ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
சுகந்தி வந்து மூர்த்தியை செக்அப் செய்தாள். வல்லபி கொடுத்த மருந்துகளையும் பார்த்தாள். “எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து விட்டால் நன்றாக இருக்கும்” என்றாள்.
“நான் பெரிய குளத்திற்கு நீ வேலை செய்யும் மருத்துவமனைக்கே மூர்த்தி சாரை அழைத்து வருகிறேன். அங்கேயே ஸ்கேன் எடுத்து விடலாம்” என்றாள் வல்லபி.
பரிசோதனை முடித்து விட்டு வல்லபியின் வீட்டிற்குத் திரும்பும் போது, “இங்கே சுற்றிப் பார்த்திருக்கிறாயா வல்லபி” என்று கேட்டாள் சுகந்தி.
“மிகச் சிறிய ஊர். நான் டியூட்டியில் சேர்ந்து கொஞ்ச நாள் தானே ஆகிறது. எங்கும் அதிகம் வெளியே போனதில்லை. கொஞ்சம் மக்களோடு பழகிய பிறகு தான் ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றாள் வல்லபி.
காரில் போகும் போது விஷ்ணுவிடமிருந்து போன், “டாக்டர் வல்லபி, மாமா உங்களுக்கும், உங்கள் தோழி டாக்டர் சுகந்திக்கும் ஒரு சின்ன விருந்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாளை மதியம் லஞ்ச்சிற்கு இருவரும் வரமுடியுமா?” என்றான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“கனகாவின் சாப்பாட்டிலிருந்து எஸ்கேப்” என்றாள் சுகந்தி.
அடுத்த நாள் இருவரும் மூர்த்தி வீட்டிற்கு விருந்திற்குச் சென்றனர். டாக்டர் சுகந்தியின் கணவன் முரளி மிலிட்டரியில் மேஜராக இருக்கிறான் என்றும் வல்லபி தெரிவித்தாள்.
“நீங்கள் எப்போது டாக்டர் கல்யாணச் சாப்பாடு போடப் போகிறீர்கள்?” என்றார் மூர்த்தி.
ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள் வல்லபி. “கல்யாணச் சாப்பாடு போடும் போது கட்டாயம் உங்களை அழைப்பேன்”” என்றாள்.
விருந்து பலமாக இருந்தது.
“சாப்பிட்டவுடன் சரியான தூக்கம் வருகிறது” என்றாள் சுகந்தி.
விஷ்ணுவின் அம்மா இருவருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம் எல்லாம் வைத்து அத்துடன் பட்டுப் புடவை கொண்ட பெட்டி ஒன்றும் வைத்துக் கொடுத்தார்.
அவற்றைப் பெற்றுக் கொண்ட வல்லபி, “இந்த ஊரில் முக்கியமான இடம் எது?” என்றாள்.
“இது சிறிய கிராமம் தானே டாக்டர். தாமரையும் அல்லியும் நிறைந்த அழகான குளங்கள் இருக்கின்றன. அழகான வயல்களும், தென்னந்தோப்புகளும் உண்டு. அருகில் உள்ள பெரியகுளம் பெரிய ஊர். அங்கு கும்பக்கரை நீர் வீழ்ச்சி மிக அழகாக இருக்கும். கொடைக்கானல் மலையில் உற்பத்தியாகி, பாறைகள் வழியாக ஓடி, மலை அடிவாரத்தை அடைகிறது. முதலில் அவ்வளவாக வெளிஉலகத்திற்குத் தெரியாத நீர் வீழ்ச்சி ஒரு ஓட்டல்காரரால் புகழ் பெற்றது. உங்களுக்குத் தாமரைக் குளத்தில் பொழுதுபோக்கு வேண்டுமென்றால் எங்கள் தென்னந்தோப்பிற்கு நாளை வாருங்கள். நல்ல இளநீர், குளிர்ந்த காற்று கிடைக்கும்” என்றான் விஷ்ணு.
“நீங்கள் இருவரும் வருவதாக இருந்தால் நானும் வருகிறேன்” என்றார் மூர்த்தி.
“கொஞ்சம் கலந்த சாதம், டிபன் எல்லாம் கட்டித் தருகிறேன், போய் வாருங்கள்” என்றார் விஷ்ணுவின் அம்மா.
“நீங்களும் வாருங்கள் அம்மா. விஷ்ணுவின் அப்பாவும் வரட்டும். நாங்களும் வருகிறோம். பெரிய வேன் எடுத்துக் கொள்ளலாம்” என்றாள் சுகந்தி.
அடுத்த நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் திட்டமிட்டபடி எல்லோரும் மூர்த்தி வீட்டில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து கிளம்பினர். மூர்த்தி நல்ல ஆரோக்கியமாகத் தெளிவாக இருந்தார்.
வரிசையாக நின்ற தென்னை மரங்களோடு கூடிய தென்னந்தோப்பும், அடர்த்தியான மாந்தோப்பும் மிக அழகாக இருந்தன. காற்று அடிக்கும் போதெல்லாம் எழும் மாவிலைகளின் சலசலப்பும் மாம்பூவின் வாசனையும் மனதைச் சுண்டியிழுத்தன.
பம்ப் செட்டிலிருந்து கொட்டும் தண்ணீர் வயல் வழியே ஆறாக ஓடியது. இந்த அழகையெல்லாம் பார்த்து, ரசித்து எடுத்துச் சென்ற உணவையும் சாப்பிட்டு முடித்து மாலை நான்கு மணிக்குத் தான் வீடு திரும்பினர்.
இரண்டு டாக்டர்களும் சகஜமாகப் பேசுவது போல் மூர்த்தியிடமும், விஷ்ணுவின் பெற்றோரிடமும் பல கேள்விகள் கேட்டனர். ஆனாலும் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் பதில் வரவில்லை. மூர்த்திக்கு ஏதோ மனஅழுத்தத்தினால் இந்த வலிப்பு நோய் வந்திருக்கலாம் என்று இருவரும் நினைத்தனர். அதற்காகத்தான் இந்தப் பயணம். ஆனால் தெளிவான பதில் தெரியாமல் தான் வீடு திரும்பினர். சுகந்தி அன்றே பெரியகுளம் திரும்பி விட்டாள்.
அங்கே ‘ஸ்கேன்’ எடுத்துப் பார்த்ததில், அவருடைய நரம்பு மண்டலத்தில் எந்தக் கோளாறும் தெரியவில்லை. வல்லபி தாமரைக்குளம் திரும்பிய பிறகு இரண்டு மருத்துவர்களும் நிறைய விவாதித்தனர். மூர்த்திக்கு நல்ல தூக்கமும், ஓய்வும், கவலையற்ற நிம்மதியான வாழ்க்கையும தான் தேவை என்று முடிவாகப் பேசிக் கொண்டனர்.
தியானமும், யோகாவும் நல்ல குணம் தரலாம் என்றும் நினைத்தனர். மூர்த்தியிடம் அவருடைய ஸ்கேன் ரிப்போர்ட் படி அவருக்கு எந்தக் குறையும் இல்லையென்று தெரிவித்தனர்.
“இவ்வளவு வசதிகளைப் பெற்ற இந்த மூர்த்தி சாருக்கு குடும்பம் என்ன ஆயிற்று? ஆனால் விஷ்ணுவின் அம்மா முகமும் ஏதோ கவலையாகவே இருக்கிறது ஏன்? இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. அதெற்கெல்லாம் பதில் தெரிந்தால் இவருடைய வியாதி குணமடையலாம்” என்றாள் சுகந்தி வல்லபியிடம்.
“ஆம், நானும் அப்படித்தான் நினைகிறேன்”” என்றாள் வல்லபி யோசனையுடன்.
மறுநாள் வேறு எங்கோ போய் வரும் போது மூர்த்தியின் பங்களாவைக் கடந்து தான் வரவேண்டி இருந்தது. அவரையும் பார்த்து விட்டுப் பிறகு வீட்டிற்குப் போகலாம் என்று காரை அவர் பங்களா காம்பௌண்டிற்குள் செலுத்தினாள் வல்லபி.
மூர்த்தி வெளிவெராண்டாவில் நின்று இயற்கையான குளிர்ந்த காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தார். வல்லபியின் காரைப் பார்த்தவுடன் சிரித்துக் கொண்டே காரின் அருகில் வந்து கார் கதவைத் திறந்து விட்டார்.
“நீங்கள் கார் கதவைத் திறக்க வேண்டாம் அப்பா” வல்லபி.
“இப்போது கூப்பிட்டாய் பாரம்மா ‘அப்பா’வென்று, அதற்காக எத்தனை கார்க் கதவை வேண்டுமானலும் திறக்கலாம். உன்னைப் போல் அழகும், அறிவும், பண்பும் நிறைந்த ஒரு பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்” என்று பெருமூச்சு விட்டார்.
அவர் உருக்கமாகப் பேசியதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் வல்லபி. அவர் குரலைப் போலவே அவர் கண்களும் லேசாகக் கலங்கியிருந்தன.
‘ஏதோ ஆழ்மனதின் வலி போலும். அந்த வலியின் காரணம் தெரிந்தால் அவர் வியாதியை குணப்படுத்தலாமோ?’ என்று அவள் டாக்டர் மனம் யோசித்தது.
அப்போது ஒரு அரசாங்க ஜீப் மெதுவாக அருகில் வந்து நின்றது. ஜீப்பில் நெடுஞ்சாலைத் துறை என்று எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்து இறங்கினான் விஷ்ணு.
“நீங்கள் ஹைவேஸ் டிபார்ட்மென்டிலா வேலை செய்கிறீர்கள்?” என்றாள் வல்லபி ஆச்சரியமாக.
“ஆம், நான் அந்தத் துறையில் உதவிப் பொறியாளராக வேலை செய்கிறேன். உள்ளே வாருங்கள் டாக்டர்” என்றான் விஷ்ணு. ஜீப் டிரைவர் நிறைய இளநீர் காய்களைக் கொத்தாக எடுத்துக் கொண்டு உள்ளே போனார்.
வெளியே வந்த டிரைவர் ஏதோ ஒரு ரிஜிஸ்டரில் விஷ்ணுவின் கையெழுத்தை வாங்கி, ஜீப்பை எடுத்துக் கொண்டு போனார். ஜீப்பின் சப்தம் கேட்டு உள்ளேயிருந்து விஷ்ணுவின் அம்மா மரகதமும், பின்னர் அவன் அப்பாவும் வந்தனர்.
“உள்ளே வாருங்கள் டாக்டர். நம் தோப்பின் இளநீர் காய்கள் தான். இளநீரும் ரொம்ப இனிக்கும், வழுக்கையும் சாப்பிட மிக நன்றாக இருக்கும்” என்று அழைத்தான் விஷ்ணு. மூர்த்தியும் மற்றவர்களும் தொந்தரவு செய்து அழைக்கவும் உள்ளே போனாள் வல்லபி.
“அருகில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்ட்டரில் கொஞ்சம் வேலை, அதை முடித்து விட்டுத் திரும்பும் போது அப்பாவையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். இப்போது உடம்பு எப்படி இருக்கிறது சார்? நன்றாகத் தூக்கம் வருகின்றதா?” வல்லபி .
“சார் என்று சொல்ல வேண்டாம் டாக்டர். அப்பா என்று நீங்கள் அழைப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது” என்றார் மூர்த்தி. வல்லபி ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள்.
விஷ்ணு ஆபீஸ் டிரஸ் கூட மாற்றாமல் இளநீர்க் காய்களை வெட்டிக் கொண்டிருந்தான். அவன் அம்மாவும், அப்பாவும் கண்ணாடி பௌலில் வழுக்கையும், வெள்ளி டம்ளரில் இளநீரும் எடுத்து வந்து மூர்த்தியிடமும், வல்லபியிடமும் கொடுத்தனர். நிஜமாகவே இளநீரும், வழுக்கையும் மிக அருமையாக இருந்தது.
“டாக்டர், இன்று லஞ்ச் நீங்கள் எங்கள் வீட்டில் தான் சாப்பிட வேண்டும். நான் ஏற்பாடு செய்து விட்டேன்” என்று மரகதம் வற்புறுத்தினாள்.
“இல்லை, இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். நான் கனகாவிடம் கூட சொல்லவில்லை” என்றாள் வல்லபி.
அவள் சொல்லி முடிப்பதற்குள், விஷ்ணு கனகாவிடம் போன் செய்து “டாக்டர் வல்லபி இங்கு தான் சாப்பிடப் போகிறார்கள்” என்று கூறி விட்டான்.
“விஷ்ணு, சமையல் முடியும் வரை டாக்டருக்கு வீட்டையும், தோட்டத்தையும் சுற்றிக் காட்டு” என்று கூறி விட்டு மரகதத்தின் பின்னால் சென்றார் மூர்த்தி.
வல்லபியை அழைத்துக் கொண்டு விஷ்ணு முன்னால் சென்றான். வீடு முழுவதும் வெள்ளை வெளேரென்று மார்பிளால் இழைக்கப்பட்டிருந்தது. பெரிய ஹால். அதிலிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள். எல்லாமே மார்பிள். படிக்கட்டுகள் வழுக்காமல் இருக்க அடர் நீலத்தில் கார்பெட் ஒட்டப்பட்டு இருந்தது. படியில் ஏறிச் சென்றால் அங்கே ஒரு பெரிய ஹால், அந்த ஹாலிலிருந்து நீண்ட நடை பாதை இடது பக்கமாகவும, வலது பக்கமாகவும் போனது.
இடது பக்க மூன்று அறைகள், விஷ்ணுவிற்கும், அவன் பெற்றோருக்கும். வலது பக்கத்தில் உள்ள அறைகளில் ஒன்று மூர்த்திக்கு, மற்ற இரண்டு அறைகளில் ஒன்று விருந்தினர் அறை என்றும், மற்றொன்று அவன் மாமாவின் லைப்ரரி அறை என்றும் விவரித்தான்.
முதலில் விஷ்ணுவின் அறையைக் காட்டினான். ஒரு இரும்பு புத்தக அலமாரி முழுவதும் இன்ஜினீயரிங் புக்ஸ், ரோட்ஸ், பிரிட்ஜஸ், கல்வெர்ட் இவற்றைப் பற்றிய புத்தகங்களே. இவற்றுடன் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு கணக்குப் புத்தகங்களும் இருந்தன. அவற்றைப் பார்த்து வல்லபிக்கு சிரிப்பு வந்தது.
“வல்லபி, ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றான் விஷ்ணு.
“பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு, அறிவியல் புத்தகங்களும் இருக்கின்றனவே, அதனால் சிரிப்பு வந்தது” என்றாள் தன் சிரிப்பு மாறாமல்.
“படிக்கும் போது வெறும் மதிப்பெண்களுக்காகப் படிப்போம். இப்போது அந்தப் புத்தகங்களையே திரும்பப் படித்தால் நிறைய விஷயங்கள் புரிகின்றன வல்லபி” என்றான்.
பிறகு தன் தாயின் அறையையும், தந்தையின் அறையையும் காட்டினான். வல்லபிக்கு அப்போது ஓர் எண்ணம் தோன்றியது. மூர்த்தி சாரின் அறையைப் பார்த்தால் அவரின் மனஅழுத்தத்திற்கான காரணம் புரியும் என்று நினைத்துக் கொண்டாள். விஷ்ணுவிடம் எதையும் வாய்விட்டுத் தெரிவிக்கவில்லை.
விஷ்ணு, அவன் மாமாவின் அறையையும் அழைத்துச் சென்று காட்டினான். மிகப்பெரிய படுக்கை அறை. விஷ்ணுவின் அறையில் உள்ளது போலவே ஒரு புத்தக அலமாரி. அந்த அலமாரியின் மேல் ஒரு சிறிய குழந்தையின் படம். இரண்டு வயதுப் பெண் குழந்தையின் படம். ஊர்பட்ட நகைகள் போடப்பட்டிருந்தது. அந்தக் குழந்தையின் படம் பார்த்து திக்பிரமை பிடித்தாற் போல் நின்றாள் வல்லபி.
“வல்லபி, என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் அந்தக் குழந்தையின் படத்தைப் பார்த்து திகைத்து நிற்கிறீர்கள்?” விஷ்ணு.
“ஒன்றுமில்லை, அந்தப் படத்தைக் கொஞ்சம் எடுத்துக் கொடுங்களேன். பார்க்கலாம்” வல்லபி.
“உங்களுக்குத் தெரிந்த முகமாக இருக்கிறதா வல்லபி?”
“இல்லை இல்லை” என்று அவசரமாக சொன்னாள். “இந்தச் சிறிய குழந்தைக்கு எவ்வளவு நகைகள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தையின் முகம் பளிச்சென்று தெரியவில்லை. அதனால் தான் கேட்டேன்” என்றாள் தொடர்ந்து.
அந்தப் படத்தை எடுத்து வல்லபியின் கையில் கொடுத்தான் விஷ்ணு.
(தொடரும் – திங்கள் தோறும்)
இந்த “வல்லபி” நாவல், நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் மூலம் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், 77082 93241 என்ற WHATSAPP எண்ணில் மெசேஜ் அனுப்பி ORDER செய்யலாம். நன்றி
“Inthak kathai viRuviruppaagaththaan chelluGinRathu. Aavalaiyum thoonDuGinRathu. VaazhththukkaL.
-‘M.K. Subramanian.”
Mikka Nandri . Ungal comments mikka santhashathai kodukkiradhu . Meendum nandri.