in

எழுத்துகளே இவரின் சுவாசம்… எழுதுபவரின் ஏக்கம் தீர்க்கும் ஆம்பல்…

“67 வயதில் நாம எழுதியதையெல்லாம் யார் படிக்கப் போறாங்க?” ஏக்கத்துடன் இருந்த பெண்மணி ஜனனி கீர்த்திவாசனின் யானைகளின் கதை இப்போது புத்தகமாக பலரின் பாராட்டுகளுடன் கைகளில் தவழ்கிறது, நினைக்கும்போதே நெஞ்சம் நிறைகிறது. இதற்கு காரணமான அந்த இளம்பெண்ணுக்கு மனதார நன்றிகளை சமர்ப்பிக்கிறார் இவர்.

ஒன்பது வயது சிறுமியின் படைப்புகளை புத்தகமாக்கி இளம் வயது எழுத்தாளராக அவரை அடையாளப்படுத்தியதும் அவரே. சமையலறையில் அடங்கிக் கிடந்த எழுத்துகளை வெளிஉலகுக்கு வரவைத்து மகிழ்ந்தவர். இப்படி எண்ணற்ற பேருக்கு வழிகாட்டி அவர்களின் புத்தகக் கனவை நிஜமாக்கி அவர்களுக்கு அங்கீகாரத்தை அளித்து வருகிறார் லட்சுமிப்பிரியா எனும் இளம்பெண். இதுவரை தமிழ் பெங்காலி மலையாளம் இந்தி குஜராத்தி நேபாளி போன்ற பத்து மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது இவரின் நிறுவனம்.

 யார் இவர்? இவரின் நிறுவனம் என்ன செய்கிறது? அவரிடமே கேட்போம்.

“‘எல்லோருக்குள்ளும் எல்லோருக்கும் கூறக்கூடிய வகையில் கதைகள் உண்டு’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. என்னுடைய இந்த வெற்றிக்கு முழுக்க அம்மா உமா அபர்ணாதான் காரணம். சின்ன வயதிலிருந்தே புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தையும் என்னையும் இணைத்தவர். பாலகுமாரன், ஜெயகாந்தன், உதயமூர்த்தி, இவர்கள்தான் என் நேரங்களை ஆக்கிரமித்தவர்கள். எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லை, ஆனால் ஆயிரம் நண்பர்களுக்கு சமமான புத்தகங்களை அதிகம் வாசித்துள்ளேன்.

சிறு வயதில் புத்தகங்கள் மீதான என் நேசம் என்னையும் எழுத்தாளராக்கியது. என் எழுத்துக்களை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதில் பல அனுபவங்களைப் பெற்றேன் வழிகாட்டி இன்றி. ஒரு புத்தகம் வெளியிடுவதென்பது பெரும் பிரயத்தனம் என்பது புரிந்தது. படித்த நானே இப்படி தடுமாறும்போது, வீட்டை விட்டு வெளியே வராத எழுதும் பெண்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன். அவர்களின் எழுத்துகள் அப்படியே அடங்கிப் போக வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்.

அதன் தொடர்ச்சியாக ஒரு புத்தகம் வெளியீட்டில் பொருளாதாரம் முதல் பரவலாக வாசகர் இடம் சேர்த்து அதை விற்பனை செய்வது வரை பல சிரமங்கள் இருப்பதை உணர்ந்து, அவற்றை எப்படி கடந்து வருவது என சிந்தித்ததின் விளைவே பேக்கிடெர்ம்ஸ்டேல்ஸ் (PachyDermTales literary consultancy) துவங்கியதின் நோக்கம். திறமையுள்ளவர்களின் பிளாட்பாரமாக இருந்து அவர்களை தேர்ந்த படைப்பாளிகளாக மாற்றுகிறோம், ‘மகிழ்வித்து மகிழ்’ என்பதன் அடிப்படையில் பெரும் மனநிறைவை அடைகிறோம்.

எங்கள் மூலம் வெளிவரும் புத்தகங்களின் முழுஉரிமையும் அதை எழுதியவர்களுக்கே. எப்படி என் புத்தகத்தை வெளியிட்டு நானும் ஒரு எழுத்தாளர் எனும் அந்தஸ்தைப் பெறுவது என ஏங்கும் எவராக இருந்தாலும் எங்களிடம் வரலாம். வடிவமைப்பில் இருந்து இணையதளங்களில் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு உதவுவது வரை துணை நிற்போம். இதற்கான செலவு நீங்கள் விரும்பித் தருவதே, கட்டாயம் இல்லை. உங்களின் நெகிழ்ச்சியே எங்கள் பணிக்கான மகிழ்ச்சி” என்று அழகாக சொல்கிறார் லட்சுமிப்பிரியா.

மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள இவர் உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தும் தமிழ் ஆவணங்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்தும் உலகளாவிய இலக்கியப் பணியிலும் சிறக்கிறார். நம் தமிழ் மொழியின் இனிமை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என விரும்பும் இவரின் மொழிபெயர்ப்பில் ‘ஹருகி முரகாமி’யின் சிறுகதைகள் தமிழில் ‘ஸ்புட்னிக் இனியாள்’ என்கிற பெயரில் வெளிவந்து அனைவராலும் பாராட்டுகளைப் பெற்றது ஒரு சான்று.

குழந்தைகள் வாழ்வில் சோதனைகளை சந்தித்த பெண்கள், திருநங்கை போன்ற மூன்றாம் பாலினத்தவர் போன்றவர்கள் மட்டுமில்லாமல் பிரபல எழுத்தாளர்களும் இவர்கள் மூலம் தங்கள் புத்தகங்களை வெளியிடுவது வியக்க வைக்கிறது. தமிழ் இலக்கியப் பெருவிழாவை மூன்று ஆண்டுகளாக நிகழ்த்தி வருவதும், ஆண்டுதோறும் பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்தி வருவதுடன், வருடம் ஒருமுறை பிரபல நிறுவனங்களுடன் இணைந்து ‘ஆருஷி’ எனும் நிகழ்வில் பங்குகொண்டு கிராமப்புற பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கி மாதவிடாய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது சிறப்பு. மேலும் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக “மெய்நிகர் நிகழ்வை” நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இளைஞர்களுக்கு நம் பண்பாடு கலாச்சாரம் இவற்றை எடுத்து சொல்லவும், பன்னாட்டு கலாச்சாரங்களை அறிமுகம் செய்யவும் பாலமாக இருப்பவர்கள், எழுத்தாளர்களும் அவர்களின் தரமான எழுத்தும்தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள எழுத்தாளர் லட்சுமிப்பிரியா, சகஎழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு எழுத்து சேவையில் சிறக்கிறார்.

தனது இந்த ஆர்வத்துக்கும் வெற்றிக்கும் முழுக்காரணம் தன் அம்மா உமா அபர்ணாதான் என்று நெகிழ்கிறார் லட்சுமிப்பிரியா. உமா அபர்ணா சிறந்த எழுத்தாளர் மட்டுமின்றி, பிறரின் திறமைகளை மதித்து அதைக் வெளிகொணர பெரும் முயற்சி எடுக்கிறார்.

தன் மகளைப் பற்றியும் நிறுவனம் பற்றியும் உமா அபர்ணா கூறியது…

“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தால் பிள்ளைகள் கண்டிப்பாக சிகரம் தொடுவார்கள். என் மகளுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்களை அறிமுகப்படுத்தினேன், வாசிப்புப்பழக்கத்தை கற்றுத்தந்தேன். தமிழின் மீது நாங்கள் கொண்ட பற்று தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை கொண்டு செல்லும் கருவியாக மாற்றியுள்ளது.

கணவனை இழக்கும் பெண்களின் வலியும், வறுமை மற்றும் சமூககட்டுப்பாடுகளில் சிறைபட்டு வெளியே வராமல் முடங்கிப்போகும் பெண்களின் திறமைகளும் இங்கு ஏராளம். அவற்றை மீறி ஒரு பெண் தன் கல்வி அறிவால் சாதிக்கும்போதுதான் சொந்த உறவுகளாலேயே மதிக்கப்படுகிறாள். இப்படிப்பட்ட பெண்கள் எங்கு இருந்தாலும் அவர்களின் எழுத்தாற்றலை வெளியே கொண்டு வந்து அவர்களை சமூகத்தின் முன் மதிப்புமிக்கவர்களாக மாற்ற எங்கள் நிறுவனம் காத்திருக்கிறது” என்கிறார்.

“மொழிபெயர்ப்பிலும் சர்வதேச அளவில் இணையதளம் மூலம் எடுக்கும் பயிற்சிகளிலும் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை இந்த சேவைக்காக ஒதுக்குவதில் பெரும் மகிழ்ச்சி” எனும் லட்சுமிப்பிரியாவின் சேவைகளும் எழுத்து திறமை உள்ள எல்லோருக்கும் வாய்ப்பு தர வேண்டும் எனும் லட்சியமும் உண்மையில் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது.

 – சேலம் சுபா

இன்று பிறந்த நாள் காணும் PachyDermTales லட்சுமிப்பிரியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பதிப்பக துறையில் மென்மேலும் வளர சிறப்பு வாழ்த்துக்கள். 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விசித்திர உலகமடா (சிறுகதை)- ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 6) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி