2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
முன்கதைச் சுருக்கம்
பக்கத்து குருவம்மா வீட்டிலிருந்து மசாலா வாசனை வந்தது. அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறிக்குழம்பு வைக்கிறார்களோ என்று நினைத்துக் கொண்டாள். பால் வாங்கி வரும்போது அவளது மகன் பன்னீர் கோழி முடிகளை அள்ளிக் கொண்டிருந்தான். ஆக குருவம்மா வீட்டில் கோழிக்கறிக் குழம்பு என்று புரிந்து போனது. தன்னுடைய கோழிகளுக்கு தீவனம் போடும்போது தனது கருப்புக்கோழியைக் காணவில்லை என்று அதிர்ந்து போனாள் மரிக்கொழுந்து. அதேசமயம் குருவம்மாதான் கருப்பியை கழுத்தைத் திருகி குழம்பில் போட்டுவிட்டாளோ என்றும் சந்தேகித்தாள். உடனே பழிக்குப் பழி வாங்க முடிவு செய்து கொண்டாள்.
இனி
இன்றைக்கு நாமும் யாருக்கும் தெரியாதபடி அவளது கோழி ஒன்றைப் பிடித்து கழுத்தைத் திருகி குழம்பு வைத்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்துகொண்டு, மறுபடியும் ஓடிப்போய் கோழி தீவனத்தை அள்ளிக் கொண்டு வந்து தெளித்தாள். மறுபடியும் கோழிகள் எல்லாம் ஓடிவந்தன. இவளது கோழிகளோடு குருவம்மாவின் கோழிகளில் நான்கும் ஓடிவந்து தீவனத்தைக் கொத்தி கொத்தித் தின்னவாரம்பித்தன.
‘கறுப்பி, உன்னை குழம்பு வைத்தாளல்லவா, அவளது கோழி ஒன்றைப் பிடித்து இன்றைக்கே நானும் குழம்பு வைத்துவிடுகிறேன்‘ என்று தனக்குள் கறுவிக்கொண்டே, மெல்ல வேலி ஓரமாய் பதுங்கி பதுங்கி போய் லபக்கென ஒரு வெடக்கோழியை லாவகமாய் பிடித்து உடனே அதனுடைய கழுத்தைத் திருகி சேலைக்குள் மறைத்து எடுத்துக் கொண்டு வேகமாய் வீட்டுக்குள் ஓடினாள்.
கீழே வைக்கும்போது அந்தக்கோழி அப்படியே துவண்டு விழுந்தது. தண்ணீரைக் கொதிக்க வைத்து கோழியை அமுக்கி எடுத்து, முடிகளைப் பிடுங்கி, அடுப்புத் தணலில் பொசுக்கி, மஞ்சள் பூசிக் கழுவி, துண்டுகளாகி வாணலியில் போட்டு, கொஞ்சம் உப்பையும் அள்ளிப்போட்டு கலக்கி மூடி, அடுப்பை எரிய விட்டாள்.
ரம்யா எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே அம்மாவிடம் வந்தாள். சட்டென கோழி முடிகளைப் பார்த்தவுடன், ‘ ]ஹை… இன்னிக்கு நம்ம வீட்டுல கோழிக்குழம்பாமா…’ என்று கண்களை விரித்துக் கொண்டு கேட்டாள். அவளது முகம் அப்படியே பரவசத்தில் மின்னியது.
கொஞ்சம் திகைத்தாள், மரிக்கொழுந்து. நம்ம கோழி அல்ல, குருவம்மா வீட்டு கோழி என்று எப்படி சொல்வது. அந்த ரகசியம் நம்மோடேயே இருக்கட்டும் என்று யோசித்து, ‘நம்ம கறுப்பியில்லே… முட்டை போட்டுக்கிட்டிருந்துச்சே அது கழுத்தைத் திருகிட்டேன்…’ என்றவள் சிரித்தபடி, ‘இன்னிக்கு உனக்கு சீக்கிரம் பசியெடுக்குமே…’ என்று கேலி செய்தாள்.
சந்தோஷம் தலைக்கு ஏற ‘ ஹய்யா…’ என்றபடி பல் விளக்க ஓடினாள் ரம்யா. கறிக்குழம்பு வாசனை வீட்டுக்குள் வளைய வந்தது.
மத்தியானம் ராமன் வந்து கேட்டாலும் நம்ம கறுப்பியை அடித்து குழம்பு வைத்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள் மரிக்கொழுந்து.
ஓடிவந்த ரம்யா, ‘அம்மா பசிக்குதம்மா‘ என்று குதித்தாள்.
‘எனக்குத் தெரியும்டி, இன்னிக்கு உனக்கு சீக்கிரமாவே பசி எடுத்திடும்னு… கொஞ்சம் இரு, தோசை வார்க்கறேன்… சாப்பிடுவே ‘ என்று சொல்லிவிட்டு தோசை வார்க்க உட்கார்ந்தாள்.
இரண்டு தோசைகளை வார்த்து ஒரு தட்டில் போட்டு குழம்பை ஊற்றி கறித்துண்டுகளையும் போட்டு ரம்யாவுக்கு கொடுத்துவிட்டு, தானும் தோசை வார்த்து சாப்பிட உட்கார்ந்தாள். இப்போதுதான் நிம்மதி வந்தது அவளுக்கு.
‘எங்க கறுப்பியவா கழுத்த திருகினே குருவம்மா, அடிச்சேன்ல ஆப்பு உனக்கு…‘ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டபோது குழம்பு ருசியாக இருந்ததையும் உணர்ந்தாள்.
‘குருவம்மா வீட்டு கோழிக்கு மட்டும் எங்கிருந்து வந்தது இந்த ருசி ‘ என்று நினைத்தபோது களுக்கென்று சிரிப்பும் வந்தது. குருவம்மாவுக்கும் அப்படித்தான் ருசித்திருக்குமோ என்று நினைத்தபோது கருப்பியை நினைத்து கொஞ்சம் வருத்தம் உண்டாகத்தான் செய்தது.
தோசை சாப்பிட்டுவிட்டு விளையாடப் போனாள் ரம்யா. கோழி முடிகளை ஒரு கருப்பு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு தூரமாய் இருக்கும் குப்பைத் தொட்டியில் போய் போட்டுவிட்டு திரும்பினாள். இனி யாருக்கும் தெரியப் போவதில்லை.
குருவம்மா எப்போதாவது தனது கோழிகளை எண்ணிப் பார்த்தாளானால் மட்டுமே ஒரு கோழியைக் காணோம் என்று தெரிந்து கொள்வாள், கூடவே திகைப்பாள். ‘லபோ திபோ’ என்று குதிப்பாள். குதிக்கட்டுமே என்று சந்தோசப்பட்டபடி போய், பாயில் படுத்து லேசாய் கண்களை மூடினாள்.
விளையாடப் போன ரம்யா கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து நின்றாள். ‘அம்மா… ராஜி இல்லே… அவ வீட்டிலே ஆம்லேட் சாப்பிட்டாளாம், எனக்கும் ஒரு ஆம்லேட் போட்டுக் கொடும்மா…‘ என்று கெஞ்சினாள்.
‘அடியேய்… இப்போதானே ரெண்டு தோசையும் கோழிக்கறியும் சாப்பிட்டே… உடனே கோழி முட்டையும் வேணுமா. அதெல்லாம் கிடையாது போ… உனக்கு வயிற்றிலே இன்னுமா இடம் இருக்கு‘ என்று அதட்டி அனுப்பினாள். அவளும் ஓடிவிட்டாள்.
முட்டைப் பற்றி பேச்சு வந்ததால் முட்டைகளைப் பார்க்கலாம் என்றெண்ணி, மரஸ்டூலை எடுத்துப் போட்டு ஏறினாள். மேல்பாதியை உடைத்த ஒரு மண்சட்டியில் அடைகூட்டி வைத்திருந்தாள் அவள். அவளைப் பார்த்ததும் சிவப்பி மெல்லிய குரலில் கொக்கரித்தது. சிவப்பியை தூக்கிவிட்டு அடியில் பார்த்தாள். முட்டைகள் அப்படியே இருந்தன. ஒரு முட்டையிலும் கூட இன்னும் வெடிப்பு வரவில்லை.
‘சரி, இவள்தான் அடை காக்கிறாளேே, கறுப்பியின் முட்டைகள் சும்மாதானே இருக்கும், அதில் இரண்டை எடுத்து உடைத்து ரம்யாவுக்கு ஆம்லேட் போட்டுத் தரலாம் என்று நினைத்தபடி இறங்கி வந்து கட்டிலுக்கடியில் குனிந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி.
அங்கே கறுப்பி கூடைக்குள் கர்வமாய் அடைகாத்துக் கொண்டிருந்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings