இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“உங்களுக்கு இரத்தம் ரொம்ப கம்மியா இருக்கு.. ஐயன் இன்ஜெக்சன் போட்டுக்கலாம்”
“என்னாச்சு டாக்டர்?”
“ஹிமோகுளோபின் ஒன்பது ஆயிடுச்சு.. இனிமே கீழ போனா இரத்தம் தான் இறக்கணும்.. அதனால இப்போவே இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க”
“இன்ஜெக்சனா ஒரு பத்து நாள் பாக்கலாமா டாக்டர்.. மாத்திரை சிரப் குடிக்கிறேன்.. சாப்பாட்டுலயும் எடுத்துக்குறேன்” மிகவும் பணிவாக மருத்துவரிடம் கேட்டேன்.
“இல்லை இனி குழந்தை வளர வளர இரத்தம் குறைய தான் செய்யும்.. வேணுனா ஒரு வாரம் கழிச்சி வாங்க.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாங்க மூணு ஊசி போடணும் ஒரு வாரம் இங்கயே இருக்க மாதிரி வாங்க.. போன செக்அப்லாம் ஈரோட்டுல பாத்துருக்கிங்க”
“ஆமா டாக்டர் அங்க தான் வேலை செய்யறேன்”
“இங்க வர முடிலனா அங்கேயே போய் போட்டுக்கோங்க.. ஆனா இப்போவே போட்றது தான் பரவால்ல”
“சரிங்க மேம் வீட்டுல கேட்டுட்டு வரேன்”
என்ன இது அடுத்த பிரச்சனை. இரத்தம் குறையக் கூடாது என்று தானே மாதுளை சாறு, பீட்ரூட் சாறு, பெரிய நெல்லி சாறு, அத்திப் பழம், ராகி கூழ், முருங்கை கீரை என ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்கிறேன்.
இவ்வளவு செய்தும் குறைகிறதே. நடுவில் விருந்து சாப்பாடு என்று நான்கு ஐந்து நாட்களாக இருக்கிறோமே அதனாலா தெரியவில்லை.
சரி ஒரு வாரம் இன்னும் நல்லபடியாக எல்லா உணவையும் எடுத்துக் கொண்டு வந்து சோதித்துப் பார்ப்போம்.
என் நேரம் இந்த முறை ஈரோட்டிற்கு நானும் ஆதியும் மட்டும் செல்ல வேண்டிய நிலை.
நானே சமையல் வேலை வீட்டு வேலை செய்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்ல சிரமமாக இருந்தது.
ஏப்ரல் மாத வெயிலில் எப்படித்தான் அடுப்புக்கு அருகில் நின்று சமையல் செய்கிறார்களா பெண்கள். எனக்கு பெரிதாக வியர்க்காது ஆனால் இப்பொழுது வியர்த்து தள்ளுகிறது.
தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது. தோசை சுடுவது போன்ற சின்ன வேலைகளை ஆதி செய்தாலும் மீதி வேலைகளை செய்வது கஷ்டமாக இருந்தது.
கீழே உட்கார்ந்து காய்கறிகளை நறுக்கும் பொழுது வயிறு இடித்தது.
உட்கார்ந்து எழுந்து குனிந்து நிமிர்ந்து வேலைகள் செய்யும் சூழல் வந்தது நாங்கள் இருவர் மட்டும் இருப்பதால். ஒரு விதத்தில் இதுவும் நல்லது தான்.
யாராவது இருந்தால் இந்த வேலைகளை நான் செய்ய மாட்டேன். இப்பொழுது நானே எல்லாம் செய்கிறேன்.
குனிந்து நிமிர்ந்து கூட்டி பெருக்குகிறேன். துணிகளை துவைத்து காய வைக்கிறேன்.
அவ்வப்போது முதுகு வலி ஏற்பட்டாலும் வேலைகள் செய்யும் போது மூச்சு வாங்குவது போன்ற சிரமங்கள் இருந்தாலும் பின் உடம்பு லேசாவது போல் இருக்கிறது. உடம்பு வளைந்து கொடுத்து போவதும் சௌக்கர்யமாக இருக்கிறது.
“கவி இதுல சுவரொட்டி இருக்கு.. செஞ்சி சாப்புடு இரத்தம் ஊரும்”
“ஆபீஸ் போற அவசரத்துல இத எப்படி செய்றது”
“நானும் ஹெல்ப் பண்றேன்..”
“இன்னும் நிறைய வேலை இருக்கு.. அதுக்கே உங்க ஹெல்ப் வேணும்.. நான் வேணா மேல ஆயாகிட்ட செய்ய சொல்லட்டுமா.. சாயங்காலம் வந்து சாப்பட்றேன்”
“உனக்காக ரெண்டு மூணு நாளா கறிக்கடை அண்ணாகிட்ட சொல்லி வெச்சு வாங்குனேன் கவி”
“நான் அசைவம் சமைச்சது இல்லை ஆதி புரிஞ்சிக்கோ.. எனக்கு ஒப்பாது”
“இன்னிக்கு ஆயாகிட்டயே குடுத்து செஞ்சிக்கலாம் விடு”
மேல் வீட்டு பாட்டியிடம் செய்யச் சொல்லிக் கேட்டேன். செய்து வைப்பதாகவும் மாலையில் வந்து சாப்பிடவும் சொன்னார்.
“நாங்க அந்த காலத்துல வாங்கிட்டு வந்ததும் செவுத்துல ஒட்டி வெச்சி அப்புறம் சுட்டு சாப்பிடுவோம். அதான் அது பேரு சுவரொட்டி. ரத்தம் நல்லா ஊரும் சாப்புடு”
“சரி பாட்டி”
“பீட்ரூட் காய் தின்னா கூட இரத்தம் ஊறுமே”
“அதெல்லாம் சாப்டுட்டு தான் பாட்டி இருக்கேன். இத சாப்பிட சொல்லி சொன்னாங்க அதான்”
“எல்லாம் மாறி மாறி தான் சொல்லுவாங்க.. நல்லா சோறு சாப்புடு ஏறிக்கும்”
வெங்காயம் தக்காளி மிளகுத் தூள் போட்டு வருத்து வைத்திருந்தார். பெரிதாகப் பிடிக்கவில்லை எனினும் இரத்தம் ஊற வேண்டும் என்பதற்காகக் கொஞ்சமாக சாப்பிட்டேன்.
அடுத்த நாளும் ஆதி என்னிடம் சொல்லாமல் சுவரொட்டி வாங்கி வந்தார்.
“என்ன ஆதி நேத்தே வேணாம் சொன்னேன்ல.. இன்னிக்கும் வாங்கிட்டு வந்துருக்க”
“நம்ம குழந்தைக்கு இரத்தம் ஊரனும்ல.. அந்த கடைகார அண்ணாகிட்ட சொல்லி வெச்சி வெயிட் பண்ணி வாங்கிட்டு வந்தேன்.. இதுக்காக நான் அஞ்சு மணிக்கே எழுந்துருச்சு போனேன். நீ என்ன கவி இப்படி சொல்லிட்ட”
“இப்போ யார் சமைக்கிறது.. நேத்தே பாட்டிகிட்ட குடுத்தோம்”
“நான் ஹெல்ப் பண்றேன்”
ஆதியே கறியை எடுத்து கழுவினார். சின்ன சின்ன துண்டுகளாக வெட்டினார். பார்க்கவே குமட்டியது. இரத்தத்தோடு இருந்ததை கழுவினார்.
அம்மாவிடம் எப்படி செய்வது என்று அலைபேசியில் கேட்டேன். வெங்காயம் தக்காளி மசாலாக்கள் போட்டு சுவரொட்டியை சேர்த்து குக்கரில் விசில் விட்டு இறக்கச் சொன்னார். நானும் அவ்வாறே செய்தேன்.
விசில் வரும்பொழுது வந்த வாசனையே சுத்தமாகப் பிடிக்கவில்லை. விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து வெந்திருக்கிறதா என்று பார்த்தேன். சரியாக இருந்தது. கொஞ்சம் கொழுப்பும் போட்டிருந்தேன். எண்ணெய் மிதந்தது.
சாப்பிட அமர்ந்தோம். தட்டில் போட்டு சுவரொட்டியை சாப்பிட ஆரம்பித்தேன். இரத்த வாடை அடித்தது. ருசியும் பிடிக்க வில்லை. ஈரலையும் சுவரொட்டியையும் முயன்று சாப்பிட்டேன். இரண்டு துண்டுகளுக்கு மேல் சாப்பிடப் பிடிக்கவில்லை. அழுகை வந்தது. வாந்தி வருவது போல் இருந்தது.
“என்னாச்சு கவி”
“என்னால சாப்பிட முடில.. நான் ஐயன் இன்ஜெக்சனே போட்டுக்கிறேன்” என்று கூறிவிட்டு மேலும் வாய் விட்டு அழுதேன்.
அந்நேரம் பார்த்து பக்கத்து வீட்டு அக்கா எங்கள் வீட்டிற்குள் நுழைந்தார். என்ன நடக்கிறது என்று புரியாமல் எங்களையே பார்த்தார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings