in ,

விண்ணைத் தொடலாம் வா (சிறுகதை) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“அக்கா… எனக்கு மழையில நனையணும்” என்று அடம்பிடித்து அழ ஆரம்பித்தான் ஆறு வயது பாலு.

கமலிக்கும் ஆசையாக இருந்தது. “சரி வா, நனையலாம். ஆனா நான் சொல்றபடி தான் நீ கேட்கணும் சரியா?” என்றாள்.

ம்.. சரி வா” என்று துள்ளி குதித்தான்.

“இரு” என்று சொல்லி பாலிதீன் கவரை அவன் தலையில் மாட்டிவிட்டாள் கமலி.

“ம்…ஹும்….இது வேண்டாம்” என்று கழட்டி எறிந்தான் பாலு.

“அப்போ கிடையாது, மழையில நனைய விட மாட்டேன்”என்று மறுத்தாள் கமலி.

“சரி,சரி” என்று அரைமனதுடன் ஒப்புக்கொண்டான் பாலு.

தன் தாவணியை திருத்திக் கட்டிக் கொண்ட கமலியைப் பார்த்து பாலு, “நீயும் நனையப் போறியா?” என்று குதித்தபடியே கேட்டான்.

“இல்லை, எனக்கு இருக்கிற மூணு ட்ரெஸ்ல இரண்டு காயாம இருக்கு. ம்….எனக்கும் மழையில நனைய ஆசையாய் தான் இருக்கு, அப்புறம் அம்மாகிட்ட யாரு திட்டு வாங்கறது?” என்று பெருமூச்சு விட்டாள் கமலி.

“சீக்கிரமா வா, அம்மா கடையிலிருந்து வந்துடப்போறாள்” என்று குதித்து குதித்து மழையில் நனையப் போகும் மகிழ்ச்சியில் குதூகலித்தான் பாலு.

பத்துக் குடித்தனத்திற்கும் பொதுவாக இருக்கும் மொட்டை மாடியின் நடுவில் போடப்பட்டிருந்த முல்லைக் கொடிப் பந்தலின் நிழலில் கமலி நின்று கொண்டு பாலுவை மழையில் நனைய விட்டாள்.

சிரித்துச் சிரித்து மழையில் நனைந்து, குதித்தபடி குளித்து அனுபவித்த அவனைக்கண்டு தானும் நனைந்திட, பொங்கி எழுந்த தன் ஆசையை தணிக்கமுகத்தை மட்டும் மழையில் நீட்டினாள்.

“அய்யய்யோ… அந்த அண்ணா பார்க்கறாங்க, அம்மாகிட்ட சொல்லிடுவாங்க, நான் போறேன்” என்று ஓடினான் பாலு.

“யார் அது?” என்று கேட்டபடியே நிமிர்ந்துப் பார்த்தாள்.

தெருவின் எதிரில் இருக்கும் பெரிய இரண்டு அடுக்கு தனிவீட்டின் மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்தான் பிரசாந்த். பாலுவைப் பார்த்து கை அசைத்துக் கொண்டிருந்தவன், கமலி பார்த்ததும் இலேசான சிரிப்புடன் கையை இறக்கி விட்டு பாலு ஓடுவதை பார்த்தான். கமலியும் ஒரு சிநேகப் புன்னகையுடன் தலை தாழ்த்தியபடி பாலுவைத் தொடர்ந்தாள்.

மழை நின்றதும் அந்திப்பொழுதின் ஆனந்தத்தில் விளையாட மாடிக்குச் சென்றனர் பாலுவும், இன்னும் சில சிறுவர்களும்,சிறுமியரும்.

அவர்கள் விளையாடுவதை அவ்வப்பொழுது ரசித்தபடி, மழையில் குளித்த மரங்களின் இலைகளையும், காற்றின் குளிர்ந்த மணத்தையும், தெளிந்த வானத்தில் சிவந்து தவழ்ந்த மேகங்களையும் கண்டு ரசித்தாள் கமலி.

மனம் ஏதோ ஒரு ஆனந்த ஏகாந்தத்தில் லயித்து தனை மறந்து கைகளை விரித்து தட்டாமாலைச் சுற்ற ஆரம்பித்தாள். வேகத்தை அதிகப்படுத்தி சுற்றிச்சுற்றி கீழே சரிந்துப் படுத்தாள். கண்களை திறக்க முடியாதபடி தலை சுற்றியது. சிரித்து ரசித்தாள்.

அவள் செயலை ரசித்துக் கொண்டிருந்த பிரசாந்த்திற்கு அவளுடன் தானும் கைக்கோர்த்து சுற்ற வேண்டும் என ஆசை துளிர்த்தது.

கமலி எழுந்தாள். நினைவு வந்தவளாய் சுற்றும் முற்றும் பார்த்தாள் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று. அவள் தன்னைப் பார்க்காதவாறு அறையின் உள்ளே சென்று ஜன்னல் வழியாக பார்த்தான் பிரசாந்த்.

யாரும் தன்னைப் பார்க்கவில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டு மீண்டும் கைகளை விரித்தபடி சுற்ற ஆரம்பித்தாள். சரிந்து சரிந்து விழுந்து விழுந்து ஆனந்தித்தாள்.  அவள் விழும் போதெல்லாம் அவளுடன் சேர்ந்து அவன் மனமும் அவள் மேல் சரிந்து விழுந்து உடல் முழுவதும் பூரித்தது.

இப்படியாக பல அந்திமாலைப் பொழுதுகள் அவள் குழந்தைகளுடன் குதித்தோடி விளையாட, கையில் வைத்திருக்கும் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸில் செல்லாத பிரசாந்த்தின் மனம் அவளை ரசித்து ரசித்து ஆனந்தக்கடலில் மூழ்கியது. கமலியை காணாத பொழுதுகள் ஏக்கமும், வேதனையும் அவனை வாட்டியது. அவன் மனதில் காதல் எனும் விதை வெடித்து முளைத்து வளர்ந்தது.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தது. பிரசாந்த் கல்லூரி படிப்பு இரண்டாம் வருடம் முடித்தான்.

கல்லூரி படிப்பு முடிந்ததும், அவன் குடும்பத்தார் அத்தை பெண் பொன்மணியை திருமணம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இதை கேட்ட பிரசாந்த்தின் மனம் வேதனையடந்தது. தன் காதல் கனவுகள் நிறைவேறாதா என தவித்தது. தன் நெருங்கிய நண்பனிடம் தன் மனவேதனையை வெளியிட்டான்.

“டேய்…. அவகிட்ட பேசினியா?” என்றான் நண்பன் சூரஜ்.

“இல்ல, எனக்கு தைரியமில்ல. அவ என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியாது. எனக்கு அவளைப் பார்த்தாலே போதும்” வார்த்தைகள் சோகத்தைத் தோய்த்து வந்தன.

“அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்குனு சொல்லிட்டா அப்புறம் என்ன பண்ணுவ?” என்றான் சூரஜ்.

நண்பனின் வார்த்தைகளைக் கேட்ட பிரசாந்த் முகம் மலர்ந்தான். புன்னகை கன்னத்தை சிவப்பாக்கியது.

“அவளை கல்யாணம் செய்து கொள்வேன்” என்றான்.

“அது நடக்குமா? அத பத்தியெல்லாம் நீ யோசிக்க வேண்டாமா?” அவனை ஆழம் பார்த்தான் சூரஜ்.

“ஏன்? எங்க வீட்ல என் விருப்பத்தை சொன்னா ஒத்துப்பாங்க கண்டிப்பாக நடக்கும்” என்றான் பிரசாந்த் தீர்மானமாக.

“அவா ஆத்துல ஒத்துப்பாளா? முதல்ல அவளே ஒத்துப்பாளான்னு தெரியல” என்றான் சூரஜ் .

“அது…” பதில் சொல்லத் தடுமாறினான் பிரசாந்த்.

“சரி, முதல்ல உன் மனசுல இருக்கறதையெல்லாம் ஒரு லெட்டரா எழுது. நான் கொண்டு போய் குடுக்கறேன்” என்றான் சூரஜ்.

“எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதே… என்ன செய்யறது?” என்று குழம்பினான் பிரசாந்த்.

“ஆங்கிலம் அவளுக்குப் புரியுமானு தெரியல. வேற வழியில்ல, நீ நேர்ல அவகிட்ட பேசறது தான் பெட்டர்.” என்றான் சூரஜ்

“நான் அவளை பார்க்கறது அவளுக்குத் தெரியாது, நான் எப்படி என்ன பேசறது?” தடுமாறி தவித்தான் பிரசாந்த்.

“சரி, நானே உனக்காக தூது போறேன். நீ இங்கேயே நில்லு” என்று கூறிவிட்டு கமலி வீட்டிற்கு அருகில் இருக்கும் தன் நண்பனை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான் சூரஜ்.

பசங்களுடன் விளையாட மாடிக்கு வந்த கமலியிடம் “உங்களுடன் கொஞ்சம் பேசணும்” என்றான் சூரஜ்.

“நான் சூரஜ் அண்ணன்கிட்ட பேசிட்டு வற்ர வரைக்கும் நீங்க எல்லாரும் விளையாடுங்கோ” என்று கூறிவிட்டு வந்த கமலியிடம் கொஞ்சம் தயக்கத்துடன் ஆரம்பித்த சூரஜ்.

“நான் ஒரு விஷயம்சொல்லுவேன் பயந்துடாத” என்றான்.

“என்ன?” என்று கண்களில் சிறிது பயத்துடன் பார்த்த கமலியிடம், “அதோ அங்க பாரு” என்று சூரஜ் காட்டிய திசையில் நின்று கொண்டிருந்த பிரசாந்த்தை பார்த்தாள்.

“அவன் உன்னை லவ் பண்றானாம். நீயும் அவனை லவ் பண்றியா?” என்று கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான் சூரஜ்.

“இ…இல்..இல்லையே…”என்று சிறிது பயத்துடனும், கோபத்துடனும் சொன்னாள் கமலி.

“அவன் தான் சொன்னான், நீ தினமும் மாடிக்கு வந்து அவனுக்கு சிக்னல் குடுக்கிறியாம். உன்னோட சேர்ந்து விளையாட அவனுக்கு ஆசையா இருக்காம்.”

சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த சூரஜ் சிறிது நொடிகள் கழித்து கோபமான பார்வையுடன் சத்தமில்லாத குரலில் ஒரே சமூக உரிமையுடன் “ஆனா, ஒண்ணுத் தெரிஞ்சுக்க கமலி. அவனுக்கு அவன் அத்தை பொண்ணை சின்ன வயசிலேயே நிச்சயம் பண்ணிட்டாங்க. அவனை மடக்கிப் போடலாம்னு நினைக்காத, அவன் கோடீஸ்வரன். வானத்து நிலவ பார்த்து ரசிக்கணும். அது கையில படிக்கணும்னு ஆசைப்படக் கூடாது” என்று மிரட்டும் தொனியில் கூறினான்.

“நா… ஒண்ணுமே பண்ணல., அவனா நினைச்சுண்டா அதுக்கு நான் பொறுப்பா?” கேட்கும் போதே குரல் தழுதழுத்தது கமலிக்கு.

“அப்புறம் எதுக்கு குழந்தைதனமா இருக்கற மாதிரி ஆக்ட் பண்ற? மாடிக்கு தினமும் வந்து ஆட்டம் போடற?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சூரஜ் சொன்ன வார்த்தைகள் கூரிய வாளாய் கமலியின் மனதைக் குத்திக் கிழித்தது.

அவளைப் பாத்த அவனின் கேவலமானப் பார்வையில் அவமானம் உயிரைத் தின்றது. ஒரு கணம் செத்துப் பிழைத்தாள். அடுத்த நிமிடம் அங்கிருந்து விடுவிடுவென கீழே இறங்கினாள்.

அன்றிரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தாள். அதன்பிறகு மாடிக்கு வருவதை தவிர்த்தாள். மனம் குமுறிக் கொண்டே இருந்தது. ஆனாலும் பிரசாந்த் தன்னை காதலிக்கிறான் என்கிற எண்ண விதை அவள் ஆழ் மனதில் புதைந்தது.

பிரசாந்த் அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று சூரஜ் மூலம் அறிந்தும், அதன் பின் அவள் மாடிக்கு வராதது கண்டும் மனமுடைந்தான். வெறுமையில் ஆழ்ந்தான். பின் நண்பர்களின் தேற்றுதலாலும் தன் காதல் மேல் இருந்த நம்பிக்கையாலும் அவள் மனம் மாறுவதற்காகக் காத்திருந்தான்.

ஆறு மாதம் கடந்தது.

பள்ளிப்படிப்பு முடித்து வீட்டின் வறுமை காரணமாக வேலைக்குச் சென்றாள் கமலி.

மாலையில் வீடு இருக்கும் தெருவில் நுழைந்ததும் எதிரில் ஸ்கூட்டரில் பிரசாந்த் இவளை பார்த்தபடி வந்தான். இரு விழிகள் சிநேகத்துடனும், இரு விழிகள் கோபத்துடனும் சந்தித்துக் கொண்டு கடந்தது.

தினமும் இந்த நிகழ்வு நடக்க, நாளாக நாளாக… சிநேக விழிகள் காதலுடன் பார்க்க, கோபம் தணிந்த விழிகள் சிநேகமாய் புன்னகைத்தது. பார்வைகள் உரசி, உரசி மனதில் புதைந்திருந்த விதை வெடித்து காதல் எனும் பொறி பற்றியது. பற்றிய தீயை அணைக்க வழியறியாது தவித்தாள் கமலி.

இருவரும் பேசிக் கொள்ள சந்தர்ப்பம் இல்லாமல் தவித்தனர். இனியும் தாமதிக்க கூடாது என்று தைரியமாக தன் பெற்றோரிடம் கூறினான் பிரசாந்த் .

சமுதாயக் கோட்பாடுகளால் ஆக்கப்பட்ட கோட்டைகளைத் தகர்க்கவும், பாசவலைகளை அறுக்கவும் விருப்பமில்லாத, இரும்பு போல் இறுகிய மனம் படைத்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

காதல் என்பது தெய்வத்தின் மேல் கொள்ளும் பக்தி உணர்வு என்றும் அது மனிதர்களுக்கு வந்தால் காம ஆசை மட்டுமே என்னும் தவறான புரிதல் ஆணி வேராக மனதில் ஊன்றி ஆல விருக்ஷமாக பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து விட்டதால், அதை அசைக்க எவராலும் முடியவில்லை.

சில தெளிந்த அறிவுள்ளவர்களால் மட்டுமே காதல், மனிதர்களின் தெய்வீகத்தன்மை என்று உணர்ந்திருந்தனர். ஆனால் அவர்களால் இரும்பு போன்ற இறுகிய மனங்களை எதிர்கொள்ள முடியவில்லை.

பிரசாந்த், தான் அவள் மேல் கொண்ட அன்பை பெற்றோருக்கு உணர்த்த, தன் அறையிலேயே பஞ்சு மெத்தையை தவிர்த்து தரையில் பாய் விரித்து உறங்கினான். எளிமையான ஆடைகளை அணிந்தான். உயர்வான உணவினை சாப்பிட மறுத்தான். காலில் செருப்பின்றி நடந்தான். கோவிலுக்கு சென்று பிரார்த்தித்தான். கமலியை சந்திக்கும் ஆசையை அடக்கினான்.

கமலியும் தான் பிரசாந்த்தை மணக்க ஸ்ரீராமஜெயம் எழுதினாள். நோன்பு கடைபிடித்தாள்.

எல்லாம் சிறிது காலத்தில் மாறிவிடும் என்று எதிர்ப்பார்த்த பிரசாந்தின் பெற்றவர்களுக்கு ஐந்து வருடங்களாக அவன் மாறாதது கண்டு தங்களின் பிடிவாதத்தை தளர்த்தினர். ஏழையாக இருந்தாலும் கமலியின் நற்பண்பு கண்டுதங்கள் மருமகளாக்கி கொள்ள சம்மதித்தனர்.

உண்மையான, ஆழமான காதலால் சாதித்த அவர்களின் காதல் கதை மண்ணில் மட்டுமல்ல, விண்ணையும் தொட்டது.

(முற்றும்)  

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 16) – முகில் தினகரன்

    விடியலைத் தேடும் விவசாயி (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்