நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அந்த வெய்யிலுக்கு ஒரு இளநீர் குடித்தால் தேவலாம் போல் இருந்தது.
“எவ்வளவு அம்மா?” ஒரு முறை விலை கேட்காமல் குடித்து விட்டு அநியாயமாக காசு கொடுத்ததில் இருந்து நான் கொஞ்சம் உஷார்.
“பெருசு முப்பது, சின்னது இருபத்தி அஞ்சுங்க”
விலை நியாயமாய் இருந்ததால் “முப்பது ரூபாய் இளநீர்… தண்ணி நிறைய உள்ளதாய் வெட்டும்மா” என்றேன்.
இளநீர் குடித்து விட்டு ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்த போது மீதி இருபத்தைந்து கொடுத்தாள் அந்தப் பெண். கருத்து, வியர்வை வழிய நின்றிருந்த அப்பெண்ணைப் பார்க்கும் போதே தெரிந்தது, படித்திருக்க வாய்ப்பில்லை என்று.
“இப்படி வியாபாரம் பண்றியேம்மா” என்று ஐந்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தேன்.
“இல்லீங்க ஐயா… நான் கொடுத்த இளநீர்ல தண்ணி கம்மியா இருந்தது. இதுக்கு இருபத்தி ஐந்து ரூபா போதும்” என்ற அந்தப் பெண்ணை அதிசயமாய்ப் பார்த்தேன்.
“ஐயா, நீங்க பஸ்ஸ்டேண்ட் பக்கத்தில ஓட்டல் வெச்சிருக்கீங்க தானே?” என்றாள்.
“ஆமா.. என்னைத் தெரியுமா?” என்றேன்.
“ஒரு தடவை நானும் என் வீட்டுக்காரரும் பழனி போயிட்டு நல்ல பசி நேரம், மத்தியானம் மூணு மணிக்கு சாப்பிட உங்க ஓட்டலுக்கு வந்தோம். சாப்பிட்டு விட்டு பில் கொடுத்தப்ப நீங்க பத்து ரூபாய் கம்மியாய் வாங்கினீங்க. ஏன்னு கேட்டதற்கு அப்பளம் தீர்ந்து போய் விட்டதால் அதற்காக ஒரு சாப்பாட்டுக்கு ஐந்து ரூபாய் கொறச்சுக்கிட்டீங்க. அன்னிக்கு நானும் வீட்டுக்காரரும் முடிவு செஞ்சோம்.. இனிமே நேர்மையா வியாபாரம் பண்ணனும்னு”
பக்கத்து சர்ச்சிலிருந்து குரல் கேட்டது, “நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்வீர்களாக”
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings