in ,

நான் யார் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

“வசந்தா, நான் கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன்.”

“சரிங்க. பனியா இருக்கப் போவுது, தலைக்குக் குல்லா போட்டுக்கோங்க.”

சமையலறையில் இருந்தபடியே குரல் கொடுத்தாள் என் மனைவி வசந்தா. அவளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

‘குல்லாவாம் குல்லா… யாருக்கு வேணும்? அதான் குடும்ப மொத்தமும் என் தலைல பெரிய தொப்பியா போட்டாச்சே. இதுல குல்லா வேற வேணுமா?’

தனியாகப் புலம்பியபடி நடக்க ஆரம்பித்தேன். மனத்தில் அவ்வளவு வெறுப்பு, ஆதங்கம், கோபம், ஆற்றாமை, இயலாமை என எல்லாம் சேர்ந்து மண்டிக் கிடந்தது.

நான் சபாபதி, வயது அறுபது. தனியார் நிறுவனத்தில் உயர்பொறுப்பில் வேலையில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு முன்தான் ஓய்வு பெற்றேன். இந்த இரண்டு மாதங்களில் குடும்ப உறுப்பினர்களிடம் நிறைய மாற்றம். என்னை யாரும் மதிப்பதே இல்லை. ஏதோ அவர்களெல்லாம் மிகவும் பரபரப்பாக இருப்பது போலவும், நான் வெட்டியாக இருப்பது போலவும் நினைக்கிறார்கள். வசந்தாவும் இப்படி மாறியது தான் எனக்கு மிகவும் வலிக்கிறது.

நான் வேலைக்குக் கிளம்பும் போது வாசல்வரை வந்து வழியனுப்புவாள். தண்ணீர், சாப்பாடு, மருந்து, பேனா என எல்லாம் எடுத்துக் கொண்டேனா என வரிசையாக விசாரிப்பாள். இப்போது இருக்கும் இடத்தில் இருந்தே பதில் சொல்கிறாள். கேட்டால், “நான் வேலையா இருக்கேன்” என்று என்னைக் குத்திக் காட்டுவது போல் பதில் வருகிறது.

வேலைக்குக் கிளம்பும் மகன் சங்கரிடம் ஏதாவது கேட்டால், “வேலைக்கு நேரமாச்சு பா. சாயங்காலம் பேசலாம்,” என்று சட்டென்று பதில் சொல்கிறான். மருமகள் உமா பேசுவதே இல்லை. காலையில் சீக்கிரம் கிளம்பி வேலைக்குப் போய் விடுவாள். மாலை திரும்பி வந்து குழந்தையைப் படிக்க வைக்க, வீட்டு வேலைகள் என நிற்கவே நேரம் இல்லாதது போல் காட்டிக் கொள்வாள். இதில் என்னிடம் என்ன பேசுவாள், எப்போது பேசுவாள்?

பேத்தி ஈஷா இப்போதெல்லாம் என்னோடு விளையாடுவதே இல்லை. வெளியே விளையாடப் போய் விடுகிறாள். விளையாடிவிட்டு வந்ததும் நான் ஏதாவது கேட்டால், “தாத்தா, நான் ஹோம்வர்க் பண்ணணும், படிக்கணும். நிறைய வேலை இருக்கு. அப்புறம் வரேன் தாத்தா,” என்று பெரிய மனுஷி போல் பேசுகிறாள்.

மொத்தத்தில் எல்லாருக்குமே நான் சும்மா இருப்பது கண்ணை உறுத்துகிறது. இவ்வளவு வருடங்களாக வேலை செய்து ஓடாய்த் தேய்ந்தது யாருக்கும் நினைவில் இல்லையா? இவ்வளவு காலமாக அப்பா என்றாலே சிம்ம சொப்பனமாக நினைத்துக் கொண்டிருந்த சங்கர், இப்போது இப்படிப் பேசுகிறான் என்றால், அவன் மதிப்பு கொடுத்தது என் வேலைக்குத் தானா? அலுவலகத்தில் நான் வகித்த பதவிக்குத் தான் மதிப்பா? அப்பா என்ற மதிப்போ, பாசமோ இல்லையா?

வசந்தா… திருமணம் முடிந்து முப்பத்தைந்து வருட தாம்பத்திய வாழ்க்கையில், என் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, நான் கேட்பதற்கு முன்பே என் தேவைகளை நிறைவேற்றுபவள். இப்போதும் எல்லாம் செய்கிறாள் என்றாலும் ஒரு மெத்தனம் தெரிகிறது. மகனுக்கோ, பேத்திக்கோ தான் முன்னுரிமை. அதற்கடுத்து மருமகள். அதற்குப் பின் தான் நான். வசந்தாவே என்னை இப்படி ஒதுக்கி வைத்ததை என்னால் ஜீரணிக்கவே இயலவில்லை.

காலையில் எழுந்து காபி குடித்துவிட்டு, செய்தித்தாளைப் புரட்டிய பிறகு, நடைப்பயிற்சிக்குக் கிளம்பி விடுவேன். இப்படி வெளியே வரும் நேரம் தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. சிறையில் இருந்து விடுதலையாகி வருவது போல் தினமும் இந்த நேரத்திற்காக மனம் ஏங்குகிறது. ஆனால் எவ்வளவு நேரம் வெளியே சுற்றுவது? மீண்டும் வீட்டிற்குப் போய்த்தானே ஆகவேண்டும். வீட்டிற்குப் போனபின், குளித்து, காலை உணவை முடித்தபின், என்ன செய்வது என்றே தெரிவதில்லை. புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது என்று மதியம் வரை நேரத்தைத் தள்ளிவிட வேண்டியுள்ளது. மதியம் சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம். மாலை டீ குடித்த பிறகு, மீண்டும் வெளியே கிளம்பி விடுவேன். கோவில், காய்கறிக் கடை என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டிற்கு வருவேன்.

மாலை நான் ஏழு மணிக்கு வீட்டிற்கு வரும் போது வீட்டில் டிவி ஓடிக் கொண்டிருக்கும். சங்கர் தான் டிவி முன்னால் இருப்பான். வசந்தாவும், உமாவும் சமையலறையில் உருட்டிக் கொண்டிருப்பார்கள். ஈஷா சமையலறைக்கும், படுக்கையறைக்கும் ஓடிக் கொண்டே இருப்பாள். நடுநடுவே டிவியையும் பார்த்துக் கொள்வாள். உமா குரல் கொடுத்தால், “படிக்கறேன் மா” என்று உள்ளே ஓடுவாள்.

மொத்தத்தில் வீட்டில் நான் இருக்கிறேன் என்பதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். வரவர வீட்டில் இருக்கும் நேரத்தில் முள் மேல் இருப்பது போன்ற ஒரு உணர்வு. என்ன செய்வது என்றே தெரியவில்லை. எப்படி நேரத்தைக் கடத்துவது என்று புரியவில்லை. பலவிதக் குழப்பங்களுடன் பூங்கா வந்து சேர்ந்தேன். எனக்கு முன்னால் நிறைய பேர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தார்கள். எனக்கு என்னவோ இன்று நடக்கவே தோன்றவில்லை. ஒரு ஓரமாக இருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன்.

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற எல்லா ஆண்களின் நிலைமையும் இது தானா? என் நண்பர்கள் யாரிடமாவது இதைப் பற்றிப் பேசிப் பார்க்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக இதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்தவரை நிறைய பேர் வீட்டில் இதே நிலைதான் போல. அவ்வப்போது காதில் விழும் கதைகள் எல்லாம் அப்படித்தானே இருக்கின்றன. அவர்களெல்லாம் இதை எப்படிக் கடந்து வருகிறார்கள்? எப்படி எதிர்கொள்கிறார்கள்? குழப்பத்துடன் இருந்த என்னை ஒரு குரல் கலைத்தது.

“டேய்…. சபா… எப்படியிருக்கே? என்ன ஆழ்ந்த யோசனை?”

“அடடா… ராகவா… எப்படியிருக்கே? நூறாயுசு உனக்கு. இப்பதான் யாரையாவது பார்த்துப் பேசினாத் தேவலாம்னு நினைச்சேன். நீ வந்து நிக்கறே. வா, இப்படி உட்காரு. எப்போ அமெரிக்கால இருந்து வந்தே?”

“சபா, நான் வந்து நாலு நாள் ஆச்சு. நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே? சர்வீஸ் இருக்கா, முடிஞ்சுதா?”

“ரிட்டையர் ஆகி ரெண்டு மாசம் ஆச்சு ராகவா. ஆனா ரெண்டு மாசம் ரெண்டு வருஷம் மாதிரி இருக்கு. நீ மூணு வருஷம் முன்னாடியே விஆர்எஸ் வாங்கிட்டே. உங்க வீட்டுல உன்னை எப்படி நடத்தறாங்க? உன்னோட மனநிலை என்ன… இதெல்லாம் கேட்கணும்னு நினைச்சேன் ராகவா.”

“ஏன் சபா, என் மனநிலைக்கு என்ன? நல்லா சந்தோஷமா இருக்கேன். உனக்கு இதுல என்ன சந்தேகம்? இவ்வளவு வருஷம் ஓடிட்டே இருந்தாச்சு. இனிமேல் நமக்குப் பிடிச்ச மாதிரி இருக்கலாமே.”

“இல்ல ராகவா, நான் எந்த அர்த்தத்துல சொல்றேன்னு உனக்குப் புரியல. உங்க வீட்டுல உன்னை மதிக்கறாங்களா? அதாவது நீ வேலைக்குப் போயிட்டிருந்தப்போ எப்படி உன்னை மதிச்சாங்களோ அதே மாதிரி இப்பவும் இருக்காங்களா? இல்ல…”

“டேய் சபா, இதென்னடா கேள்வி? அதெப்படி மாறுவாங்க? என்ன பிரச்சனை உனக்கு?”

“என்னவோ போ ராகவா, எனக்கு எல்லாமே மாறிப்போன மாதிரி இருக்கு. வேலையில்லாவதவன்னு என் வீட்டுல யாரும் என்னை மதிக்கறதே இல்ல. எல்லாரும் என்னை ஒதுக்கறாங்க ராகவா. இவ்வளவு வருஷமா என் உத்தியோகத்துக்காகத் தான் என்னை மதிச்சிருக்காங்க. என் வருமானத்துக்குத் தான் மதிப்பே. இப்போ எதுவும் இல்லாத வெறும் சபாபதி நான். சீனியர் மேனேஜர் பதவியில்லை, மாசம் பொறந்தா சம்பளம் இல்லை, நான் சொன்னதும் உடனே வேலையை செஞ்சு முடிக்க ஆளும் இல்லை, நான் சொல்றதைக் கேட்கணும்னு அவசியமும் இல்லை. அப்படித்தான் வீட்டுல எல்லாரோட நடவடிக்கைகளும் இருக்கு, என் மனைவி வசந்தா உட்பட.”

“நீ சொல்றதை என்னால நம்ப முடியல சபா. இதெல்லாம் நீயா கற்பனை பண்ணிக்கறியா?”

“அந்த அளவுக்கு முட்டாளா நான்? என்ன ராகவா, பார்த்தியா… நீயே இப்படிப் பேசறியே. இதுவே நான் சர்வீசுல இருந்தா இப்படி ஒரு கேள்வியை என்கிட்டே கேட்டிருப்பியா? நம்ம சபாபதி ஏதாவது சொல்றான்னா ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு நினைச்சிருப்பே இல்ல? இப்போ நானா கற்பனை பண்ணிப் பேசறேன்னு சொல்றே. போடா, போ… உன்கிட்ட என் மனசுல இருக்கற பாரத்தை இறக்கி வைக்கணும்னு நினைச்சேன் பாரு, என்னைச் சொல்லணும்.”

“சரி சபா, நீ சொல்றதை நம்பறேன். விவரமாச் சொல்லு.”

என் மனக்குமுறலை யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்று காத்திருந்ததால், மடைதிறந்த வெள்ளம் போல் என் ஆதங்கத்தை எல்லாம் ராகவனிடம் கொட்டித் தீர்த்தேன்.

“இப்போ சொல்லு ராகவா, நான் என்ன பண்ணட்டும்?”

“சபா, குடும்பத்துல எல்லாரும் முன்ன மாதிரி உன்கிட்ட மரியாதையா நடந்துக்கணும்னு நீ நினைச்சா, மாற்றத்தை உன்கிட்ட இருந்தே ஆரம்பி.”

“என்ன சொல்றே நீ?”

“ஆமா சபா, வேலை செய்யற இடம் வேற, வீடு வேற சபா. மொதல்ல வேலையில்லாம வெட்டியா இருக்கோம்னு நினைக்கறதை விடு. நீ தான் அப்படி நினைக்கறே. உங்க வீட்டுல யாரும் அப்படி நினைக்க மாட்டாங்க. ஆனா இவ்வளவு வருஷம் நீ வேலைக்குப் போயிட்டிருந்தப்போ உங்க குடும்பத்துல எல்லாரும் என்ன செஞ்சுட்டிருந்தாங்களோ அதே பொறுப்புகளை இன்னும் சுமந்துட்டுத் தான் இருக்காங்க.

உன் மனைவியை எடுத்துக்கோ. வீட்டு வேலை அவ்வளவும் இன்னும் செஞ்சுட்டிருக்காங்க. இன்னும் சொல்லப்போனா பொறுப்புகளும், வேலைகளும் அதிகமாயிருக்கும். மருமகளும் வேலைக்குப் போறா. பேத்தி வளர்ந்துட்டு வரா. உன் மனைவிக்கும் வயசாகுது. நீ வேலைக்குப் போற காலத்துல வீட்டுல என்ன நடக்குதுன்னு கூட கவனிக்க உனக்கு நேரம் இருந்திருக்காது. ஆனா அதெல்லாம் அவங்க தானே பார்த்துக்கிட்டாங்க. இப்போ நீ ரிடையர் ஆயிட்டே. ஆனா அவங்க?

நீ கல்யாணம் ஆன புதுசுல, உன்கூட உன்னைப் பெத்தவங்களும் இருந்தாங்க இல்ல? அப்போ நீ அவங்களை கவனிச்சுகிட்டியா, இல்ல அவங்க எல்லாம் செஞ்சாங்களா? உன் குழந்தைகளைப் பார்த்துக்கறது, கடைகண்ணிக்குப் போறது, கரண்ட்பில், ரேஷன், வீட்டுல பைப் சரி பண்ணறது இப்படி எல்லாம் உங்க அப்பா பொறுப்பெடுத்து பார்த்துகிட்டாங்க. இப்போ அதெல்லாம் நீ செய்ய வேண்டிய காலம் டா. இன்னும் உட்கார்ந்த இடத்துல உனக்கு காபியும், தண்ணியும் யாராவது கொண்டு வந்து கொடுக்கணும்னு எதிர்பார்க்காதே. நீ உன் மனைவிக்கு என்ன உதவி செய்ய முடியும்னு பாரு.

நான் வீட்டுல இருக்க ஆரம்பிச்ச பிறகு தான் என் மனைவி எவ்வளவு வேலை செய்யறாங்கற புரிதலே எனக்கு வந்தது. அவளுக்குச் சின்னச் சின்ன உதவிகள் செய்ய ஆரம்பிச்சப்போ முதுமை அழகாச்சு. சபா, நீ வெளில கிளம்பும் போது உன் மனைவி வாசல் வரைக்கும் வந்து, உன்னை விசாரிக்கணும்னு எதிர்பார்த்தது போதும். அதை விட்டுட்டு, சமையலறைக்கு நீ போய் உன் மனைவிக்கு என்ன வேணும்னு கேட்டுப் பார். உன் வாழ்க்கைக்கு அர்த்தம் அப்போ புரியும்.

பேத்தி உன்கூட வந்து விளையாடணும்னு எதிர்பார்க்காம, அவளுக்குப் படிக்க, எழுத சொல்லித் தரேன்னு நீ அவகிட்ட போய் உட்காரு. காலைல பரபரப்பா வேலைக்குக் கிளம்பற மகன்கிட்ட, உன் கவலைகளைக் கொட்டாம, அவனுக்கு என்ன உதவி செய்ய முடியும்னு பாரு. வீட்டுல நீ பங்கெடுக்க நிறைய வேலைகள் இருக்கு சபா. பொறுப்புகளை நீயா எடுத்துக்கணும். இவ்வளவு வருஷம் குடும்பத்துக்காக உழைச்சு ஓய்ஞ்சு போயிருக்கற உன்னை எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம்னு எல்லாரும் அமைதியா இருக்காங்க.

நிறைய குடும்பத்துல இதுவே பிரச்சனையாயிடும். ரிடையர் ஆனதும் நம்மை வேலை வாங்கறாங்கன்னு நம்ம வயசுல இருக்கறவங்க அதையும் தப்பாத் தான் சொல்வோம். அதுக்கு பயந்தே பல குடும்பங்கள்ல வயசானவங்களைத் தொந்தரவு செய்யறதில்லை. காலத்துக்குத் தகுந்த மாதிரி நாமளும் மாறணும் சபா. வேலை செய்யற இடத்துல எல்லாரையும் வேலை வாங்கின மாதிரி வீட்டுல செய்யணும்னு நினைச்சா சிக்கல் நமக்குத்தான். புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்.”

“ராகவா, எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன். அதை நாசூக்கா எனக்குப் புரிய வச்சுட்டியே. இதுக்குத்தான் ஒரு நல்ல நண்பன் வேணும்னு சொல்றாங்க போல. வசந்தாவையே தப்பா நினைச்சுட்டேனே ராகவா. ஓய்வே இல்லாம ஓடிட்டே இருக்காளே… அவளைப் பத்தி யோசிக்காம சுயநலமா இருந்துட்டேனே. வெறுமனே ஆபீஸ் போய் ஏசி ரூம்ல உட்கார்ந்து வேலை பார்த்துட்டு வந்ததைப் பெருசா பேசிட்டிருக்கேன். அவ உட்கார நேரமில்லாம உழைக்கறாளே, அவளுக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசினதில்லையே ராகவா. என்னை யாரும் மதிக்கல, என்னை யாரும் கண்டுக்கலனு சொன்ன நான், அவங்க எல்லாரையும் மதிக்க மறந்துட்டேனே. அவங்க உழைப்பையும், அவங்க பொறுப்பையும் மதிக்கலையே.

இன்னிக்கு உன்னைப் பார்த்தது நல்லதாப் போச்சு ராகவா. திக்குத் தெரியாம தடுமாறிட்டு இருந்தேன். நீ என்னைக் கரையேத்தி விட்டுட்டே. இல்லேன்னா இந்த சுயபச்சாதாபம், சுயநலம் இதெல்லாம் என்னை ஒண்ணுமில்லாம செஞ்சிருக்கும்.”

“பரவாயில்ல சபா, இது எல்லா ஆண்களும் எதிர்கொள்ளற சிக்கல்தான். அம்பத்தஞ்சு வயசுக்கு மேலேயே நம்ம மனசை இதுக்குத் தயார் செய்ய ஆரம்பிக்கணும். இருபது, இருபத்தஞ்சு வயசுல வேலைக்குப் போக ஆரம்பிச்சா, வேற சிந்தனையில்லாம குடும்பத்தை நம்ம வருமானம் தான் தூக்கி நிறுத்துதுன்னு ஒரு பொய்யான போர்வையைப் போர்த்திட்டு இருக்கப் பழகிடறோம். அந்தப் போர்வையை உதறிட்டு வாழணும்னு சூழ்நிலை வரும்போது நமக்கே ஒரு குற்ற உணர்ச்சி வருது. ஆனா வாழ்க்கை சுழற்சில இதுவும் ஒரு கட்டம். அந்தப் பொய்யான போர்வையை நாமளா உதறித் தள்ளிட்டு, நம்ம பசங்க, பொண்ணுங்க, பேரக் குழந்தைங்க, மனைவி இவங்க கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து வாழ ஆரம்பிச்சா, முதுமை ரொம்ப அழகா, சுவாரசியமா, ரசிக்கும்படியா மாறிடும் சபா. வாழ்த்துகள்.”

ராகவனை நன்றியுடன் ஆரத்தழுவிக் கொண்டேன். மனநிறைவுடன் விடைபெற்றுக் கொண்டேன். கலங்கிய மனத்துடன் வீட்டிலிருந்து கிளம்பி வந்த நான், தெளிவான மனிதனாய் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

‘வாழ்க்கை எவ்வளவு அழகானது. முதுமை பக்குவப்பட்ட பருவமல்லவா… அது இன்னும் அழகாகத் தானே இருக்கும். நான் யார் என்று எனக்குப் புரிந்து விட்டது. எனக்கான மதிப்பு எதில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். இப்போது குடும்ப உறவுகள் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். அவர்களுக்காக மனம் கரையத் தொடங்கியது. குறிப்பாக என் வசந்தாவுக்காக.’

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அருமை மா! பொதுவாக எல்லா ஆண்களும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இப்படித் தான் நினைத்துத் தன்னைத் தானே வருத்திக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்த விதம் பாராட்டத்தக்கது.

சூலித்தெருவில் ஒரு சிறுவன் – சுசிதா அகர்வால் (தமிழில் பாண்டியன்)

குறை (சிறுகதை) – ராஜேஸ்வரி