in

ம(று)மகள் (சிறுகதை) – ✍ ரமணி

ம(று)மகள் (சிறுகதை)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“அம்மா…. நாளைக்கு ஸ்பெஷல் ஃப்ளைட்ல போறேம்மா…. பார்டர்ல டென்ஷன் அதிகமா இருக்காம். லீவுல இருக்கறவங்களை ரீ கால் பண்றாங்க. எனக்கும் மெஸேஜ் வந்தது.  நான் கிளம்பணும். லக்கேஜ் ரெடிபண்ணும்மா”

சொன்னபடியே மறுநாள் விடிகாலை புறப்பட்டு விட்டான் சுபாஷ். மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் வா‌யுதூத் ஸ்பெஷல் ஃப்ளைட் ரெடியாக  இருந்தது. சில ஃபார்மாலிட்டீஸ் முடித்து விமானத்தில் ஏறினான். இவனது எயர் ஃபோர்ஸ் நண்பர்கள் சிலர் அங்கிருந்தனர். 

சுபாஷ், ஒரே மகன், சரோஜாவிற்கு. கணவர் இறந்தபின் சுபாஷை தாம்பரம் ராணுவப்பள்ளியில் சேர்ந்தாள். அங்கேயே படித்து டிகிரி முடித்து எயர்ஃபோர்ஸில் செலக்ட் ஆனான்.  காஷ்மீர் எல்லைப் போரில் சிறப்பாகப் பணியாற்றினான். மூன்றாண்டுகள் அம்மா, வீடு ஆகியவற்றை மறந்து நாட்டிற்காகவே உழைத்தான் சுபாஷ்.   

இப்போது எல்லை கொஞ்சம் அமைதியாக இருக்கவே, ஒரு இரண்டு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு, மறைமலைநகர் வந்தான். அம்மாவிற்கு மிக மிக சந்தோஷம். 

இந்த இரண்டு மாதத்திற்குள் சுபாஷிற்கு ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்துவிட்டு திருமணத்தை ஒராண்டு தள்ளி வைத்துக்கொள்ள முடிவு செய்தாள் சரோஜா.  

விஜயா படுசுட்டியான பெண். அவளது தந்தை விசைத்தறி நெசவாளர். ஓரளவு வசதியான குடும்பம். திருப்பூரில் பிரபலமான மில்களில் ஒன்று அவருடையது. 

விஜயாவின் தாத்தா, குமாரசாமி தீவிர சுதந்திர போராட்ட வீரர். எனவே விஜயாவின் ரத்தத்திலும் தேச பக்தி கலந்திருந்தது.  கல்லூரி முடித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். ஊதியத்துக்காக அல்ல அதை ஒரு சேவையாகக் கருதுகிறாள்.  

சில ஏழைக்குழந்தைகளுக்கு தன் வீட்டிலேயே இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுக்கிறாள். 

பெண்பார்க்கும் படலம் இனிதே முடிந்தது. சுபாஷுடன் விஜயா சகஜமாகப் பழகினாள்.  கைபேசியில் கனவுகள் கண்டார்கள். இருவருக்குமே நாட்டு நலனில் மிகுந்த அக்கறை இருந்தது. நிமிடக் கணக்கில் மணிக் கணக்கில் தேச நலனை குறித்து விவாதிப்பார்கள்.  

சரோஜா அடுத்த மாதத்திலேயே நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்தாள். ஆனால் அதற்குள் சுபாஷ் எல்லைதேடிப் போக வேண்டிய கட்டாயம் வந்தது. அதனாலென்ன, சுபாஷ் இல்லாமலேயே நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. 

விஜயா மகிழ்ச்சியில் மிதந்தாள். சுபாஷும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஜயாவுடன் பேசினான். இருவரும் கற்பனையில் ஜோடிப் புறாக்களாக வானில் பறந்தனர். 

திருமணத்திற்குப் பின் வாழ்க்கை பற்றி மனக்கோட்டைகள் கட்டினர்.  விஜயாவும் தன் மகன் திருமணத்திற்குப் பின் அவர்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கை அமைக்க விரும்பினாள்.  

சரோஜாவின் கணவர் சிதம்பரம் இந்திய ராணுவத்தில் ஏழாண்டுகளுக்குப் பணியாற்றி… ஓய்வு பெற்றபின் அரசு அலுவலகத்தில் பணியாற்றினார்…. தனது மகனை ஒரு ராணுவ வீரனாக்க எண்ணினார்.  

அரசுப்பள்ளியில் பயின்றாலும் சுபாஷ், பாடங்களுடன் இதர விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கினான். இந்நிலையில்தான் ஒரு விபத்தில் சிதம்பரம் அகால மரணமடைந்தார். 

அரசுப்பணியில் இருக்கும் போது இறந்ததாலும் விபத்திற்கு நஷ்ட ஈடாகவும் வரும் கொஞ்சம் பணம் சரோஜாவிற்கு கிடைத்தது. மிலிட்டரி பென்ஷனுடன் அரசு பென்ஷனும் கிடைத்தது. 

எனவே சரோஜா, சுபாஷ் திருமணத்திற்குப் பின் வாழ சென்னையின் மையப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சகல வசதிகளுடன் கூடிய ஃப்ளாட் ஒன்றை வாங்கினாள்.  

நாட்கள் ஓடின. திருமண நாள் இன்னும் சில மாதங்களே இருந்தன. அப்போது சுபாஷ் எல்லை விமானப் பாதுகாப்புப் படையில் இருந்தான். 

ஒரு நாள் இரவு சந்தேகத்திற்கு இடமாகப் பறந்த விமானத்தைத் துரத்தப் போக, இந்திய எல்லைக்கு வெளியே தவறிச் சென்ற அவனது விமானம் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப் பட்டது. நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன்னையே தியாகம் செய்தான் சுபாஷ். 

அவனது பூதஉடல் மறைமலைநகருக்கு கொண்டுவரப் பட்டு சகல ராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன. மிக மிக அதிர்ச்சிக்குள்ளான விஜயா திருப்பூரிலிருந்து வந்து அவனது உடல் இருந்த பேழையில் விழுந்து புரண்டு கதறினாள். 

சரோஜா, ஏற்கெனவே கணவரை இழந்தவள், மகனையும் நாட்டிற்காக இழந்துவிட்டு தவித்தாள். ஏராளமான ஆறுதல்கள், நிவாரணங்கள் குவிந்தன. என்ன வந்தால் என்ன போன உயிர் வருமா…. ?    

இந்த நிலையில் அனைத்து சடங்குகளும் முடிந்து விஜயா தனது தந்தையுடன் புறப்பட்டவள், நின்றாள். 

“அப்பா என்னை மன்னிச்சுடுங்க… நான் ஊருக்கு வரலே…. இங்கே அவங்க அம்மாவைத் தனியா விட்டுட்டு வர என்னால் முடியலே…. அவர்தான் கணவர்னு கற்பனையில் நாங்க வாழ்ந்துட்டோம். எனவே நிச்சயிக்கப்பட்ட மருமகளா அவங்க அம்மா கூட வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அவர் நினைவிலேயே ஒரு ஸ்கூல் தொடங்கி ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக்க முடிவு பண்ணிட்டேன். என்னைப் புரிந்து, என்னை அனுமதியுங்கள்” என்றாள். 

விஜயாவின் தந்தை தன் மகளின் தேசபக்தியைப் புரிந்து கொண்டு கண்ணீருடன் விடைபெற்றார். சரோஜா விஜயாவைக் கட்டியணைத்துக் கொண்டாள்… 

ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்…! 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. மிகவும் உருக்கமான கதை திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து செய்துவிட்டு போற இதை சூழ்நிலையிலும் இது போன்ற அன்பும் இந்த உலகில் இருக்கின்றன.
    மிகவும் அற்புதமான கதை…
    எழுதிய எழுத்தாளர் ரமணி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மென்மேலும் இது போன்ற கடைகளை எழுதுங்கள்… ஜெய்ஹிந்த்✊

மலர்விழி என்னை மன்னித்து விடு (சிறுகதை) – ✍ கே.என்.சுவாமிநாதன்

சக்தி 2022 (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன்