2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மகாபலிபுரம்.
எப்போதும் சுற்றுலாப் பயணியர் வருகையால் பரபரப்பாக இருக்கும் மகாபலிபுரம், இப்போது இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருந்த வரலாற்று மாநாடால் விழாக்கோலம் பூண்டிருந்தது. வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் சுத்தப்படுத்தி, புதுப்பொலிவுடன் வைத்திருந்தார்கள்.
மிகவும் பிரசித்திபெற்ற ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தவம், கடற்கரைக் கோவில் போன்றவற்றைக் கண்டு ரசிக்க அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால், அங்கெல்லாம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இவை தவிர மாநாடு நடக்கவிருந்த மேடை, அதைச் சுற்றி பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம், அரசியல் முக்கிய புள்ளிகளை வரவேற்பதற்கான அலங்கார வளைவுகள் என்று தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இந்த ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் குழுக்களில் ஒருவராக இருந்த மணிவேல், பம்பரமாகச் சுழன்று அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் விழாக்களை ஒருங்கிணைக்கும் குழுக்களில் மணிவேலும் முக்கியமான ஒருவர்.
கடந்த ஒரு மாதமாக மகாபலிபுரத்தில் வேலைகளை முடுக்கிவிட்டு மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இன்றும் காலை முதலே இறுதிக்கட்ட வேலைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார். ஆயிற்று, அனேகமாக எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன.
கடற்கரைக் கோவிலுக்கு சற்று தள்ளி, ஒரு அரங்கம் அமைப்பதற்கான வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். அதற்கான பணிகள் நேற்று ஆரம்பித்திருந்தன. அதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன குமரன், இந்தக் குழியை நேத்தே மூடச் சொல்லியிருந்தேனே. ஆனா நீங்க எதுக்கு இன்னும் பெரிய குழியாத் தோண்டி வச்சிருக்கீங்க?”
“நாங்க யாரும் தோண்டல சார்.”
“நீங்க யாரும் தோண்டலையா? அப்போ எப்படி இவ்வளவு பெரிய குழி இங்கே வரும், ஏதோ ஒரு ஆளையே உள்ளே போட்டு புதைக்கற மாதிரி இவ்வளவு பெரிய குழியா இருக்கு. யாராவது தவறி விழுந்துடப் போறாங்க. முதல்ல இதை மூடுங்க.”
“காலைல இருந்து நாலஞ்சு வாட்டி மண்ணைப் போட்டுப் போட்டு நிரப்பிட்டோம் சார். நாங்க மண்ணைப் போட்டு குழியை மூடிட்டு, அந்தப்பக்கம் போனதுக்கு அப்புறம் மறுபடியும் குழி வந்துடுது.”
“என்ன குமரன், காதுல பூ சுத்துற மாதிரி பேசிட்டிருக்கீங்க?”
“சார், நம்ம பசங்க சொன்னப்போ நானும் இதே கேள்வியைத்தான் கேட்டேன். அதுக்கு அப்புறம் போன முறை அவங்க மண்ணைப் போட்டு நிரவினப்போ, நான் பக்கத்துல நின்னு பாத்துட்டுதான் இருந்தேன். இப்ப பாருங்க, மறுபடியும் அளவா வெட்டி எடுத்த மாதிரி குழி எப்படி வந்ததுன்னு தெரியல.”
“அது எப்படி, இந்த இடத்துல மட்டும் குழி வரும்? எங்கே ஆளுகளக் கூப்பிட்டு மண்ணைப் போட்டு மூடச் சொல்லுங்க பார்ப்போம்.”
குமரன் நாலைந்து பேரைக் கூப்பிட, கடகடவென்று அவர்கள் வந்து குழிக்குள் கல்லையும் மண்ணையும் போட்டு நிரப்பினார்கள். இப்போது 6 அடிக்கு 6 அடி குழியாக இருந்த அந்த இடம், சமதளமானது.
மணிவேல் குமரனை ஏற இறங்கப் பார்த்தார். அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த குமரன் மௌனமாக நின்றிருந்தான். ஆனாலும் அவன் மனத்துக்குள் மீண்டும் குழி வந்துவிடும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாக இருந்தது. காலை முதல் ஏற்பட்ட அனுபவம் அவனை அப்படி நினைக்க வைத்தது.
“சரி, நீங்க எல்லாம் போய் அடுத்த வேலையைப் பாருங்க. நான் இங்கேயே நின்னு அந்தக் குழி எப்படி வருதுன்னு பார்க்கறேன். மறுபடி குழி மட்டும் வரல, இருக்கு உங்க எல்லாருக்கும். போங்க, போய் அடுத்த வேலையைப் பாருங்க,” என்று கோபத்துடன் அனைவரையும் அங்கிருந்து விரட்டினார் மணிவேல்.
குமரனும், மற்றவர்களும் அங்கிருந்து நகர்ந்து அடுத்த வேலையைத் தொடர, மணிவேல் மட்டும் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில், குழிக்குள் போட்டிருந்த மண், கல் எல்லாம் தானாகவே வெளியே வந்து விழ, மீண்டும் அங்கே ஆறடிப் பள்ளம் உருவானது.
பார்த்துக் கொண்டேயிருந்த மணிவேலுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டு, பார்வைகள் நிலைகுத்திப் போயின. என்ன நடக்கிறது எப்படி இது சாத்தியம் என்று குழப்பத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் அருகில் யாருமே இல்லை. குமரனும் மற்றவர்களும் சற்று தள்ளி வேலை செய்து கொண்டிருந்தனர். அவர் பார்க்கப் பார்க்க மண்ணெல்லாம் வெளியே வந்து பழையபடி குழி உருவானது.
குழப்பத்துடனும் பயத்துடனும் குழிக்குள் எட்டிப் பார்த்தார் மணிவேல். ஒரு முழு மனித எலும்புக்கூடு அங்கே இருந்தது. பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனார். எலும்புக்கூடு இருப்பதாக குமரன் சொல்லவில்லையே என்ற குழப்பமும் அவருக்குள் எட்டிப்பார்த்தது.
குமரனிடம் இதைப்பற்றி கேட்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்த எலும்புக்கூடு மறைந்தது. சட்டென்று ஏதோ தோன்ற, இப்போது கண்களில் பயம் கொப்புளிக்க ஆரம்பித்தது.
‘இந்த இடம், இதே இடம்தானே? எப்படி இவ்ளோ வருஷம் இதை மறந்தே போனேன்? அப்படின்னா, இந்த எலும்புக்கூடு…’
மனதில் எழும்பிய கேள்விகள் அவரின் பயத்தை அதிகப்படுத்தின. உடல் சில்லிட்ட உணர்வு. பயம் பெரிய பந்தாக உருண்டுவந்து நெஞ்சை அடைத்தது. வயிற்றில் எக்கச்சக்கமாக அமிலம் சுரந்து இம்சை செய்தது. இப்போது என்ன செய்வது? இதை வெளியே சொல்வதா? சொன்னால் பிரச்சனையா, சொல்லாவிட்டால் பிரச்சனையா?
மணிவேல் தனக்குள் தோன்றிய சந்தேகக் கேள்விகளுக்கு பதில்களை யோசித்து முடிப்பதற்குள், எங்கிருந்தோ பாய்ந்து வந்த கருப்பு நாய் ஒன்று மணிவேலை குழிக்குள் தள்ளி, தானும் அதற்குள் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் வெளியே குவிந்திருந்த கல்லும் மண்ணும் மடமடவென்று குழிக்குள் விழுந்து, குழி இருந்த இடம் காணாமல் போனது.
சற்றுதள்ளி குமரனும், மற்ற பணியாளர்களும் வேறு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், இங்கே என்ன நடக்கிறது என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். மணிவேல் அதிர்ச்சியுடன் குழியை எட்டிப் பார்த்ததைக் கவனித்ததும் குமரன் திருப்தி அடைந்தான். தான் சொன்னது பொய்யில்லை என்பதை நிரூபித்த திருப்தியை அவன் அனுபவிப்பதற்குள் இவை அனைத்தும் நடந்து முடிந்தன.
பதறியடித்துக் கொண்டு அனைவரும் அங்கே ஓடி வர, குழி இருந்ததற்கான தடயமே அங்கே இல்லை. குமரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே அங்கே தோண்டிப் பார்ப்பதா, இல்லை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்வதா என்ற குழப்பம்.
சட்டென்று, கடற்கரைக் கோவிலில் இருந்து கொஞ்ச தூரம் தள்ளி வேலையில் ஈடுபட்டிருந்த தன் நண்பன் கதிரிடம் ஃபோனில் விஷயத்தைச் சொல்லி, அங்கிருந்த காவல்துறையினரை உடனே அழைத்து வரும்படி சொன்னான். சற்று நேரத்தில் அங்கே காவல்துறையினரும், மற்றவர்களும் குவிந்துவிட்டனர்.
குமரனும், மற்றவர்களும் சொன்னதை யாரும் நம்பத் தயாராக இல்லை. காவல்துறையின் உயர் பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரி ஆணையிட, அங்கே வேகவேகமாகத் தோண்டும் வேலை ஆரம்பமானது.
ஆனால் இப்போது மண்ணைத் தோண்டுவது சுலபமாக இல்லை. தோண்டத் தோண்ட மண் வந்துகொண்டே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் அந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின், ஓரளவுக்குக் குழியைத் தோண்டியிருந்தார்கள்.
“இனிமே கொஞ்சம் கவனமாத் தோண்டுங்க. மணிவேல் உள்ளே விழுந்து அரைமணி நேரம்தான் ஆகுது. அவர் உயிரோடு இருக்கறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. அதனால தோண்டும் போது ஒரு அடிகூட அவர் மேல படக்கூடாது.”
உயர் அதிகாரியின் உத்தரவால் பயம் நிறைந்த இதயத்துடன் வேலையாட்கள் மண்ணைத் தூக்கி மேலே போட்டுக் கொண்டிருந்தனர். கொஞ்சம் தோண்டியதும் உள்ளிருந்து கெட்ட வாடை அனைவரது மூக்கையும் துளைத்தது. அனைவரும் மூக்கைப் பொத்திக்கொண்டு, அடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.
இப்போது பணியாளர்கள் கைகளால் மணலை அகற்றிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் கைகளுக்கு ஏதோ தட்டுப்பட, மேலே நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளைப் பொருள்பொதிந்த பார்வை பார்த்தனர்.
“கவனமா மண்ணை எடுங்க. தலை எந்தப் பக்கம்னு பார்த்து முதல்ல முகத்துல இருக்கற மண்ணை க்ளியர் பண்ணுங்க. கவனம்.”
வேலையாட்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் மேலே வந்துவிட, ஒருவர் மட்டும் மிகக் கவனமாக மண்ணை அகற்றினார். கொஞ்சம் கொஞ்சமாக மணிவேல் தென்பட்டார்.
சுற்றி நின்ற அனைவரும் உள்ளே மணிவேல் இருந்த நிலையைப் பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போய் பேயறைந்தாற் போல் உணர்ந்தனர்.
அரைமணி நேரம் முன்பு, ரத்தமும், சதையுமாக உயிரோடு நின்று கொண்டிருந்த மணிவேல், இப்போது வெறும் எலும்புக் கூடாய் உள்ளே இருந்தார். அவரது உடைகள் ஒரு ஓரமாக இருந்தன. எலும்புக் கூட்டில் ஆங்காங்கே ரத்தமும், சதையும் ஒட்டிக் கொண்டிருந்தன. அதிலிருந்து வீசிய வாடை அந்த இடத்தையே மயானம் போல் ஆக்கியது.
“குமரன், மணிவேல் எப்படி குழிக்குள்ள விழுந்தார்னு பார்த்தீங்களா?”
“சார், ஒரு கருப்பு நாய் எங்கேயிருந்தோ பாய்ஞ்சு வந்து, சாரை உள்ளே தள்ளிவிட்டு, அதுவும் குழிக்குள்ள குதிச்சிருச்சு சார். ஆனா இப்போ நாயைக் காணோமே சார். மணிவேல் சார் மட்டும் இப்படி, அதுவும் அரைமணி நேரத்துல? இது ஏதோ காத்துகருப்பு வேலை மாதிரி தெரியுது சார். பயமா இருக்கு. நாங்கெல்லாம் புள்ள குட்டிக்காரங்க.”
“சரி, இப்போதைக்கு இங்கே யாரும் வேலை செய்ய வேண்டாம். வேற இடத்துல முடிக்க வேண்டிய வேலைகளை முடிங்க. போங்க எல்லாரும். தேவைன்னா நான் கூப்பிடறேன். அப்போ வந்தாப் போதும்.”
அந்தக் குழி அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னைக்கு தகவல் பறந்தது. உயரதிகாரிகள் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனார்கள்.
ஐஜி கபிலன் காதிற்கும் இந்தச் செய்தி எட்டியது. கபிலன் அதிர்ச்சியடைந்தாலும், கேஸை வேறு கோணத்தில் கையாள ஆரம்பித்தார். அடுத்து ஒரு சம்பவம் இதேபோல் நடக்கும் முன்பு அந்த கருப்பு நாயைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான வேலைகளில் இறங்கினார்.
ஆனால் கருப்பு நாய் அவரைவிட வேகமாக இருந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings