எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தோழிகளுடன் பேசிக்கொண்டே வந்த கோகிலாவை அந்த மாலின் முன்னே நின்ற கூட்டம் ஈர்த்தது.
‘என்னவாக இருக்கும்! ஆஃபர் ஏதாவது போட்டிருப்பார்கள் !’
ஒருத்தி சொல்ல மற்றவர்கள் தலையசைத்தார்கள்.
‘போய்ப் பார்ப்போமா? ‘
அவர்கள் கூட்டம் முன்னேறியது.
‘ஏய்! உங்க அண்ணி அங்கே நிற்கிறார்கள் பார்!’
கோகிலாவும் பார்த்தாள் .
‘ஆமாம் ! அது காயத்ரி தான் !’
பார்த்ததும் அவள் எரிச்சலின் உச்சத்துக்கே போனாள்.
திகைப்புடன் பார்த்த மற்றவர்களிடம் அவள் விளக்கினாள்.
‘அம்மா , அதான், அவங்க மாமியார் இருக்கிற வரைக்கும் மாசத்துக்கு ஒரு தரமாவது எட்டிப் பார்ப்பாள் .’
‘நல்ல மருமகள் என்று காட்டிக் கொள்வதற்காக இருக்கும்.’
அவளுடைய தோழிகள் பின் பாட்டு பாடினார்கள்.
கோகிலாவின் முகம் மாறியது.
‘போய் அவளை ஒரு வழி பண்ணனும். அவளை உசத்தியா நினைக்கிற ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி மட்டம் தட்டணும்.’
‘ஹேய் , வாங்கடி!’
அந்த கும்பல் புறப்பட்டது.
‘அண்ணி ! எங்கே இந்த பக்கம் ! ரொம்ப நாளா பார்க்கவே இல்லையே! இந்த ஊரிலதான் இருக்கீங்களான்னு சந்தேகமாயிடுச்சு! அண்ணனும் வரலையா! அதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு.!’
சிநேகிதிகளுடன் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்த காயத்ரி நிமிர்ந்தாள்.
வேண்டுமென்றே ஏதோ வம்பிழுக்க வந்திருக்கிறாள் என்று புரிந்தும் சாதாரணமாக பேசினாள் .
‘உங்க அண்ணனுக்கு ஒரு சின்ன ஆபரேஷன் ஆச்சுன்னு மெசேஜ் போட்டோமே ! பதிலே இல்லை. சரி ,அவரவருக்கு ஆயிரம் வேலை என்று பேசாமல் இருந்து விட்டோம்.’
‘இன்னும் சரியாகலையா அண்ணி! அம்மா இருந்தால் அண்ணன் வந்து பார்த்திருப்பார். எங்களை எல்லாம் மறந்து விட்டீர்கள்! ‘
போலியாக கண்ணீர் விட்டாள்.
‘அதேதான், உங்க அண்ணனும் சொன்னார். அம்மான்னா திருப்பி திருப்பி கூப்பிட்டு கேட்டிருப்பாங்க எப்படியிருக்கே, என்ன ஏதென்று! மற்றவங்களுக்கு அக்கறை இருக்காதே!
‘என்ன அண்ணி இப்படி சொல்லீட்டீங்க! அண்ணன் தான் புரியாம சொல்றார் அப்படீன்னா நீங்களுமா?’
கோகிலா கண்களை அழுந்த தேய்த்து கொண்டாள்.
‘வீட்டிலே எவ்வளவோ பிரச்சினை அண்ணி! நாங்க வரணும்னு நீங்க எதிர்பார்க்கக் கூடாது’.
‘நான் எதிர்பார்க்கலைம்மா . ஆனா அக்கம் பக்கம் இருக்கிறவங்க கேட்டாங்க. எட்டிக் கூட பார்க்காம இருக்காங்க! இவர்களுக்கெல்லாம் எவ்வளவு செஞ்சிருப்பீங்க! நன்றி இல்லாவிட்டாலும் பாசமாவது இருக்கும் அப்படின்னு நினைச்சாங்களாம்!’
அவள் முகம் நிறம் மாறியது..
‘அதனால்தான் நீங்க எங்களை பார்க்காம இருக்கீங்களா! அம்மா எவ்வளவு தூரம் சொல்லிட்டு போனாங்க! எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னு. நீங்க இப்படி ஒன்றுமில்லாததை பெரிசாக்குவீங்கன்னு நினைக்கவே இல்லையே!’
தப்பையும் செய்துவிட்டு தப்பே இல்லை என்று அடித்துப் பேசும் அவளை உற்று நோக்கினாள் காயத்ரி.
வேண்டுமென்றே தன்னை பழிக்க வேண்டுமென்று தோழிகளுடன் வந்து நாடகமாடுகிறாள். அவர்களும் இவளைத்தான் ஆதரிப்பார்கள்.
சாதாரணமாக இது போன்ற சமயங்களில் காயத்ரி மௌனமாக இருந்து விடுவது வழக்கம்.
இப்போது அவள் தோழிகளும் அருகில் நிற்கிறார்கள் குடும்ப விஷயம் என்று யாரும் பேசாமல் நிற்கிறார்கள்.
‘நீ நினைக்கிறது தப்பு கோகிலா. விளையாட்டா வாங்கற மோதிரம் தொலைஞ்சிட்டா இரண்டு மூன்று தரம் தேடிப் பார்த்துட்டு விட்டுடுவோம் .அதே விலையுயர்ந்த மோதிரம் அப்படின்னா எல்லா இடத்திலும் தேடிப் பார்ப்போம் .திரும்ப திரும்ப நினைத்துப் பார்ப்போம் இல்லையா?”
‘அண்ணி நீங்க என்ன சொல்ல வரீங்க!’
‘பொறும்மா ! உறவும் அப்படித்தான். தூரத்து உறவினர் பேசாட்டா கவலைப்பட மாட்டோம். அதே நெருங்கிய உறவுகள் பேசாமல் மௌனம் சாதிக்கும் போது விலகல் வந்துவிடுகிறது இல்லையா! நம்ம கூட ஒரு விளையாட்டு மோதிரம் தான் போலிருக்கு அப்படீன்னு ஒரு நெருடல் வந்து விடுகிறது இல்லையா! ஒரு தடவை சம்பிரதாயமா பேசிட்டு ஒதுங்கற உறவுகளை நம்ம இன்னும் தேடிப் போகணுமா அப்படின்னு உங்க அண்ணன்தான் அபிப்ராயப்படுகிறார்’.
கோகிலாவுக்கு பொட்டில் அடித்தது போல இருந்தது.
‘சரிம்மா ! கொஞ்ச நாளைக்கு ஒதுங்கி இருப்போம் அப்படின்னு தான் உங்க அண்ணன் சொன்னார். நாங்க யாரையும் வெறுக்கலை. ஏன்னா யார் எப்படிங்கறது தான் தெரிஞ்சு போச்சே! ‘
சாதாரணமான குரலில் சொல்லியவள், ‘வரட்டுமா !’என்று கையசைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
வம்பர் கூட்டத்தை இழுத்து வந்து அவர்கள் முன் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட கோகிலா முகம் வெளுத்துப் போய் நின்றாள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings