in , ,

உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 4) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3

ஐஜி  கபிலன்  ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.  அமிர்தவளவன், அம்பலவாணன்,  மணிவேல்  என வரிசையாக  மூன்று  முக்கிய  புள்ளகளின்  மரணம்  காவல்துறையை  சிக்கலில்  மாட்டிவிட்டிருந்தது.    மூன்று பேரின்  மரணத்திலும்  கருப்பு  நாய்  முக்கிய பங்காற்றியிருப்பதால், இந்த வழக்கைக்  கையாளும்  பொறுப்பை  ஏற்றிருந்த  கபிலன், மூவரின்  பழைய  வாழ்க்கையைக்  கிளற  ஆரம்பித்தார்.

மூன்று  பேருக்கும்  ஏதாவது தொடர்பிருக்கிறதா  என்று  அவரவர்  குடும்பத்தில்  விசாரித்தார்.  ஆனால்  அம்பலவாணன்  குடும்பத்திற்கு  மணிவேல்,  அமிர்தவளவன்  பற்றித்  தெரியவில்லை.  அதேபோல்தான்  மணிவேல் குடும்பத்திலும்.  எஞ்சியிருப்பது  அமிர்தவளவன்  குடும்பம்.

‘தேனு….. தேன்மொழிக்கு  ஏதாவது  தெரிஞ்சிருக்கலாம்.  அவகிட்ட  கேட்டு  விவரம்  தெரிஞ்சா  அடுத்து ஒரு மரணம்  நடக்காம  தடுக்கலாம்.’

மனதுக்குள்   உதித்த புது  நம்பிக்கையுடன்  வீட்டிற்கு  வந்தார்  கபிலன்.

“தேனு…. தேன்மொழி, சீக்கிரம்  வாயேன்.  சில தகவல்கள்  தேவைப்படுது. வா.”

“என்னங்க,  வரும்போதே  இவ்வளவு  பரபரப்பா  வரீங்க.  என்ன விஷயம்?”

“தேனு,  உங்க பெரியப்பா  பத்தி  சில தகவல்கள்  வேணும். இப்படி  உட்காரு.”

“யாரு, வளவன் பெரியப்பாவா? அவரைப்பத்தி புதுசா  சொல்றதுக்கு  என்ன இருக்கு?”

“இல்ல தேனு, அவரோட  சின்ன வயசு  வாழ்க்கை, நண்பர்கள், அரசியல்ல வரதுக்கு  முன்னால என்ன பண்ணிட்டிருந்தார்,  எப்படி சம்பந்தமே  இல்லாம அரசியலுக்கு வந்தார்?”

“அடேங்கப்பா, என்ன இவ்வளவு கேள்வி கேட்கறீங்க? பெரியப்பாவோட பழைய விஷயங்கள் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? அவரே போயிட்டாரு.  சின்ன வயசுல என்ன பண்ணாருன்னு தெரிஞ்சு என்ன செய்ய முடியும்? போனவரு திரும்பக் கிடைச்சுருவாரா?”

“என்ன தேனு, இது பொறுப்பான பதிலா? அவருக்கு நேர்ந்தது விபத்தா இல்ல திட்டமிட்ட சதியான்னு தெரிய வேண்டாமா? அதுக்குப் பழசெல்லாம் கிளறினாத்தான் ஏதாவது கிடைக்கும். தெரிஞ்சதைச் சொல்லேன். உபயோகமா ஏதாவது தகவல் கிடைச்சா சீக்கிரம் பதில் தெரியவரும் இல்லையா?”

“ஓ அதுக்காகத்தான் இவ்ளோ கேள்வி கேட்கறீங்களா? பெரியப்பா சின்ன வயசுல மதுரைல ஒரு கம்பெனில வேலை பார்த்துட்டிருந்தாரு. என்ன கம்பெனினு பேர் எல்லாம் தெரியாது. ஆனா அந்தக் கம்பெனி முதலாளி பெரிய பணக்காரர். அவர் பெயர்கூட வித்தியாசமா இருக்கும், ஏதோ அரசர் காலப்  பெயர் மாதிரி.”

“சரி அவசரமில்ல தேனு, பொறுமையா யோசிச்சு சொல்லு. உங்க பெரியப்பாவோட நண்பர்கள் யார் யார்னு ஏதாவது தெரியுமா?”

“பெரியப்பாவோட பெயர் மாதிரி இன்னொருத்தரோட பெயர் வரும். ஒருமுறை சித்திரைத் திருவிழாவுக்கு பெரியப்பா வீட்ல போய் இருந்தேன். அப்போ அவரோட நண்பர்கள் ரெண்டு, மூணு பேர் வந்திருந்தாங்க. அதுல ஒருத்தர் பேர் மட்டும் அமிர்தவளவன் மாதிரியே அமுதவாணன்னு நினைக்கறேன். அந்த மாதிரி ஏதோ பெயர் வந்துச்சு. ம்ம்ம், அமுதவாணன் இல்ல, அம்பலவாணன்.”

“கிரேட் தேனு, நல்ல தகவல் சொன்னே. வேற எந்தப் பெயராவது  ஞாபகமிருக்கா?”

“எனக்கு ரொம்பத் தெளிவா ஞாபகமில்லைங்க. நீங்க எதுக்கும் எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கேளுங்க. அப்பாவுக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.”

“நல்ல ஐடியா சொன்னே தேனு. நான் இப்பவே மாமாகிட்ட பேசறேன்.”

தாமதிக்காமல் உடனே தன் மாமனாருக்கு ஃபோன் செய்தார் கபிலன். வழக்கமான விசாரிப்புக்குப் பின் கபிலன் தன் சந்தேகத்தை எல்லாம் கேட்டார்.

“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மாப்ள. எங்க அண்ணன் நல்லவன் கிடையாது. மதுரைல பெரிய தொழிலதிபர் வல்லபனோட ஆஃபீஸ்லதான் அண்ணன் வேலை பார்த்துட்டிருந்தான். அந்த வல்லபன் நிறைய  திரைமறைவு வேலைகள் பண்றதுல கில்லாடி. அந்த வேலைகளுக்குக் கைக்கூலியா எங்க அண்ணன் இருந்தான். ஆரம்பத்துல கண்டிச்சுப் பார்த்தேன். ஆனா  அவனோட நடவடிக்கைகள் மோசமாதான் போச்சு. அதனால நான் மதுரைக்குப்  போறதையே விட்டுட்டேன். ஒரு கட்டத்துல அவன் ரொம்ப எல்லைமீறிப் போய்ட்டான். அதனால அவன்கூட பேசறதையே விட்டுட்டேன். இப்போ சமீப காலமாத்தான் கொஞ்சம் பேசினேன்.”

“எப்போ, என்ன மாதிரி தப்பு பண்ணார்னு ஏதாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா மாமா?”

“நிறைய அடிதடி கேஸ்  எல்லாம் அண்ணன் மேல உண்டு. ஆனா அந்த வல்லபன் பணத்தால எல்லாத்தையும் அமுக்கிடுவான். கடைசியா ஒரு பெரிய பாவத்தைப் பண்றதுக்கு அந்த வல்லபனுக்கு உறுதுணையா அண்ணன் உதவினான்.

வல்லபனுக்கு ஒரே பொண்ணு. அந்த வல்லபன் ஜாதி வெறி பிடிச்சவன். அவனோட பொண்ணு வேற ஜாதிப் பையனைக் காதலிச்சா. இந்த விவரம் தெரிஞ்ச வல்லபனுக்கு பயங்கர கோவம். அதனால பொண்ணை பயங்கரமா கண்டிச்சான். ஆனா அவ கேக்கல. வீட்டுக்குத் தெரியாம அந்தப் பையனோட ஓடிப் போயிட்டா. அவளைத் தேடிக் கண்டுபிடிச்சு தீர்த்துக் கட்டறதுக்காக நம்பிக்கையான ஆள் வேணும்னு எங்க அண்ணனைத்தான் அனுப்பினான்.

அண்ணனோட நெருங்கின நண்பர்கள் மூணு பேரும் கூடப் போனாங்க. ஓடிப்போன ரெண்டு பேரும் மகாபலிபுரத்துல இருக்கறதைக்  கண்டுபிடிச்சாங்க. அந்த ரெண்டு பேரையும் கொன்னுட்டாங்களா, இல்ல ஒருத்தரை மட்டும் கொலை பண்ணாங்களா  அப்படிங்கற விவரம் எங்க அண்ணன் சரியா என்கிட்ட சொல்லல.

இதெல்லாம்கூட குடிச்சுட்டு  உளறினதுதான். அதுக்கு அப்புறம்தான் அவன் சகவாசம் வேண்டாம்னு வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டேன். இந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் அந்த வல்லபன், அவனோட ஜாதிப் பெயரைக் காப்பாத்தறதுக்காக துணிஞ்சு கொலை பண்ண இந்த நாலு பேருக்கும் வேற வேற பெரிய பதவி, தொழில்னு ஏற்பாடு பண்ணிக்  கொடுத்து அவங்க வாயை அடக்கி வச்சதா கேள்விப்பட்டேன்.”

“மாமா, இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா உங்க அண்ணனோட வாழ்க்கைக்குப் பின்னாடி? அப்போ அவர் ஏற்கனவே மகாபலிபுரம் போயிருக்காரு அப்படித்தானே?”

“ஆமா, ஆமா. அந்த சம்பவத்துக்கு அப்புறம்கூட ரெண்டு மூணு வாட்டி அங்கே போயிருப்பான் போல. நான் எங்க அண்ணிகிட்ட பேசும்போது அவங்க எதேச்சையா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.”

“சரி மாமா, உங்க அண்ணனோட நண்பர்கள் பெயர் எல்லாம் ஏதாவது தெரியுமா?”

“தெரியுமே. அப்பப்போ செய்தித்தாள்ல பார்க்கும்போது எனக்கு அவங்க ஞாபகம் வரும். மணிவேல்னு ஒருத்தர் ஏதோ அரசாங்க உத்தியோகத்துல இருக்கறதா கேள்விப்பட்டேன். அப்புறம் அம்பலவாணன் சென்னையில ஏதோ பிசினஸ் பண்றதா கேள்விப்பட்ட ஞாபகம். அவங்க ரெண்டு பேரும்தான் இறந்துட்டதா  செய்தி பார்த்தேன். இன்னொருத்தர் உண்டு. என்னவோ R ல ஆரம்பிக்கும் பெயர். ராஜசேகர், ராஜதுரை, இந்த மாதிரி வரும்.”

“அந்தப் பெயர் மட்டும் சரியா சொல்ல முடியுமா மாமா? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. நீங்க சொல்ற தகவல்னால அந்த ஆளை சீக்கிரமா கண்டுபிடிச்சா, இன்னொரு மரணத்தைத்  தடுக்கலாம். அதுமட்டுமில்ல, இதுக்குப் பின்னாடி இருக்கற எல்லா தகவல்களையும் அவன்கிட்ட இருந்து வாங்கிடலாம்.”

“ராஜசேகர்னு நினைக்கறேன். சட்டுனு ஞாபகம் வரல மாப்ள.”

“எந்த ஊர்ல என்ன வேலைல இருக்கார்னு ஏதாவது தெரியுமா மாமா? வெறுமனே ராஜசேகர்னு பெயரை மட்டும் வச்சுட்டு எவ்வளவு பேரைத் தேடறது மாமா? அதுக்குள்ள அவருக்கு ஏதாவது ஆபத்து வரலாம் இல்லையா. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு சொல்லுங்க. உங்க அண்ணிகிட்ட கேட்டாத் தெரியுமா?”

“என் அண்ணன் கூட அவ்வளவா பேச்சு வார்த்தை வச்சுக்கல மாப்ள. அவரோட நண்பர்களை ரொம்ப வருஷம் முன்னால பார்த்தது. அண்ணன் அரசியலுக்கு வந்தபிறகு, பழைய நட்புகளை வெளிப்படையா சந்திக்கறதில்லன்னு அண்ணி சொல்லியிருக்காங்க. அதனால அண்ணிக்கும் தெரிய வாய்ப்பில்ல.”

“ஏதாவது சின்னதா ஒரு க்ளூ கிடைச்சாப் போதும் மாமா.”

“அவர் பேரு ஞாபகம் வரமாட்டேங்குது. ஆ… மாப்ள, இப்போ ரெண்டு, மூணு மாசம் முன்னாடிகூட அந்த பெரும்புள்ளி மதுரை கோவிலுக்கு பெரிய அளவில் நன்கொடை கொடுத்ததா பேப்பர்ல செய்தியை  ஃபோட்டோவோட பார்த்தேன். அந்த ஃபோட்டோலதான் அவரை நான் சமீபத்துல பார்த்தது.”

“அந்த பெரும்புள்ளி உங்க அண்ணனோட ஃப்ரெண்ட்டா மாமா?”

“ஆமாம் மாப்ள. அந்த நாலு பேர்ல இவரும் ஒருத்தர்.”

“தேங்க்ஸ் மாமா. இவ்வளவு தகவல் சொல்லியிருக்கீங்க, ரொம்ப தேங்க்ஸ். நான் அப்புறம் பேசறேன்.”

கபிலன் சொல்ல வேண்டிய இடங்களுக்கு விஷயத்தைச் சொல்லி, அந்த நாலாவது நபரின் பெயரையும், ஃபோன் நம்பரையும்  அடுத்த பத்தாவது நிமிடத்தில் பிடித்து விட்டார்.

ராஜரத்தினம்.

கபிலன் அந்த ஃபோன் நம்பருக்கு அழைக்கவே, மறுமுனையில் ராஜரத்தினம் தான் பேசினார்.

“மிஸ்டர். ராஜரத்தினம், நான் ஐஜி கபிலன் பேசறேன். நீங்க இப்போ எங்கே இருக்கீங்க? ஈசிஆர்லயா? சரி, வீட்டுக்குள்ளேயே இருங்க. நான் ஒருமணி நேரத்துக்குள்ள அங்கே வரேன். சில தகவல்கள் வேணும். அதுமட்டுமில்ல, இது உங்க பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால கவனமா இருங்க.”

ஃபோனில் பேசியபடியே ஈசிஆர் கிளம்பினார் கபிலன். ஆனால்…..

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குழந்தை மனம் (சிறுகதை) – பு.பிரேமலதா, சென்னை

    யார்? (சிறுகதை) – விடியல் மா.சக்தி