in

உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 2) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

உன் வாழ்க்கை... (பகுதி 2)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

இதுவரை:

வேலைக்குக் கிளம்பிப்  போய்க் கொண்டிருந்த துரை,  நடுசாலையில்  ஏதோ  ஒன்று  தாக்கி  உயிரை  விடுகிறான்.

இனி:

சென்னை விமான நிலையம்.

வெளிநாட்டு விமானங்கள் தொம் என்று இரைச்சலோடு, ராட்சச சைசில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. வெளிநாடுகளில் இருந்து பலவிதமான பயணியர் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்படி இறங்கிய கும்பலில், அமெரிக்காவில் இருந்து துபாய் வந்து, பின் சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய மக்கள் வெள்ளத்தில் சூர்யாவும் இறங்கினான்.

சூர்யா, இருபத்தியாறு வயது இளைஞன். தொடர் பயணத்தால் கண்கள் சோர்வாக இருந்தன. நெடுநெடுவென உயரம், அளவான தாடி, பார்த்ததும் சட்டென ஈர்க்கக் கூடிய தோற்றம்.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை. வேலை விஷயமாக இரண்டு மாதங்கள் அமெரிக்கா போய் விட்டு இன்று தான் திரும்பி வருகிறான்.

சூர்யா பிறந்தது, படித்தது எல்லாம் கோவையில் தான். கல்லூரிப் படிப்பு முடித்ததும் சென்னையில் வேலை கிடைக்கவே, சென்னையில் அறை எடுத்துத் தங்கி, வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.

சூர்யாவின் பெற்றோர் கோவையில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் கோவை போய் அப்பா, அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அவர்களை மட்டுமா பார்க்க வேண்டும்?

தாமரை… தாமரையைப் பார்த்தும் வெகு நாட்களாயிற்று. அதனால் நாலு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு கோவை போய் வர வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தவன், கடைசி நேரத்தில் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான்.

தாமரையின் பெற்றோர் சென்னையில் தான் இருக்கிறார்கள். அதனால்  சென்னையில்  தாமரையைப் பார்க்க முடியுமா என்று  ஒரு ஆசை.

தாமரை… நல்ல வசதியான வீட்டுப் பெண். சென்னையில் பிறந்து, வளர்ந்தவள். கல்லூரிப் படிப்புக்காக கோவை வந்தவள், அங்கேயே கல்லூரி மேற்படிப்பையும் தொடர்ந்தாள்.

கல்லூரி படிக்கும் காலங்களில் சூர்யாவிற்கும், தாமரைக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. கோவையில் மலர்ந்த காதல், சூர்யா சென்னை வந்த பின்னும் தொடர்ந்தது.

தாமரை மேல் படிப்புக்காகக் கோவையில் தனியே இருக்க, சூர்யா வேலைக்காக சென்னையில் இருக்க, அலைபேசி உரையாடலில் தொடர்ந்தது அவர்கள் காதல்.

காதல் என்றால் எப்பொழுதும் வெளியே ஒன்றாகச் சுற்றுவது, தினமும் சந்தித்துக் கொள்வது என்ற வழக்கமான காதல் இல்லை. இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதல்.

நேரம் கிடைக்கும் போது அளவான பேச்சுக்கள், ஒருவரை ஒருவர் எதற்கும் கட்டாயப்படுத்தாமல், அவரவர் விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் பக்குவப்பட்ட காதல்.

தாமரை பணக்கார வீட்டுப் பெண் என்றாலும், மிகவும் அமைதியான பெண். மற்றவர்களை நேசிக்கும் குணம் கொண்டவள். பணத்திமிர் இல்லாத பெண்.

எளிமையாக இருந்தால் போதும் என நினைப்பவள். இவை எல்லாமும் சூர்யாவிற்கு தாமரை மேல் ஈர்ப்பு ஏற்படக் காரணங்களாய் இருந்தன.

சூர்யா  வேலை  விஷயமாக  அமெரிக்கா  கிளம்பிப்  போன  பிறகும், ஃபோனில் அவர்களது காதல் வளர்ந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தாமரையிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.  ஃபோன்  செய்தால்   எண்  பயன்பாட்டில்  இல்லை  என்றே  பதில்  வருகிறது.

வாட்ஸ் ஆப், மெயில் எதுவுமே தாமரையைச் சென்றடையவில்லை. குழம்பிப் போனான் சூர்யா. சரி, ஒரு வாரம் தானே இருக்கிறது… அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகு, தாமரையை நேரிலேயே போய்ப் பார்த்து விடலாம் என்று மனசைத் தேற்றிக் கொண்டான்.

இருந்தாலும், தினமும் அவளுக்கு ஃபோனில் பேச முயற்சி செய்வதும், வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் போடுவதும் எனத் தொடர்ந்தது. ஆனாலும் எப்போது ஃபோன் செய்தாலும், இந்த எண் தற்போது பயன்பாட்டில் இல்லை என்ற செய்தி தான் வந்து கொண்டே இருந்தது.

‘ஒரு வேளை கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை வந்திருப்பாளோ. வீட்டில் அப்பா, அம்மாவுடன் இருப்பதால் ஃபோன் பேச முடியவில்லையா? இருந்தாலும் அதைப் பற்றி தகவல் எனக்கு சொல்லியிருப்பாளே….  எதுவுமே சொல்லாம ஏன் இப்படிப்  பேசாம இருக்கா?’

இப்படிப் பலவிதக் கேள்விகள் சூர்யாவிற்கு மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. அதனால் தான் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், முதலில் சென்னையில், தாமரையின் வீட்டிற்குப் போய் ஏதாவது தகவல் கிடைக்கிறதா எனப் பார்ப்பது என முடிவு செய்து கொண்டான். ஆனாலும் நேரடியாக வீட்டிற்குள் போய் விட முடியாது. வாசலில் நிற்கும் செக்யூரிட்டி சூர்யாவை உள்ளே விட மாட்டான்.

இதுவரை தாமரையின் வீட்டுக்கெல்லாம் சூர்யா போனதே இல்லை. கோவையில் அவள் தங்கி இருக்கும் அறைக்குக் கூட போனதில்லை. பெண்கள் தங்கியிருக்கும் அறைக்குப் போய் தாமரையின் பெயரைக் கெடுத்து  விட வேண்டாம் என்பதால், தாமரை வெளியில் வரும்  போது மட்டும் தான் பார்த்துப் பேசுவான்.

தாமரையின் அப்பாவிற்கு இது போன்ற காதல் சமாச்சாரமெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது என்று தாமரை சொல்லியிருக்கிறாள். அதனால் இதுவரை சூர்யா, தாமரையின் காதலைப் பற்றி தாமரையின் வீட்டிற்குத் தெரியவே தெரியாது. தாமரை படிப்பை முடித்த பிறகு வீட்டில் கல்யாணப் பேச்சு எடுக்கும் போது பொறுமையாகச் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தாள்.

சூர்யா, விமான  நிலையத்திலிருந்து வெளியே வந்தவன், ஒரு டாக்ஸியை எடுத்துக் கொண்டு தாமரையின் வீடு இருக்கும் இடத்திற்கு டாக்ஸியைப் போகச் சொன்னான்.

‘அங்க போய் என்ன பண்ணுவோம்? வெளில சூட்கேஸ் எல்லாம் வச்சுட்டு ரொம்ப நேரம் வீட்டை நோட்டம் விடவும் முடியாது. வீட்டுக்குள்ள போய் தாமரையைப் பத்தி விசாரிக்கவும் முடியாது. முட்டாள்த்தனமா முடிவெடுத்துட்டோம்’

“’தாமரை  வீட்டுப்  பக்கம்  போனா, ஏதாவது தகவல் கிடைக்கும்னு இவ்வளவு நேரம் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அதுக்குப் பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்துடக் கூடாதுங்கறதை யோசிக்கவே இல்லை. சரி, கார்லயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, வீட்டு நிலவரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, திரும்பிட வேண்டியது  தான்’

தனக்குள் முடிவெடுத்துக் கொண்ட சூர்யா, கார் பயணத்தின் போதே தாமரைக்கு மீண்டும் ஃபோன் முயற்சி செய்தான். அதே பதில் தான் வந்தது. நீங்கள் டயல் செய்த எண் தற்போது பயன்பாட்டில் இல்லை என்று  அதே  பதில்  தான்  வந்தது.

ஏதோ சொல்ல முடியாத ஒரு அசௌகரியமான வலி மனதில் எட்டிப் பார்த்தது. கார் சூர்யா சொன்ன விலாசத்தை நோக்கி விரைந்தது.

40 நிமிடப் பயணம். தாமரையின் வீடு இருக்கும் தெருவில் நுழைந்த போதே, சூர்யா காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி விட்டான். அங்கிருந்தபடியே தூரத்தில் தெரிந்த தாமரையின் வீட்டை சற்று நேரம் பார்த்தான்.

நெடுநெடுவென்று பிரம்மாண்டமாய் பரந்து விரிந்திருந்த பங்களா. வீடு என்று சொல்லவே கூடாது. சுற்றிலும் தோட்டம். பல ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான பங்களா.

வாசலிலேயே இரண்டு செக்யூரிட்டி நின்றிருந்தார்கள். அதுபோக கேட்டில், கன்றுக் குட்டி சைஸில் இரண்டு  நாய்கள் வேறு கட்டிப் போடப்பட்டிருந்தன.

‘ஆழம் தெரியாம காலை விட்டுட்டோமோ. தாமரை பணக்கார  வீட்டுப்  பெண் என்று  தெரியும். ஆனா இது அதுக்கும் மேல இருக்கே. இதுல எப்படிப் போய் தாமரையைப் பத்தி நான் விசாரிக்கறது?’

சூர்யாவிற்கு அதற்கு மேல் எதுவுமே யோசிக்கத் தோன்றவில்லை. அந்த  வீட்டைப்  பார்த்தால்  ஏதோ ஒரு ஆழ்ந்த  அமைதி  உட்கார்ந்து  கொண்டு,  பயத்தைக்  கொடுத்தது.

காரைத் தன் அறைக்குத்  திருப்பச் சொன்னான். இதற்கு மேல் சென்னையில் தாமரையைத் தேடி ஒரு உபயோகமும் இருக்கப் போவதில்லை.

கோவைக்குப் போய், வீட்டில் அப்பா அம்மாவைப் பார்த்து விட்டு, தாமரை தங்கியிருக்கும் இடத்தில் போய் விசாரித்துக் கொள்ளலாம். அல்லது அவள் படிக்கும் கல்லூரியில் விசாரித்து, தகவல்களைச் சேகரிக்க முயற்சி செய்யலாம் என்ற தீர்மானத்தான்.

டாக்ஸியைத்  தன்  அறைக்குச்  செலுத்தச்  சொன்னான்.  மறுநாள்  கோவைக்குப்  பயணிக்க முடிவு  செய்து  கொண்டான்.

(தொடரும் – சனி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திசையறியா பயணம் (நாவல் – இறுதிப் பகுதி) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

    வைராக்கியம் ❤ (பகுதி 7) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை