in ,

விறலியர் நடனம் (சிறுகதை) – சஞ்சிதா பாலாஜி

 2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ததீங்கிணதோம் …….. தென்மதுரை” எனக் கலைத்தேன் தமிழ் ஒலிக்க சிலையவள் கைகளை அலையலையாக அசைத்தாள்.

மூவிரல் மொட்டாக, இருவிரல் கொம்பாக அபிநயம் பிடித்து தன் கூர்வேல் பார்வையை புறம் தொங்கிய மலர் மாலை மீது பதிக்க, ‘சதக்’ என்று குறுவாள் பாய்ச்சிய ஒலி. குருதி தெறிக்க, ஆண் உடலொன்று தன் இறுதி ஊர்வலமாக, மலையிலிருந்து உருண்டு ஓடியது. “காம்பொன்று கிள்ளப்பட்டது” என்று ஆடியவள் கூறி நிறுத்தினாள்.

மாதவி வழி வந்த தாதி இவள். தாதி என்றால் வேறு நாதியின்றி, வேறு தொழில் செய்யும் அபலைப் பெண் அல்லள். ஆதி பகவன் பாதம் பணிந்து நாத ஒலிக்கு ஆடும் நயம் கொண்ட மாதவிக் குல மாணவி, அரிமலர் என்று திருப்பெயர் கொண்ட தெய்வத்தாதி. விறலியர் குலத்து வீரநங்கை.

எந்நிலையிலும் தன்னிலை மறந்து பண்ணிலைக்கேற்ப நன்னிலத்தில் தாள் பதிக்கும் இந்நிலத்தவளுக்கு செந்நிறத்துக் குருதி வேண்டும் இந்நிலை எந்நிலை வந்தது? நாட்டியப் பேரொளியை வாட்டியெடுப்பது திமிர் ஏற்றிய ஆடவர் ஆற்றிய தடம் மாறிய செயல்களே! தன்னை மட்டுமன்றி, கணிகையர் குலத்தையே இச்சாபம் சூழ்ந்திருப்பதை இக்கணினிக்கண்ணி அறியாமலா இருப்பாள்?

அதிலும் ஆடலுடன் கூடிய மாதரை நாடி ஆடவர் ஆசையைப் பூர்த்தி செய்ய அழைப்பதை அறிந்திருந்தாள். நீதிமன்றமோ, நீதி காக்கும் காவல்துறையோ வெறும் அலைக்கழைப்புக் கூடங்களாக மாறிப் போயின. அத்துடன் அங்கும் நடன மாதருக்கு மதிப்பில்லை. அன்பும் அக்கறையும் கொண்ட சிலரும் அனுசரித்து விலகிப் போகச் சொல்கின்றனர்.

அவர்களைச் சொல்லிப் பாதகமில்லை. பாவம்…….கைப்பாவைகள் ஆயினர். “நடன நங்கையருக்குப் பங்கம் விளைவிக்கவே கங்கணம் கட்டித் திரிகின்றனரோ!” என்ற கோபமே குருதித் தாகமாக மாறியது. இத்தகு கோபத்தால் கொலையும் செய்யத் துணிவரோ?

பொறுமை வடிவான பெண் குலத்திற்கு இது போதாதே! தன்னோடு ஆடிய தோழியை தோல் கிழிந்து மனம் துவண்டு மருத்துவமனையில் நோயாளியாய் கண்டு மனம் வெந்து நொந்து நியாயத்திற்காகவும் தோழிக்காகவும் அவள் போன்ற பல பெண்களுக்காகவும் பிற பெண்டிர்க்காகவும் கயவர்களைக் கொய்ய முற்படுகிறாள்.

அவள் கணக்கின்படி ஐவரில் முதல்வன் இவன். தனியார் நிறுவனம் ஒன்றின் முதல்வர் பொறுப்புடையவன். காஞ்சியில் கோயில் திருவிழாவில் இவள் நடனத்தைக் கண்டு அவன் இச்சைக்கு சொல்வலை விரித்தான். இவள் வலை விரிக்காமலேயே வீழ்ந்தவன் இவன். அவன் வலைக்கே இசைந்து தனியே தன் நடனம் காணும் நிபந்தனை விதித்து கண்ணாலே கண்டதுண்டம் செய்தாள் அக்கயவனை.

அரிமலரின் அடுத்த குறி ஆண்டிப்பட்டியில் அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கிறது. ஆண்டிப்பட்டிக்குள் அரசியாய் கால் பதித்தாள். சாலையில் சந்தைக்குச் செல்லும் வழியிலேயே ஆடு வலிய வந்து வலையில் வீழ்ந்தது.

“தென்பாண்டிக் குயிலே! பேரழகு மயிலே!” என்று இவளைப் பார்த்து பாடியபடி தன் சகாக்களுடன் களித்திருந்தான். இச்சமயத்தில் எப்பெண்ணும் முகம் சுளிப்பாள். இவளோ சிரித்தாள்.

அவன் வலை விரித்தான். இவள் வரையறுத்தாள். நிபந்தனையின்படி முதலில் நடனம், அதற்கு அவன் தன் கூட்டாளிகளும் காண வேண்டும் என்றான். இசைந்தாள் அவள்.

இது அவள் திட்டத்திலேயே இல்லை. இருப்பினும் வதம் செய்யத் தயாரானாள். நூறு பேர் இருப்பர் அவன் கூட்டாளிகள். எவரும் நல்லான் அன்று; உலகிற்கே பொல்லான். குருவணக்கத்திலேயே இருவர் இதயத்தில் குறுவாள் பாய்ந்தது. அசடு வழியும் இக்கயவர்களின் காதில் விழுந்த சொற்ப சத்தமும் சதங்கை சத்தத்தில் சிதைந்து போனது. அரிமலரின் வேலை எளிதானது.

பத்துப் பத்தாக இருந்த ஆள்பலம், பத்தானபோதே புத்தி வந்தது அப்பதர்களுக்கு. “உன்னாலே என் ஆட்கள் மாண்டு கிடக்கின்றனரோ?” என்று யாவரும் வர, “இப்போதுதானே என் ஆடலின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளோம். அதற்குள் என்ன அவசரம்?” என்று கூறியவள் இருமுனைத்தீ சிலம்பங்களை இருகைகளில் ஏந்தியபடி ஆடத் தொடங்கினாள்.

அதற்கேற்ப பாரதியின் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடல் ஓடியது. கையில் ஏந்துவது கலைத்தீ அன்று, சிதைத்தீ என்று இக்கலை மகளுக்கே தெரியும். தாக்க வந்த யாவரையும் தீயினால் தாக்கினாள். வலப்புறமும் இடப்புறமும் இவள் தீயால் தாக்க, பச்சைப்புல் பற்றியது.

அதில் ஒருவன் புது அழகியல் என்று வைக்கோல் ஆடை அணிந்திருந்தான். பற்றிய தீயில் வைக்கோலுடன் அவனும் எரிந்தான். எஞ்சியோரில் நால்வர் தம் மேலாடையைக் கழற்றித் தீயை அணைத்தனர். சிலம்புகளைக் கொண்டு மனம் தளராமல் தாக்குதலைத் தொடர்ந்தாள்.

நவகயவர்களுக்கு நடுவே கன்னி தனியே சிக்குண்டாள். தன்னுள் மன்னிக் கிடந்துறங்கும் எண்ணிலடங்கா ஆற்றலைக் கன்னியிவள் தென்னன் மகள் வண்ணம் காட்டினாள். கண்ணில் கனல் காய, விண்ணில் கை கால்கள் பாய, அவை பகைவர் உடலை வேய, சீற்றம் கொண்ட ஆற்றலால் புறதேகங்கள் தேய, ஆய்மகனின் வாய்நிறம் தீயவர் தேகங்களில் ஓட, சாளரங்கள் போல் நாலடவர் வீழ்ந்தனர். ஆர்ப்பரிக்கும் ஆவல் கொண்ட அரிமலரின் உயிர் பறிக்கும் ஆட்டம்!

ஐவரிடையே அழகி அவதியுற்றாள். எஞ்சியோர் நெஞ்சம் தொடங்கி உடலெல்லாம் செஞ்சுடர் குருதி பொங்கியோடியது. நெஞ்சம், காலிடை, தாடை எனத் தலைவனைத் தன் முழு ஆற்றல் கொண்டு தீக்கன்னியிவள் குத்தி உதைக்க, மீதி நால்வருள் பெருத்த ஒலியுடன் குண்டுகள் பாய்ந்தன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் “அரிமலரே! ஒளி படைத்த கண்ணினாய்!” என்று கூச்சலிட்டபடி வந்தான். “வாடா மணிவண்ணா!” என்று அரிமலரும் தள்ளாடியபடி உதிரம் சொட்டச் சொட்ட கூறிக் குறுநகை புரிந்தாள்.

‘யாரடா இவன், திடீரென்று எங்கிருந்தோ வந்தான். சுட்டான். இப்போது செல்கிறானா’ என்ற தம் மனவோட்டம் என் கண்ணில் தெரிகிறது. அரிமலரின் விழி விழுந்தவுடன் வாள் விழுகிறதே அவ்வாட்களை அவ்விதம் பொருத்துபவன் இவனே: மணிவண்ணன். என்றும் கால் மணி நேரத்தில் காரியம் முடித்து கச்சிதக் குறுநகையுடன் கால்நடையிட்டு வரும் கன்னிகையை இன்று இருமணி நேரம் ஆகியும் காணாத காரணத்தால் கத்திக் கொண்டே கையில் துப்பாக்கியுடன் மங்கையை விடுத்து மீதி நால்வரைச் சுட தன் தாளும் கையும் சேர தலைவனைத் தானே கொன்றாள் கனல் கன்னி. இதை முதலிலேயே செய்திருக்கலாமே! சுட்டுத் தள்ளி இருக்கலாமே! என்று நீங்கள் கேட்பீர்கள். ‘ஆ……… அதெல்லாம் கூடாது. ஆடும் நங்கையரை அவமதிப்போரை என் ஆட்டத்தாலேயே அழிப்பேன்’ என்ற அரிமலரின் அடங்கா வெறியால் தான் இத்துணை ஆர்ப்பாட்டமும் அத்துடன் இவ்வழியிலேயே தடயங்கள் ஏதும் எஞ்சுவதில்லை.

தோழனால் தோளில் தாங்கப்பட்டு தத்தித் தத்தி நடந்த தூரிகையை தள்ளாடச் செய்யத் துள்ளி வந்தது ஓர் தெள்ளிய ஆணை.

“தாமரைத்தாள் கொண்ட தாமரைக் கண்ணனின் தூமணிச் செயல்களை மட்டுமே இன்னும் இரு திங்களுக்கு ஆட வேண்டும்.” விறலியர் சங்கத்து ஆணையை அரிமலர் அலட்சியப் படுத்துவதற்கில்லை.

தள்ளாட வந்த ஆணையை தத்தித் தத்தி நடக்கும் நிலையிலும் தித்திப்புடன் ஏற்றாள் தெய்வத் தாதி. மாதர்குல மானம் காக்க மாதவன் துணை நிற்கிறான் என்ற திமிருடன் தன் பட்டியலில் மூன்றாமவனைக் கண்டறிந்தாள்.

கண்ணன் அணைத்த புயல் இவனை அணைக்கவும் தோதாகிறது. எங்ஙனம் தாமோதரன், திருணாவர்த்தன் தடக்கையில் இருந்து துள்ளித் தாவி, தோளில் ஏறி தரைக்குத் தள்ளி தேகம் பிளந்தானோ, அவ்வாறே அவன் தாதி தாளத்திற்கேற்ப தரையில் இருந்து துள்ளித் தாவி, தாளால் தள்ளி தீயவன் வயிற்றடி தன் மூட்டுத் தைத்து, அதில் தடாகங்களாய் உதிரம் ஓட மோதிய கற்பாறைகளைக் கொண்டே அவன் கைகளுக்கு இவள் காப்பிட தன் குறுங்கைகளில் குரூரமாய் வளர்த்திருந்த கூர் நகங்களில் கூர் கண்ணாடிக் கூறுகளைக் கொண்டு அவன் குறுந்தேகத்தைப் பிளந்தாள்.

மேலும் கீறல்களிட்டு வனவிலங்கின் செயல் போல் சித்தரித்தாள் இச்சம்பவத்தை. அரசியல் ஊடகத்தில் ஊறியவனை அசுர வதத்தால் அழித்தாள். உற்றது செல்வாக்கு என்று பெற்றவர் பெயரில் பெரிய இடம் என்று ஊர் சொல் உண்டு வாழ்ந்தவனை வானுயர் காளிங்கனாய் கொன்றாள். எளியவள் இவள் ஊரறிந்த காளிங்க நடனத்தை கூறவும் வேண்டுமோ!

கண்ணனாகவும் காளிங்கனாகவும் காரியம் கொண்ட கன்னிக்கு மந்திரப் போர்வை உடுத்திய வேடமுனியே இறுதி இலக்கு. உண்மையில் இறையருள் பெற்று இறைவனுடன் உறவாடும் ஆச்சார்யர்கள், முனிவர்கள், பக்தர்கள், சாமியார்கள் இக்காலத்திலும் நிஜத்தில் உண்டு. ஆனால் நகல்களோ நிறையவே உண்டு.

இறையருள் பெற்றோரை வணங்குவோம் நகல்களாக திரையருள் பெற்றோரை அல்ல. இப்படி ஒரு நகல் தன் குற்றத்தையும் நினைவில் கொண்டு தன் கூட்டாளிகள் மரணமுற்றதையும் கருத்தில் கொண்டு சரியாக ராசலீலையான கண்ணனின் குரவைக் கூத்தன்று அரிமலருக்கு அழைப்பு விடுக்கிறான். அப்போதும் மதிக்கு எட்டவில்லை இம்மதி கெட்டவனுக்கு.

மணிவண்ணன் கண்ணனாக ஆட, இருவர் சேர இரவில் குரவைக் கூத்து அரங்கேறியது. ஆடும் நயத்தில் முழு கோபிகையாகவே மாறினாள் அரிமலர். இவளின் ஆட்டத்தில் எத்தனை உயிரோட்டம் இருநத்து என்றால், அந்த வேடமுனி நாதலயத்தில் இவள் ஆட்டத்தால் ஈடுபட்டான்.

தன்னோடே விரகதாப காட்சிகளில் கோபிகையாகவே அவன் ஆட, உண்மையிலேயே மனம் திருந்தியவனோ அல்லது தவறாக அக்கூட்டத்தில் சிக்கிய அப்பாவியோ என்று அரிமலரின் மனம் கேள்வி அலைகளைப் பாய விட்டது. குற்றவாளியே ஆனாலும் மனம் திருந்தி இருந்தால் பாதகம் செய்யாமல் போய்விடலாம் என்று எண்ணி இருந்தாள் அரிமலர். ஆனால் அவள் எண்ணங்கள் யாவும் தவறாகும்படி அவள் இடை கிள்ளினான்.

கோபிகா பாவத்திலும் கை வைக்கும் கயவனை எக்காரணத்திற்காகவும் நடமாட விடக் கூடாது என்று தீர்மானித்தாள். கண்ணனைக் காணா வேளையில் கதறும் கோபிகையாக காற்றில் அலைகளிட்டு அவன் கழுத்தில் அடிக்க ‘ஆ!’ என்று அவன் அலற, “ஆ! என் கண்ணா!” என்று தோழிமார் அடித்து அரிமலர் அழ, அவள் அடிபட்டு அவன் நெஞ்சு வீங்க, கூர் நகம் பட்டு மார்பில் கீறல்கள் விழுந்தன.

பாத்திரமாகவே மாறியதால், இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று எண்ண, அதற்கேற்றாற்போல் தரையில் மண்டியிட்டு கண்ணன் தளர்நடையை விரக பாவத்தோடு செய்து காட்டினாள். அப்போதும் அவன் கால்களை நசுக்கித்தான் சென்றாள். கண்ணனைக் கண்டாற்போல் கீழே கிடந்த வேடமுனி மேல் பாதம் பதித்து ஓடினாள். அவனோ இனிமேல் அடி தாங்க முடியாது என்று தன் இருக்கைக்கே ஓடி விட்டான். கண்ணன் அவளை மட்டும் அழைத்துச் செல்கிறானோ என்று அந்த கோபிகையைக் கடிந்த பிற கோபியர் போல் அவனை அடித்தாள் அரிமலர்.

ஆனால் இம்முறை தன் கை உறைகளில் ஒளித்து வைத்திருந்த குறுவாட்கள் வெளிப்பட அவனைத் தாக்க, வயிற்றில் குத்துப் பட்டு குத்துயிரும் குலை உயிருமாய் இருக்கையில் தன் பிடரி அவிழ்த்து ஐந்தாறு துர்சக்திகளைத் தன்னுள் செலுத்தி அசுர உருக் கொண்டான். மணிவண்ணனும் அங்கு வந்து சேர, மங்கையுடன் அவனையும் மலை போன்ற பெருந்தீ சக்தி கொண்டு தாக்கினான்.

ஆனால் அச்சக்தி அவர்களை நெருங்கியவுடன் ஏவிய அவனைத் தாக்கி சாம்பலும் எஞ்சா வண்ணம் காற்றிலேயே கண்டம் பண்ணியது. இருவரும் வியக்க, மயக்கும் குழலிசையோடு மயிற்பீலியும் வந்து விழ இது மாயக் கண்ணனின் வேலை என்று உணர்ந்தனர். செய்யும் செயலில் நன்மை இருப்பின் நியாயம் இருப்பின் நாராயணன் துணை நிற்பான் என நெகிழ் மனத்துடன் நன்றி கூறினர்.

“தேவ ஆடல் அரசியே! இன்னும் உன் ஆடல் முடியவில்லை” – மணிவண்ணன்.

“ஆமாம் மணிவண்ணா! ஒரு தோழி கணக்கு முடிந்தது. இன்னும் எண்ணிறந்த தோழிகளின் கணக்கு பாக்கி இருக்கிறது. இவன் போல் பிறவிகளை எல்லாம் உருவி எடுக்க வேண்டும். இறைவனே துணை இருப்பின் தயக்கம் எதற்கு? இவர்கள் ஒழிந்தாலே ஆணினம் அவமானத்திற்குள்ளாகாது.” – அரிமலர்.

“ஆண்களை இன்னமும் மதிக்கிறாயே! மாதர் குல மாணிக்கமே! – மணிவண்ணன்.

“ஆணை மதித்தாலே பெண் குணவதி ஆவாள். பெண்ணைப் போற்றுபவனே, பெண்மையைப் பாதுகாப்பவனே ஆண் என்று சொல்லவே அருகதை உடையவன். இப்போது மடிந்தார்களே இச்சைக்கு அடிமை தேடுவோர், இவர்களெல்லாம் ஆண்களே அல்லர். உண்மையைச் சொன்னால் இவர்கள் பாலினமே இல்லாப் பதர்கள். இப்பதர்களை வெட்டி எறிய வேண்டுவது அவசியம்” என்று முடித்தாள் அரிமலர்.

கதை நிறைவுற்றது. அரிமலரின் ஆடலல்ல. யாரறிவார் தம் இல்லத்திலேயே இருக்கும் நங்கையும் இந்நடன மாதாக இருக்கலாம். எனவே தம் இல்லத்தோரை ஆண்களாக வளருங்கள். இனிவரும் காலமாவது பதர்கள் அற்ற பொற்காலமாக இருக்கட்டும்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொந்தம் ஒரு கை விலங்கு (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன்

    பச்சோந்திகள் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.