ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இதுவரை:
பரந்தாமனின் கார் டிரைவர்கள் துரை, ரவி இருவரும் அகால மரணமடைகிறார்கள். தாமரையைக் காணாமல் தவிக்கிறான் சூர்யா. ரம்யா எப்போது குணமடைவாள் என்ற கவலையில் விஜய் தவிக்கிறான். கனகு ஏன் வரவில்லை என்று குழம்பிக் கொண்டிருந்த பரந்தாமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இனி:
ஆஃபீஸின் கடைக்கோடியில் ஒரு ஓரமாக நின்றிருந்த இன்னோவாவைப் பார்த்த ப்ரேமுக்கு மனசுக்குள் சுருக்கென்றது. வேகமாகப் போய் இன்னோவாவின் கண்ணாடி வழியே உள்ளே பார்த்தவன், சீட்டில் தாறுமாறாக விழுந்து கிடந்த கனகுவைப் பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனான்.
வாய்விட்டு கத்த நினைத்தவன், சட்டென்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். சுகுமாருக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லி, பரந்தாமனிடம் உடனடியாகத் தகவலைத் தெரிவிக்கும்படி சொன்னான்.
ப்ரேமுக்கு பயத்தில் வார்த்தைகள் குழறின. படபடப்புடன் பரந்தாமன் வருவதற்காக அங்கேயே நின்றிருந்தான். பரந்தாமனும் அதிர்ந்து போய் தான் வந்தார். அதற்குள் போலீசுக்கும் தகவல் போகவே, காவல்துறையும் அங்கே சூழ்ந்தார்கள்.
ஆரம்பகட்ட விசாரணையை பரந்தாமன், ப்ரேம் மற்றும் சுகுமாரிடம் விசாரித்து விட்டு, மற்ற நடைமுறைகளை மேற்கொண்டார்கள் காவல்துறையினர்.
அதன்பின் பரந்தாமன், ப்ரேம் மற்றும் சுகுமார் மூவரும் பரந்தாமனின் அறைக்குள், அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்.
“சார், ரவி செத்தப்பவே எனக்கு சந்தேகமா இருக்குன்னு சொன்னேன், நீங்க கேட்கல. இப்ப கனகுவுக்கும் இப்படி ஆயிருச்சு. அடுத்து நானா சார்?”
“டேய்… மெதுவா பேசுடா. இது ஆஃபீஸ். உன்னோட பதட்டமும், பயமும் நம்மளைக் காட்டிக் கொடுத்துடும். பேசாம இருக்கணும்.”
“எப்படி சார், கனகுவைப் பார்த்தீங்களா? ஒரு சின்ன காயமோ, ரத்தக் கறையோ இல்ல. போலீஸே குழம்பிப் போயிட்டாங்க. ஏதோ பேய் அடிச்ச மாதிரின்னு பேசிக்கறாங்க சார். எனக்கென்னவோ நாம செஞ்ச தப்பு தான் இப்படி….”
“வாயை மூடுடா. நீ இப்படிப் புலம்பிட்டிருந்தா நானே உன்னைப் போட்டுத் தள்ளிருவேன். ஆஃபீஸ்ல இப்படி நடந்ததால என் பிஸினஸ் பாதிக்கப்படுமேன்னு நானே யோசிச்சுட்டிருக்கேன். இப்ப போய்…. துரையும், ரவியும் வெளில தான் செத்தாங்க. அதனால எனக்கு பெரிசா ப்ரச்சனை இல்ல. இவன்…. இந்த கனகு எதுக்கு ஆஃபீஸ்க்கு வந்தான்? இதை எப்படி சமாளிக்கறது….? இவ்வளவு பெரிய சிக்கல்கள் இருக்கும் போது, நீ என்ன பேய், பிசாசுன்னு…. ஏய்… சுகுமார், ப்ரேமுக்கு செலவுக்குப் பணத்தைக் கொடுத்து விடு. ப்ரேம், நீ எங்கயாவது கண்காணாத ஊருக்குப் போயிட்டு, ரெண்டு வாரம் கழிச்சு வா. பத்திரமா இரு. தினமும் சுகுமாருக்கு ஃபோன் பண்ணு. புரியுதா….”
“சார், நான் எங்கே போவேன்? எனக்கென்னவோ பயமா இருக்கு சார். உங்க கூடவே இருக்கேனே.”
“ஒண்ணும் பயப்படாதே. இந்த ஊர்ல இருந்தாத் தானே ஆபத்து. இது ஏதோ என் தொழில் எதிரிகளோட வேலை மாதிரி தெரியுது. என் பேரைக் கொடுக்கறதுக்கு இப்படிப் பண்றாங்க. நீ வால்பாறைல இருக்கற நம்ம எஸ்டேட்டுக்குப் போயிடு. அங்கே எந்த பயமும் இல்லை. யாருக்கும் தெரியாது.”
ப்ரேம் பயத்துடன் அங்கிருந்து கிளம்பினான். பரந்தாமனுக்கு நிலைமை கைமீறிப் போவது புரிந்தாலும், தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற குருட்டு தைரியமும், தன்னை எதிர்க்கும் தைரியம் யாருக்கும் கிடையாது என்ற தலைக்கனமும் அவரை மெத்தனமாக யோசிக்க வைத்தது.
எல்லாவற்றையும் மீறி, காவல்துறையிலும், அரசியலிலும் தனக்கு நிறைய ஆதரவு இருப்பதால், தன்னை யாரும், எதுவும் செய்ய முடியாது என்று தீர்மானமாக நம்பினார்.
கோவை…
இன்னும் இரண்டொரு நாட்களில் சென்னை திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சூர்யா தவித்துக் கொண்டிருந்தான். அதற்குள் தாமரையைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்து விடாதா என்ற அங்கலாய்ப்பும், ஏக்கமும் அவனைப் பாடாய்ப் படுத்தியது.
வீட்டில் பெற்றோருடன் ஒழுங்காகப் பேச முடியவில்லை. ஏதோ ஒப்புக்கு வீட்டில் இருந்து விட்டு, மற்ற நேரம் முழுவதும் தாமரையைத் தேடும் பணியில் இருந்தான்.
தாமரை எப்போதும் பயணிக்கும் வழியில் அவளைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா என்று காத்துக் கிடந்தான். கூடவே தன் நண்பன் விஜய்க்கும் தகவல் சொல்லி, ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்பதற்காக, விஜயின் எண்ணிற்கு நிறைய முறை அழைத்துப் பார்த்தான்.
ம்ஹூம். வாட்ஸ்ஆப்பிலும் மெசேஜ் அனுப்பினான். ஏனோ எதற்கும் விஜயிடம் இருந்து பதில் இல்லை.
விஜயும், சூர்யாவும் பள்ளிக்கால நண்பர்கள். மிகவும் நெருக்கமான நட்பு. சூர்யா எப்போது கோவை வந்தாலும், அல்லது விஜய் சென்னை வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் திரும்ப மாட்டார்கள்.
இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருப்பதால், எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது ஃபோனில் பேசிக் கொள்வார்கள்.
கோவை வந்து இன்னும் விஜய்யைப் பார்க்கவில்லையே என்பதால், நிறையமுறை வாட்ஸ்ஆப்பில் விஜய்க்குத் தகவல் அனுப்பி விட்டான். எல்லாவற்றையும் விஜய் பார்த்திருக்கிறான், ஆனால் பதில் வரவே இல்லை. ஃபோன் செய்தாலும் எடுக்கவில்லை, அதுவே சூர்யாவின் குழப்பத்தை அதிகப்படுத்தியது.
‘என்னாச்சு விஜய்க்கு? நான் ஃபோன் பண்ணி அவன் இப்படி எடுக்காம இருந்ததே இல்லை. ரம்யாவோட நம்பருக்கு ஃபோன் பண்ணா அவங்களும் எடுக்கவே இல்ல. என்ன பிரச்சனைனு தெரியலையே. பேசாம இன்னைக்கு நேர்லயே விஜயைப் போய் பார்த்துட வேண்டியதுதான். சாயங்காலம் ஏழு மணிக்கு மேலே எப்படியும் டியூட்டில இருந்து வீட்டுக்கு வந்துடுவான். நேர்ல போய் நல்லா நறுக்னு நாலு கேள்வி கேட்டுட்டு, என் கஷ்டத்தையும் அவன்கிட்ட சொல்லிட்டு வரணும்’
சூர்யா இப்படித் தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்த போது ஃபோன் வந்தது.
‘யாருன்னு தெரியலையே… புது நம்பரா இருக்கே….” என்று யோசனையுடன் ஃபோனை எடுத்தான். எதிர்முனையில் கல்பனா.
“ஹலோ சூர்யாவா, நான் கல்பனா பேசறேன்”
“ஆமா சூர்யா தான். எந்த கல்பனா…? ஓ தாமரையோட ஃப்ரெண்டா?”
“ஆமா, அதே கல்பனா தான். நீங்க இப்ப ஃப்ரீயா இருந்தீங்கன்னா கொஞ்சம் நேர்ல வர முடியுமா? தாமரை சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
“கண்டிப்பா. இந்த மாதிரி ஏதாவது தகவல் கிடைக்காதான்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எங்கே வரணும் சொல்லுங்க.”
“அன்னைக்கு நாங்க தங்கியிருக்கற அபார்ட்மென்ட் வந்தீங்க இல்ல… அதுல இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு பார்க் இருக்கு. அங்க வெயிட் பண்ணுங்க. நானும் வந்துடறேன்.”
“கண்டிப்பா மேடம், சீக்கிரமா வரேன்.”
பரபரப்பு தொற்றிக் கொண்டது சூர்யாவிற்கு.
‘என்னவா இருக்கும்? தாமரை பத்தி என்ன தகவல் சொல்லப் போறாங்கன்னு தெரியலையே. தாமரை ஒருவேளை ஃபோன் பண்ணி இருப்பாளோ அவங்களுக்கு…’
இப்படி பல கேள்விகள் அவனைக் குடைந்தாலும், தாமரை பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் போதும் என்ற பரபரப்புடன் கல்பனா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
சூர்யா அங்கு வரும் முன்பே கல்பனா அங்கே காத்துக் கொண்டிருந்தாள்.
“வாங்க சூர்யா, முக்கியமான விஷயம். அதனாலத் தான் நேர்ல வரச் சொன்னேன். நீங்க தாமரை மனசுக்கு எவ்வளவு நெருக்கமானவர்னு இப்பதான் தெரிஞ்சது. அதனால சூரியான்னே கூப்பிடறேன்.”
“பரவாயில்ல சொல்லுங்க. என்ன விஷயம்?”
“தாமரை வீட்டுல இருந்து காலேஜ்க்கு ஃபோன் வந்திருக்கும் போல. தாமரை இனி மேல் படிக்க வரமாட்டா. அவளுக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்கறதா சொல்லி இருக்காங்க. அதனால அவ படிப்பை டிஸ்கன்ட்டின்யூ பண்ணிட்டுப் போறதாவும், டிசி எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்னு சொல்லி இருக்காங்க.
அதனால எங்க புரொஃபசர் என்னைக் கூப்பிட்டு, ரூம்ல இருக்கற அவ திங்க்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு வந்து கொடுக்கச் சொன்னாங்க. என்கூட ரூம்ல தங்கறதுக்கு வேற ஒரு பொண்ணு வரப் போறாளாம். அதனால தாமரையோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சேன்.
இவ்வளவு நாள் நான் அவளோடது எதையும் எடுத்துப் பார்த்ததில்ல. இப்போ எல்லாத்தையும் க்ளியர் பண்ணும் போது, அவளோட புக்ஸ், டிரஸ் எல்லாத்தையும் சூட்கேஸில் எடுத்து வச்சேன். அவ புக்ஸ் எல்லாம் எடுக்கும் போது, ஒரு பேப்பர் எனக்குக் கிடைச்சது.
ஏதோ கொஸ்டின் பேப்பர், இல்ல அசைன்மென்ட்னு நினைச்சு புக்ல வைக்கப் போனப்போ, எதேச்சையா அதைப் பார்த்தேன். அப்பதான் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. உங்களைப் பத்தியும் எனக்குத் தெரிய வந்தது. கண்டிப்பா உங்களுக்கு இது உதவியா இருக்கும்னு நினைக்கறேன்.
ஆனா நான் இதை எடுத்து உங்ககிட்ட கொடுத்தது யாருக்கும் தெரிய வேண்டாம். நாளைக்கு எனக்கு எதுவும் பிரச்சனை வந்துடக் கூடாது. தாமரை வீட்டுல எல்லாரும் ரொம்ப பெரிய ஆட்கள் போல. அதனால இனிமேல் நீங்க என்னை நேர்ல வந்து பார்க்கறதோ, பேசறதோ வேண்டாம்.
நான் கிளம்பறேன். தாமரையோட திங்க்ஸ் காலேஜ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிடுவேன். இதுக்கப்புறம் தாமரையைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா, எனக்கு மெசேஜ் பண்ணுங்க. நானும் அதே மாதிரி உங்களுக்கு மெசேஜ் பண்றேன். நான் கிளம்பறேன் சூர்யா.”
“ரொம்ப தேங்க்ஸ்ங்க. நீங்க செஞ்ச இந்த உதவியைக் கண்டிப்பா நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்.”
“சரி. ஆனா தாமரைக்கு ஏதோ ஆபத்து வர வாய்ப்பு இருக்கற மாதிரி தான் அந்தப் பேப்பர்ல இருக்கு. அதனால இதைப் பக்குவமா டீல் பண்ணுங்க. நீங்க எடுக்கற எந்த முடிவும் தாமரைக்கோ, உங்களுக்கோ ஆபத்துல போய் முடியக் கூடாது. டேக் கேர்.”
சொல்லி விட்டு, கல்பனா அங்கிருந்து வேகமாக வெளியே போனாள். கல்பனா கொடுத்த அந்தக் காகிதத்தை, நடுங்கும் கைகளுடன் பிரித்துப் படித்தான் சூர்யா.
(தொடரும் – சனி தோறும்)
GIPHY App Key not set. Please check settings