செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஆபீசிலிருந்து வீட்டிற்குள் நுழையும் போதே கோபமாக வந்தாள் ஷீலா. காலில் போட்டிருந்த செருப்பை ஒரு பக்கம் கழற்றி எறிந்தாள். தன் ஸ்கூட்டரின் பெட்டியில் இருந்து எடுத்து வந்த ஹேண்ட் பேகை சோபாவில் வீசி எறிந்தாள். வழக்கமாக இப்படியெல்லாம் நடக்க மாட்டாள்.
“ஏய் ஷீலா, என்ன ஆயிற்று உனக்கு?” என்று வியப்புடன் கேட்டாள் அவள் தாய் வாசுகி.
“ஹூம் ! பேய் பிடித்துக் கொண்டது” என்று கர்ஜித்துக் கொண்டு மாடியில் தன் அறையில் போய் உட்காரந்து தன் லேப்-டாப்பைத் திறந்தாள்.
ஷீலாவின் பாட்டி முட்டியைப் பிடித்துக் கொண்டு மாடி ஏறி வந்து, “ஏண்டி கண்ணம்மா இவ்வளவு கோபம்? ஆபீஸில் எடுத்துக் கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டாயா இல்லை கொட்டி விட்டாயா?” என்று அவள் தலையைத் தடவியவாறு வாஞ்சையுடன் கேட்டாள்.
“போ பாட்டி ! உனக்கு வேறே வேலை இல்லை. எப்போது பார்த்தாலும் ஒரே கேள்வி, சாப்பிட்டாயா இல்லையா என்று. சாப்பாடு மட்டுமா பிரச்சினை?”
“உனக்கு வேறே என்ன கவலை? என்னிடம் சொல்லு. யாரிடமாவது மனதைத் தொலைத்து விட்டாயா? அவனை உன் அம்மா அப்பா ஒத்துக் கொள்ளவில்லையா?” என்ற பாட்டி கண்ணைச் சிமிட்டிக் கொண்டு குறும்பாக சிரித்தாள். கிழவிக்கு குறும்பு ஜாஸ்தி, ஆனாலும் அவள் செல்லப் பாட்டி.
பாட்டியிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள் ஷீலா. பாட்டி சில நேரங்களில் அவள் அனுபவத்தினால் நல்ல யோசனையாகவே சொல்லுவாள்.
“ரொம்ப தயங்காதே விஷயத்தைச் சொல், என்னால் முடிந்தால் ஐடியா கொடுக்கிறேன்” என்றாள் பாட்டி.
“பாட்டி , நான் என் ஆபீசில் வேலை செய்யும் ஒருத்தனை விரும்பினேன்”
“அதென்ன விரும்பினேன்? ஏன் இப்போது விருப்பம் மாறி விட்டதா?”
“ஆம் இப்போது விருப்பம் சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது”
“ஏன்?”
“பாட்டி, அவன் பெயர் சுரேஷ். அவன் எப்போது பார்த்தாலும் ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று அவன் குடும்பத்தைப் பற்றி ரொம்பப் பெருமையாகப் பேசுவான். எனக்கும் அவன் பேசும் போதெல்லாம் ஒரே எக்சைட்மென்டாக இருக்கும். அவன் வீட்டிற்கு வேறே வரவேண்டுமென்று அழைத்துக் கொண்டே இருப்பான். அதனால் நான் இன்று மத்தியானம் அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்குப் போனேன்” என்று நிறுத்தினாள் .
“அவன் வீட்டில் நீ என்ன எதிர்ப்பார்த்து ஏமாந்தாய்?”
“பாட்டி, ஒரு வீடென்றால் யார் இருப்பார்கள்? அம்மா, அப்பா, உடன் பிறந்தோர்கள், போனால் போகட்டும் தாத்தா பாட்டி அவ்வளவு தானே ! ஆனால் சுரேஷ் வீட்டில் நிஜமாகவே ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி அவர்கள் குழந்தைகள். இவனுடைய சகோதர சகோதரிகள் என்று மூன்று பேர். இன்னும் இவனுடைய தாத்தா, பாட்டி, தாத்தாவின் விதவை சகோதரி. இவ்வளவு பேரும் ஒரே வீட்டில். எப்படி இருக்கும்?” என்றாள் ஷீலா பல்லைக் கடித்துக் கொண்டு.
பாட்டி விழுந்து, விழுந்து சிரித்தாள்
“இதென்னடி வீடா இல்லை சர்க்கஸ் கம்பெனியா?” என்று கேட்டாள்.
“நான் கூட அப்படிக் கூறி விட்டுத் தான் வர வேண்டுமென்று நினைத்தேன், ஆனால் அவனைச் சுற்றி எப்போதும் கூட்டம். ஒன்றும் பேசாமல் வந்து விட்டேன்” என்றாள்.
“ஏண்டி ஷீலா, சுரேஷ் வீட்டிற்கு நீ போனது உன் அம்மா, அப்பாவிற்கும் தெரியுமா?”
“நான் என்ன சின்னப் பாப்பாவா? ஒவ்வொன்றிற்கும் அம்மா, அப்பாவின் அனுமதி கேட்டு செய்வதற்கு”
“உன் அம்மாவிற்கு சுரேஷைத் தெரியுமா?”
“ரொம்பத் தெரியாது, அவன் இங்கே வரும் போது தான அம்மாவிற்குஅவனோடு பேசிப் பழக்கம்”
“சரி, பையன் ரொம்ப நல்லவன் ; எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன் என்று சொல்லியிருக்கிறாய். அதனால் மட்டும் எதையும் ஆராயச்சி செய்யாமல் முடிவு செய்ய முடியாது. அவன் வீடு, குடும்பம் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் அல்லவா? அதனால் நீ, உன் அம்மா அப்பாவோடு கன்ஸல்ட் செய்து விட்டு பிறகு முடிவு செய்” என்றாள் பாட்டி.
ஷீலா தன் பெற்றோரின் ஆலோசனயைக் கேட்டாள். அவர்களோ, “வாழப் போகிறவள் நீ, உன் விருப்பம் தான் எங்கள் விருப்பம்” என்றனர்.
ஆனால் தொடரந்து சொன்னார்கள், “நீ ஆரம்பத்தில் இருந்தே சுதந்திரமாய் வளர்ந்து விட்டாய் . காலையில் எட்டு மணிக்குத் தான் படுக்கையில் இருந்தே எழுந்திருப்பாய். அவசரமாக் குளித்தும், குளிக்காமலும் பெர்ப்யூம் போட்டுக் கொண்டு உன் ஸ்கூட்டரில் ஓடிவிடுவாய். ஒரு காபி கூட போடத் தெரியாது. எல்லாவற்றிலும் பெர்பெக்ஷனை எதிர்ப்பார்ப்பாய். ஆனால் நீ மட்டும் பெர்பெக்ட்டாய் இருக்க மாட்டாய். இந்தக் குறைகளுடன் ஒரு கூட்டுக் குடும்பத்தில் உன்னை ஒத்துக் கொள்வார்களா என்று யோசி” என்று கூறி பயமுறுத்தினர்.
“திருமணம் செய்து கொண்டு உன்னுடன் தனிக்குடித்தனம் வந்தால் மட்டுமே நீ சந்தோஷமாக இருக்க முடியும்” என்று மேலும் யோசனை கூறினார்கள்.
அலுவலகத்தில் அன்று ஷீலாவிற்கு வேலை நிறைய இருந்தது. பரீட்சை முடிவை எதிர்ப்பார்க்கும் மாணவன் போல் ஷீலாவின் முடிவிற்காக காத்திருந்தான் சுரேஷ்.
ஷீலாவிற்குத்தான் அவள் முடிவைச் சொல்லக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு “இவ்வளவு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்படப் பிடிக்கவில்லை, திருமணமானவுடன் தனிக்குடித்தனம் இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க முடியும். உங்களுக்கு தனிக்குடித்தனம் வர சம்மதமா?” என்று கறாராகக் கேட்டாள்.
முகம் இறுக, “வெரி ஸாரி ; உங்கள் கேள்வி கசாப்புக் கடைக்காரன் கத்தி போல் கறாராக இருக்கிறது. ‘குடும்பம் ஒரு கோயில்’ என்று நினைப்பவன் நான். கோயிலிலிருந்து ஒரு கல் எடுத்தாலும் கோயில் கோயிலாக இருக்காது. நீங்கள் உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழுங்கள், நான் வருகிறேன்” என்று கூறி அவளிடமிருந்து நீங்கினான்.
வாழ்க்கை எனும் வெள்ளத்தில் இருவரும் இருவேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனாலும் திருமணம் என்னும் பந்தத்தில் இருவரும் சிக்கவில்லை, ஒருவரை ஒருவர் மறக்க முடியாததால் தவித்தனர்.
இதற்குள் ஷீலாவின் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால், அவள் பாட்டியை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியாது என்று அவள் பெற்றோர் பாட்டியைக் கொண்டு போய் சீனியர் சிட்டிசன் ஹோமில் சேர்த்து விட்டனர்.
ஷீலா பாட்டி இல்லாமல் மிகவும் தவித்தாள். சின்னக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் தாயைப் போல் தவித்தாள். அப்போது திடீரென்று அவளுக்கு சுரேஷின் ஞாபகம் வந்தது.
‘ஒரே ஒரு பாட்டியையே நம் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியவில்லையே, சுரேஷ் வீட்டில் மூன்று நான்கு பாட்டிகள் தாத்தாக்கள் இருப்பார்களே. அவர்களை எப்படிப் பார்த்துக் கொள்கிறார்களோ தெரியவில்லையே’ என்று ஆச்சர்யப்பட்டாள் .
ஒரு நாள் ஷீலா தற்செயலாக சுரேஷ் வீட்டுப் பக்கம் போக நேர்ந்தது. சுரேஷ் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியே நின்று சிகரெட் ஊதிக் கொண்டிருந்தான். இவளைப் பார்த்தவுடன், சிகரட்டைக் கீழே போட்டு விட்டு லுங்கியைக் கீழே இறக்கினான்.
வீட்டிற்கு அழைத்தான். வீட்டிற்குள் போன போது ஷீலா மூன்று தாத்தாக்களையும், நான்கு பாட்டிகளையும் பார்த்தாள். அப்போது தான் ஷீலா தன் சந்தேகத்தை அவனிடம் கேட்டாள்.
“ஒரே ஒரு பாட்டியைப் பார்த்துக் கொள்ள எங்களால் முடியாமல் நாங்கள் சீனியர் சிட்டிசன் ஹோமில் சேர்த்து விட்டோம். நீங்கள் எப்படி இத்தனை வயதானவர்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் ஷீலா.
“எங்கள் வீட்டில் அவர்களுக்கென்று ஒரு வேலையாளை வைத்து விட்டோம். பழைய காலங்களில் அப்படித் தானே ! வேண்டாத பொருட்களைப் பரண் மேல் போடுவது போல் யாரும் அவர்களை ஒதுக்காமல் மரியாதையோடு தான் பார்த்துக் கொள்வார்கள். வீட்டில் உள்ள மற்றவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் போக வர அவர்களைப் பார்த்துக் கொள்வோம். சில சமையங்களில் அவர்களே ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதோடு, தேவைப்படும் போது எங்களையும் பார்த்துக் கொள்வார்கள்” என்று சொல்லிச் சிரித்தான்.
ஷீலா ஆச்சர்யத்துடனும் வருத்தத்துடனும் தலை குனிந்தாள்.
“ஏன் ஷீலா திடீரென்று உங்கள் முகம் வாடி விட்டது?” என்று கேட்டான் சுரேஷ்.
“என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேனோ என்று பயம் வந்து விட்டது. சுரேஷ், தனிக் குடித்தனம் தற்காலிக சந்தோஷம், கூட்டுக் குடும்பமே நிரந்தரப் பாதுகாப்பு என்று புரிந்து கொண்டேன். இந்தக் குடும்பம் என்ற கோயிலில் என்னையும் ஒரு செங்கல்லாக ஏற்றுக் கொள்வீர்களா?” என்றாள் குரல் கம்ம. உணர்ச்சி மிகுதியால் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. சுரேஷ் அவள் கண்ணீரைத் துடைத்தான்
“நீ இந்த வீட்டில் வாழ வந்தால், செங்கல்லாக மட்டுமல்ல எங்கள் குலசாமியாக உன்னை ஏற்றுக் கொள்வோம்” என்று கூறிச் சிரித்தான்.
(முற்றும்)
அருமை