in ,

தடுமாறிய எண்ணங்கள் (சிறுகதை) – சசிகலா எத்திராஜ்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

மதியவெயில் மண்டை பொளக்க விறுவிறுவென்று தார் சாலையில் காலில் செறுப்பின்றி நடந்தவளின் கட்டிய சேலை ஆங்காங்கே நைத்து கிடந்தாலும் வேலை செய்த இடத்தில் பலதடவை கட்டி கிழியும் நிலையிலிருக்கும் புடவையை கொடுத்தாலும் அதுவும் தன் மானத்தை மறைக்க தானே என்று நினைத்தும் கட்டிக் கொள்பவளுக்கு முகமும் களைத்து கருத்து போய் இருந்தது.

விறுவிறுவென தன் வீட்டை நோக்கி நடந்த கலைவாணியின் உள்ளமோ வெயிலோனின் அனலை விட உள்ளத்தில் கொதிப்பே அதீதமாக இருந்தது.

காலையில் எழுந்தவுடனே கௌரி,ராகேஷ் என தன் இரு பிள்ளைகளுக்கு காலையில் குடிக்க வடித்த கஞ்சியும் ஊறுகாயும் எடுத்து வைத்தவள் மதியம் பள்ளியில் சாப்பிட்டு விடுவதால் அந்த வேலை இல்லை என்று பெருமூச்சுடன் ஏழு மணிக்குள் தான் வேலை  செய்யும் இடத்தில் இருக்க வேண்டுமே பதைப்புடன் பிள்ளைகளை எழுப்பி விட்டு கிளம்பி விட்டாள் கலைவாணி.

கலைவாணினு தன் பெயரிலிருக்கும் சரஸ்வதியோ அவளுக்கு எதிர்ப்பதமாக மாற அவளுக்குப் படிப்பே பாகற்காயாக கசந்து போய்விட, பள்ளிக்குப் போனாலும் பாடத்தில் கவனமில்லாமல் புத்தி அலை பாய்ந்தது அவளுக்கு .

அதனால் தானோ என்னவோ அறியாத வயதில் ஆசை வார்த்தைகளாலும் மேனியின் அதீத சிலிர்ப்பிலாலும் செய்ய கூடாதவை செய்யதவளுக்கு இரண்டு பிள்ளைகள் ஆன பின் தான் வாழ்க்கை என்றால் என்னவென்று பிடிப்பட்டது.

அதற்குள் காதல் என்ற பெயரில் அவளை சீர்குலைத்த மன்மத கண்ணனோ அடுத்தவளை தேடிச் சென்று விட்டான்.

அவன் அவளை விட்டுப் போனதுமே அவளுக்கு எதிலிருந்தோ விடுதலை கிடைத்த உணர்வு  உண்டானதால் தன் குழந்தைகளுக்காக அவர்களை நல்லபடியாக படிக்க வைக்க நினைச்சு தான் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறாள்.

வீட்டு வேலைக்குச் சென்றிருந்த போது  தான் அவள் வீட்டின் பக்கத்திலிருக்கும் அம்புஜம் போன் பண்ணி வீட்டுக்கு உடனே வரச் சொல்லவும்  வெயில் என்று பாராமல் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் கலைவாணி.

அவளுக்கு பக்கத்து வீட்டு பெண்ணான அம்புஜம் போன் பண்ணும் போதே அவளின் பதட்டமான குரலிலும்  என்னவோ ஏதோ என்ற எண்ணத்தில் வந்தவளுக்கு அங்கே வீட்டின் முன் நின்ற பிள்ளைகளோ கண்களில் கண்ணீர் கறையுடன் நிற்பதைக் கண்டு அவர்களின் அருகே போனவள் ”கௌரி என்னடி ஆச்சு ஏன் அழுற?, ராகேஷ் ஏன்டா நீயும் அழுற.. கீழே ஏது விழுந்தீட்டியா”, என்று கேட்டவள் பிள்ளைகளை உடம்பை மேலே இருந்து கீழே வர வருடி கேட்டவளை அடக்கமாட்டாமல் அழுகையுடன் கட்டிக் கொண்டு அழுதாள் கௌரி.

மகளின் அழுகை கலைவாணிக்கு அடிவயிற்றில் பீதியை கிளப்ப ”என்னடி ஆச்சு.. ஏன் இப்படி அழுற?, சொல்லிட்டு அழுடி”, என்று மகளை கடிந்த கலைவாணி ”என்னடா நடந்தது , அக்காவை ஸ்கூலே டீச்சர் அடிச்சிட்டாங்களா”, என்று தன் மகனிடம் கேட்க,

அவனோ ஒன்பது வயது பாலகன் தானே.. அவனும் அக்கா எதற்கு அழுகிறாள்? என்று தெரியாமல் தானும் அழுதவன்,  இப்ப அம்மாவும்  அதே கேள்வியை கேட்கவும் அவளை முறைத்து ”அது எனக்கு தெரியல ஆனால் ஸ்கூலிலே அக்கா அழுதா”, என்று சொல்லியவன் ”எனக்குப் பசிக்கது சோறு போடு”, என்று தன் அம்மாவைக் கேட்டான் ராகேஷ்.

அவன் வயதுக்கு அந்தந்த நேரத்தில் தோனுவது வயிற்றியின் தேவை மட்டுமே…

அவனை “வீட்டுல கஞ்சி இருக்கு போய் குடி”, என்று குடிசைக்குள் அனுப்பியவள் தன் மகளை வருடிய படி முன்னால் மட்டை வேய்ந்த திண்ணையில் அவளையும் உட்கார வைத்துவிட்டு தானும் அமர்ந்தவள்,  அம்புஜத்தை பார்த்து ”உனக்கு எதும் தெரியுமா அம்புஜம் இவ ஏன் அழுறானு”, என்று கேட்க

அவளோ ”நானும் வந்தலிருந்து இதை தான் கேட்கிறேன் பதிலே வரல புள்ளைகிட்ட.. சரியான அழுத்தக்காரியா இருக்கா இவ”, என்று கௌரியை திட்டியவள், ”நீயே கேளு என்க்கு வூட்டுல கொஞ்ச வேலை கிடக்கு”, என்று சொல்லிவிட்டு போய்விடடாள் .

மகளின் தலையை வருடினாலும் மகனைவிட ஒரு வருட பெரியவளான கௌரிடம் ”என்னடி ஆச்சு ஏன் உன் ஆத்தக்காரி செத்துட்டேனு இப்படி ஒப்பாரி வைக்கீரியா”, என்று கோபமும் ஆத்திரமாக மகள் எத்தனை தடவை கேட்டும் பதில் பேசாமல் இருப்பதை கண்டு சிடுசிடுக்க,

அம்மாவின் கோபம் கௌரியை அழுகையை நிறுத்திவிட்டு தேம்பலில் நின்றது.

சிறிது நேரம் தேம்பியபடி இருந்தவள் தன் கரங்களால் அம்மாவின் வயிற்றை வருடவும் எதையோ  புரிந்தும் புரியாமல் கலைவாணி தன் மகளை நிமிர்த்தி பதட்டத்துடன் அமர வைத்து உற்று பார்க்க ”எனக்கு பயமா இருக்கு , என்னை ஏன் பொம்பளை புள்ளையா பெத்த .. உன்னால் தான் நான் இப்படி பயந்து கிடக்கேன்”, என்று மீண்டும் அழுதாள் கௌரி.

மகள் சொல்ல வருவது புரியாத நிலை தான்..பத்து வயது புள்ளைக்கு என்ன தெரியும்?, எதைக் கண்டு இப்படி பயப்படுது தெரியலேயே ஆத்தா மாரியம்மா நீதான் என் புள்ளையை பார்த்துகணும் என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்தவள் மகளின் தலையை மடியை விட்டு  தூக்கிவிட்டு அவளை உட்கார வைத்தவள், ”ஏண்டி நீ வயசுக்கு ஏதும் வந்தீட்டியாடி”, என்று   சிறு பயமும் பதட்டமும் நிறைந்த குரலோ கவலையும் இரண்டுகெட்டான் வயசிலே இருந்து  இவளை பாதுகாத்து தொலையணுமே என்று கோபமும் உள்ளடக்கிக் கிடந்தது கலைவாணிக்கு .

மகளின் வலியை உணராமல் தன் மனதின் கொதிப்பும் இனி இவளை ஒவ்வொன்னா கவனிச்சு கண்காணீச்சு தொலைக்கணுமே, இவங்களுக்காக விடிஞ்சுலிருந்து ராவு வரை உழைச்சாலும் பாதி வயிறே நிரம்பல.. இதிலே மாசம் மாசம் இதுக்கு தனியா தண்ட செலவு பண்ணனுமே.. என்று அவளுள்  பயமும் கவலையுமான எண்ணங்களை காட்டாறு வேகத்தில்  எங்க எங்கயோ கொண்டு போய் நிறுத்தியது.

கௌரியோ அம்மாவின் பேச்சைக் கேட்டாலும் புரியாமல் ”வயசுக்கு வரதுனா எனன மா எனக்குத் தெரியல, ஆனா நா செத்துருவோனா பயமா இருக்கு..பாத்ரூம் போனால் ஒரே இரத்தமாக போகது, வயிறு வேறு ரொம்ப வலிக்கது.. வயிற்றினுள்  எதையோ உள்ளே இழுத்து பிடிக்கது, முதுகு நெஞ்சு  இங்கே என்று ஒவ்வொரு இடமாக தொட்டுக் காட்டி வலிக்கது”, என்று சிறு அழுகையும் பீதி கலந்த குரலில் கேட்க  மகளின் முகத்தைப் பார்த்தவளோ, என்ன சொல்லறது புரியாமல் இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள் கலைவாணி.

அம்மா எதும் பேசாமல் சுவரில் சோர்ந்து போய் சாய்ந்திருக்க ”எனக்கு வலிக்கது.. என்ன செய்யறது சொல்லு மா”, தன் அம்மாவிடம் கத்திய கௌரியின் சத்தத்தில் அம்புஜமோ அடித்துபிடித்து ஓடி வந்தவள், ”ஏன்டி கத்தற எங்கே வலிக்கது”, என்று கேட்டவளோ கலைவாணியின் இடிந்து போன தோற்றமோ எதையோ உணர்த்தவும், கௌரியின் அருகே உட்கார்ந்த அம்புஜம் ”ஏன்டி வயசுக்கு வந்தீட்டியா”, என்று கலைவாணி கேட்ட அதே கேள்வியை இவளும் கேட்கவும், கௌரியோ” அப்படினா என்ன?  அம்மாவும் இதே தான் கேட்டுச்சு நீயும் இதே கேட்கிற”, என்று கத்தியவள் தன் உடம்பின் தொல்லையை அவளிடமும் சொன்னாள் கௌரி.

சின்னவள் சொன்னதை கேட்ட அம்புஜம், ”பயப்படாத புள்ள நல்ல விசயம் தான் பெரிய மனுசி ஆயிட்டே நீ”, என்று சிறு சிரிப்புடன் சொல்லி கௌரியின் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தவள்  , ”உனக்கு முட்டை, உளுந்தங் களி, சாப்பாடுனு   சாப்பிட்டா வலி போயிரும்”,  என்று சொல்லிவிட்டு  ”இது எல்லாம் பொண்ணா பொறந்தா அனுபவிச்சு தான் ஆகணும்”,.. என்றவர் கலைவாணியை அதட்டினாள் அம்புஜம்.

”ஏ புள்ளே அதே அறியாத வயசிலே பயந்து கிடக்கு.. நீ இப்படி இடிஞ்சு ஓய்ந்து போய் உட்கார்ந்து கிடக்க, எந்திருச்சு போய் ஆக வேண்டிய வேலையை பாரு .. புள்ளயை குளிப்பாட்டி விட்டு அதுக்கு எதை எப்படி செய்யறது சொல்லிகொடு.. நா  போய் அதுக்கு சாப்பாட்டை எடுத்து வரேன்.. நீ சோறு ஆக்கிரக்க மாட்டீயே”, என்று படபடவென்று பேசியபடி கௌரியை தட்டி வேய்ந்த குளிக்கிற அறையில் நிற்க வைத்துவிட்டு ”ஏய் கலை எழுந்து வந்து எண்ணெய் வச்சு தலைக்கு ஊத்தி விடு”,  என்று சொல்லி  கலைவாணியும் அதட்டினார் அம்புஜம்.

அதன்பின் இயந்திரமான மனநிலையில் மகளுக்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொடுத்தவள் வைக்கத் தெரியாமல் மகள் திணறுவதைக் கண்டு கண்களில் கண்ணீர் வடிய அதை தானே வைத்து விட்டு, மகளை மூலையில் உட்கார வைத்தவள் தானும் குளித்துவிட்டு வநதாள் கலைவாணி.

அதற்குள் அம்புஜம் தெருவின் மூலையில் இருந்த கடையில் காய்ஞ்சு போன இனிப்பும் அவசரமா செய்த குழம்பும் ஒரு முட்டையும் சூடான சோற்றை எடுத்து கொண்டு வந்தவள் கௌரிக்கு சந்தனம் குங்கும்ம வைச்சுவிட்டு ”உட்காரு இந்தா சாப்பிடி”, என்று முதல இனிப்பை கொடுக்க,

”ஐ எனக்கு பிடிச்சது”, என்று சொல்லிய கௌரி ”அத்த அந்தக் கடையிலே க்ரீம் வைச்ச பிஸ்கோத்து இருக்கும் எனக்கு வாங்கித் தரீயா”, என்று கொஞ்சியபடி கேட்க ,

ராகேஷூம் ”எனக்கு வேணும்”, அக்காவின் கையிலிருந்த இனிப்பை புடுங்க,

”டேய் டேய் இருடா உனக்கு தரேன்”, என்று அம்புஜம் அவனுக்குத் தனியாக இனிப்பை எடுத்துக் கொடுத்தாள்.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருந்த கலைவாணியின் உள்ளத்தில் சீற்றமும் கொந்தளிப்பும் மிகுந்து ஆழி அலையாக புயல் வீசியது.

கட்டினவனும் இல்லாமல், சொந்தபந்தம் எவருமில்லாமல் இனி இந்தப் புள்ளையை ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கிற வரை பார்த்துக்கணுமே என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு அதீத மனவுளைச்சலை கொடுத்தது அன்றைக்கே…

அதன்பின் நாட்களும் செல்ல செல்ல கௌரியின் மீது கலைவாணியின் கெடுபிடிகள் அதிகமாகின.

நின்றால் குத்தம் உட்கார்ந்தா குத்தம் திட்டுகளும் அழுகை கலந்த புலம்பலும் அந்த பிஞ்சுக்கு புரியாமல் திகைத்து நின்றது.

அம்மா எதுக்கு திட்டறா.. பக்கத்து வீட்டு பையன் கிட்ட ஸ்கூல என்ன நடந்தது கேட்டதற்கே திட்டதே இந்த அம்மா என்று திகைத்து தான் போனது.

அடுத்த  வீட்டு வயதான தாத்தா எதாவது கேட்டால் நின்னு பதில் சொன்னால், அதைப் பார்த்தாலும் அடிக்கது இந்த அம்மா.. என்று குழப்பத்துடன் சுற்றிக் கொண்டிருந்தாள் கௌரி.

பத்து  வயது பெண்ணிற்கு தான் இயற்கையாக வயதுக்கு வந்தே புரிபடாமல் இருக்கும் போது, இதில் கலைவாணியோ அவலை நினைச்சு வெறும் உரலை இடிச்ச மாதிரி தொட்டகெல்லாம் கோபபட்டு அடிக்கதே என்று மனதினுள் பயவுணர்வு அதிகமாக அம்மாவிற்கு மேலே சத்தமிட்டுக் கத்தினாள் கௌரி.

அதுக்கும் சேர்த்து அடி விழவும் அக்குழந்தை மனம் உடைந்து போனது. பேச்சு குறைந்து விளையாட்டு குறைந்து எங்கோ வெறித்தபடி ஸ்கூல் விட்டு வந்தாலே வீட்டின் மூலையில் உட்கார்ந்து கொள்வாள் கௌரி.

அவள் அமைதியாக இருந்தாலும் அதற்கும் கலைவாணி ”ஏன்டி இப்படி ஊமை கோட்டானா உட்கார்ந்து இருக்க, எனக்கு தெரியாம எதாவது செஞ்சீயா”, என்று கேட்டதுமே அப்பிஞ்சு மனவுடைந்து தான் போய் அழுது ”என்ன கேட்கீர? புரியல அம்மா.. நீ இப்ப என்னை ரொம்ப திட்டற அடிக்கிற, நா என்ன தப்பு செஞ்சேன்”, என்று புரியாமல் அழுகையுடன் கேட்க,

மகளின் அழுகை மனத்தை வருத்தினாலும், எங்கே மகளும் தன்னை போலவே அறியாத வயசிலே சோரம் போய்விடுவாளோ என்ற எண்ணமும் பதட்டமும் மட்டும் அதிகமாக இருந்து  கலைவாணியின் மனநிலை.

நாட்களும் மாதமாகவும் வருடமாக ஓட கௌரியின் வயதும் பதிமூன்று வயதாக உயர இப்ப அவளின் மனம்  கொஞ்ச கொஞ்சமாக அம்மாவின் பேச்சில்  சிலதை புரிந்து கொள்ள ஆரம்பித்தாலும் வயதுக்குரிய செயலும் தம்பிடம் வம்பும் அடிதடி சண்டையும் போட்டுக் கொண்டிருந்தாள் கௌரி.

அன்று வேலை முடிச்சிட்டு வந்த கலைவாணி  வூட்டினுள் கௌரியின் ”வூடுடா டேய் விடுல அவ்வளவு தான் உன்னை”, என்று கோபத்துடன் பேச்சைக் கேட்டு பதறிய படி வூட்டுக்குள் ஓடினாள் கலைவாணி.

அங்கே ராகேஷூம் கௌரியும் கட்டிப் பிடிச்சு உருண்டு புரண்டு கொண்டிருக்க, அவனோ அக்காவின் தலையை பிடிச்சு ஆட்டவும்,  கௌரியோ ”டேய்”, என அவனைக் கீழே தள்ளி அவனை அழுத்தியபடி ”ஏன்டா அதை தொடாதே சொன்னேன்ல .. அதை ஏன் தொடட?”, என்று கேட்க, அதைப் பார்த்த கலைவாணிக்கு உசிரே போய்விட்டது.

அங்கே ஓரமாக கிடந்த விளக்கமாறை கையில் எடுத்தவள்  இருவரின் அருகே விறுவிறுவென  வந்தவள் சகட்டுமேனிக்கு ஏதோ ஏதோ புலம்பி கொண்டே அடி விளாசி தள்ளிவிட்டாள் கலைவாணி.

அம்மா வந்தும் எதுக்கு அடிக்கிறா என்று தெரியாமல் இரு பிஞ்சுகளும் கதறி அழுது துடிக்க..

அந்த சத்தத்தில் ஓடிவந்த அம்புஜமோ கலைவாணியின் கையில் பியந்து  போன விளக்கமாறை பிடுங்கி எறிந்தவள், ”பொம்பளையாடி நீ.. உனக்கு கிறுக்கு எதும் பிடிச்சிருச்சா.. இப்படி கண்மண் தெரியாமல் புள்ளைகள போட்டு அடிக்கிற”, என்று சத்தமிட்டவர், கோபமும் விரக்தியும் கலந்த களைத்த கலைவாணியின் தோற்றத்தைப் பார்த்ததும் அவளை கீழே உட்காருடி என்று சொல்லிவிட்டு, அடுப்பாங்கறையை நோக்கி போனவள் அம்புஜம்.

மண்ணெய் ஸ்டவ்வை பத்த வைத்து  சுக்குகாபி போட்டு கொண்டு வந்த அம்புஜம் எங்கோ  வெறித்து பார்த்த விழிகளோட அமர்ந்திருந்தவளிடம் கொடுத்து அவள் அருகே உட்கார்ந்து ”என்னடி ஆச்சு உனக்கு.. பைத்தியகாரி மாதிரி இந்தச் சின்ன புள்ளையை அடிக்கிற திட்டற”, என்று கேட்ட அம்புஜத்தை வெறித்துப் பார்த்தவளோ

”இவளும் இன்னொரு கலைவாணியாக மாறிட கூடாதுல அது தான்”, என்று சொல்லி தலை குனிந்து கண்ணீர் உகுத்தாள் கலைவாணி.

அவள் சொன்னதைக் கேட்டதும் திகைத்த அம்புஜம் ”என்னடி பைத்தியகாரி மாதிரி பேசற சொல்ற.. என்ன நினைச்சு பேசற ..தெரிஞ்சு தான் பேசறீயா  லூசு மாதிரி பேசாதே அவக உன் புள்ளைக, அதுகல சந்தேகபடறீயா”,  என்று கடிய,

அங்கே கௌரி தன் அம்மா சொன்ன வார்த்தைகளை கேட்டும் அம்புஜம் சொன்னதும் அரைகுறையாக புரிந்து தன்னுள் ஏதோ மடிந்து உடைவது போல உணர்வு உண்டானது.

ராகேஷூம் அம்மாவின் காலுக்கு  அடியில் சுருண்டு படுத்தவன் அப்படியே வலியோடு தூங்கிவிட்டான்.

“நானும் மூன்று வருடமாக பார்க்கிறேன் அந்த புள்ளையை எதாவது சொல்லிகிட்டே இருக்க, நானும் போக போக புரிஞ்சுக்குவ நினைச்சேன்.. ஆனால்  இன்று வரம்பு மீறி பேசி அருவருக்க செயலை செய்து  அதுகல அடிச்சீட்டே.. அப்படி என்னடி சின்ன புள்ள மேலே வன்மம்த்தை கொட்டிட்டுக் கிடக்க.. அதுக்கு என்ன தெரியும் புரியும்னு இப்படி பண்ணிகிட்டு இருக்கே”, என்று கோபமும் ஆற்றுமை கலந்த குரலில் கேட்ட அம்புஜம் மனம்  ஆற்றாமாடடாமல் நைந்து போனது..

கலைவாணியோ ”நானும் அறியாத வயசிலே சோரம் போய் தான் இப்ப இரண்டு புள்ளைகள வைச்சு தவிச்சிட்டு கிடக்கேன்.. அப்ப நான் சரியாக இருந்திருந்தா இப்ப என் வாழ்க்கை நல்லா இருந்திருக்குமல..  இப்ப பாரு புருசன் இருந்தும் இல்லாத நிலை, இதுல வயசுக்கு வந்த புள்ளையை வைச்சுகிட்டு  மடியில் நெருப்பை கட்டிட்டு அலைறேன்”, என்று கதறினாள் கலைவாணி.

”அதுக்காக அசிங்கமா நினைச்சு தம்பியும் அக்காவையுமா சந்தேகப்படறீயா.. அதுக வயசு என்ன தெரியாதா லுசாடீ நீ”, என்று கத்த,

அவளோ தலைகுனிந்து ”என் புத்தி இப்ப கௌரியை பார்க்கும் போது எல்லாம் என்னைப் பார்ப்பது போல தோனது..  கௌரி வயதில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா.. அதை மாதிரி கௌரி மாறிருவாளா.. என்ற எண்ணம் தான் தோனது.. எனக்கே அது தப்பு என்று தோனினாலும் எனக்குள்ளே கௌரி யாரிடமாவது பேசினாலோ யதார்த்தமாக தொட்டு பேசினாலோ  பயமா இருக்கே அம்புஜம்”, என்று சொல்லியபடி அழுத கலைவாணிக்கு தான் செய்த தவறுகளே மகளும் செய்து விடுவாளா என்ற நினைப்பே அவளை உருக்குலைத்து மன அளவில் ரொம்ப பாதித்திருந்தது.

அவளின் பேச்சை கேட்டு  தன் மடியில் சாய்த்த அம்புஜமோ ”அழுகாதடி உன் புள்ள புடம் போட்ட தங்கம் என்றும் சோரம் போகாது”, என்று சொல்லி கலைவாணியின் தலையை வருடி விட்டாள்..

அவர்கள் பேசியது சரிவர புரியாமல் போனாலும் அம்மா ஏதோ தன்னை தப்பா நினைக்கிறாங்க நினைச்சு அவர்களின் அருகே போன கௌரி  ”கலைவாணி”, என்று அம்மாவின் பெயரை அழுத்தமாக அழைத்து.. ”நான் எப்பவும் கலைவாணியாக மாற மாட்டேன் .. நான் கௌரி.. நீ என்ன நினைச்சு பேசற புரியல.. ஆனால் தம்பியை வைச்சு கூடவா இப்படி கேவலமா நினைப்ப.. ச்சீய் உன்னாலே என் சின்ன சின்ன சந்தோஷம் குறும்பு  விளையாட்டு எல்லாம் மறந்து எங்கோ ஓடிப் போயிருச்சு..

அவன் என் நோட்டும் புக்கில் வைத்து  இருந்த மயிலிறகை எடுக்காதே தொடாதே சொல்லிகிட்டு இருந்தேன்.. இனி நான் யார் கூடப் பேசினாலும்  இப்படி தான் நினைப்பே.. எனக்கு இது சரியா புரியலனாலும் நீ பேசியது அருவருப்பா இருக்கு”, என்று முகத்தை சுளித்தவள், இந்த  கௌரி எப்பவும் கலைவாணியாக மாற மாட்டேன் புரிஞ்சு நடந்துக்கோங்க”,என்று  விலகலான  குரலில் சொல்லிவிட்டு வாசலுக்குப் போய் விட்டாள் கௌரி.

தன்னுடைய கீழ் தரமான பேச்சும் செய்கையால் மகளின் மனத்தை கொன்று புதைத்தை நினைத்து  தன் மேனியிலே கூர் ஆணி அறைந்த போல நரக துன்பத்தை உணர்ந்த கலைவாணி தன் கீழ்தரமான எண்ணத்தை கண்டு  அருவருத்து போனவளோ தன் மகள் இனி என்றும் தன்னை அவளின் அருகே  நெருங்க விடமாட்டாள் என்று புரிந்தது.

உழைப்பதே இவர்களுக்கா  தான் நினைச்சு செய்தவளுக்கு  சிறுவயதில் செய்த தவறு தன் மகளும் செய்து விடுவாள் என்ற ஆழ் மனதின் அலறலோ பிஞ்சு மனத்தை நோகடித்தது..

ஆனால்  இன்றோ அவளை புள்ளக வாழ்க்கையிலிருந்து விலகி எங்கோ தனியாக  தூரத்தில் கொண்டு நிறுத்தி மனத்தை கொன்று புதைத்தது..

தன் தவறுகளை மகளும் செய்து விடுவாளோ என்ற எண்ணம் அவளின் பேச்சிலும் நிதானமற்ற செயலாலும் பெத்த புள்ளைகளின் உன்னதமான உறவையும்  தவறாக கணித்து தன் ஈனச் செயலால்  உள்ளம்  தடம் புரண்டு போய் இருண்ட  போன பக்கத்தின் நிழலை  நிஜமாக உருவகப்படுத்திய  மெய்யின் வலியை உணர்த்தியது ..

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காற்றில் கலையும் மேகங்கள்! (சிறுகதை) – பீஷ்மா

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 2) – கற்பக அருணா