இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எத்தனை புத்திசாலிகள் இருக்கிறோம், எத்தனை திறமையானவர்கள் இருக்கிறோம், நமது வாழ்க்கை தற்காலிகமாக இருக்கலாம் நமது உடல் தற்காலிகமாக இருக்கலாம், ஆனால் நம் புத்தி, புத்தியிலுருந்து கிளம்பிய சக்தி தற்காலிகமா?
சோழ தேசத்து நாகரிகத்தை, தமிழ் பேசும் மக்களினுடைய வாழ்வியல் வளர்ச்சியைச் சொல்வதற்காகத்தான் அரசர் கோயில் கட்டுகிறார். நமது கணிதத் திறமை, கலைத் திறமை, சங்கீதத் திறமை, ஓவியத் திறமை மற்றும் நாம் உயிர் வாழ்தலில் கொண்டிருக்கிற நாகரிக மேன்மை எல்லாம் வெளிப்படும்.
சிவலிங்கப் பிரதிஷ்டை நடைபெறப் போகிறது. சிவலிங்கம் நிற்க வைக்க பட வேண்டும்.
மருந்தை தயார் செய்து லிங்கத்தை கருவறை குழியில் இறக்குகிறார்கள். நன்கு இறுகிய பிறகு பாணலிங்கத்தைப் பற்றியிருந்த கயிறுகள் அவிழ்க்கப்பட்டன. பெருந்தச்சார் மெல்ல கை வைத்து அசைத்துப் பார்த்தார். அசையவில்லை.
பலம் கொண்டு வேகமாக அசைத்தார். லிங்கம் தன் இடப்பக்கம் சாய்ந்தது. மருந்து நிற்க வில்லை. பாணலிங்கம் பிடிபட வில்லை. குழியை சுத்தப்படுத்த வேண்டும். மொத்தமும் சுரண்டி எடுக்க வேண்டும். மீண்டும் காய்ச்ச வேண்டும் மீண்டும் ஊற்ற வேண்டும்.
அடுத்த முறை சிவலிங்கம் இறக்க இறக்க கலவையைக் கொட்டிக் கொண்டே இருந்தார்கள். கயிறு போட்டு இழுத்தாலும் அசையக் கூடாது அதுதான் நல்ல ஸ்தாபிதம் என்று அர்த்தம்.
இழுத்துப் பார்த்தார்கள். சிவலிங்கம் சரிந்தது. இம்முறையும் தோல்வி.
கருவூர்த்தேவர் உதவியால் அவர் வழிகாட்டுதல்படி மீண்டும் முயற்சிக்கிறார்கள். மறவர்கள் மட்டும் கயிறு பிடித்தால் எப்படி.. மற்றவர்களையும் வரச் சொல். வணிகர்கள் வேளாளர்கள் அந்தணர்கள் அனைவரையும் பிடிக்கச் சொல் என்கிறார் கருவூர்த்தேவர்.
பிடிக்கிறார்கள்.
நின்றுவிட்டது என்று பெருந்தச்சர் கத்த சோழம் சோழம் சோழம் என்று எல்லோரும் கத்தினார்கள். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று ராஜராஜர் குரல் கொடுத்தார்.
இங்கு செய்தது அனைத்தும் இறைவன். இறைவன் மிகப்பெரிய நாடகமாடி இருக்கிறான். இந்த தஞ்சை நகரத்து மக்களையும் ஒன்றாக இணைத்திருக்கிறார்.
எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
‘நான் செய்யவில்லை ஈசனே சகலமும் செய்து கொண்டான்.. ஈசனே சகலமும் செய்வான்’
சிவன் அருளால் உடையார் நாவலை படித்து முடித்தேன்.
மகாபாரத கதைப்படி அர்ஜுனன் மற்றும் சுபத்ரையின் மகனான அபிமன்யு சக்ராவியூகம் என்று அழைக்கப்படும் கிட்டத்தட்ட ஊடுருவ முடியாத இராணுவ அமைப்பில் ஊடுருவியதன் ரகசியத்தை தாயின் வயிற்றில் இருந்தே தெரிந்து கொண்டாராம்.
ஆனால் அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்று அவருக்கு சொல்லப்படவில்லை.
எங்கே நானும் உடையார் நாவலை படித்து முடிக்கும் முன்பே எனக்கு குழந்தை பிறந்து விடுமோ என பயந்தேன்.
ஒரு வழியாக கோவில் எப்படி கட்டி முடிக்கப்பட்டது சிவனை எப்படி பிரதிஷ்டை செய்தார்கள் என்பதையெல்லாம் குழந்தைக்கு கூறி விட்டேன். நாவலை படித்து முடித்தேன்.
நான்கு நாட்களுக்கு முன் அடி வயிற்றில் ஏற்பட்ட வலி பிரசவ வலி என்று நினைத்து நானும் அம்மாவும் பயந்து போனோம்.
தங்கையின் திருமணத்தன்று நான் மருத்துவமனையில் தான் படுத்திருக்கப் போகிறேன் என நினைத்தேன்.
வலியால் கத்திக் கொண்டிருக்கும் பொழுது அத்தையும் அக்காக்களும் உள்ளே வந்தனர்.
அமுதினியின் திருமண வேலையில் உதவி செய்ய வந்தவர்கள் நான் அழுவதை பார்த்து என்னிடம் வந்தார்கள்.
“ஒன்னும் இல்லை அழாத.. போய் கொஞ்சம் தண்ணி கொண்டுவாங்க அக்கா” என்றார் என் தாய் மாமாவின் மனைவி.
“சோம்பு கஷாயம் வெச்சு குடு சித்தி அப்போவும் வலி குறைலன்னா இது நிஜ வலி தான்” என்றாள் மலர் அக்கா.
“சுகப்பிரசவம் ஆக மந்திரம் இருக்கு.. அதை நூத்தி எட்டு தடவை சொல்லு நல்லதே நடக்கும்” என்றாள் பெரியம்மாவின் இரண்டாவது மகள் கற்பகம்.
தண்ணீர் குடித்ததும் சற்று வலி குறைந்தது போல் இருந்தது. சோம்பு கஷாயம் குடித்ததும் முழு வலியும் போனது.
“ஒன்பது மாசம் நெருங்கிடிச்சில இனி அப்பப்ப இப்படி இழுத்து பிடிச்சி வலிக்கும்”
“ஆமா கவியினியாள்.. நிஜ வலி வந்தா தொடர்ந்து வலிக்கும் உன்னால தாங்க முடியாது அப்படி இருக்கும்”
நானும் சற்று நிம்மதி அடைந்தேன்.
“அதுக்குள்ள என்னை பயமுறிதிட்ட” என்றாள் அமுதினி
“எனக்கு மட்டும் என்ன தெரியும்.. அதை விடு கடைக்கு போணும் சொன்ன.. போலாமா”
“நீ எங்க போற கவி எதுக்கும் நீ ஜாக்கிரதையாவே இரு.. நானும் கற்பகமும் போய்ட்டு வரோம்” அக்காக்கள் இருவரும் தங்கையுடன் வெளியில் சென்றனர்.
எனக்கு எந்த வேலையும் வைப்பதில்லை. அமுதினிக்கு அவளுடைய பொருட்களை எடுத்து வைக்கும் வேலையில் மட்டும் உதவியாக இருப்பேன்.
“புக்க வெச்சிட்டு இருந்ததெல்லாம் போதும் வா மெஹந்தி போட்டுக்கலாம்”
“அவ்ளோதான்டி உடையார் புக் முடிச்சிட்டேன்”
“என்ன டிசைன் வேணும்”
“எனக்கு கை முழுக்கலாம் வேண்டாம்.. உள்ளங்கைல மட்டும் கர்ப்பமா இருக்க மாதிரி டிசைன்ல மருதாணி போட்டுக்கணும்னு ஆசை”
“எப்படி வேணுமோ போட்டுக்கோ”
நானும் மகிழ்ச்சியோடு போட்டுக்கொண்டேன்.
அடுத்த நாள் அமுதினிக்கு நலுங்கு வைத்தோம்.
ஒவ்வொருவராக சென்று அமுதினிக்கு ஆரத்தி எடுத்து பச்சைப்பயிர் மற்றும் நல்லெண்ணெயை உச்சியில் வைத்து மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்தார்கள்.
நானும் அவளுக்கு நலுங்கு வைக்க ஆசையாக அவளருகே சென்றேன்.
“வயித்து புள்ளகாரி எங்க போற நீ?” அங்கிருந்த பாட்டி ஒருவர் கேட்டார்.
“தங்கச்சிக்கு நானும் நலுங்கு வெக்கறேன்”
“அதெல்லாம் நீ செய்யக் கூடாது.. உனக்கு நல்லது இல்லை அவளுக்கும் நல்லது இல்லை” என்றார்.
எனக்கு ஒரு மாதிரி ஆனது. என் தங்கையின் திருமணத்தில் எனக்கு இந்த உரிமை கூட இல்லையா!
“நானும் வெக்கிறனே” என்றேன் கெஞ்சலாக.
அந்த பாட்டி என்னையே முறைத்து பார்த்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings