ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ராமசாமி தன் மனைவியிடம் ஆயிரத்து முப்பத்து மூன்றாவது தடவையாகக் கெஞ்சினார், தன் தங்கை மகளைத் தன் ஒரே மகன் ரவிக்கு கல்யாணம் செய்து வைக்க.
முன்னெப்போதையும் விடவும் மூர்க்கமாக மறுத்ததுடன் இல்லாது, அவரையும் அவர் சொந்தங்களையும் கேவலப்படுத்திப் பேசி அவர் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி விட்டாள் அவர் பத்தினி பத்மினி.
“இதப் பாருங்க… இந்த விஷயத்தை இதோட விட்டுடுங்க. நாளைக்கு நாம பொண்ணு பாக்க பூந்தமல்லி போறோம். ரிட்டயர்ட் தாசில்தார் சம்பந்தம் வந்துருக்கு. நம்ம பையனோட படிப்புக்கும், வேலைக்கும் தகுந்த சம்பந்தம். உங்க தங்கச்சி பொண்ணு அவங்க தகுதிக்குத் தகுந்த இடத்தில மாப்பிள்ளை பாத்துக்கச் சொல்லி கட் அண்ட் ரைட்டாப் பேசிடுங்க”
மனதுள் குமைந்தார் ராமசாமி. சிறுவயதிலிருந்தே அவர் தங்கையும், தங்கை கணவரும் ரவி தான் தங்கள் மகள் மைதிலிக்கு மாப்பிள்ளை என்று சொல்லிச் சொல்லி தங்கள் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
இப்போது அவர்களிடம் பத்மினி சொன்ன வார்த்தைகளை எப்படிச் சொல்வார் அவர்? அவருக்கும் தன் தங்கை மகள் தனக்கு மருமகளாக வருவதில் பெருவிருப்பம்.
மகனாவது தன் பேச்சைக் கேட்பானா என்றால், அவன் மிகப்பெரிய அம்மாக் கோண்டு. அவரை அலட்சியம் பண்ணுவானே தவிர, அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாதவன்.
மறுநாள் அவர், பத்மினி, மகன் ரவி மூன்று பேராக இருக்கக் கூடாதென்று, பத்மினியின் தோழி ராஜி ஆக நால்வராய் டிரைவரையும் சேர்த்து ஐவராய் தாசில்தார் சேகர் வீட்டுக்குப் பெண் பார்க்கச் சென்றனர்.
ரிட்டயர்ட் தாசில்தார் சேகருக்கு ஒரு பையனும், ஒரு பெண்ணும். பெண்ணின் கல்யாணத்தோடயே பையனின் கல்யாணத்தையும் சேர்த்து வைத்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்க்கு ஆசைப்பட்டார். பையன் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணித் தன் வீட்டில் சம்மதம் பெற்றிருந்தான்.
மகளின் சம்பந்தம் நிச்சயமானதும் பெண் வீட்டில் போய்ப் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் சொல்லி பத்மினியை முடிவு சொல்ல நிர்பந்தித்தார்.
ராமசாமியையும், மகன் ரவியையும் ஒரு வார்த்தையும் கலந்து பேசாமல் தன் வீட்டில் தான் வைத்தது மட்டும் தான் சட்டம் என்பதை எல்லோருக்கும் உணர்த்துவது போல் தன்னிச்சையாய் சம்மதம் தெரிவித்தாள் பத்மினி.
மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தும் பேசி முடித்து, நிச்சயதார்த்தம் முதற்கொண்டு கல்யாணம் வரை ஒரே மண்டபத்தில் ஒன்றாக நடத்துவதென்று முடிவானது.
தாசில்தார் மகனுக்குப் பார்த்த பெண் வீட்டிற்கு மறுநாளே சென்று அவர்களிடமும் பேசி முடிவெடுத்து நிச்சயதார்த்தத் தேதி முடிவு செய்யலாம் என்று பேசிக் கலைந்தனர்.
மறுநாள் ராமசாமிக்கு அவர் தங்கையிடமிருந்து போன் வந்தது.
“அண்ணா… இன்னிக்கு உன் மருமகளப் பொண்ணு பார்க்க வர்ராங்கண்ணா, நீயும் அண்ணியும் வந்து கலந்துகிட்டா நல்லாயிருக்கும். நம்ம ரவிக்குப் பேசலாம்னு இவ்ளோ நாள் நானும் உன் மாப்பிள்ளையும் வெயிட் பண்ணிப் பார்த்துட்டு… அண்ணிக்கு அதுல இஷ்டம் இல்லன்னு தெரிஞ்சப்புறம் தான் இந்த தேடி வர்ற சம்பந்தம் பேசலாம்னு உன்னயும், அண்ணியையும் கூப்புடறேன்ணா”
“சரிம்மா… ஒரு நிமிஷம், இதோ உங்க அண்ணிகிட்ட போனக் கொடுக்கறேன்” பத்மினியிடம் போனைத் தந்தார்.
விஷயத்தை வாங்கிக் கொண்ட பத்மினி, “சரிம்மா வர்றோம்.. எல்லாம் நல்ல படியா நடக்கும்” என்று நல்ல வார்த்தை கூறி போனை கட் செய்தாள்.
“அவங்கவங்க அவங்கவங்க தகுதியிலத் தாங்க சம்பந்தம் பேசணும். இதோ இப்ப அவளே அவங்க தகுதிக்கு ஏத்த ஒரு இடத்தைப் பிடிச்சுட்டாங்க பாருங்க… சரி வாங்க போய் அட்டென்ட் பண்ணிட்டு வந்துடுவோம்”
நிகழ்ச்சிக்கு முன்னால் போனால் தன் மகனின் கல்யாண விஷயம் பேச வேண்டியிருக்குமென்று கொஞ்சம் தாமதமாய் அவரை அழைத்துச் சென்றாள் பத்மினி.
தங்கையின் வீட்டு வாசலில் நின்றிருந்த கார் ஏற்கனவே அறிமுகம் ஆனாற்போல் தோன்றவே கிட்ட வந்து பார்த்தால்… அது தாசில்தார் சேகர் கார்.
‘திக்’ கென்றது பத்மினிக்கு.
“என்னங்க… நம்ம சம்பந்தி கார்ங்க. இவங்க எதுக்கு இங்க வந்துருக்காங்க?”
உள்ளே நுழைந்த இருவரையும், “வாண்ணா! வாங்க அண்ணி. இவர்தான் மாப்பிள்ளை” என்று தாசில்தார் சேகரின் மகனை அறிமுகப்படுத்தினாள் ராமசாமியின் தங்கை.
தாசில்தார் சேகருக்கும், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மிக மிக மகிழ்ச்சி. அனைவரும் கொண்டாட்ட மூடிலும், பத்மினி மட்டும் திண்டாட்ட மூடிலும்….
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings