in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 38) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இதுவரை :

கவியினியாள் குலதெய்வ கோவில் திருவிழாவிற்கு செல்ல ஆசைப்படுகிறாள். அந்த சமயத்தில் கோவிலுக்கு வரக்கூடாது என்று கவியினியாளின் அம்மா கூறுகிறார். அதை அவள் ஏற்றுக் கொண்டாளா பின் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பபோம்.

இனி :

“நம்ம கோவிலும் பக்கம் பாட்டி வீட்டு கோவிலும் திருச்செங்கோடு தான இங்க இருந்து அரை மணி நேரம் தான்மா கோவில் நானும் வரேன் மா”

“தூரத்துக்காக சொல்லல.. அங்கலாம் நீ வரக் கூடாது.. ஆக்ரோஷமான சாமி கோவிலுக்குலாம் நீ வரக் கூடாது.. நம்ம சாமி காவல் தெய்வம். எப்படி உன்னை கூட்டிட்டு போறது”

“அப்போ பாட்டி வீடு சாமி செய்றதுக்கு வரேன்”

“அங்கயும் வரக் கூடாது”

“எனக்கு அந்த கோவிலுக்கு வரனும்மா.. சாமி பாக்கனும்”

“பம்பை மேள சத்தம் இருக்க இடத்துக்கு போகக் கூடாது.. அங்க கோவில் சுத்தியும் சத்தமா தான் இருக்கும். அதெல்லாம் வயித்துல வளர குழந்தைக்கு நல்லது இல்லை. சாமி செய்யவும் மாசமா இருக்க புள்ளைய கூட்டிட்டுப் போ மாட்டாங்க.. யாராவது உன் வயிறு பாத்து கண்டுபிடிச்சிட்டா எங்கள தான் திட்டுவாங்க ஏன் கூட்டிட்டு வந்திங்கனு”

“அம்மா நான் கிட்ட வர்ல மா.. தூரமா இருந்தே பாத்துக்கிறேன்.. இல்லை சாப்பாடு போட்ற மண்டபத்துலயே இருந்துக்கிறேன்”

“அங்க வந்து இருக்கிறதுக்கு இங்கயே இரு”

“எல்லாரும் வருவாங்கல்ல அங்க வந்து எல்லாரையும் பாத்து பேசிட்டு வரேன் மா”

“நீ என்ன சொன்னாலும் நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன். அப்புறம் குழந்தைக்கு ஒண்ணுன்னா நாளைக்கு இதனால தான்னு உறுத்திட்டே இருக்கும். வேணாம்னா விடு”

“எதுக்கு என்கிட்ட சொல்ல வந்திங்க.. எதுக்கு அப்புறம் புடவை எடுத்து தந்திங்க.. நீங்களே வெச்சுக்கோங்க” கோவமாக என் அம்மாவிடம் புடவையை குடுத்து விட்டு அறைக்குள் சென்று தாளிட்டேன்.

என்னால் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. படுக்கையில் படுத்து அழுதேன்.

ஏன் வரக்கூடாது. எவ்வளவு ஆசையாக இருந்தேன் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று. மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைய ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்பொழுது நான் இன்னும் என்ன மாதிரியான சூழலில் இருக்கிறேனோ. இப்பொழுது கிடைக்கும் வாய்ப்பில் நான் ஏன் கலந்து கொள்ளக் கூடாது.

என்ன சம்பிரதாயமோ எனக்கு எதுவும் பிடிக்கவில்லை.

கோவம் அதிகரித்தது. வெளியில் ஆதி அறை கதவை தட்டினார். 

“என்ன புது பழக்கம்.. பேசப் பேச உள்ளப் போய் கதவ சாத்திக்கிட்ட”

“விடுங்க மாப்பிள்ளை அவ ஆசையா இருந்துருப்பா.. இப்போ நான் வராதான்னு சொன்னதும் கோவிச்சிகிட்ட”

“ஹே வெளிய வாடி.. இல்லை கதவ துறந்து வெச்சிட்டு அழு..” என்ற அமுதினி கதவை தட்டிக் கொண்டே இருந்தாள்.

நான் கதவை திறந்து வைத்து விட்டு யார் முகத்தையும் பார்க்காமல் மீண்டும் உள்ளே சென்று அழுதேன்.

என்னை சமாதானம் செய்ய எல்லோரும் வருவார்கள் என்று நினைத்தேன்.

அம்மா சமையலறைக்குள் சென்று விட்டார். அப்பாவும் ஆதியும் வெளியில் சென்று விட்டனர். அமுதினியும் என்னிடம் வந்து பேசவில்லை.

சில நிமிடங்கள் படுக்கையில் படுத்தே இருந்தேன். யாரும் சமாதானம் செய்ய வராததில் கண்ணில் இருந்து கண்ணீர் கூட வரவில்லை. ஆனாலும் கோவமும் ஏமாற்றமும் குறையவில்லை.

சில நிமிடங்கள் கழித்து அமுதினி என்னருகே வந்தாள்.

“சாப்பிடலாம் வா”

நான் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன்.

இப்பொழுது வராதே இந்த பாலாப் போன கண்ணீர். 

“வாடி.. ரொம்பத்தான் பண்ற” என் கையைப் பிடித்து இழுத்தாள்.

“எனக்கு வேணாம் நீ போய் சாப்புடு.. சந்தோசமா இரு.. கோவிலுக்கு போக துணிலாம் தெக்கக் குடு”

“பாப்பாக்காக தான சொல்றாங்க”

“என்ன பாப்பாக்காக.. நான் வரதுல என்ன தப்புன்னே எனக்கு புரில.. நீங்க இப்படி வராதன்னு சொல்லி கஷ்டபடுத்துறிங்க.. இதனாலதான் எனக்கும் பாப்பாக்கும் எதாவது ஆகும்”

“என்னடி பேசுற.. நீ வரலைனா நாங்களும் சந்தோசமாவா போவோம்.. எங்களுக்கும் வருத்தமா தான இருக்கும்.. சாமி விஷயம்னு சொல்றேன்.. கேக்காம பேசிக்கிட்டே இருக்க” உள்ளே வந்த அம்மா வேகமாகப் பேசினார்.

நான் எதுவும் பேசாமல் மீண்டும் அழத் தொடங்கினேன்.

“கவி.. அழாதடி” இந்த முறை அமுதினி இரக்கத்தோடு கூறினாள் 

“அழாத மொதல்ல எழுந்திரி.. முகம் கழுவு.. சாப்புடு அப்புறம் பேசிக்கலாம்.. நான் கூட்டிட்டு போறதான்னு பெரியவங்கள கேக்கறேன்” அம்மாவும் மெல்லிய குரலில் கூறினார்.

அமுதினியும் அம்மாவும் மாறி மாறி சமாதானம் செய்ய நான் எழுந்து முகம் கழுவிக் கொண்டு சாப்பிட்டேன். எனினும் யாரிடமும் பேசவில்லை. யாரும் என்னிடமும் பேச முயலவில்லை.

கொஞ்சம் நேரம் தான் என்னால் அப்படி இருக்க முடிந்தது. மீண்டும் அம்மாவிடம் சென்றேன்.

“ம்மா.. நானும் வரேன்மா”

“என்னடி நீ மறுபடியும் இதே சொல்ற”

“என்னால ஒத்துக்கவே முடில.. எனக்கும் வரணும் போல இருக்கு மா”

“சரி நான் பெரியவங்க யார்கிட்டயாவது கேக்கறேன்.. கேட்டுட்டு சொல்றேன்.. அப்புறம் உன் அத்தைகிட்டயும் கேக்கணும்.. அவங்க என்ன சொல்றாங்கணும் பாத்துட்டு முடிவு பண்ணலாம்”

“கவி.. அத்தை வேணாம்னு சொல்றாங்கல்ல… ஏன் இத்தனை டைம் கேட்டு அடம் பண்ற”

“உனக்கு என்ன தெரியும்.. எனக்கு அந்த கோவில் திருவிழாவுக்கு போறது ரொம்ப பிடிக்கும் ஆதி”

“பிடிச்சிருந்தா என்ன.. அடுத்தமுறை போய்கலாம். பம்பை அடிப்பாங்கன்னு சொல்றாங்க.. அந்த சத்தம் உனக்கு பிடிக்கும் உன் வயித்துல இருக்க நம்மை குழந்தை கேட்டு பயந்துட்டா என்ன பண்ணுவ”

“….”

“அங்க எவ்ளோ கூட்டம் இருக்கும் யாராவது உன்னை வயித்துல இடிச்சிட்டாலோ கூட்ட நெரிசலா இருந்தாவோ என்ன பண்ணுவ”

ஏன் நான் வரக் கூடாது என்று அவர்கள் சொல்லும் காரணங்கள் எனக்கு மெல்ல உரைக்க ஆரம்பித்தது. மனம் மாறத் தொடங்கியது.

அம்மாவும் அலைபேசியில் யாரிடமோ கேட்டுவிட்டு வந்தார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலானேன். அதோடு சேர்த்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிக்கத் தொடங்கினேன்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 37) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 39) – ரேவதி பாலாஜி