in

உன் வாழ்க்கை உன் கையில் (நாவல் – நிறைவுப் பகுதி) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இதுவரை:

பரந்தாமனின் கார் டிரைவர்கள் நான்கு பேரும் ஒவ்வொருவராக வேறு வேறு நாட்களில் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அவரது மகள் தான் தாமரை. அவளைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லையே என்ற குழப்பத்தில் விஜயும், சூர்யாவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு  தான் என்ன? தாமரை என்ன ஆனாள்?

இனி:

விஜய் தன் மேலதிகாரியிடம் சூர்யாவுக்குத் தாமரை எழுதிய கடிதத்தைப் பற்றியும், அதே கையெழுத்தில்  ரம்யாவிடம் தன்னைக் காப்பாற்றும்படி கேட்டுக்  கொண்ட சின்னத் துண்டைப் பற்றியும் சொன்னான். பரந்தாமனின் டிரைவர்கள் மர்மமான முறையில் இறந்தது பற்றியும் சொல்கிறான். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று  ஆலோசிக்கிறான்.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் விஜய். ஆனா தாமரை அவ படிக்கற காலேஜ்ல இல்ல. தங்கியிருந்த ஹாஸ்டல்ல இல்ல. ஆனா காலேஜ்ல அவளுக்குக் கல்யாணம் செய்யப் போறதா அவங்க வீட்டிலிருந்து பேசி, டிசி வாங்கினதாச் சொல்றாங்க. இந்த மாதிரி சூழ்நிலைல, எந்த வித ஆதாரமும் இல்லாம தாமரை காணாமப் போனதா எப்படி முடிவெடுக்க முடியும்.”

“அவ நிஜமாவே காணாம போயிருந்தா, அவங்க வீட்ல இருந்து இந்நேரத்துக்கு கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பாங்களே. அதே மாதிரி பரந்தாமனோட டிரைவர்கள் எல்லாம் இறந்ததுக்குப் பின்னாடி தனிப்பட்ட விரோதம் ஏதாவது இருக்கா, இல்ல பரந்தாமனோட எதிரிகள் யாராவது  செஞ்ச சூழ்ச்சியான்னு  எதுவுமே தெரியாம, பரந்தாமன்கிட்ட எப்படி இதெல்லாம் விசாரிக்க முடியும்?”

“அந்தப் பரந்தாமன் சாதாரண ஆள் கிடையாது. ஏற்கனவே அங்க இருக்கற போலீஸ் பரந்தாமன்கிட்ட ரெண்டு டிரைவர் இறந்ததுது பத்தி விசாரிக்கப் போயிருக்காங்க. அப்பவே  பரந்தாமன் எதுவும் பிடி கொடுத்துப் பேசல. தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கற மாதிரி தான் பேசியிருக்கான்.”

“இப்படி எந்த விதத்திலுமே பரந்தாமன் மேல குற்றம் சுமத்தறதுக்கு நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லாம, எப்படி அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்? முதல்ல தாமரை நிஜமாவே காணாம போயிட்டாளா? அவதான் ரம்யாகிட்ட உதவி கேட்டிருக்காளா? இது நமக்கு உறுதியாத் தெரியணும். அது தெரிஞ்சாத்  தான் நாம மேற்கொண்டு ஏதாவது செய்ய முடியும். சூர்யாவுக்கு எழுதின லெட்டரை வச்சோ,  தாமரை ஃபோன் எடுக்காம இருக்கறதாலயோ மட்டும் நாம தாமரைக்கு ஆபத்துன்னு முடிவு எடுக்க முடியாது.”

“தாமரை, சென்னைல பரந்தாமன் வீட்ல இருக்காளான்னு  தெரிஞ்சுக்க முயற்சி பண்ணணும். நான் அதுக்கு சென்னைல இருக்கற நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுங்ககிட்ட பேசிப் பாக்கறேன். ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணு. அதுக்குள்ள ரம்யாவும் கண் முழிச்சுட்டா, அன்னைக்கு நடந்தது பத்தின விவரம் கேட்டுக்கலாம். ஒருவேளை ரம்யா தாமரையைப் பார்த்திருந்தா, நமக்கு அதுவே ஸ்ட்ராங் எவிடன்ஸ்.  ஒரு டூ  டேஸ் வெயிட் பண்ணு விஜய்.”

“ஓகே சார், தேங்க்யூ. நானும் என் சைடுல ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கறேன்.”

“ஓகே, டேக் கேர். டோன்ட் வர்ரி விஜய்.”

இப்படி தாமரையைப் பற்றி தகவல் திரட்ட, விஜய் தன் தரப்பில் முயற்சி மேற்கொண்டு இருக்க, சூர்யா ஆழ்ந்த கவலையில் இருந்தான்.

சூர்யாவின் வீடு….

மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும், வேலைக்கு இதற்கு மேல் லீவு போட முடியாது என்பதால், ஆஃபீசுக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பி, சாப்பிட்டு முடித்த சூர்யா, லேப்டாப்பை எடுத்து வைத்து மெயில் எல்லாம் செக் செய்து, பதில் அனுப்ப வேண்டியவைகளுக்கு பதில் அனுப்பி விட்டு, லேப்டாப்பை ஷட் டவுன் செய்தான்.

ஆனால் லேப்டாப் மறுபடியும் தானாகவே  ஆன் ஆனது.

“லேப்டாப் அதுக்குள்ள மக்கர் பண்ணுது. இப்பதானே ஷட் டவுன் பண்ணேன்…”

சலிப்புடன் மீண்டும் ஷட் டவுனில் கர்சரை வைத்து அழுத்தினான். ஆனால் மறுபடியும் அது ஷட் டவுன் ஆகாமல் உயிர் பெற்றது. நாலைந்து முறை இதேபோல் முயற்சி செய்து, லேப்டாப் ஆஃப் ஆகாமல் மறுபடியும் மறுபடியும் பளிச்சென்று உயிர்பெற்று வெளிச்சத்தைப் பரப்பி நின்றதைப் பார்த்து சலித்துப் போனான் சூர்யா.

ஏற்கனவே மனம் முழுவதும் குழப்பத்திலும், கவலையிலும் இருக்கும் போது, இது வேறு இப்படி சதி செய்கிறதே என்று சலிப்புடன், மீண்டும் ஒருமுறை கடைசியாக முயற்சி செய்யலாம் என்று லேப்டாப்பின் ஸ்க்ரீனைப் பார்த்தவன் சட்டென்று குழம்பினான்.

“நான் ஸ்கிரீன் சேவர் இந்த மாதிரி வைக்கலையே. இது எப்…..படி…..? இதை நான் இவ்வளவு நேரம் கவனிக்கவே இல்லையே…”

குழப்பத்துடன் மறுபடியும் ஷட் டவுன்  செய்ய, அது ஷட் டவுன் ஆகாமல் உயிர்பெற்று, திரையில் அழகான ஒரு தாமரைப் பூ வந்தது. இப்போது தான் அதை கவனித்தான் சூர்யா.

‘ஆமா, இவ்வளவு நேரம் நான் ஒவ்வொரு தடவை ஷட்  டவுன்  பண்ண  பிறகும், ஸ்கிரீன் தானாவே ஆன் ஆயிடுச்சு. அதுல தாமரைப் பூ வந்தது. இதை  நான் வைக்கவே இல்லையே. ஏன் தாமரைப் பூ வருது?

தாமரை…. தாமரையா…? என்னோட தாமரையா…? தாமரை ஏதோ என்கிட்ட சொல்ல விரும்பறாளா? ஆனா என்னோட லேப்டாப்ல எப்படி…?’

குழப்பத்துடன் சூர்யா அந்த தாமரைப் பூவை கிளிக் செய்ய,  இப்போது திரையில் தானாகவே தகவல்கள் கடகட என்று டைப் ஆக ஆரம்பித்தது. பயத்துடன் லேப்டாப்பில் இருந்து கையை எடுத்து பின் வாங்கினான் சூர்யா.

‘என்ன நடக்குது? ஸ்கிரீன்ல தானாவே தாமரைப்பூ வருது. அதைக் கிளிக் பண்ணினா தானாவே லெட்டர் எல்லாம் டைப் ஆகுது. என்ன மாயம், மந்திரம் இது? இல்ல ஏதாவது வைரஸ் பண்ற வேலையா…?’

தனக்குள்ளாகவே ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, திரையில் டைப்பான வாசகங்களைப் பார்த்தான்.

என் ப்ரியமான சூர்யாவிற்கு,

நான் உங்க தாமரை தான். குழப்பமாவும், பயமாவும், ஆச்சரியமாவும் இருக்கா? என்ன பண்றது சூர்யா? நீங்க இப்போ என்னை நேரடியா பார்க்க முடியாது. ஏன்னா நான் இந்த உலகத்தை விட்டுப் போய்ட்டேன். இந்தத் தகவலை நானே இப்படி உங்ககிட்ட தெரிவிக்கறதுக்காக ரொம்ப வேதனைப் படறேன். இது உங்களுக்கு ரொம்பப் பேரிடியா இருக்கும்னு எனக்குத் தெரியும்.

ஆனாலும் உங்க குழப்பத்துக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டணும்  இல்லையா. எவ்வளவு நாள் இப்படிக் குழம்பித் தவிச்சுட்டு இருப்பீங்க? அதனாலத் தான் நான் எனக்கு நடந்ததெல்லாம் இங்கே சொல்றேன். அதைப் படிச்சுட்டு, நீங்க உங்க மனசைத் தேத்திக்கிட்டு, உங்க வாழ்க்கையை வாழப் பழகிக்கோங்க சூர்யா.

நான் பணக்கார வீட்டுப் பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு. உங்க மேல அளவுக்கு மீறி காதல் வச்சிருக்கற பொண்ணு. இவ்வளவு தான் சூர்யா உங்களுக்குத் தெரியும். என்னோட வீட்டு விஷயம் எதுவும் நான் உங்ககிட்ட சொன்னதில்ல. அதுக்கான நேரம் வரட்டும், சொல்லலாம்னு எதுவுமே சொல்லாம விட்டது என் தப்பு தான்.

அது மட்டுமில்ல… அந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, எனக்கு நடந்த இதே ஆபத்து உங்களுக்கும் நடந்திருக்கலாம். உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாதுன்னு  தான் நான் எதையுமே உங்களுக்குத் தெரியப்படுத்தாம இருந்தேன்.

எங்க அப்பா பரந்தாமனுக்கு நான் ஒரே பொண்ணு. எங்க அம்மா நான் பொறந்த கொஞ்ச நாளிலேயே தவறிட்டாங்க. அப்பாகிட்ட இப்ப இருக்கற சொத்து, இந்த வசதி வாய்ப்பு எல்லாமே எங்க அம்மா கொடுத்தது. ஆமா… எங்க அம்மா பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு. அப்பா சாதாரணமானவர் தான். அம்மாவைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார்.

அம்மா வீட்லயும் அப்பாவை நம்பி, எங்க தாத்தா எல்லா  சொத்தையும் ஒரே  பொண்ணான  எங்க அம்மா பேருக்கு எழுதி வச்சுட்டாங்க. அம்மாவோட அந்த வசதிகளை வச்சு  தான் அப்பா பிசினஸ் ஆரம்பிச்சு நல்லா வளர்ந்தார். எனக்கு இவ்வளவுதான் சூர்யா தெரியும்.

அம்மாவோட சொத்துக்களால அப்பா பெரியளவுல வளர்ந்துட்டார். எனக்கு இந்த பணம், காசு, சொத்து இதெல்லாம் பெருசா தெரியல. கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்.

எங்க சித்தி ரொம்ப நல்லவங்க. அவங்க பணம், வசதி இதுக்கெல்லாம் ரொம்ப ஆசைப்படல. சாதாரணமா இருப்பாங்க. என் மேலே ரொம்ப ஆசையா அன்பாத் தான் இருந்தாங்க. ஆனா எனக்கு எதிரியானது எங்க அப்பாதான்.

நான் கூட எங்க சித்தியாலத் தான் எனக்கு ஏதாவது ஆபத்து வரும்ன்னு நிறைய நாள் பயந்துகிட்டே இருந்தேன்.  படத்துல எல்லாம் அப்படித்தானே காட்டுவாங்க. ஆனா எங்க சித்தி தான் இவ்வளவு வருஷம் என்னைப் பொத்தி பொத்தி பாதுகாப்பா வளர்த்தாங்க.

சிக்கல் எப்ப ஆரம்பிச்சது தெரியுமா….?

எனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதுக்கு அப்புறம் எங்க அப்பா என்கிட்ட நடந்துக்கற விதத்தில் நிறைய மாற்றங்கள். எனக்கு  அதுக்கான காரணம் தெரியல. அப்பதான் சித்தி ஒருநாள் சொன்னாங்க.

எங்க அம்மா, சொத்தெல்லாம் என் பேருக்குத்தான் எழுதி வச்சிருக்காங்களாம். நான் மேஜர் ஆனதுக்கு அப்புறம் அந்த சொத்துக்களுக்கு எல்லாம் நான்தான் ஏகபோக வாரிசு. எனக்கு மட்டும்தான் உரிமைன்னு எழுதி வச்சிருக்காங்க.  அதனாலத் தான் எனக்குப் பதினெட்டு வயசு ஆகற வரைக்கும், அப்பா என்கிட்ட அன்பா இருக்கற மாதிரி நடிச்சிருக்காரு.

ஆனா நான் மேஜர் அதுக்கப்புறம் அந்த சொத்துக்களை எல்லாம் நான் சொந்தம் கொண்டாடி, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறவரோட என் வாழ்க்கையை நான் தனியா ஆரம்பிச்சுட்டா,  அப்பாவுக்கு அந்த சொத்து இல்லாம போய்டுமோ அப்படிங்கற பயம். அதனால, அப்பாவால எனக்கு ஏதாவது ஆபத்து வரலாம்னு சித்தி லேசா எனக்கு எச்சரிக்கை பண்ணாங்க.

அதனாலத்  தான் எனக்கு அங்க இருக்க பிடிக்கல. படிப்பைக் காரணம் காட்டி கோயம்புத்தூருக்கு வந்ததே இதனாலத் தான். நான் நிறைய முறை அப்பாகிட்ட சொல்லியிருக்கேன்…. எனக்கு இந்த சொத்து, பணம் எதுவுமே வேண்டாம். எங்கே கையெழுத்து போடணுமோ சொல்லுங்க போட்டுக் கொடுத்துடறேன். என்னை நிம்மதியாக   இருக்க விடுங்கன்னு பேச்சோடு பேச்சா நிறைய தடவை சொல்லி இருக்கேன்.

ஆனா அப்பாவுக்கு நம்பிக்கையில்லை. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல நான் இதை வெளில சொல்லிடுவேனோ, இல்ல யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு வந்து சொத்துக்கு எல்லாம் நான்தான் வாரிசு, நீங்க இனிமேல் இங்க இருக்கக் கூடாதுன்னு அவரை விரட்டிருவேனோன்னு கற்பனையான பயம்.

அதனால சமீப காலமா எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்துட்டிருக்காரு. பத்திரத்தில் எல்லாம் கையெழுத்து போடச் சொன்னார். எப்ப வேணா குடுங்க, நான் போட்டுக் கொடுத்துடறேன்னு சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்……

நான் உங்ககிட்ட பேசறது, உங்க கூட சாட் பண்றது, ப்ரெண்ட்ஸ் கூட பேசறது எல்லாத்தையுமே அப்பா வரி விடாம என்கிட்ட விசாரிப்பார். எப்படி இதெல்லாம் அவருக்குத் தெரியும்னு எனக்கு ரொம்ப குழப்பமாயிருச்சு. அப்புறம்தான் கண்டுபிடிச்சேன் என்னோட ஃபோன் கால்ஸ், சாட் எல்லாத்தையும் கண்காணிக்க ஏற்பாடு பண்ணி இருக்கார்.

எங்கே இந்த சொத்து விஷயமா வெளில நான் சொல்லிடுவேனோன்னு அவருக்கு பயம். அது எந்த எல்லை வரைக்கும் அவரைப் போக வச்சிருக்கு பாத்தீங்களா சூர்யா. சொந்தப் பொண்ணையே இப்படி கண்காணிக்கறார். ரொம்ப வெறுத்துப் போய்ட்டேன் சூர்யா.

இதை உங்ககிட்ட ஃபோன்ல சொன்னா  உங்களுக்கும் ஆபத்து வரும்னு  எனக்குத் தெரியும். எப்படியாவது நேர்ல உங்களைப் பார்த்து சொல்லணும்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா விதி வேற மாதிரி விளையாடிருச்சு சூர்யா. அப்போன்னு பார்த்து  நீங்க வேலை விஷயமா அமெரிக்கா போயிட்டீங்க.

ஒரு நாள்  அப்பாவோட டிரைவர் நாலு  பேரும்,  நான்  காலேஜுக்குப் போயிட்டிருக்கும்  போது வந்து,  என்னைக் கார்ல கூட்டிட்டுப் போனாங்க. சின்ன வயசுல இருந்து பார்த்துப் பழகினவங்க, நம்ம வீட்ல வேலை பண்றவங்க தானேன்னு நானும் சாதாரணமாத்தான் கார்ல போனேன். எங்கேயோ யாரும் இல்லாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

எல்லா பேப்பர்லயும் கையெழுத்து போடச் சொன்னாங்க. வீடு, பேங்க்ல இருக்கற பணம், வேற வேற ஊர்ல இருக்கற எஸ்டேட், பங்களா எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டாங்க. இதுக்கு எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க? நான் வீட்டுக்கு   வரும்  போது, அப்பாவே சாதாரணமா என்கிட்ட கேட்டிருந்தா,  நான் போட்டுக் கொடுத்துடுவேன் அப்படின்னு சொன்னேன்.

ஆனா அவங்க யாருக்கும் என் மேல நம்பிக்கையோ,  பாசமோ  இல்லை சூர்யா. அவங்க கண்ணுல எல்லாம் அப்படி ஒரு கொலைவெறி தெரிஞ்சது. அப்பவே எனக்குக் கொஞ்சம் பயம் பிடிச்சிருச்சு.

“ஒழுங்கா எல்லாத்துலயும் கையெழுத்து போடு. இதைப் பத்தி எதுவும் வெளில மூச்சு விடக் கூடாது. உன்னோட வாழ்க்கை உன் கைல இருக்கு. நீ கையெழுத்து போட்டுக் கொடுத்தா உயிரோட இருப்பே.”

இப்படிச் சொல்லி மிரட்டினாங்க. மறுபேச்சு பேசாம எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன் சூர்யா. ஆனா அவங்க யாரும் சொன்ன வார்த்தையைக் காப்பாத்தல. கையெழுத்தை வாங்கிட்டு, என் கை, வாயெல்லாம் கட்டிப் போட்டு எங்கேயோ மலை அடிவாரத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

அந்த மாதிரி போற வழில, நடுல காரை நிறுத்தினாங்க. அப்பத் தான் அந்த வழியா வந்த ஒருத்தங்ககிட்ட உதவி கேட்கறதுக்காக என்னோட சுடிதார் டாப்ஸைக் கிழிச்சு, எழுதி உதவி கேட்டு அதை வெளில வீசினேன்.

ஆனா நான் அப்படிச் செஞ்சதால அவங்களை அடிச்சுட்டாங்க. அது உங்க நண்பரோட மனைவின்னு எனக்கு அப்போ தெரியாது சூர்யா. என்னால ஒருத்தங்க அநியாயமா அடிவாங்கி சுருண்டு விழுந்ததைப் பார்த்ததுக்கு அப்புறம், எனக்கு யார்கிட்டயும் உதவி கேக்கணும்னு கூட தோணல.

பெத்த அப்பாவும், இவ்ளோ வருஷம் வீட்ல  என்னை முதலாளியா நெனச்சுப் பேசினவங்களும் என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கற போது, வேற யார்கிட்ட போய் நான் நம்பி, உதவி கேட்பேன் சூர்யா?

கடைசியா ஒரு முறை உங்களைப் பாக்கணும்னு ஆசை மட்டும் இருந்தது. ஆனா என்ன பண்றது? அவங்க நாலு பேரும் எங்கேயோ என்னைக் கூட்டிட்டுப் போயி அடிச்சே கொன்னுட்டாங்க சூர்யா.

நாலு ஆம்பளைங்க சேர்ந்து… நான் சின்னப் பொண்ணுன்னு  இரக்கமில்லாம,  மனசாட்சியே இல்லாம பெரிய பெரிய உருட்டுக் கட்டையால அடிச்சுட்டு, மலைமேல இருந்து தூக்கி வீசிட்டாங்க. உன்னோட வாழ்க்கை உன் கைலனு நாங்க சொன்னதை நம்பிட்டியா? உன் வாழ்க்கை எங்க கைல டி அப்படின்னு கத்தி,  சிரிச்சுக்கிட்டே அடிச்சாங்க சூர்யா.

நான் என்ன தப்பு பண்ணினேன் சூர்யா? எந்த ஆடம்பரமும் நான் விரும்பினதில்லை. அப்பாகிட்ட எந்தப் பொருளுக்கும் அடம்பிடிச்சு செலவு வச்சதில்ல. இவ்வளவு வருஷமா எங்க அம்மா கொடுத்த அந்த சொத்துல தானே இவங்க எல்லாரும் சம்பளத்தை வாங்கிட்டு இப்படி இருக்காங்க.

நியாயமா அந்த சொத்துக்கு நான்தானே அதிபதி. அதைக் கூட நான் எந்த எதிர்ப்பும் சொல்லாம கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேனே. என்னை விட்டிருந்தா,  கண்காணாம ஏதோ ஒரு ஓரத்துல, ஒரு குடிசையில நான் உங்ககூட வாழ்ந்திருப்பேன் சூர்யா. என்ன பாவம் பண்ணினேன் சூர்யா?

தப்பே பண்ணாத எனக்கு எதுக்கு இந்தத் தண்டனை? அதுதான் எனக்கு மனசு ஆறலை. ரொம்ப அமைதியா, நல்ல பொண்ணா இருந்த உங்க தாமரை, இந்த உலகத்தை விட்டுப் போனதுக்கு அப்புறம் வேற மாதிரி மாறிட்டா சூர்யா.

ஆமா, என்னைத் துடிக்கத் துடிக்க அடிச்சுக் கொன்ன ஒவ்வொருத்தரையும் பழி வாங்கிட்டேன். நாலு கார் டிரைவரும் மர்மமா இறந்ததாக உங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்குமே…. அவங்களை எல்லாம் நான் தான் கொன்னேன் சூர்யா. என்னால அவங்களைப் பேசாம விட முடியல.

தப்பே பண்ணாத நான் உயிர் இல்லாமல் இப்படிச் சுத்திட்டு இருக்கும் போது, தப்பெல்லாம் பண்ணிட்டு அவங்க மட்டும் எதுக்கு இந்த உலகத்துல வாழணும்? இன்னும் எங்க அப்பா மட்டும்  பாக்கி. ஆனா அப்பாவைக் கொல்றதுக்கு மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எந்த சொத்துக்காக என்னைக் கொன்னாரோ, அந்த சொத்தே இல்லாம அவரைத் திண்டாட வைக்கப் போறேன் சூர்யா.

அதனால இனிமே நீங்க என்னைத் தேடி, எனக்காகக் கவலைப்பட்டு உங்க வாழ்க்கையை அழிச்சுக்காதீங்க சூர்யா. வாழ்க்கைல சாதிக்க இன்னும் நிறைய வயசு இருக்கு. உங்க வாழ்க்கை உங்க கைல இருக்கு சூர்யா. என்னைப் பத்தி கவலைப்படாதீங்க.

என்னைத் தேடாதீங்க. உங்க நண்பர் விஜய்கிட்ட சொல்லுங்க… இதோ நான் இப்பவே அவங்க மனைவியைக் கண் முழிக்க வச்சுருவேன். என்னால இன்னொரு உயிர் கஷ்டப்படக் கூடாது சூர்யா.

உங்க காதல் எனக்குக் கிடைச்ச வரம். ஆனா நீங்க எனக்காகக் கவலைப்பட்டு உங்க வாழ்க்கையை அழிச்சுக்கக்  கூடாது. அது தான் நீங்க எனக்குக் கொடுக்கற   பெரிய பரிசு.

என் சூர்யா நான் சொல்றதைக் கேப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்கு மிச்சமிருக்கற வேலைகளை நான் முடிக்கணும். பை சூர்யா. இப்ப நேரே ரம்யாவைப் பார்த்து, அவங்களை கண் முழிக்க வச்சுட்டு, எங்க அப்பாவோட சொத்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமா கரைக்கப் போறேன்.

உங்களுடன் காதலில் கரைய முடியாத தாமரை……”

படித்து முடித்த சூர்யா, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பொத்தென்று அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். லேப்டாப்பின் திரையிலிருந்த தாமரை இப்போது கண்ணீர் விட்டது. பின் காணாமல் போனது. சூர்யாவுக்கு மனசு ஆறவே இல்லை.

ஆசைஆசையாகப் பார்க்க  வேண்டும் என்று தவிப்புடன் தேடிக் கொண்டிருந்த தாமரையை இனிமேல் பார்க்கவே முடியாதா…. பதறிப் போனான்.

ஆனால் தாமரை கடைசியாகச் சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்தது. ரம்யா… ரம்யா…. லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு வேகமாக கே.ஜி ஹாஸ்பிடல் விரைந்தான் சூர்யா.

சூர்யா  அங்கே போய்ச் சேரவும், ரம்யா கண் விழிக்கவும் சரியாக இருந்தது.  விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக நிம்மதியாகச் சிரித்தான். சூர்யாவுக்கும் அவ்வளவு கவலைக்கு  நடுவிலும்  கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.

அதன் பின் தாமரை தனக்குத் தெரிவித்த செய்தி அனைத்தையும் விஜயிடம் சொன்னான் சூர்யா. விஜய் அதன் பிறகு அந்தக் கேசைப் பற்றி எதுவும் விசாரிக்க வேண்டாம் என்றும் சொல்லி விட்டான் சூர்யா. தாமரைக்கு அதனால் எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது என்பது அவனது கவலை.

சூர்யாவிற்கு ஆறுதல் சொல்லி அவனைத் தேற்றினான் விஜய்.  தாமரையின் நினைவுகளுடன் இனிவரும் காலத்தைக் கடத்த முடிவு செய்து  கொண்டான் சூர்யா.

பணத்தில் புரண்டு கொண்டிருந்த பரந்தாமனின் வாழ்வில் சரிவு ஆரம்பமானது. ரம்யா பழைய நினைவுகளுக்குத் திரும்பி ஆனந்தமாக விஜயுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தாள்.

தாமரையின் காதல் மணத்தை மனதில் சுமந்து கொண்டு சூர்யா வாழ்க்கையைத் தொடர்ந்தான்.  உங்க வாழ்க்கை உங்க கைல சூர்யா என்று தாமரை சொன்ன அந்த வாக்கியம் தான் அவனை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குணசித்திரங்கள் (கேரக்டர்கள்) – (சிறுகதை) – ✍ ரமணி

    வைராக்கியம் ❤ (பகுதி 16) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை