மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
திங்கட்கிழமை விடியற்காலை ஐந்து மணி. தன்னுடைய அடுக்கு மாடிக் குடியிருப்பின் வாசலில் ஆட்டோவை நிறுத்தி, பெரிய பெட்டியுடன் இறங்கினாள் புவனா. தூங்கிக் கொண்டிருக்கும் வாட்ச்மேனை எப்படி எழுப்பப் போகிறோம் என யோசித்துக் கொண்டே வந்தவளுக்கு, அதிசயம் காத்திருந்தது. கதவு திறந்தே இருந்தது.
“ராத்திரி கேட்ட பூட்டறதே இல்லையா மாணிக்கம்?” எனக் கேட்டாள்.
“வாங்கம்மா… இப்ப தான் ஏழாம் நம்பர் வீட்டுக்காரர் உள்ளே போனார்” என சொல்லிக் கொண்டே அவளிடமிருந்த பெட்டியை வாங்கினான்.
“ஏன்? அவரும் என்ன மாதிரி ஊருலேர்ந்து வராறா?” என புவனா கேட்கவும்
“அத ஏம்மா கேட்கறீங்க? ஏதோ டிவியில வேல செய்றாராம்? தினம் கண்ட நேரத்தில வராரு?”
“தனிக்கட்டை! அவர கேட்க யாரும் இல்ல” எனப் புலம்பினான்.
“சாப்பாட்டுக்கு என்ன பண்றாரு?”
“ஸ்விக்கிகாரனுக்கு வழி காட்டுவதே என் புழப்பா போச்சு” என்றான். அதற்குள் புவனா வீடு வந்து சேரவே, உரையாடல் நின்று போனது.
சரியாக காலை ஆறு மணிக்கு, காலிங் பெல் ஒலித்தது.
“தனமாகத் தான் இருக்கும்” கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்தவள், அவசரமாக டிவியைப் போட்டாள்.
‘இன்றைய ராசி பலன்’ கேட்டு, எந்தெந்த கிரஹம் எங்கு போகிறது எனத் தெரியவில்லை என்றால், தனத்திற்கு மண்டை உடைந்து விடும்.
“மேஷ ராசிக்காரர்களுக்கு, வெளியில் செல்லும் போது கவனம் தேவை” என ஒரு ஜிப்பாக்காரர் சொல்லவும், “அய்யய்யோ” எனக் கூவிக்கொண்டே உள்ளே வந்தாள்.
“இன்னிக்குதான் என் வூட்டுக்காரர் பெயிண்ட் வேலைக்கு போரேன்னுச்சு, அவருக்கு போன் போட்டு போக வேண்டான்னு சொல்லணும்” என்றாள்.
“அடி பைத்தியக்காரி, இதெல்லாம் சரியான டூப்பு. ஏற்கனவே உன் வீட்டுக்காரன் ஒரு வேலையும் செய்ய மாட்டான். இதுல நீ வேற” என்றாள் புவனா.
“மத்த ராசிக்காரங்க வெளிய போகும்போது கண்ண மூடிக்கிட்டு போலாமா?” எனக் கடிந்தாள்.
அன்று வியாழக்கிழமை. அதே ஜிப்பாக்காரர், “இன்று விருச்சிக ராசி நேயர்களுக்கு வீண் அலைச்சல்” என எச்சரித்துக் கொண்டு இருந்தார். அதே நேரம் காலிங்பெல் ஒலித்தது.
டீவியை பாஸ் செய்து விட்டு, வாசலுக்கு வந்தாள் புவனா. அதற்குள் தனம் கதவைத் திறந்து பேசிக் கொண்டிருந்தாள், மாணிக்கம் தான்.
“என்னப்பா மூணு நாளா உன்னைக் காணோம் ?” என்றாள் புவனா.
“அம்மா… என் பொஞ்சாதிக்கு உடம்பு சுகமில்ல. அதான் வந்தவாசி போயிட்டு வரேன்மா. வேற வாட்ச்மன் இருந்தாறேம்மா” என்றான்.
“தெரியும், பாத்தேன்” என்றாள் புவனா.
தலையைச் சொரிந்து கொண்டு நின்றான்.
“என்னப்பா… ஏதாவது காசு வேணுமா?” எனக் கேட்டாள்.
“ஆமாம்மா! அதோட, செமயா தல நோவுதும்மா… காப்பி?” எனக் கெஞ்சும் குரலில் கேட்டான்.
“சரி உள்ள வா… போட்டுத் தரேன்” என்றாள்.
அவன் உள்ளே வரவும், தனம் மீண்டும் டீவியை ஓட விட்டாள்.
மாணிக்கம், “அம்மா…” எனக் கத்தினான். பதறிப் போய் ஓடி வந்தாள் புவனா.
“இவர் தான் ஏழாம் நம்பர் வூட்டுக்காரர்” என்றான். “ஓ” என தனம் துள்ளிக் குதித்தாள். உடனே அவரைப் பார்க்க ஓடி விடுவாள் போல இருந்தது. அவளைப் பார்த்து புவனா முறைத்தாள். தனம் வேலையைத் தொடர்ந்தாள்.
புவனாவுக்கு அன்று வீண் அலைச்சல். ஒரு வேலை அவளுக்கு விருச்சிக ராசியோ? இரவு ஒன்பது மணிக்கு வீடு வந்து சேர்ந்த போது, அபார்ட்மெண்டில் பலர் அழுது கொண்டு இருந்தனர்.
ஆம். கண்ணம்மா! கண்ணம்மா ! டிவியில் உள்ள கதாநாயகன் பாரதியுடன் சேர்ந்து, அழுது கொண்டே தேடிக் கொண்டிருந்தனர். புவனா சிரித்துக் கொண்டே வந்து படுத்தாள்.
வெள்ளிக்கிழமை அந்த அபார்ட்மெண்ட்வாசிகளுக்கு மட்டும் அசாதாரணமாய் விடிந்தது. ஆறு மணிக்கு வரவேண்டிய தனம் வரவில்லையே என புவனா பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தாள். கீழே மூன்று போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னவாயிற்று?
பல தலைகள் வெவ்வேறு பால்கனிகளில் இருந்து எட்டிப் பார்த்தன. நாம் ஏன் முதலில் போய் மாட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும், அதே நேரம் விஷயமும் தெரிய வேண்டும்.
செக்ரடரி மட்டும் ஓடி வந்து போலீஸிடம் சன்னமாக பேசிக் கொண்டிருந்தார். “செக்ரடரி கொஞ்சம் சத்தமாக பேசினால் தான் என்ன?” என புவனா நினைத்துக் கொண்டே, “சரி… வேறு யாருக்கு போன் போடலாம்?” என யோசித்தவாறு போனை நோண்டினாள்.
“அனைவரும் கீழே கூடவும், அவசரம்” என அபார்ட்மென்ட் குழுவில் பல அழைப்புகள் வந்திருந்தன. அனைவரும் தத்தம் உடையில் இருந்து மாறி, கால் மணி நேரத்தில் கூடினார்கள். பிறகு போலீஸ்காரர் பேச்சை ஆரம்பித்தார்.
“உங்கள் ஏழாம் நம்பர் வீட்டுக்காரர், மூன்று தினம் முன்பு இயற்கையாக மரணம் அடைந்துள்ளார். அவர் வேலை செய்யும் டிவியில், ‘அவரை பர்சனலாக எங்களுக்குத் தெரியாது… நீங்கள் அடக்கம் செய்து விடுங்கள் எனக் கூறி விட்டார்கள். உங்களில் யாருக்காவது அவருடைய நண்பர்களையோ அல்லது சொந்தங்களையோ தெரியுமா” எனக் கேட்டார்.
அனைவரும் திருதிருவென விழித்தனர். பல பேர், “ஏழாம் நம்பர் வீட்டில் யார் இருந்தாங்க? அதுவே தெரியாதே” எனப் புலம்பினர்.
செகரட்டரி அவர்களிடம் திரும்பி, “காலையில் மலர் டிவியில் ராசி பலன் சொல்லும் ஜோதிடர், அவரைத் தெரியாது?” எனக் கேட்டார்.
“ஓ அவரா. அவருக்கு இன்ஸ்டாவில் ஒரு மில்லியன் ஃபால்லோயர்ஸ், அதில் நானும் ஒருவன்” என ஒரு குரல் ஒலித்தது.
போலீஸ் அதிகாரி, “இவ்வளவு புகழ் இருந்தும், ஊருக்கே தெரிந்து இருந்தும், அவருக்கு நெருக்கமானவங்கன்னு ஒருத்தர் கூட இல்லையே” என்றார்.
அனைவரும் சேர்ந்து அடக்கம் செய்து முடித்தார்கள். மறுநாள் தனம் எப்போதும் போல் டிவியைப் போட்டாள்.
“என்னம்மா! அதே ஆளு…” என பயந்து பேயைப் பார்த்தது போல டபக்கென்று அணைத்தாள்.
“என்றோ படப்பிடிப்பு நடந்து இருக்கும் இன்று வெளியிடுகிறார்கள்” என்றாள் புவனா. “கட்டத்தில் இருக்கும் ஏழாம் வீட்டில் ராகு இருக்கிறாரா? குரு இருக்கிறாரா என மண்டையை உடச்சுக்கறோம், ஆனா கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் வீட்டில் யார் இருக்கிறார்கள் என கவனிக்கவில்லையே. யாரோ இல்லாத பாரதி கண்ணம்மாவைத் காணோம் என அரற்றினோம், ஆனால் இருந்த ஒரு மனுஷன் இல்லாம போயிருக்காரு. அதைக் கூட பாக்கலையே” என வருந்தினாள்.
“ஆமாம்மா… எனக்கு தூக்கமே வரல” என்ற தனம், “அவர் ராசி பலன் சொல்றது கனவுல கூட வருதும்மா…” என்றாள்.
புவனாவின் கட்டிடத்தில் இப்போது எப்படி இருக்கிறார்கள்? காலம் வேகமாக பறக்கிறது, கூடவே அது தரும் படிப்பினைகளும்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings