in ,

நாலணா பரதன் (சிறுகதை) – செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஞாயிற்றுக்கிழமை உச்சி வெயில் உக்கிரத்தை சூரிய பகவான் வெளிப்படுத்துவதை கூட பொருட்படுத்தாமல், கரிசல் மண்ணின் இளவரசர்கள் அரிசி ஆலை முன் நின்று கொண்டு, குண்டு குழியுமாக புளியமரங்கள் இரு புறமும் புடை சூழ இருந்த அந்த சாலை வழி மீது விழி வைத்து, காதலியை எதிர்நோக்கி காத்திருக்கும் காதலனை போல காத்துக் கொண்டிருந்தனர், அவர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது கடைக்கார வைரம் தாத்தாவிற்காக..

அவர் கடையில் இன்று எந்த திரைப்படம் காட்ட போகிறார் என்ற ஆவலில் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். புதுப்படம் காண்பதற்கு திருவிழாக்கள் எப்போது வரும் என்று காத்திருந்த காலம் அது. படம் பார்க்க பக்கத்து ஊருகளுக்கு படையெடுத்த காலம். பஞ்சாயத்து அலுவலக தொலைக்காட்சிப் பெட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திரைப்படம் பார்க்கலாம். ஆனால் அது அந்த கால பழைய படமாக இருக்கும். புதுப்படத்தை டெக்கில் இட்டு காட்டும் வைர தாத்தா கடை மாடிதான் இவர்களுக்கு வெள்ளித்திரையரங்கம்.

பேருந்திலிருந்து வைர தாத்தா இறங்கியதும் அவர் கரங்களில் இருந்த பைகளை வாங்கி இறக்கி வைக்க போட்டி போட்டு கொண்டு முண்டியடித்தனர், வருங்கால கலாரசிக கண்மணிகள்.

ஒரு பையில் தினத்தந்தி நாளிதழ் சுற்றி வைத்து பாதுகாப்பாக வைத்திருந்த கேசட்டின் மீது எழுதியிருந்த படத்தின் பெயரை எழுத்துக் கூட்டி படிக்க முயற்சித்து பின்பு “ஏ இன்னிக்கு பரதன் படம் போட போறங்கடா” என்று மகிழ்ச்சியில் கொக்கரித்தான் ஒருவன்.

பிறகு வைர தாத்தா கடை வரை அவரை பின் தொடர்ந்தது அந்த கூட்டம், அவர் கடை வாசல் வரை அவரை வழியனுப்பி வைத்து விட்டு, பின்பு அவரவர் வீட்டுக்கு விரைந்தது. எப்படி காசை கறப்பது? என்று ஒவ்வொருவரும் திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தனர்.

எப்படியாவது இன்று படம் பார்க்க வேண்டும் என முடிவு செய்தான் அழகர். “பொழுது சாயுறதுக்குள்ள எப்படியாவது காச வாங்கியிரணும். படம் பார்க்கிறதுக்கு எட்டணா வேணும். ஏமாத்திட்டு உள்ளே போக முடியாது. படம் பார்க்கலைனா சேத்தாளி பசங்க கூட நாளைக்கு முகத்துல முழிக்க முடியாது. தலைவன் படம்னு ஒரு பக்கம் இருந்தாலும் அவனவன் கதை சொல்லும்போது நம்ம மட்டும் அதபத்தி பேசலைன்னா அவமானம். படம் பார்க்காம பார்த்தேன்னு சொன்னா ஏதாவது சீன சொல்லி அதுக்கு அப்புறம் என்னானு கேப்பாங்கே” என தனக்கு தானே பேசிக்கொண்டு என்ன செய்வதென்றறியாமல் யோசித்தான், நேரம் ஆகி கொண்டிருந்தது.

“எம்மா பரதன்னா யாரு” என கேட்டான் அழகர்.

“ராமரோட தம்பி, ராமாயணத்துல ராமர் காட்டுக்கு போனப்ப அண்ணணுக்கு மதிப்பு கொடுக்கிறதுக்காக அவர் இருந்த சிம்மாசனத்துல தான் உட்கார கூடாதுன்றதுக்காக அந்த இடத்துல ராமரோட செருப்பை வெச்சு ராசாங்கம் பண்ணுணவன், அண்ண மேல அவ்வளவு பாசம். அவங்க அண்ணண் தம்பி, நீங்களும் இருக்கீங்களா எப்ப பாத்தாலும் எதிரும் புதிருமா சண்டை போட்டுக்கிட்டு” என்று பதிலுரைத்தாள், அழகரின் அன்னை. இதை எல்லாம் கேட்டுக்கொண்டே அந்த இடத்தில் பாலன் அவனுடைய பிளாஸ்டிக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். பாலன் அழகரின் தம்பி.

நேரம் நெருங்க நெருங்க அழகரின் மனம் பதட்டம் அடையத் தொடங்கியது. “ஐயா வந்ததும் எப்படியாவது காச தேத்தியிரணும்” என்று முடிவு செய்தான்.

ஐயாவின் நிழல் தெருமுனையில் கண்டதும், வீட்டு திண்ணையில் இருந்தவன் துள்ளியெழுந்தான், ஓடிச்சென்று அவரின் கையை இறுகப் பிடித்து கொண்டான். “ஐயா எனக்கு காசு வேணும்” என்று வாஞ்சையுடன் கேட்டான்.

“எதுக்குடா” என்று ஐயா கேட்க,

“படம் பார்க்க வேணும், இன்னிக்கு இராமாயணத்தில வர்ற பரதன் கதையை படமா போடுறாங்களாம்” என்று கதையை அள்ளி விட்டான்.

“படம் பாத்து என்னடா ஆகப்போது, வயிறா நெம்ப போது” என்று பதில் வந்தது ஐயாவிடம்.

“இப்ப படம் பார்க்க காசு குடுக்க போறயா இல்லையா?” என்று கெஞ்சலில் இருந்து மிரட்டல் தொனிக்கு மாறினான் அழகர்.

“முடியாது போடா” என்று அவரும் பாய்ந்தார்.

சாப்பிட அனைவரும் அமர்ந்தார்கள். “உங்க சாப்பாடு வேணாம் ஒரு மண்ணும் வேணாம்” என்று வீட்டு மூலையில் காலை கட்டிக் கொண்டு தன் தலையை கால் இடுக்கில் வைத்துக் கொண்டு “யார் முகத்தையும் பார்க்க மாட்டேன்” என்ற வீராப்புடன் அமர்ந்தான், அழகர்.

“ஏலே உனக்கு எட்டணா கொடுத்தா உன் தம்பி பாலனுக்கும் எட்டணா கொடுக்கணும், ஒரு ரூபாய் வெட்டியா ஏண்டா செலவு செய்யிறீங்க” என்று கேட்டாள் அம்மா.

“எனக்கு கொடுத்தா அவனுக்கும் ஏன் கொடுக்கணும். அவன் படம் பார்க்கைலனு யாரு அழுதா” என்று கத்தினான் அழகர்.

“ஏன் அவன் பிள்ளை இல்லையா?” என்றாள் அம்மா.

“சரி சரி எட்டணா கொடுக்கிறேன் ஆளுக்கு நாலாணாவுக்கு எதாவது கடையில் வாங்கி தின்னுக்கங்க” என்றார் ஐயா. இதையும் வேணாம்னு சொன்னால் முதலுக்கே மோசமாயிடும் என்று கொடுத்ததை வாங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்தான், அழகர். மீதி நாலணவை எப்படி சேர்ப்பது என்று யோசிக்க தொடங்கினான்.

“அம்மா காசை ஒழிச்சு வச்சிருக்க இடத்துலேயும் பாத்தாச்சு. அங்கேயும் இல்லை. இடத்த மாத்திட்டா. சாமி படத்துக்கிட்ட இருக்கிற உண்டியலில் உருவலாம் என்றால் வீட்டில் ஆள் இருக்கிறார்கள் என்ன செய்யிறது” என்று புரியாமல் தவித்தான்.

சாப்பாடு முடிந்த பிறகு,  “தம்பி  எங்க விளையாட போற” என்று கேட்டான் அழகர். “என்னடா தம்பினு புதுசா பாசம் வழியுது. காச ஆட்டைய போடலாமுனு பார்க்கிறாயா?, அஞ்சு காசு கூட தேறாது” என்றான் பாலன்.

“அண்ணன் நினைக்கிறத அப்படியே சொல்றதில இந்த தம்பிங்க கில்லாடி பய பிள்ளைகளா இருக்காங்க என்ன பண்றது” என்று நொந்து கொண்டான் அழகர்.

படம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு எனும் சிந்தனை அந்த சிறு இதயத்தில் இன்னும் பதட்டத்தை உருவாக்கியது.

“சரி சரி படம் பார்க்கத்தான் முடியலை யார் யார் படம் பார்க்க போறாங்கனாவது பார்ப்போம்” என்று புலம்பிக்கொண்டு வைர தாத்தா கடைய நோக்கி நடந்தான். அங்கே இவன் சோட்டு பசங்க கூட்டத்தில இவனைத்தவிர தவிர எல்லாரும் அதிசயமா கூடி இருந்தார்கள்.

அதை பார்த்ததும் ஆற்றாமையில் மனம் வெம்பினான். ஊர்ல இருப்பவங்க எல்லாம் கைகொட்டி இவனைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருந்தது அவனுக்கு…

“என்னடா அழகா படம் பார்க்க ரெடியாகிட்டேயா”? என்று கேட்டான் கூட்டத்தில் ஒருவன்.

என்ன பதில் சொல்வதென்றறியாமல் “ஏலே இன்னிக்கு பஞ்சாயத்து டீவில சிவாசி படம் போட்றாங்களாம். அத ரொம்ப நல்ல படமாம், இந்த படத்த இன்னோரு நாளைக்கு பார்த்திக்கிறேன்” என்று சொன்னான்.

படம் பார்க்க ஒவ்வொருவரும் வைர தாத்தாவிடம் காசை கொடுத்து உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். வைர தாத்தாவிற்கு நம்பிக்கையான சிறுவன் ஒருவன் எத்தனை பேர் என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த பாலன், “இந்தாடா” என்று தன் கையில் வைத்திருந்த நாலணாவை அழகரின் கையில் திணித்தான். “நீ கஷ்டபட்றத பார்க்க முடியலை, போய்த்தொலை” என்று, சாபம் இடுகிறானா? இல்லை வருத்தபடுகிறானா என்று கணிக்க முடியாத ஒரு குரலில் சொன்னான்.

“அண்ணன காட்டுக்கு அனுப்பிட்டு சொகுசா அரண்மனையில் அண்ணன் செருப்ப சிம்மாசனத்தில வச்சவன விட தன் சுகத்த விட அண்ணன் ஆசைய நிறைவேத்தின” பாலன் அழகனுக்கு உயர்வாய் தெரிந்தான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பசங்க (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    வட்டியும் முதலும் (குறுநாவல் – பகுதி 2) – வைஷ்ணவி