இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“உங்க வீட்ல யாருக்காவது சுகர் இருக்கா?”
“இல்லை மேம்.. அம்மா அப்பாக்கு சுகர் இல்லை.. மாமியார் மாமனாருக்கு இருக்கு”
“அவங்க சைடு இல்லை.. உங்க பரம்பரைல.. தாத்தா பாட்டி அப்படி”
“தாத்தா இன்னும் இருக்காரு அவருக்கும் சுகர் இல்ல.. பாட்டிக்கும் இருந்தது இல்லை”
“வேற”
“பெரியம்மாக்கு இருக்கு.. அம்மாவோட அக்கா”
“உங்க ஜீன்ல கூட அப்போ வந்துருக்கலாம்.. யூரின் போக நைட் எழுந்திரிப்பிங்களா”
“இப்போதான் ரெண்டு மாசமா ஒரு டைம் ரெண்டு டைம் எழுந்திரிப்பேன்”
“அதுவும் அறிகுறி தான்”
“இல்லை.. அது மாசமா இருக்கனால அப்படி இருக்கும்னு நினைச்சேன் மேம்..”
“ப்ரெக்னன்சில வர ஜெஸ்டினல் டைபெட்டிக்ஸ் கர்ப்பகால நீரிழிவுன்னு சொல்லுவாங்க அதான் இது”
“கவி ஸ்வீட் கூட விரும்பி சாப்ட மாட்டா எப்படி வந்துருக்கும் டாக்டர்”
“நீங்க பயப்பட வேணாம்.. இப்போ அவங்க கர்ப்பமா இருக்காங்கல்ல அதனால வந்துருக்கு.. டெலிவரி அப்புறம் நார்மல் ஆயிடும்.. அதும் இவங்களுக்கு கம்மியாதான் காமிக்குது பாப்போம். ஒன் வீக் டென் டேஸ் இன்ஜெக்சன் போட்டுட்டு வாங்க”
“பேபிக்கு எதும் ஆகாதுல”
“நீங்க சுகர் இன்கிரீஸ் ஆக விட்டாதான் பேபிக்கு பிரச்சனை.. சுகர் கண்ட்ரோல்ல இருக்கிறது அவசியம். மாத்திரை சாப்டிங்கன்னா அது தொப்புள் கொடி வழியா குழந்தைக்கு போகும். ஊசி ஒன்னும் பண்ணாது. சேப்டி தான்”
“இன்னொரு டைம் செக் பண்ணி பாக்கலாமா டாக்டர்”
“நீங்க இன்னிக்கி எடுத்த மூணு டெஸ்ட்லையுமே அதிகமா தான் இருக்கு.. கண்ட்ரோல் பண்ணியே ஆகணும். சுகர் போடாம பால் குடிங்க.. சாப்பாடு கம்மியா சாப்டுட்டு காய்கறி அதிகமா சாப்பிடுங்க.. பழம் கூட கொறச்சிக்கோங்க”
மருத்துவர் பேசப் பேச மனதளவில் சோர்ந்து போனேன். சத்து ஊசி என்று சொல்லி எதையோ போட்டார்கள். அதற்கும் நான் எதுவும் சொல்லவில்லை.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தால் போதும் என்றானது.
ஆதி மருந்தகத்தில் ஊசி வாங்கச் சென்றார். அதற்கும் நான் எதுவும் கூறவில்லை. எனக்கு இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
“சாப்டுட்டு வீட்டுக்கு போலாமா?”
“இல்லை ஆதி.. போலாம் வீட்டுக்கு”
“லேட் ஆயிடுச்சு போய் சமப்பியா.. காய்யும் வீட்ல இல்லல்ல.. வாங்கணுமே”
“எனக்கொரு சாம்பார் சாதம். உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க.. வீட்டுக்கு போய் சாப்டலாம். எனக்கு ரெப்பிரேஷ் ஆகணும்”
வாங்கிக்கொண்டு கிளம்பினோம். சாப்பிடும் பொழுதும் நான் எதுவும் பேசவில்லை. உண்டுவிட்டு உறங்கினேன். மனம் அமைதியற்று இருந்தாலும் உடலின் சோர்வினால் உறங்கிப் போனேன்.
நல்ல மதிய உறக்கத்திற்குப் பின் ஆறு மணிக்கு எழுந்தேன். ஆதி போனில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உறங்கவில்லை போலும்.
சூடாக எதாவது குடிக்க வேண்டும் போல் இருந்தது. சுக்கு பொடி அரைத்து வைத்திருந்தது இன்னும் இருந்தது அதை வைத்து சுக்கு காபி வைத்தேன். ஆதிக்கும் ஒரு டம்ளர் கொடுத்தேன். மொட்டை மாடிக்குச் சென்று சிறிது நேரம் காற்றாட நின்று விட்டு வந்தேன். இன்னும் ஆதி திரைப்படத்தில் தான் மூழ்கி இருந்தார்.
“மேல போய்ட்டு வந்தியா” நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததால் என்னிடம் கேட்டார்.
“ஆமா ஆதி”
சமையலறைக்குள் சென்றேன். சின்ன வெங்காயம் இல்லை. பெரிய வெங்காயம் நான்கு இருந்தது. தக்காளி மூன்று இருந்தது. காய்கறிகள் வாங்கி வரவேண்டும். நாளை தான் செல்ல வேண்டும்.
அரிசி மாவு கொஞ்சம் இருக்கிறது. பணியாரம் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. ஒரு பெரிய வெங்காயத்தை சட்னிக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை பணியாரத்திற்கும் அரிந்து கொண்டேன். மூன்று தக்காளி பழத்தையும் அரிந்து கொண்டேன்.
தக்காளி சட்னி செய்து விட்டு பணியாரம் சுட கல்லை அடுப்பில் வைத்தேன்.
“படம் பாத்துட்டு இருந்தேன் கவி.. என்ன செய்யணும்”
“சட்னி போட்டேன்ங்க.. பணியாரம் தான் ஊத்தணும்”
“நான் ஊத்தறேன் நகரு”
“இல்ல ஆதி பரவால்ல.. நானே ஊத்தறேன். கல்லுல வேற சரியா வரல. முட்டை ஊத்தி தான் எடுக்கணும். நான் பாத்துக்கிறேன். இன்னோரு ஹெல்ப் பண்றியா”
“சொல்லு கவி..
“அந்த பாத்திரம் எல்லாம் விளக்கிட்றியா”
“நைட் விளக்கிட்றேன்.. இப்போ சேர பாத்திரம் எல்லாம் சேர்த்து”
“ம்ம்”
பணியாரம் சுட்டு விட்டு ஆதியை சாப்பிட அழைத்தேன். சுடச்சுட ஆதியை சாப்பிடக் கூப்பிட்டால் எனக்கும் சேர்த்து செய்துவிட்டு வரச் சொல்லுவார் ஒட்டுக்காக அமர்ந்து சாப்பிட. அலுவலக வேலை அதிகம் இருந்தால் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிடுவார். மற்றபடி சேர்ந்தே உண்போம்.
இருவரும் சாப்பிட அமர்ந்தோம். முதலில் பணியாரம் நன்றாக வரவில்லை பின் முட்டை ஊத்தி சுட்டதும் நன்கு வந்திருந்தது. சட்னியும் காலையில் இருந்ததை விட சுவையாக இருந்தது.
“கவி.. நைட் ஊசி போடணும்ல.. சாப்பட்றதுக்கு அரைமணி நேரம் முன்னாடி” ஆசையாக சாப்பிட ஆரம்பித்த எனக்கு ஆதி இப்படி கேட்டதும் தொண்டையில் சிக்கி விழுங்க சிரமப்படுத்தியது.
“ஆதி.. நானே இதப்பத்தி பேசணும் நினைச்சேன்.. எனக்கு ஊசி வேணாம்.. இன்னொரு டைம் பாத்துட்டு அப்புறம் டிசைட் பண்ணலாம்”
“என்னடா உன் புராணத்தை இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன்” சற்று கோவமாகக் கூறினார் ஆதி.
“திடீர்னு ஒரு டெஸ்ட் எடுத்து உனக்கு சுகர் இருக்கு.. ஊசி போடணும்னா எப்படி ஏத்துக்க முடியும்”
“உனக்கு சுகர் இருக்கனால தான போட சொல்றாங்க”
“இன்னொரு டைம் சேலம்ல போய் பாத்துட்டு முடிவு பண்ணலாம்.. அப்படியே இருந்தாலும் நான் சாப்பாட்டுலயே குறைக்கிறேன்”
“மறுபடியும் எப்போ ஊருக்கு போய் எப்போ எடுக்குறது. என் குழந்தை அதுவரைக்கும் கஷ்டப்படணுமா” எங்கள் குழந்தையாக இருந்தது என் குழந்தை என்று ஆதியின் வாயில் வந்தது.
“என்னை பத்தி நினைச்சி பாருங்க.. எனக்கு அது பிடிக்கல”
“உனக்கு எதுதான் பிடிக்கும்.. சும்மா எத சொன்னாலும் குத்தம் கண்டுபிடிச்சிட்டு. இந்த காலத்துல எல்லாமே தான் மாறிப்போச்சு.. சாப்பாடு மாறிப்போச்சு நோயும் மாறிப்போச்சு.. இப்போ இருக்க சாப்பாடு தின்னுட்டு அந்த காலத்து மருத்துவம் பண்றேன்னா ஆவுமா.. எல்லாரும் போட்டுக்குறாங்கள்ல உனக்கு என்ன”
“எனக்கு மனசார ஒத்துக்க முடில.. அவங்களுக்கு பிடிச்சி போடறாங்களோ என்னவோ.. என்னால அக்ஸப்ட் பண்ண முடில ஆதி”
“அதெல்லாம் தெரியாது கவி.. நீ போட்டுத்தான் ஆகணும். உன் நியாயம் தர்மம்லாம் குழந்தை பொறந்தப்பறம் பேசு.. இப்போ உன் வயித்துல குழந்தை இருக்கு”
“நானும் குழந்தைக்காக தான் பேசுறேன்.. வயத்துல இருக்கும் போதே எதுக்கு மருந்து ஊசி”
“அப்போ நோயோட இருக்கப் போறியா”
“நான் எதாவது பண்றேன். சாப்பாட்டுல கண்ட்ரோல் பண்றேன். ஊசி வேணாம்”
“சொல்லிட்டே இருக்கேன். திரும்ப திரும்ப அதையே சொல்ற” தட்டை தூக்கி எறிந்துவிட்டு கை ஓங்கினார் ஆதி.
அடித்து விடுவாரோ என்ற பயத்தில் கண்களை மூடினேன் நான்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings