in ,

விமான விபத்து (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட், டெர்மினல் 2, கேட் நம்பர் 23A, கேபின் லக்கேஜை கால் இடுக்கில் வச்சிட்டு அந்த வரிசை கட்டி இருந்த இருக்கைகளின் ஒன்றில் அமர்ந்திருந்தேன்.

லண்டன் போற பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஃபிளைட்டுக்காக காத்திருந்தேன். இன்னும் குறைஞ்சது ஒண்ணரை மணி நேரம் ஆகுமாம், கூடவே ஆனாலும் ஆகும். பிளைட்டில் ஏதோ சின்ன கோளாறு, சரி பண்ணிட்டிருக்காங்க.

சீட் பெல்ட் போட்டுக்க டிங்னு தலை மேல இருக்கற விளக்கு எச்சரித்தது. நிறைய தடவை பிளைட்ல போயிருக்கேன். சுலபமா பெல்ட் மாட்டிக்கிட்டேன். பக்கத்துல இருந்த முதியவருக்கும் உதவி பண்ணினேன். முதலில் ரன்வேல மெதுவா ஓடி ஒரு முனைல நின்றது பி.ஏ.பிளேன்.

மெதுவா ஆரம்பிச்ச என்ஜின் சத்தம் அடிபட்ட சிங்கமா கர்ஜித்தது, தரையை கிழித்துக் கொண்டு படுவேகமாய் அந்த ஓடுபாதைல ஓட்டம் ஜிவ்வ்வ் மெதுவா மேலே மேலேனு எழும்பி அமைதியாய் 30 ஆயிரம் அடி உயரத்துல மிதந்தது. விமானப் பணிப்பெண் கொடுத்த ரெண்டு லார்ஜ் பெக்கார்டி ரம் கண்ணை அழுத்தி மயக்க நிலைக்கு தள்ளியது.

திடீர்னு பிளைட் நிலைகுலைந்த ஊஞ்சலாய் இருபுறமும் ஆடியது. வேகமாய் மூக்கை கீழே செலுத்தி பாய்ந்தது மலைச்சிகரங்களுக்கு இடையே. பயணிகள் அலறினார்கள் அபாயத்தை பூரா உணரும் முன் பிளைட் தலைகுப்புற சிதறி விழுந்தோம் பல சடலங்களை, சிலர் ஊனமடைந்துனு நினைக்கறேன்.

நான் விழுந்தது ஒரு பள்ளத்தாக்கின் இடையில் ஒரு ராட்சச மரத்தின் பிரம்மாண்ட கிளை ஒன்றில், பயப்படாம இறங்குனு அந்த கோலிக்கண் தேவனா, தேவதையா தெரியலை என்னை கை பிடித்து இறக்கி விட்டது.

சமதளம் வந்தவுடனே என்னைப் பார்த்துக் கொண்டேன், பல இடங்களில் சிராய்ப்பு எரிச்சல் சீரியஸா எதுவும் தெரியலை எல்லா உருப்புகளும் முழுசாவே இருந்தது. என்னை இறக்கி விட்டவனை(வளை)ப் பாத்து கேட்டேன், இது எந்த பிரதேசம் ,நீ என்ன பண்றே நடுக் காட்டுல.

ஒரு புன்னகை போல ஒரு வெளிச்சம் அந்த மொழுக் முகத்தில். இது பூலோகத்தின் பெல்ஜியம் பகுதி மலைக்காடு. நாங்கள் ஒரு வேலையா 320 வருஷமா இங்கே இருக்கோம். அந்த பெரும் பறக்கும் எந்திரத்தில் இருந்து நீ விழறதைப் பாத்து உன்னைக் காப்பாத்தினேன் நான் 32 ஒய்.எக்ஸ். என் கூட்டாளிகள் உன்னைப் பாத்தா மகிழ்வார்கள்.

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். ஏதோ மென்டல்கிட்ட மாட்டிக்கிட்டோமோனு பயமா இருந்தது. விறுக்கென கைகள் போல நீண்ட ஒன்று என் இடுப்பை இடுக்கி போல பற்றித் தூக்கியது, இத்தனை விரல்களா இதுதான் பேயா?

ஐந்தே நிமிடத்தில் ஒரு பரந்த மைதானம், நடுவே சர்க்கஸ் டென்ட் போல படு வெண்மையில் ஒரு இடம், மிருதுவாக உள்ளே சென்று இறக்கியது. தலைவன் போன்ற ஒருவன் ஏதோ கேட்டான். அதில் 32ஒய்எக்ஸ்னு சொன்னது புரிந்தது.

அந்த 32ஒய்எக்ஸ் பதிலுக்கு ஏதோ பறபறபறனு சொல்ல அந்த தலைவன் தன் முகத்தில் இருந்த வாய் போன்ற குழியை திறந்து வினோத சத்தம் எழுப்பினான்(னது). சுற்றி இருந்த ஒரு 11ம் அதே மாதிரி செய்ய சட்னு அமைதி.

அந்த தலைமை இப்ப தமிழில் பேசியது. ஏய் மானிடா நீ எங்களைப் பாத்ததை உன் சக மானிடர் யாருக்கும் சொல்லக் கூடாது. சொன்னால் எங்களுக்கு இடைஞ்சல் வரும், எங்கள் 320 வருட கடின உழைப்பில் இந்த எல்லா கிரகங்களையும் இணைத்து ஆட்சியைப் பிடிப்போம். உன் போன்ற அல்ப ஜந்துக்களால் எங்கள் முயற்சி கெடக் கூடாது. நண்பர் 32ஒய்எக்ஸ் உன்னை உன் இடத்தில் விட்டு விடுவார், அமைதி காக்கணும் சரியா.

நீங்கள்லாம் யாரு என்ன செய்யப் போறீங்க, உலகப்போருக்கு எதுவும் திட்டம் தீட்டுகிறீர்களா?

மீண்டும் அந்த தலைவன் தன் முகத்தில் இருந்த வாய் போன்ற குழியை திறந்து வினோத சத்தம் எழுப்பினான்(னது). சுற்றி இருந்த ஒரு 11ம் அதே மாதிரி செய்தது ஒரு கிலியை கிளப்பியது.

நண்பா எங்கள் திட்டம் போரல்ல கிரகங்களை இணைப்பது.

எங்க நாட்ல நதிகளை இணைப்பது போன்ற திட்டமா.

ஹாஹா உங்க நாட்ல அது தேர்தல் நேரத் திட்டம், நாங்க பண்றது உனக்குப் புரியாது, நீ உன் கிரகத்துக்கே போக விரும்பினால் கொண்டு சேர்த்து விடுகிறேன் இன்னும் 123 வருடம்தான் அதுவரை எங்களுக்கு இடைஞ்சல் தராதீர்கள். சரியா?

டியர் 32ஒய்எக்ஸ் இதை இவர்கள் கிரகத்தில் இது கிளம்பிய இடத்தில் கொண்டு சேர்த்து விடு.

என் முதுகில் ஏதோ ஊர்வது போல குறுகுறுப்பு 32ஒய்எக்ஸ் என் முதுகை காந்தமா ஆகர்ஷித்தது.

தலைக்கு மேலே ஒலிபெருக்கி அலறியது, லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பயணிகளை போர்டிங் செய்ய அழைக்கிறது. கேட் நம்பர் 23A  இப்போது திறக்கப்பட்டுள்ளது, எதிர்பாராத தாமதத்திற்கு மன்னிக்கவும்.

எழுந்து வரிசையில் நின்றேன். இவ்வளவு நேரம் கனவா? இல்லையே நான் அப்படியெல்லாம் தூங்கற ஆள் இல்லையே…

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தங்க பிரேஸ்லெட் (சிறுகதை) – சுஶ்ரீ

    நம்பிக்கை (சிறுகதை) – கோவை தீரா