2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அவன் சுகுமார். ஒல்லியான தேகம், சோகம் அப்பிய முகம், கண்களில் நிரந்தர களைப்பு. ஏற்கனவே துருத்திக் கொண்டிருக்கும் அவனது தோள் எலும்புகள் அவன் மிகவும் லூஸான சட்டை அணிந்திருந்ததால் நன்றாகவே வெளியில் தெரிந்தன.
கையில் ஒரு அழுக்கான ஃபைலை வைத்துக் கொண்டு, நிதானமாய் நடந்தவன் கண்களில் தான் படித்த கல்லூரி தெரிய, “ஹும்… இந்த காலேஜ்ல படிக்கற காலத்துல எத்தனை சந்தோஷமா… கவலைன்னா என்னன்னே தெரியாம வாழ்ந்திட்டிருந்தேன். இப்ப வேலை கிடைக்காம… உலகத்தின் மொத்தக் கவலைகளையும் மனசுல சுமந்துக்கிட்டு ரோடு ரோடாத் திரியறேன்!… காலக் கொடுமை”
லேசாய்த் தலை வலித்தது. சட்டைப் பாக்கெட்டினுள் கையை விட்டுத் தேடினான். கசங்கிய பத்து ரூபாய்த்தாள் சிக்கியது. பேண்ட் பாக்கெட்டினுள் முயற்சிக்க சில சில்லறைகள் கிடைத்தன.
“காலேஜுக்குள்ளார போய் கேண்டீன்ல ஒரு காஃபி சாப்பிட்டுட்டா என்ன?”
உள்ளே சென்றவன், டோக்கன் வாங்குமிடத்தைத் தேட, “சார் டோக்கனெல்லாம் இல்லை!… நீங்க போய் டேபிள்ல உட்கார்ந்து சர்வருக்கு ஆர்டர் பண்ணுங்க ஐட்டங்களும்… பில்லும் உங்க மேஜைக்கே வரும்”
”இந்த சிஸ்டம் பரவாயில்லையே” ஒரு மேஜையில் அமர்ந்தவனிடம் சர்வர் வந்து நிற்க காஃபி ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தான்.
மூன்றாம் நிமிடத்தில் காஃபி அவன் மேசைக்கு வர, எடுத்துப் பருகி விட்டு கல்லாவிற்கு வந்து பில்லையும் பணத்தையும் வைத்த போது அந்த முதலாளி யாருடனோ மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். “பண்ணிடலாம் சார்!… நூறு பேருக்கு காலை டிபன்!…. ஐம்பது பேருக்கு மதிய லன்ச்… அவ்வளவுதானே?… ஜோரா பண்ணிடலாம் சார்!… நீங்க சிரமமே பட வேண்டாம்… எங்ககிட்ட வேன் இருக்கு… நாங்களே… உங்க இடத்துக்கு கொண்டு வந்து டோர் டெலிவரி குடுத்திடுவோம்”
அந்த முதலாளி முகத்தைக் கூர்ந்து பார்த்த சுகுமார் ஆச்சரியமானான். “அடடே… இவனா இப்ப முதலாளி?… இவன் நான் காலேஜ்ல படிக்கும் போது இதே கேண்டீன்ல டீ ஊத்திக் குடுக்கற பையனாச்சே?…” சட்டென அடையாளம் கண்டு கொண்டு, “என்னப்பா… சௌக்கியமா?” கேட்டான்.
புருவங்களை நெரித்துக் கொண்டு சுகுமாரைப் பார்த்தவன், “சார்… யாரு?… தெரியலையே?” மிகவும் பவ்யமாகச் சொன்னான்.
“அட… என்னப்பா?… என்னை மறந்திட்டியா?… ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நான் இங்க படிச்சிட்டிருந்தேன்!”
“ஓ… அப்படியா?… ஸாரி சார் ஞாபகமே வரலை!… அப்ப நான் டீ பாயா இருந்தேன்”
மெலிதாய்ப் புன்னகைத்த சுகுமார், “ம்ம்ம்… நான் ஒரு நிகழ்ச்சியை சொல்றேன்!… அதுக்கப்புறம் ஞாபகம் வரும் பாரு!… ஒரு தடவை நீ தவறுதலா என் மேல் டீயை சிந்திட்டே…. நான் பயங்கரமா கோபம் வந்து அத்தனை பேருக்கு நடுவுல உன்னை எட்டி உதைச்சு… கீழே தள்ளி… பெரிய கலாட்டாவே பண்ணினேனே?… அது ஞாபகமிருக்கா?” கேட்டான்.
கண்களை மூடிக் கொண்டு யோசித்த அந்த ஹோட்டல் முதலாளியின் மூளைக்குள் அந்த நாளைய நிகழ்ச்சி படமாக ஓடியது.
*****
“ஏண்டா ராஸ்கல்!… அறிவிருக்காடா உனக்கு?… இப்படியாடா பேண்ட் சட்டை மேலெல்லாம் டீயைக் கொட்டுவாங்க?…” கேட்டபடியே எட்டி உதைத்தான் சுகுமார். அந்த ஒல்லியான டீ இளைஞன் தெறித்துப் போய் விழுந்தான். கிட்டத்தட்ட அவனுக்கும் சுகுமாரின் வயதுதானிருக்கும்,
“அண்ணே… மன்னிச்சிடுங்கண்ணே!.… கை தவறிக் கொட்டிடுச்சுங்கண்ணே” கெஞ்சினான் அவன்.
“நாயே… இந்த மாதிரி பிராண்டட் பேண்ட் சட்டையையெல்லாம் நீ வாழ்நாள்ல பார்த்திருப்பியாடா?” தரையிலிருந்து மெல்ல எழுந்து நின்ற அந்த டீ பாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சுகுமார்.
கேண்டீனிலிருந்த அத்தனை மாணவ, மாணவிகளும் அமைதியாய் அந்தக் காட்சியைப் பார்த்தபடி நின்றிருந்தனர். ஒன்றிரண்டு குறும்புக்கார மாணவர்கள் அதனை வீடியோவும் எடுத்தனர்.
தொடர்ந்து சுகுமாரிடம் அடிகளையும், திட்டுக்களையும் வாங்கிக் கொண்டேயிருந்த அந்த இளைஞன் தன் வயதையொத்த மாணவிகள் நடுவில் தனக்கு ஏற்பட்ட அந்த அவமானத்தால் கூனிக் குறுகினான். தன்னாலும் அந்த சுகுமாரைத் திருப்பித் தாக்க முடியும் என்பதும், தாக்கினால் அந்த சுகுமாரால் அதைத் தாங்கிக் கொள்ளக் கூட முடியாது என்பதும், தெரிந்திருந்தும் தன்னை அடக்கிக் கொண்டு, அமைதியாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் நகர்ந்த்தும், அங்கிருந்த மாணவர் கூட்டம் “ஹோ….”வெனக் கத்தியது. ஏதோ பெரிய சாதனையைச் சாதித்து விட்டவனைப் போல், பலமாய்ச் சிரித்தபடி மாணவிகளைப் பார்த்தான் சுகுமார். மாணவிகளில் பலர் முகம் சுளித்தனர்.
தொடர்ந்து பல நாட்கள் சுகுமாரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிப் போனான் அந்த இளைஞன். அவனுடைய அந்த அமைதிப் போக்கை கோழைத்தனம் என்று தவறாய் நினைத்துக் கொண்டு, அவனை தினமும் சீண்டிச்சீண்டி மகிழ்ந்தான் சுகுமார்.
*****
“என்னப்பா?… மலரும் நினைவுகளா?” சுகுமார் பெரிய குரலில் கேட்க, சுயநினைவிற்கு வந்தான் அந்த கேண்டீன் முதலாளி.
கண்களைச் சுருக்கிக் கொண்டு சுகுமாரைக் கூர்ந்து பார்த்து விட்டு, “சுகுமார் சாருங்களா நீங்க?…என்ன சார் இப்படி இளைச்சுப் போயிட்டீங்க?…காலேஜ்ல படிக்கறப்போ ஜிம்முக்கெல்லாம் போயி… எப்படி வாட்டசாட்டமா ஹீரோ மாதிரி இருப்பீங்களே சார்?… இப்படித் துரும்பாய்ப் போயிட்டீங்களே சார்?… உடம்புக்கு ஏதாச்சும் பிரச்சினையா சார்?” ஒரு முதலாளி ஸ்தானத்தில் இருந்தும் அதே மரியாதையுடன், அதே பயபக்தியுடன் அவன் சுகுமாரைக் கேட்க, வெட்கிப் போனான் சுகுமார்.
“என்ன சார்… இப்ப நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க?… வேலைக்குப் போறீங்களா?… இல்லை பிசினஸா?”
அதற்கு பதில் சொல்ல முடியாத நிலையிலிருந்த சுகுமார், அந்தப் பேச்சை மாற்றும் விதமாய், “அது சரிப்பா…. உன்கிட்ட அப்பவே கேட்கலாம்!ன்னு இருந்தேன்… ஆனா கேட்கலை… அதனால இப்பக் கேட்கறேன்… சொல்லு…. அன்னிக்கு அத்தனை பேருக்கு முன்னாடி எத்தனை கேவலமா உன்னை எட்டி உதைச்சு… கன்னத்தில் அறைஞ்சு… கண்டபடியெல்லாம் திட்டினேனே?… உனக்கு ஏன் ரோஷமே வரலை?… என்னைய திருப்பி அடிச்சிருக்கலாமல்ல?” கேட்டான்.
“என்ன சார் பேசறீங்க நீங்க?… அப்ப என்னோட நிலைமை என்ன?… சாதாரண டீ பாய்!… நான் ஒரு ஸ்டூடண்டான உங்களை எதிர்த்துப் பேசியிருந்தா என்னாகும்?.. .எல்லா ஸ்டூடண்ட்ஸும் உங்களுக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாங்க!… உடனே எங்க மொதலாளி என்னைய வேலையை விட்டுத் துரத்தியிருப்பார்!… அப்படி நான் போயிருந்தா… இன்னிக்கு இதே கேண்டீனை காண்ட்ராக்ட் எடுத்து முதலாளி ஆகியிருக்க முடியுமா சார்?…பொறுமையா இருந்துதான் சார் சாதிக்கணும்!…”
சுகுமார் அவரை வைத்த விழி வாங்காமல் பார்க்க, “சார்… நீங்கெல்லாம் கையில படிப்பு இருக்கற தைரியத்துல கோபப்படுவீங்க!… நான் படிக்காதவனாச்சே?… ஆனா ஒண்ணு சார்… அப்ப என் மனசுக்குள்ளார ஒரு வெறி உண்டாச்சு. எந்த இடத்துல நாம அவமானப்படுத்தப்படறோமோ… அதே இடத்துல தவிர்க்க முடியாத சக்தியா உருவெடுத்துக் காட்டணும்!ன்னு…. கடுமையா உழைச்சேன்… பொறுமையா எல்லா விஷயங்களையும் கையாண்டேன்… கேண்டீன் காண்ட்ராக்டர் ரொம்ப வயசாயிட்டதால நடத்தை முடியலைன்னு விலகினார்!… நான் அந்த காண்ட்ராக்டை எடுத்தேன்… இப்ப என்கிட்ட நாப்பது பேர் வேலை பார்க்கறாங்க!… இந்த கேண்டீன் இல்லாம வெளி ஆர்டரெல்லாம் எடுத்துப் பண்ணிட்டிருக்கேன்!” தன் வெற்றிச் சரித்திரத்தை அவன் சொல்லிக் கொண்டே போக, அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாய் சுகுமாரின் மனதில் விழ.
“ஹும்… காலேஜ்ல படிச்சு முடிச்சு பட்டம் வாங்கியும்… சரியான நடத்தை இல்லாததால்… எந்த வேலையிலும் நிலைக்க முடியாமல்… இன்னிக்கு வரைக்கும் வேலை… வேலைன்னு அலைஞ்சு திரிஞ்சுக்கிட்டிருக்கேன்!…ஆனா… படிக்காம, பட்டம் வாங்காம, வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களையும், அவமானங்களையும், அடிகளையும்…. தனக்கான பாடங்களாய் எடுத்துப் படிச்சிட்டு உயர்ந்து நிற்கிறான் இவன்….”
“நான் இவனுக்குக் கொடுத்த உதைகளும், அறைகளும், திட்டுக்களும், இவனுக்கு பாடமாகி இவனை உயர்த்தியது போல், நான் இவனையே ஒரு பாடமாய் எடுத்துக்கிட்டு, இனியாவது நாம முன்னேற முயற்சிக்கலாமே?… வேலையைத் தேடி ஏன் அலையணும்… நாமே ஏதாச்சும் சின்னதா ஒரு வியாபாரம் பண்ணுவோமே?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வெளியேறிய சுகுமார் தன்னை ஒரு புதுமனிதனாய் உணர்ந்தான்.
அந்த வினாடியில், நம்பிக்கையும், தெம்பும் அவன் தோள்களில் ஏறி அமர்ந்து கொள்ள, உற்சாகமாய்த் தெருவில் இறங்கி நடந்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings