2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“லேடீஸ் அண்ட் ஜென்டில்மென், ஏர் ஃபிரான்ஸ் வெல்கம்ஸ் யூ டு சென்னை. த லோகல் டைம் இஸ் ட்வெல்வ் ஃபைவ் எ.எம். ஃபார் யுவர் ஸேஃப்டி அண்ட் த ஸேஃப்டி ஆஃப் தோஸ் அரௌண்ட் யு, ப்ளீஸ் ரிமைன் ஸீடட் வித் யுவர் சீட் பெல்ட் ஃபாஸன்ட்…” என்ற விமான கேப்டனின் அறிவிப்பு கேட்டு கண் விழித்தான் வெற்றி. இன்னும் சில மணித்துளிகளில் சொந்த ஊர்க் காற்றை சுவாசிக்கப் போகும் உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது.
உலகின் முதனிலை மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டில் வேலை, கையில் பிடிக்க முடியாத அளவு சம்பளம், சொகுசு வாழ்க்கை. இது எதுவுமே கொடுக்க முடியாத சந்தோஷத்தை சொந்த ஊர் நினைவு தந்தது.
‘வயலில் விளையும் பசுமையான காய்கறிகளைக் கொண்டு அம்மா கையால் சமைத்து சுடச்சுட பறிமாறும் உணவு, ஆற்றில் நீச்சலடித்துக் குளியல், வேப்ப மரக்காற்றோடு பாலிய நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், கபடி விளையாட்டுக்கள், மாலா… ‘அவள் பெயரை நினைத்தவுடன் உடலின் அனைத்து அணுக்களிலுமுள்ள எலெக்ட்ரான்கள் அதிர்வடைந்து உச்சி முதல் பாதம் வரை குறைவழுத்த மின்சாரத்தை பாய்ச்சியது.
இரண்டு வருடங்களாயிற்று, அவளைப் பார்த்து. வாஷிங்டனில் பார்த்த மாடர்னான எந்தப் பெண்ணிலும் இல்லாத ஏதோ ஒன்று அந்தக் கருவாச்சியிடம் இருந்தது. ஒளிந்து ஒளிந்து பார்க்கும் காதல் பொங்கும் ஓரக்கண் பார்வையா, அவனுக்கு பிடித்தவற்றையே ஓடிஓடிச் செய்யும் துடிப்பா, தாவணி நுனி திருகி நாணத்துடன் சிந்தும் புன்னகையா, வேறு யாரையும் தலை நிமிர்ந்து பாக்காத பயிர்ப்பா, தொடை வரை நீண்ட ஜடையா, கொடி போன்ற இடை அசையும் மென்னடையா… ஏதோ ஒன்று அந்தக் கள்ளியின்பால் மனதைக் கவ்வியிழுத்தது.
தடக்… தடக்… என விமானத்தின் சக்கரங்கள் தரையில் பதிய, நனவுக்கு வந்தான். அனைவரும் எழுந்து அவரவர் பெட்டிகளை இறக்க ஆரம்பிக்க, புன்னகையுடன் வெற்றியும் எழுந்தான்.
ஊருக்குள் நுழையும் போதே ஒருவித வெறுமையும், தெருவை நெருங்க நெருங்க ஒப்பாரிச் சத்தமும் உற்சாகத்தைக் கொன்று, பதற்றத்தை பிறப்பித்தது.
“வாப்பா, வெற்றி! நீ சென்னைலருந்து லீவுக்கு வரப்பயே… உன்னைப் பார்த்தவுடனே இளநி, நுங்கு, பழங்கள்னு கொண்டு வந்து குவிப்பாரே, இப்ப அமெரிக்காலருந்து வர்ற. உன்னப் பாக்கக் கூட அவருக்கு கொடுத்து வைக்கலியேப்பா” என்றார், கணேசன் மாமா.
“என்ன மாமா சொல்றீங்க?… சந்திரன் மாமாவா?”
“ஆமாப்பா, ஆமா!“
“ஏன் மாமா, என்னாச்சு?“
“போன முறை, மழ பெய்யாம, வௌச்சல் போச்சு. மூத்த மக கல்யாணத்துக்கு வாங்குன கடனையே அடைக்க முடியாம அடகு வச்ச வயலு மூழ்கிப் போச்சு. இந்த முறை வெங்காயமும், தக்காளியும் நல்ல விலைக்குப் போகுது, தலை நிமிந்திடலாம்னு நினைச்சா, அட மழ பெஞ்சுருச்சு. வியாபாரி வராம, வெங்காயம் மொளச்சி போச்சு. தக்காளி அழுகிப் போச்சு. மீதியிருந்த கொஞ்ச வயலும் மூழ்கப் போகுதேன்னு நொந்து போய்ட்டாரு. இன்னும் மூணு பொண்ணுகள கரையேத்தணுமே. குடும்பத்தோட போய்டலாம்னு பால்டாய்ல கொழம்புல கலக்குனவரு, தான் சாப்டவுடனே, பொண்டாட்டி புள்ளைங்க துடிதுடிச்சி சாகறத பாக்க முடியாதுனு நினைச்சாரோ, என்னவோ வேகமா வெளிய கிளம்பி போய்ட்டாரு. இதுங்க கொழம்புல நாத்தம் வரதப் பாத்து சாப்டாம, அவரை தேடிப் போனா மரத்தடில செத்துக் கிடக்காரு“
“என் கண்ணு… என் ராஜா… ஒருநாள் ரொம்ப பெரிய ஆளா வருவான்“ என்று சொல்லி தன்னை தோள் மேல் சுமந்த சந்திரன் மாமா நினைவினில் நிழலாடினார்.
மாலா, சந்திரன் மாமாவின் இரண்டாவது மகள், இவன் மனதைத் திருடிய கள்ளி… தலைவிரி கோலமாய், கண்கள் வீங்கிச் சிவந்து மண்ணில் புரண்டு கொண்டிருந்தாள். இவனைப் பார்க்கவும் கதறல் இன்னும் அதிகமானது. ‘உன்ன இந்தக் கோலத்துல பாக்கவாடி ஓடி வந்தேன்’ என்று நெஞ்சு தவித்தது.
அம்மா இவனைப் பார்த்த சந்தோஷத்தை வெளியே காட்ட முடியாமல் அவர்கள் வீட்டினுள்ளே அழைத்துச் சென்று பூஸ்ட் கலக்கி கொடுத்தார்.
“இப்போ வேண்டாம்மா. ஏம்மா, நீங்கல்லாம் இருந்தும் மாமாவ இப்படி விட்டுட்டீங்களேம்மா! “ என்றான்.
“அவரப் பத்தி உனக்கு தெரியாதாப்பா. யாருகிட்டயும் உதவி கேக்க மாட்டாரே. இப்படி செய்வாருன்னு யாருப்பா யோசிச்சா? ஆனா அவரு மட்டும் இல்லப்பா, இப்ப இங்க நெலம சரியில்ல. பருவகாலம் பொய்த்துப் போகுது, வெத, நாத்து, ஒரம், மருந்து, கரண்ட்டு பில்லு, கூலின்னு எல்லாமே வெலயேறிப் போச்சு. அந்த அளவு வௌச்சலோ, வெலயோ இல்ல. பலர் தற்கொல பண்ணிக்கிறாங்க. இல்ல, கழனிய வித்துட்டு வேற வேல தேடி பட்டணத்துக்கு போறாங்க ”
வெற்றிக்கு நெஞ்சுக்குள் சுருக்கென்றது. கண்கள் கசிந்தன.
இறுதிக் காரியங்கள் முடிந்தபின், வெளித் தாழ்வாரத்தில் இவனும், அப்பாவும் அமர்ந்திருக்க, அங்கு வந்த கணேசன் மாமா, “என்னப்பா வெற்றி, லீவு எவ்வளவு நாளுப்பா?” என்ற கேட்டார்.
“இனிமே நான் அமெரிக்கா போகப்போறதில்ல, மாமா”
அப்பா குழப்பத்தில் நிமிர்ந்து பார்க்க, அம்மா அவசரமாக வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அவர் கண்கள் எதிர் வீட்டு சன்னல் வழியே எட்டிப் பார்த்த மாலாவின் பக்கம் சென்றது.
“என்னப்பா சொல்ற, வேலய இங்க மாத்திட்டாங்களா?” என்று கேட்டார் கணேசன் மாமா.
“யாரும் மாத்தல மாமா. நான்தான் மாத்தப் போறேன். எல்லாரும் விவசாயத்த விட்டுப் போய்ட்டா, சாப்பாட்டுக்கு என்ன செய்யறது? பணத்தையா சாப்பிட முடியும்?”
“என்னடா சொல்ற, அதுக்காக அவ்வளவு பெரிய வேலய விட்டுட்டு இந்த ஊர்ல வெவசாயம் பண்ணப் போறயா?. காலங்காலமா வெவசாயம் பண்ண அனுபவஸ்தனே சமாளிக்க முடியாம, மூச்சு முட்டி போய்ச் சேருறான். நீ என்ன பண்ணப் போற?”
“அப்பா, நான் செல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. அனுபவஸ்தனே விவசாயம் பண்ணட்டும். ஆனா மூச்சு முட்டி சாக வேண்டாம்னுதான் சொல்றேன். உலகம் எத்தன தொழில் செஞ்சு சுழன்றாலும் ஏரின் பின்தான் இயங்கும்னு வள்ளுவரே சொல்லிருக்காரு.
பெரும்பாலான தொழிலுக்கு மூலப்பொருள் தாவரத்லருந்துதான கிடைக்குது. உழுதுண்டு வாழ்வாரை மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்னும் சொன்னாரு. உணவுப் பொருள் மொத்தமும் ஒருநாள் காலியாய்ட்டா, அப்ப அந்த நெலதான் வரும். எவ்வளவு பெரிய பணக்காரனும் தங்கத்தையும், வைரத்தையும் சாப்ட முடியாதுப்பா. உணவு உற்பத்தி செய்றவனத்தான் கெஞ்சணும். இயற்கை ஒத்துழைக்கலண்ணா, டெக்னாலஜிய மாத்துங்க.
இஸ்ரேல் பாதிக்கு மேல பாலைவனம். தண்ணி வசதி இல்ல. ஆனா விவசாய தொழில்நுட்பத்துல அவங்க தான் நம்பர் 1. தன்னோட தேவைக்கு மேல உற்பத்தி செஞ்சு ஏற்றுமதியும் பண்றாங்க. கூட்டு விவசாயம், சொட்டுநீர்ப் பாசனம், மண்புழு உரம்னு பண்ணலாம். விளைபொருள பாதுகாக்க முடியலயா? அந்தக் காலத்தில மண் குதிர்லயும், கோயில் கலசத்திலயும் பூச்சி புடிக்காம, பூசனம் புடிக்காம சேமிக்கலயா? இப்ப மண் ஃபிரிட்ஜே வந்திருச்சு, அத மாதிரி பெரிய அளவுல உருவாக்கி சேமிக்கலாம்.
டிஹைட்ரேட் பண்ணி உலர் காய்கறி, பழங்கள பாக்கெட் பண்ணலாம். இப்பல்லாம் ஹோட்டல்ல ஃப்ரோஸன் வெஜிடபிள்ஸ்தான் யூஸ் பண்றாங்க. சந்தைப்படுத்த முடியலயா? ஆன்லைன் பிளாட்ஃபார்ம் உருவாக்கித் தர்றேன். நம்ம ஊர்ல வேலையில்லாம இருக்க இளைஞர்கள வச்சே பக்கத்து சிட்டில டெலிவரி பண்ணலாம்.
இடையில இருக்ற வியாபாரிங்க நம்மகிட்ட கம்மி விலைக்கு வாங்கி, கெமிக்கல் மருந்தடிச்சு கொடுக்கற பொருள விட, நாம இயற்கையா, டேரக்டா கொடுக்ற பொருளுக்கு கட்டாயம் நல்ல வரவேற்பிருக்கும். நமக்கும் நல்ல லாபம் இருக்கும். நம்ம ஊர விவசாயத்துல குட்டி இஸ்ரேலா மாத்தி காட்டறேம்பா. மொத்த இந்தியாவும் நம்பள பாத்து மாறும். விவசாயி போராட்டமும், சாவும் இனி வேண்டாம்பா”
“சரிப்பா. இன்னிக்கே ஊர்க்கூட்டம் ஏற்பாடு பண்றேன், சேர்ந்தே செய்வோம்பா” என்றார் அப்பா.
அம்மாவின் கண்களிலும், மாலாவின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் தளும்பியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings