in , ,

கமலி பாட்டியும் விமலி பேத்தியும் 😜 (அலட்டல் 1) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“டீ….ஈ..ஈஈ… விமலாக் குட்டி… எழுந்திரு.. மணி  அஞ்சரை ஆச்சு வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, தலைக்கு குளிச்சிட்டு,கோயிலுக்கு போயிட்டு,சாப்பிட்டு அப்பறமா காலேஜுக்கு கிளம்பு”.

“ஓ..மை..காட், இத்தனை வேலையா? ஓஹோ,  இப்பத்தான் புரியறது, நேக்கு. என்னத்துக்கு
எங்க அம்மா அப்பா இந்த ஊர்ல காலேஜ் சேர்த்து உன்கிட்ட கொண்டுவந்து தள்ளிட்டான்னு”

படுக்கையில் இருந்து துள்ளி குதித்து எழுந்து இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு தலையை தலையை ஆட்டியபடி கூறினாள் விமலி.

“ஓஹோ இதுக்கு தான் உங்க அம்மா உன்ன என் தலையில கட்டினாளா? நீ அங்க ஒரு வேலையும் பார்க்க மாட்டேங்குற, நீங்க கொஞ்சம் அவளை ஒழுங்குக்கு கொண்டு வாங்கோன்னு சொன்னாளா?”

பாட்டியும் இரண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து தலைய தலையை ஆட்டியபடி விழியிரண்டையும் உருட்டினாள்.

விமலா படுக்கையிலிருந்து ஆஞ்சநேயர் போல ஒரே குதியாய் குதித்து தரையில் நின்று “ஓகே, ஓகே, கூல் கூல்” என்று இரண்டு கைகளையும் நீட்டி பாட்டியை ஆசுவாசப்படுத்தினாள்.

“முதல்ல என்னோட வேலையெல்லாம் முடிச்சுட்டு நீ சொல்ற வேலையெல்லாம் செய்றேன் ஓகேவா பாட்டி”.. என்றாள் கெஞ்சும் குரலில்.

“ம்.. அப்படி வா ,வழிக்கு. இந்த கமலிக்கிட்ட அடங்காதவா உண்டோ லோகத்துல” என்று இல்லாத உலக உருண்டையை கையால் உருட்டியப்படியே  பாட்டி கர்ஜித்தாள்.

ஒரு முக்கால் மணி நேரம் கழித்து பாட்டி அவளுக்கு டிபன் ரெடி பண்ணி வைத்துவிட்டு ஹாலில் உட்கார்ந்தபடி ரூம் கதவு  நோக்கி கத்தினாள். “விமலி…அங்க என்ன பண்ணிண்டு இருக்க இவ்வளவு நேரம்?”

“ஒரு டூ மினிட்ஸ் பாட்டி” என்று உள்ளிருந்து குரல் வந்தது.

“இப்படி டூ மினிட்ஸ்… டூ மினிட்ஸ் சொல்லியே ஃ பாட்டி  ஃபைவ் மினிட்ஸ் ஆயிடுத்து” அலுத்துக் கொண்ட பாட்டி, டமால் என்று கதவு திறந்ததை  கண்டு அதிர்ந்து போனாள்.

தலைவிரி கோலமாக நின்று கொண்டிருந்தாள் விமலா  கையில் மொபைல் போனில் எதையோ பார்த்துக் கொண்டு.

“ஏண்டி இன்னுமா நீ ரெடியாகல?

“பாட்டி., இந்த ஹேர் ஸ்டைல் எனக்கு பண்ணவே வரமாட்டேங்கறது”.

“இங்க வா இப்படி., எனக்கு தெரியாத ஹேர் ஸ்டைலா? பாம்பு பின்னல், கடலை பின்னல் ,மீன் பின்னல் ,தவளை பின்னல்.. பாட்டி அடுக்கிக் கொண்டே போனாள்.

“ஐயோ பாட்டி ,பின்னல் பின்னல்… ங்காத. நான் பின்னிக்க மாட்டேன். லூஸ்  ஹேர் தான்
விட்டுப்பேன்”.

“என்னது லூசா தான் இருப்பியா”, என்று சிரித்துக் கொண்டே கேட்ட பாட்டியை முறைத்தாள் விமலி.

“ஆமா தலையை விரிச்சு போட்டுண்டு வண்டில போக வேண்டியது.  பெட்ரோல் வாசனையும் ரோட்டு தூசியும் முடியில அப்பிண்டு சோஷியல் சர்வீஸ் பண்றேள் போல” என்றாள் அவளது முடியை இறுக்கிப்பிடித்து  சீவியபடி.

“சரி , சரி.. இன்னிக்கு மட்டும் பின்னி விடு,  ஆனா இந்த ட்ரெஸ்ஸுக்கு மேட்சிங்கா இருக்கனும். பாத்துக்கோ” சுட்டு விரலை ஆட்டியபடி எச்சரித்தாள் விமலி.

“என்னது? அது எப்படி பின்றது? “சிறிது தடுமாறினாள் பாட்டி.

“அதுக்குத்தான் ஃபோன்ல தேடின்றிருந்தேன். இந்த மாதிரி போட்டுவிடு” என்று வீடியோவைக் காண்பித்தாள்.

மூக்கு கண்ணாடியை கொஞ்சம் முன்னுக்கு இழுத்துப் பிடித்தபடி கண்களை அகல விரித்து பார்த்து ஓஹோ அப்படியா …? இத இப்படி போடறாளா?. அத… பின்னுக்கு தள்ளனுமா?” என்று கமென்ட்ரி குடுத்துபடியே வீடியோவை பார்த்துக்கொண்டிருந்த பாட்டியை பெருமையாகப் பார்த்தாள் விமலி.

“பாட்டி.., இந்த ஹேர்ஸ்டைல் மட்டும் நீ நன்னாப் போட்டுட்டேனா என்னோட க்ளாஸ்.. ல ….நீ தான் இன்னிக்கு ஹீரோயின்.” என்று ஏத்திவிட்டாள் விமலி

“ம்….ஆச்சு…முடிஞ்சது ஹேர்ஸ்டைல்” என்று, ஒரு  பெரிய சாதனையை படைத்த தொனியில் முகத்தை பெருமிதமாக வைத்துக் கொண்டு கூறினாள் பாட்டி.

கண்ணாடியில் தன் தலையை பார்த்தவள், டைனோசரை கண்ட எலி போல பயந்து  “பா…ட்…டி…ஈ.ஈ.ஈ… என்ன பண்ணி வெச்சிருக்க..?” என்று அலறினாள் விமலி.

“நீ காண்பிச்ச ஹேர் ஸ்டைல்தான் போட்டுருக்கேன், கொஞ்சம் என்னோட கற்பனைத் திறனையையும் கலந்திருக்கேன். அவ்வளவுதான்.” என்று அலட்டிக்காமல் பதில் சொன்னாள் பாட்டி.

“நான் இப்படியே வெளியில போனேனா கூடு கட்டற டைம் மிச்சம்னு என் தலைல முட்டை போட்டு குஞ்சு பொருச்சுடும் பறவையெல்லாம்.  ஹூம்…” என்றவாரே தலைமுடியை சரிசெய்து கொண்டாள் விமலி.

“சரி சரி.. சாப்பிட வா..டிஃபன் ஆறிடும்” என்று அவளின் கோபத்தை திசை திருப்பினாள் பாட்டி.

“என்ன டிஃபன் பாட்டி” ஆர்வமாக கேட்டவளிடம்

“களியும் காய்கறி குழம்பும்” என்றாள் பாட்டி

“ஐயயோ,… கன்பார்ம் பண்றியா இது ஜெயில் மாதிரின்னு.” அலறினாள் விமலி.

“அடியே ,ஸ்பீக்கர முழுங்கிட்டியா…இந்த கத்து கத்தறியே” காது இரண்டையும் கைகளால் பொத்திக் கொண்டாள் பாட்டி.

“இன்னிக்கு திருவாதிரை. அதனால தான் இந்த மெனு” என்றபடியே பரிமாறினாள்.

“இது என்ன காம்பினேஷன்? இனிப்பு டிஃபன் வித் காரக்குழம்பு” என்று குழம்பியபடியே கேட்ட விமலியிடம், ‘சமோசாவும் இனிப்பு சாஸும் என்ன காம்பினேஷனோ அதேதான்
இதுவும்.ம்..சாப்பிடு” என்று மிரட்டினாள் பாட்டி.

பாட்டி அப்டேட்டா இருக்காளே என்று வியந்தபடியே ஒரு வாய் சாப்பிட்ட விமலி “தாத்தா ஏன் சீக்கரம் செத்தார்னு இப்பத்தான் புரியறது “. .என்று முனுமுனுத்தாள்.

சமையலறையில் இருந்து “என்னடியம்மா தாத்தாவைப்பத்தி ஏதோ சொல்ற மாதிரி இருக்கே” என்றபடியே வந்த பாட்டியிடம்

“ஒண்ணுமில்ல பாட்டி தாத்தாக்கு இந்த களிய சாப்பிட குடுத்து வெக்கலியேனு சொன்னேன்’ என்று டபாய்த்தாள்.

“உங்க தாத்தாக்கு ஷுகர். களி சாப்பிட மாட்டார்.” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள் பாட்டி.

ஆனா நான் உங்கிட்ட மாட்டிண்டேன் என்று மனதில் நினைத்தபடியே சாப்பிட்டு முடித்து விட்டு “ஓ.கே. பாட்டி நான் கிளம்பறேன்”. ஏதோ நினைத்துக் கொண்டவளாய் “அடுத்த திருவாதிரை எப்போ?” என்று கேட்டாள் விமலி.

பெருமையில் பூரித்து போன பாட்டி, “நோக்கு களி ரொம்ப பிடிச்சுருக்கா?” வாய் கொள்ளாப் புன்னகையுடன் கேட்டாள் பாட்டி

“இல்ல, அன்னிக்கு ஊருக்குப் போய்டலாம்னு இருக்கேன்”. என்று கலாய்த்த பேத்தியை

“அடி,..படவா..என்று கையை தூக்கியபடி பாட்டி ஒரு அடி எடுத்து அவளை நோக்கி நகர, சத்தமாக சிரித்தபடியே ஓட்டம் பிடித்தாள் விமலி.

பின்னாடியே தன் பெருத்த தேகம் குலுங்கியபடி சென்ற கமலிப் பாட்டி , “குட்டி… என்னை போற  வழியில மார்க்கெட்- ல இறக்கி விட்டுடு.கொஞ்சம் காய்கறி வாங்கணும்.”என்றாள்.

பாட்டியை ஏற இறங்க பார்த்த விமலா ,” உன்னோட வெயிட் எவ்ளோ? வண்டி தாங்குமானு தெரியலயே?” என்று பதறினாள்.

“அடியே ,இப்போ நான் ரொம்ப இளைச்சுப் போய்ட்டேனாக்கும். வண்டிக்கு ஒண்ணும் ஆகாது” என்று அவளை தைரியப்படுத்தினாள்.

“ஓ…இளைச்சதே இப்படின்னா, முன்னாடி எப்படி இருந்திருப்பா…என்று நினைத்தபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

“என்னோட வண்டியை சர்வீசுக்கு விட்ருக்கேன். இன்னும் டூ டேஸுல வந்துடும்” என்று அசால்டாக சொன்னப் பாட்டியைப் பார்த்து,

“ஓ…பாட்டி நீ வண்டி ஓட்டுவியா?  ஆங்.” என்று கொசு உள்ளே போகும் அளவுக்கு வாயை அகல திறந்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள் விமலி.

“என்னை யாருன்னு நினைச்ச? மடிசார் கட்டிண்ட மார்டன் பாட்டியாக்கும் நான்”. என்று கைப்பையில் வைத்திருந்த ரேபான் கூலிங்கிளாஸ் எடுத்து ஸ்டைலாக மாட்டிக் கொண்டாள் கமலி பாட்டி.

“வாவ்…யூ சோ க்யூட் ” பாட்டியின் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள் விமலி.

இரண்டு பக்கமும் வரிசையாக இருந்த கடைகள் அந்த பெரிய வீதியை சின்ன தெருவாக்கியிருந்தது.

வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்த விமலியின் முடிக்கற்றை காற்றில் நர்த்தனமாடி பின்னால் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்த பாட்டியின் குடைமிளகாய் மூக்கில் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டியது.

பாட்டி, லெட்சுமி வெடியாய்…. ஒரு தும்மலைப் போட டயர்தான் வெடித்து விட்டதோ என விமலி பதற மிரண்ட மாடு போல் வண்டி தாறுமாறாக ஓடி தடம் புரண்டது.

கீழே விழுந்த விமலியை ஒரு கையால் தூக்கி மறு கையில் அலேக்காக வண்டியை தூக்கி நிறுத்தினாள். பாட்டியின் புஜபல பராக்ரமத்தை கண்ட விமலி விசிலடித்து கைத்தட்டினாள். அருகிலிருந்தவர்கள் பாட்டியை கண்டு பயந்து ஒரு அடி தள்ளியே நடந்தனர்.

நாலு தெரு தள்ளியிருக்கும் காலேஜில் விமலியை விட்டு விட்டு “குட்டி, உங்க ஊர் மாதிரி இங்க ஃப்ரீயா வண்டி ஓட்ட முடியாது. ஈவ்னிங் நானே உன்னை பிக்கப் பண்ணிக்க வரேன். ஓ.கே.,..பை” என்று கையசைத்துவிட்டு அசால்டாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள் அந்த அறுபது வயது இளம் பாட்டி..😁😁

(லூட்டி தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 26) – தி.வள்ளி, திருநெல்வேலி

    கமலி பாட்டியும் விமலி பேத்தியும் 😜 (அலட்டல் 2) – ராஜேஸ்வரி