in ,

இருப்பதை விட்டு (சிறுகதை – பிற்பகுதி) நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன்கதைச் சுருக்கம்:

டி.வி.யில் ஒரு புரோகிராம் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லிகா. அதில் பெண்கள் தங்களுடைய கணவன்மார்கள் தங்களை எப்படியெல்லாம் தாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு, தன்னுடைய வாழ்வில் அப்படி எதுவும் அமையவில்லையே என்று புலம்ப ஆரம்பித்தாள். விளைவு – கணவன் மனைவிக்குள் சண்டை மூண்டது. கோபித்துக்கொண்டு வெளியே போய்விட்டான். 

இனி:

இரவு மணிகண்டன் வீடு திரும்பவில்லை.  சவாரிக்கு போகாமல், அனாதையாய் வெளியே நின்று கொண்டிருந்தது, ஆட்டோ.

விடிய விடிய அழுது முகம் சிவந்து வீங்கி, காலையில் எழுந்து முனகிக்கொண்டே பிள்ளைகளுக்கு சோற்றை ஆக்கிகொண்டிருக்க, பிள்ளைகள் தாங்களாகவே குளித்து, உடுத்தி, சோற்றை அள்ளிப்போட்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் போக, இவள் மறுபடியும் சாப்பிடாமல் அப்படியே மீண்டும் படுத்துக் கொண்டாள்.

மத்தியானம் ஒரு மணி ஆகும்போதுதான் எழுந்தாள். தலை வலி தாங்கமுடியவில்லை.  டீ போடலாம் என்று பார்த்தால் பால் இல்லை.  காசு டப்பாவில் பணமும் இல்லை.  எப்போதும் ராத்திரி வந்தவுடன்  பணம் கொடுப்பான். ஆனால் ராத்திரி சண்டையில் பணம் கொடுக்கவில்லை.

பக்கத்து வீட்டுக்கு போனாள். ‘ பரமாயியக்கா, ஒரு கிளாஸ் பால் குடேன்…’  

‘ ஏன், என்னாச்சு…காலையில பால் வாங்கலையா…’ என்று குசலம் விசாரித்தாள் பரமாயி.

அவளுக்கு தெரியும் ராத்திரி சண்டை என்று.  கூடவே, ‘ ஏன் மல்லி, ஆட்டோ இன்னும் இங்கேயே நிக்குதே…மணிக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ…’ என்று போட்டு வாங்கினாள் பரமாயி.

நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த பாரம் திடீரென்று வெடித்துச் சிதற,.  நடந்ததை சொல்லி அழுதாள் இவள்

‘சரி…சரி…வீட்டுக்கு வீடுவாசற்படி… அதுக்காக இப்படி சாப்பிடாம கிடந்தா உடம்பு என்னத்துக்காகும்… வா, நான் இட்லி போட்டுத் தர்றேன், சாப்பிடுவே… ‘ என்றுவிட்டு உள்ளே ஓடினாள் பரமாயி.

மல்லிகா சாப்பிட்டுக்கொண்டிருக்க யோசனை வந்தவளாய், ‘ ஏன் மல்லி…மணிக்கு ஒரு போன்தான் போடேன்…மணி எங்கே போனதோ, என்ன ஆனதோ… ‘ என்றவள், உற்றுப் பார்த்து, ‘ நேத்து சண்டை வந்துட்டதால பணம் கிணம் கொடுத்துத்தா இல்லையா அந்தத் தம்பி…’ என்றாள் பரமாயி.

உதட்டை சிலுப்பிக் கொண்டு எழுந்து கைகழுவப் போனாள் மல்லிகா. டீயைக் குடித்துவிட்டு பாலையும் வாங்கிக் கொண்டு திரும்ப இருந்தவளிடம், ‘ போன் போடு மல்லி.  நீயாவது சாப்பிட்டே.., அந்த தம்பி சாப்பிட்டிச்சோ… இல்லையோ..’ என்றாள். ஒன்றும் பேசாமல் போய்விட்டாள் மல்லிகா.

சாயங்காலம் வந்த பாபு, ‘ அம்மா அப்பாவோட கையெழுத்து வேணும்மா… ’ என்றபடி  ஒரு அட்டையை நீட்டினான். இவள் ஒன்றும் பேசவில்லை. 

ராத்திரி, ‘ அம்மா, அப்பா ஏன்மா இன்னும் வரலை… ஊருக்கு போயிருக்கா….’ என்று செல்வி கேட்டபோதுதான் உள்ளுக்குள் உரைத்தது மல்லிகாவுக்கு.

‘ஒருவேளை அப்படித்தான் போய் விட்டாரோ… அடக்கடவுளே.. வீட்டில் காசே இல்லையே…அந்த ஆள் கொண்டு வந்து கொடுத்தால்தானே உண்டு. பரமாயி அக்கா சொன்னது போல நாம் அன்றாடம் காய்ச்சிகளாயிற்றே… நமக்கெதற்கு பட்டுப்புடவையும் நகைநட்டும். பங்களாவுக்கும் சிம்லாவுக்கும் ஆசைப்பட நமக்கென்ன யோக்கியதை இருக்கிறது. பிள்ளைகளுக்கு ஒரு பென்சில் வேண்டுமானால் கூட புருஷன் கொடுத்தால்தானே உண்டு…  ‘  

‘கண்டதைப் பார்த்து நம் அறிவை கடன் கொடுத்துவிட்டோமே… ‘

ஓடிப்போய் அவளது மொபைலை எடுத்தாள். அது ஆஃப் ஆகிக் கிடந்தது. உடனே சார்ஜ் ஏற்றினாள்.

‘தெனம் கிடைக்கற சவாரி காசு முன்னூறு நானூறுல என்ன முடியுமோ அதான் செய்யமுடியும்…’  அவன் சொன்னது காதுகளில்  கேட்டது.

‘நாம்தான்… தப்பு பண்ணிவிட்டோமோ… அப்படி பேசியிருக்கக்கூடாதோ… ஏழைக்கு எள்ளுருண்டைதானே கிடைக்கும்… லட்டுக்கும் ஜிலேபிக்கும் ஆசைப்பட்டால் எப்படி…’

மறுபடியும் அவனுக்கு போன் போட்டாள். அது ஸ்விச்சுடு ஆப் என்றது. 

‘சார்ஜ் இல்லையா… இல்லை ஆப் செய்து வைத்துவிட்டாரா. ‘

பசி வயிற்றைக் கிள்ளியது. ராத்திரியும் சாப்பிடவில்லை, காலையிலும் சாப்பிடவில்லை. மத்தியானம் ஒரு மணிக்கு நான்கு இட்லி சாப்பிட்டதோடு சரி.

நல்லவேளையாய் பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் சமைத்து வைத்திருந்தாள். சோற்றை போட்டு சாப்பிட்டாள்.  தொண்டைக்கு கீழே சோறு இறங்கவில்லை.

‘ஐயோ… இந்த ஆள் சாப்பிட்டாரா…சாப்பிடலையா, தெரியவில்லையே… ஒருவேளை ஊருக்குத்தான் போயிருப்பாரோ…’ யோசனை ஓடியது.

சாப்பிடாமல் வெளியே கொண்டு போய் கொட்டினாள். ஊருக்கு போன் போட்டால் நம்முடைய சண்டை மாமியாருக்கு தெரிந்து, அவள் கொண்டாடுவாளே…

அப்பாவுக்கு போன் போட்டாலும் குடைவாரே. குழம்பிப்போய் பாயை விரித்துப்  படுத்துக் கொண்டாள். தூக்கம் பிடிபடவில்லை.  திடீரென்று, காலையில் பாபுவுக்கு அட்டையில் கையெழுத்து கேட்பானே… புரண்டு புரண்டு படுத்தாள். இடையிடையே அழுகையும் நெஞ்சை முட்டியது.  

காலையில் தன்னுடைய கையெழுத்தையேப் போட்டு அப்பா ஊருக்கு போயிருக்கார்னு சொல்லிடுடா என்று சொல்லியனுப்பிவிட்டாள்.

மறுபடியும் போன் போட்டாள். இப்போது போன் போனது . ஆனால் போன் கட்டானது.  ‘போனை எடுக்க மாட்டேனென்கிறாரே…’

வயிறு கடமுடா என்றது. கொஞ்சம் சோற்றை அள்ளி குழம்பை ஊற்றி தின்று முடித்தாள். மணி பன்னிரெண்டரை ஆனது.  டீ.வி. போடலாமா என்று டி.வி.ரிமோட்டை எடுத்தாள். ‘சை…இதால வந்த வினைதானே எல்லாம்…’ என்று புலம்பியபடியே ரிமோட்டை வீசி எறிந்தாள்.   

திடீரென்று பரமாயி ஓடிவந்தாள்.  ‘ மல்லி, மணி அந்த கூத்துக்காரி அலமேலு வீட்டுலதான் மணி இருக்கான்னு எனக்கு ஒரு ஆள் வந்து சொல்லிச்சு. வா… நாம போயி இழுத்துக்கிட்டு வந்துடலாம். அவ வீட்டுல தங்க ஆரம்பிச்சா, நம்ம குடிதான் கெடும். ருசி கண்டுட்டா  பூனை விடாது. கிளம்பு… ’

அவன் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான். பரமாயியைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தான். மல்லிகா வெளியேயே நின்றிருந்தாள். ‘ நான் வரலைக்கா…’ என்று அவன் சொன்னது மட்டும் கணீரென்று காதில் விழுந்தது.

யோசித்தாள்… தப்பு செய்தது நாம்.  நாம் தான் விட்டுக் கொடுக்கவேண்டும்.  இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப் பட்டது நாம்தானே. இப்படியே விட்டுவிட்டால், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக அல்லாவா போய்விடும். யோசிக்காமல்  மடமடவென் உள்ளே நுழைந்தாள்.

‘என்னை மன்னிச்சிடுங்க…வாங்க வீட்டுக்கு போய்டலாம்…’ என்று அழுதபடி அவனது கையைப் பிடித்து இழுத்ததாள்.

‘அக்கா, என்கிட்டே யாரும் பேசவேணாம்னு சொல்லுங்க…’

‘நாந்தான் சொல்றேனே.. மன்னிச்சுக்கங்கனு…’

‘இப்போ மன்னிக்கச் சொல்லுவே..வீட்டுக்கு போனதும், பழைய குருடி கதவை திறடிம்பே… இருக்கறதை கொண்டுதான் குட்டிக்கரணம் போடமுடியும்… ’

பரமாயி குறுக்கிட்டாள், ‘கிளம்பு மணி … மனசு மாறி வந்திருக்கா மல்லிகா, நீ கிளம்பி வா… ‘ என்றவள், மல்லிகாவைப் பார்த்து, ‘நல்ல வேலை அவ இப்போ வீட்டுல இல்லை… மணியைத் தூக்கு மல்லிகா…’ என்றாள்.  

அவள் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் சட்டென்று தைரியம் வந்தது.  பலம் கொண்டமட்டும் அவனது கைப்பட்டையில் கையைக் கொடுத்து தூக்கினாள் மல்லிகா.

‘சரி சரி விடு…’ என்றவன் எழுந்து சட்டையைப் போட்டபடி, ‘நீங்க…முதல்லே போங்க…நான் அப்புறமா வர்றேன்…’ என்றான்.

‘இல்லே இல்லே…எங்களோடவே வர்றே… மல்லிகா பாரு அழுதுட்டே வர்றா… உன் பிள்ளைகளும் அழும்… நீ வா சேர்ந்தே போகலாம்…’ என்றாள்.

வழியில் ஒரு ஆட்டோ வர ஏறி வீட்டுக்கு வந்தார்கள்.

‘போ மணி… சண்டைகிண்டை போட்டுக்கிட்டு மறுபடி இப்படி வீட்டை விட்டெல்லாம் போகாதே… ‘ என்றவள் மல்லிகாவைப் பார்த்து, ‘போ மல்லிகா… போயி நாக்குக்கு ருசியா ஏதாவது சமைச்சு போடு…காசு பணம் ஏதும் வேணுமினா வந்து கேளு, கொடுக்கறேன்… ’ என்றுவிட்டு பரமாயி கழன்று கொண்டாள்.

பிள்ளைகள் இன்னும் பள்ளிக்கூடம் விட்டு வரவில்லை. உள்ளுக்குள் வந்ததும் கதவை உள்புறம் பூட்டியவள் அவனைக் கட்டிக்கொண்டாள்.

பக்கத்து வீட்டு பரமாயி தன் வீட்டுக்குள் நுழைந்ததும், மணி போன்போட்டு சொன்னதை நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.

‘அக்கா, அலமேலக்கா ஊருக்கு போயிருக்கு. அங்க போய் தங்கிக்கறேன்.  நீ மல்லிகாகிட்ட சொல்லி நான் கோவிச்சுக்கிட்டு அங்கே போய்ட்டதா சொல்லு. பயந்து போயி என்னைத் தேடி வந்திடுவா  ‘

‘எப்படியோ எல்லாம் நல்லபடியாய் முடிந்தது ‘

மணிகண்டனும் அப்படியே நினைத்துக் கொண்டான்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முற்றும் 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இத வாங்கிக்கோங்க அண்ணா (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை