2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
இதுவரை:
தன் வயிற்றில் வளரும் குழந்தையின் இதயத் துடிப்பை முதல் ஸ்கேனில் கேட்டு மகிழ்கிறாள் கவியினியாள். மருத்துவர் பயணங்களைத் தவிர்க்கச் சொன்னதால் ஆதி அவளை வேலைக்கு விடுப்பு எடுக்கக் கோரி வேண்டுகிறான். பின் என்ன நடிக்கிறது என்பதை காண்போம்.
இனி:
“என்ன சொல்ற ஆதி.. வேலைக்குப் போயே ஆகணுமான்னு கேக்கற.. அப்படின்னா என்ன அர்த்தம்.. நான் வேலைக்குப் போகக் கூடாதா… நீ மட்டும் உன் வேலைக்காக சென்னை போவ.. நான் இங்க இருக்க ஈரோடு கூட போகக்கூடாது. இனி எல்லாம் உன் இஷ்டம் தான்ல.. நான் நினைக்கிறதெல்லாம் நடக்காது. நான் மாறிக்கணும்.. வெளிய போகக்கூடாது.. வேலைக்குப் போகக் கூடாது”
“ஹே… என்னாச்சு கவி.. ஏன் இவ்ளோ கோவம் என்னனமோ பேசுற.. நீ மொதல்ல இங்க வந்து உக்காரு வா”
என்னை அமர வைத்து தண்ணீர் கொடுத்து குடிக்கச் சொல்லிவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினான் ஆதி.
“நான் என்ன சொல்ல வந்தேன்னா ஒரு பத்து பதினஞ்சு நாள் நீ தனியா சமாளிக்கணும்.. அம்மாவாலயும் ஊருக்கு வர முடியாது அப்பாவ வேலைக்கு அனுப்பனும் கூட இருக்கனும். நானும் ஊருல இருப்பேன். நீ என்ன பண்ணுவ அதுக்குத்தான்… உன்ன ஒரேடியா போ வேணாம்னு சொல்லல.. இந்த பத்து நாளைக்கு கேட்டேன் அதுக்குள்ள அவ்ளோ கோவமா”
“ஆமா நான் ஏன் இவ்ளோ கோவப்பட்டேன்.. தெரிலயே”
“ஓ இதான் ப்ரக்னென்சி மூட் ஸ்விங்கா”
“அப்படின்னா”
“இப்போ நீ திடிர்னு கத்துனியே.. அப்புறம் ஏன் அப்படி பேசினேன் கேட்டியா.. இந்த டைம்ல இப்படி தான் மனசு ஒரு நிலைல இருக்காதாம்”
“நான்லாம் நிலையா தான் இருக்கேன்..”
“மறுபடியும் ஆரம்பிக்காத..” கை கூப்பிக் கொண்டே கூறினார் ஆதி.
உண்மையில் என் எண்ணங்களின் ஏற்ற இறக்கத்தை என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
“நான் என் அம்மா அப்பாவ ஈரோடு கூட்டிட்டு போகவா”
“தாராளமா கூட்டிட்டு போ.. அவங்களுக்கு ஓகே வா”
“அப்பாக்கு வேலை இருக்கும்.. பத்து நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வந்து வேலை பார்க்கச் சொல்லிக்கலாம். அமுதினியும் வீட்ல இருந்து தான் ஒர்க் பண்றா.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. அம்மா கூட கொஞ்ச நாள் இருக்க ஆசையா இருக்கு”
“சந்தோசமா இரு.. நானும் அம்மாட்ட சொல்லிட்றேன்.. பாத்து போய்ட்டு வா.. அப்பாவ ஆபீஸ்க்கு கொண்டு வந்து விட்டிட்டு கூட்டிட்டு போகச் சொல்லு.. எதாவதுனா கால் பண்ணு”
“ஓகே ஆதி.. நான் பாத்துக்கிறேன்”
அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் ஈரோடு வீட்டிற்கு வந்தேன்.
“டேப்லெட்லாம் ஒழுங்கா சாப்பட்றியா கவி” ஆதி தினமும் அலைபேசியில் விசாரித்தார்.
“சாப்பட்டுறேன்”
“ட்ராவெல்லிங்க்கு ஒரு மாத்திரை குடுத்தாங்களே.. அது போட்டியா ட்ரெயின்ல போகும் போகுது”
“…”
“என்ன சத்தமே இல்ல”
“போடல ஆதி”
“ஏன் போடல”
“போன தடவை மாத்திரை போடாம தான வந்துட்டு போனோம். எப்போவும் வர தூரம் தான”
“இருக்கட்டும்.. இப்போ டாக்டர் போட சொன்னாங்கள்ள.. உனக்கு என்ன அதுல கஷ்டம். போட வேண்டியது தான”
“ஆதி புரிஞ்சிக்கோ.. எனக்கு ட்ராவெல்லிங் வசதியா தான் இருந்தது. இல்லன்னா நானே போட்ருப்பேன்.. எப்போவும் போற தூரம். பிரச்சனை இல்லை”
“இனிமே மாத்திரைலாம் கரெக்டா முழுங்கு கவி.. நம்ம பாப்பாக்காக” ஆதி பேசிவிட்டு அலைபேசியை அணைத்தார்.
சின்ன வயதில் இருந்தே மாத்திரைகளின் மீது ஒரு பயம். சாப்பிடப் பிடிக்காது ஒரு காரணம் இன்னொன்று அதனால் வரும் பின்விளைவுகள். தேவையானவற்றிற்கு நிச்சயம் சாப்பிட்டு தான் ஆக வேண்டும். ஆனால் நம்மாலே சரி செய்ய முடியும் என்பதற்கெல்லாம் மாத்திரை பக்கம் போக மாட்டேன்.
அவர் கூறியது போல் வயிற்றில் குழந்தை இருக்கும் சமயத்தில் இந்த சோதனை எல்லாம் செய்யக் கூடாது. குழந்தையின் பாதுகாப்பு தான் முக்கியம். ஆதியின் கோவம் நியாயமானதாய்ப்பட்டது. இனி பத்திரமாக இருக்க வேண்டும்.
பெற்றோர்களோடு ஈரோடு வந்து பத்து நாட்கள் ஆனது.
அவர்களோடு இருப்பது திருமணத்திற்கு முன் நாங்கள் நால்வரும் இருப்பது போன்ற ஒரு மகிழ்ச்சியைத் தந்தது.
நான் ஆதியின் கவியினியாள் ஆகிவிட்டேன். இப்படி இருக்கும் பொழுது நான் பெற்றோரின் கவியினியாளாக உணர்கிறேன்.
“மூணு மாசம் ஆச்சு.. என்ன பிடிக்குதோ சொல்லு செஞ்சி போடறேன்” அம்மா கேட்டார்.
வார கணக்கில் பார்க்கும் பொழுது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஒன்பது வாரம். மாதக் கணக்கில் பார்த்தால் மூன்றாவது மாதம்.
மெல்ல மெல்ல உணவின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்தது.
உணவைப் பார்க்கும் பொழுது கோபம் வந்தது. இந்த நேரம் பார்த்து அம்மா என்ன பிடிக்கும் என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
“சீக்கிரம் குளிச்சிட்டு வந்து சாப்பிடு.. உனக்கு பிடிச்ச பாவக்காய் குழம்பு வெச்சிருக்கேன்” என்றார் அம்மா
“பாவக்காய் குழம்பா.. அதெல்லாம் எப்படிமா சப்பட்றது.. இவளுக்காக இங்க வந்ததுக்கு பாவக்காய் குழம்பு தானா எனக்கு” தங்கை அமுதினி கூற எனக்குச் சிரிப்பு வந்தது.
“பாவக்காய் குழம்புக்கு என்னடி கொறச்சல்.. சுடச்சுட சாப்பாட்டுல குழம்பு ஊத்தி கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்தி பிசஞ்சி சாப்டா.. அந்த பாவக்காய் கசப்பு குழம்போட புளிப்பு நல்லெண்ணெய் மணம் எல்லாம் சேர்ந்து தித்திக்கும்” ரசித்துக் கூறினேன்.
“நீயே சாப்பிடு அந்த தித்திப்ப.. நான் கேரட் பொரியல்ல சாப்பிட்டுகிறேன்” அவள் எழுந்து சாப்பிடச் செல்ல நானும் குளித்து முடித்து சாப்பிட அமர்ந்தேன்.
முதல் வாய் சாப்பிடும் பொழுதே எனக்கு ருசி பிடிக்கவில்லை. பிடித்த உணவு. எப்பொழுதும் விரும்பி சாப்பிடும் உணவு என்னவாயிற்று இப்பொழுது.
நானும் முயன்று முயன்று சாப்பிட்டேன். நாலாவது வாய் சாப்பிடும் பொழுது குமட்டல் ஏற்பட்டது. சாப்பிட முடியாமல் தடுத்தது. குமட்டல் அதிகமானது. எழுந்து கை கழுவும் இடத்திற்கு ஓடினேன். அதற்குள் அடக்க முடியாமல் வாந்தி வந்தது. குமட்டி குமட்டி சாப்பிட்ட நான்கு வாயும் வந்துவிட்டது.
“வாந்தியே எடுக்காம புள்ள பெத்துடுவேன் நினைச்சேன். நீயும் என்னை மாதிரி வாந்தி கேஸ் தானா” என் தலையைத் தடவி கொடுத்துக் கொண்டே கூறினார் அம்மா.
வாந்தி எடுத்த சோர்வு ஒரு பக்கம் மயக்க உணர்வு ஒரு பக்கம் எனினும் எனக்குள் சந்தோசம் எழுந்தது.
‘நான் வாந்தி எடுத்துட்டேன்.. நானும் மசக்கையா இருக்கேன்.. வாந்தி கூட இவ்ளோ சந்தோசம் தருமா’ துள்ளலோடு முகம் கழுவினேன்.
“அம்மா எனக்கு வாந்தி வந்துடுச்சு” ஆசையாகக் கூறினேன்.
“அப்போவே இதெல்லாம் திங்காதன்னு சொன்னேன் கேட்டியா” அமுதினி நக்கலாகக் கூறினாள்.
“நான்லாம் வாந்தி எடுத்தப்புறம் தான் மாசமா இருக்கனே தெரிஞ்சிகிட்டேன். நீ அதுக்குள்ள ஒரு ஸ்கேன்யே பாத்துட்ட”
“சரி அவளுக்கு ஜூஸ் ஆவது போட்டுக் குடு.. வெறும் வயிறா இருக்கப்போறா” அப்பா கூறியவுடன் அம்மா ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார்.
நான் வாந்தி எடுத்ததை ஆதியிடம் கூற வேண்டும் போல் இருந்தது. ஆதியை அலைபேசியில் அழைத்தேன்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings