ஒரு ஸ்கேன் எடுக்கணும். என்.டி ஸ்கேன் அதோட ஒரு மரபணு சோதனை பண்ணும். அது இவங்க இரத்தத்த எடுத்து சென்னை அனுப்பனும் ரெண்டு மூணு நாள்ல ரிசல்ட் வரும்.. குழந்தை ஆரோக்கியமா இருக்கா எதாவது பிரச்சனை இருக்கான்னு கண்டுபிடிச்சரலாம்..” என்று கூறிவிட்டு அதோடு சேர்த்து எவ்வளவு ரூபாய் அதற்கு ஆகும் என்பதையெல்லாம் விளக்கிக் கொண்டு இருந்தார் மருத்துவர்.
“ஜனவரி முதல் வாரம் அவங்களுக்கு மூணு மாசம் முடியுதுல.. அப்போ வாங்க எடுத்துக்கலாம்”
“மேடம் நாங்க ஈரோடு போறோமே.. பொங்கலுக்கு தான் வர மாதிரி இருக்கும்”
“அப்போ அங்கேயே கூட பாத்து எடுத்துருங்க.. சீக்கிரம் பாக்கிறது நல்லது”
“ஓகே மேம்”
குழப்பத்தோடே நானும் என் கணவரும் வெளியேறினோம்.
“என்னங்க பண்றது இப்போ.. அங்க வேற டாக்டர் பாத்துக்கலாமா.. அதுக்குள்ள அடுத்த டெஸ்ட் ஸ்கேன் சொல்றாங்க”
“நம்ம குழந்தைக்காக தான பாத்துக்கலாம்”
மாத்திரைகளை வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
“ஈரோடுல சின்ன பாட்டிக்கு சொந்தக்காரங்க ஒருத்தரு ஹாஸ்பிடல் வெச்சிருக்காங்க.. லேடி டாக்டர்.. நல்லா பிரசவம் பாப்பாங்க அங்கேயே காட்டிப்பாக்கறிங்களா” அத்தை கேட்டார்.
“சரிம்மா.. போய் பாக்கறோம்.. ஊருக்கு வரீங்களா”
“உங்கப்பாக்கு வேலை இருக்காம்.. நான் மட்டும் வரவா”
“வேணாம் அத்தை.. நானே பாத்துக்கிறேன்”
“சமைக்க கஷ்டமா இருந்தா சொல்லு.. வந்தட்றேன்”
“செஞ்சிக்கிறேன் அத்தை.. ரொம்ப முடிலனா சொல்றேன்”
“சாப்பாடு போடவா சாப்பட்றீங்களா”
“வாந்திக்கு மாத்திரை இருக்கு போட்டு வரேன் அத்தை”
மாத்திரை போட்டு சில நிமிடங்கள் கழித்து சாப்பிட தொடங்கியதும் வாந்தி வந்தது.
“மாத்திரையும் வந்துடுச்சி”
“ம்ம்மா அவ வாந்திக்கு மாத்திரை போட்டு அதையும் வாந்தியா எடுத்துட்டா.. இவள கூட்டிட்டு போய் தனியா நான் என்ன பண்றது”
அந்த பயம் எனக்குள்ளும் எழுந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings