2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நள்ளிரவு நேரம் அந்த பூங்கொடி கிராமமே தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. நித்ராதேவி பொன்னுத்தாயையும் விட்டு வைக்கவில்லை. பொன்னுதாயி வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் கோடங்கியின் உடுக்கை சத்தம் கேட்டது.
லேசாக உறக்கம் கலைய பொன்னுத்தாயி… “கோடங்கி மரத்தடில ஒரு படி அரிசி வச்சிருக்கேன் எடுத்துக்கோ” என்றாள்.
உடுக்கையடித்த கோடாங்கி…”தாயி இந்த வீட்டுக்கு ஒரு கஷ்டம் வரப் போகுது… கட்டுன காப்பு கவுறு அவுராம பாத்துக்கோ ..ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா..” கோடங்கி உடுக்கையை அடிக்க ..
பொன்னுத்தாயி உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தாள். அடி வயிற்றில் ஒரு பயம் பந்தாய் கிளம்பியது. நள்ளிரவில் கோடங்கி சொல்லும் வார்த்தைகள் அவன் தாய் ஜக்கம்மா சொல்வது… அப்படியே பலிக்கும் என்பது அந்த ஊர் மக்கள் நம்பிக்கை. ‘என்னிக்கும் நல்ல வார்த்தை சொல்லுபவன் இன்னைக்கு இப்டி சொல்றானே..மனசே பதறியது..ஐய்யா கருப்பசாமி எந்த கேடும் வராமல் குடும்பத்தை காப்பாத்து உனக்கு பொங்கலிட்டு கெடாவெட்டுறேன்…’ பிராத்தித்துக் கொண்டாள் .
##################
சிலுசிலுவென இளம் காற்று வீசிக்கொண்டிருந்தது. இன்னும் பொழுது புலராத கருக்கல் நேரம். இன்பமான இரவின் ஊடல் பொழுதுகள் மனதிலோட எழுவதற்கு மனமின்றி படுத்துக் கிடந்தாள் செண்பகம். இரவு இன்னும் கொஞ்சம் நீளாதா என்ற ஏக்கம் மனதில்.
நேரமாகுது கருப்பசாமி வயக்காட்டுக்கு கிளம்புறதுக்குள்ள சமையல முடிக்கனும். இல்லைன்னா கிழவி ஒரு வழி பண்ணிடும் .கணவன் கையை விலக்கிவிட்டு எழுந்தாள் அவனுடைய திடகாத்திரமான உடம்பும்… முறுக்கு மீசையும்.. பரந்த மார்பும்.. என் புருஷனைப் போல் இந்த ஊர்ல யார் இருக்காங்க என்ற பெருமிதம் மனதில் எழுந்தது …
வெளியே படுத்திருந்த பொன்னுத்தாயி, “கோழி கூவியாச்சு… இன்னும் பொட்ட பிள்ளைக்கு என்ன தூக்கம்” என்று முனங்க….விடுவிடுவென எழுந்த செண்பகம் அடுப்புச் சாம்பலை அள்ளி வெளியே கொட்டிவிட்டு..சாணியை வைத்து அடுப்பை மொழுகினாள். வாளி தண்ணியில் சாணியை கலக்கி வாசல் தெளித்து, பெருக்கி, கோலம் போட்டாள்.கை காரியத்தை கட்டாய் செய்வதில் அவளை மிஞ்ச ஆள் கிடையாது.
பொன்னுத்தாயி அவளைக் கரிச்சு கொட்டிக் கொண்டே இருப்பாள். மகன் பாசத்தை பங்கு போட வந்தவளாயிற்றே..
“ஏட்டி ..சீமச்சிறுக்கி… சிமிட்டிகிட்டு திரியாத… கோயில் திருவிழா சுருக்க வருது.’ காப்புகட்டியாச்சுன்னா கருப்புகிட்ட நெருங்க கூடாது. கொஞ்ச நாளைக்கு உன் ஆத்தா வீட்ல போயி இரு.. குளிச்சு முழுகி அவனுக்கு பொங்கி கொடுக்கணும்.”
‘இந்தக் கெழவி எதுக்குத்தான் மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுதாம்…எப்ப பாரு என்ன விரட்டி விடுதிலேயே தான் குறியாயிருக்கு .’
கருப்பசாமியும் எழுந்து வயக்காட்டுக்கு கிளம்ப தயாரானான். பொண்டாட்டியை பிரிய மனம் இல்லாதவனாக
“செம்பவம் “
“என்ன கருப்பா..”
“ஏய்! என்ன கருப்பான்னு கூப்பிடாத…ஆத்தா கேட்டுச்சுன்னா உன்ன வகுந்துடும்…”
“அட போய்யா அது முன்னால உன்ன மாமான்னு தான கூப்பிடுறேன். “
“தாலி கட்டினா அடங்கிப்புடுவேன்னு நெனச்சா.. இன்னும் தான் ஆட்டம் போடுற… சீக்கிரம் அடங்கிடுவ பாரு” என்றான், விளையாட்டாய் தான் சொல்வது விரைவில் பலிக்கப் போவது தெரியாமல்.
முரட்டுத்தனமாய் அவளை இழுத்து அணைத்து “அடுத்த வாரம் காப்பு கட்டிட்டா உன்னை பார்க்க கூட விடாது கிழவி” என்றான்.
வழக்கமாக கோயில் திருவிழா ஆரம்பிக்கும் முன் பந்தக்கால் நடும் அன்றைக்கே காப்புக் கட்டிக் கொள்வான். 48 நாள் விரதமிருந்து ஊர் காவல்தெய்வம் கருப்பண்ணசாமிக்கு திருவிழா அன்று அவன்தான் கலசத்தில் நீர் சுமந்து ஊர் சுற்றி வருவான்.
அவன் அப்பா கோட்டைச்சாமி இருந்தவரை அவர்தான் கருப்பசாமிக்கு கலசம் சுமந்து வருவார். பூசாரி பூஜை வைக்கும் போது சாமியாடி குறி சொல்லுவார் .அதனால் ஊரே பயபக்தியுடன் அவரை வணங்கி வந்தது.
இப்போது அந்த மரியாதைக்கு கருப்புசாமிக்கு. ஆஜானுபாகுவான உடல் அமைப்பு கொண்ட கருப்பு கலசம் தூக்கி வரும்போது ,அந்த கருப்பண்ணசாமியே நேரில் வருவது போல மக்களுக்கு தோன்றும் .. அந்த நாற்பத்தி எட்டு நாட்கள் சுத்தபத்தமாக குளித்து பொன்னுத்தாயி தான் அவனுக்கு பொங்கிக் கொடுப்பாள்.
கருப்பு .வெளியே வர, அவன் செல்ல நாய் ராமு ஓடி வந்து அவன் மேலே தாவிக் கொஞ்சியது.” ராமு நீ இங்கனதான் இருக்கியா?” என்று பாசத்தோடு தடவி கொடுத்தான்.
வெளியே வந்த செண்பகத்தை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு அவள் மேல் ஏற,”சீ…சனியனே தூரப்போ” என்றபடி தள்ளிவிட்டாள்.
“ஏண்டி வாயில்லா ஜீவன்! உன் மேல அம்புட்டு பாசமாயிருக்கு அத போய் தள்ளி விடுறே…”
“அது உன் மேலயும்தான் பாசமா இருக்குது!” என்று முகத்தை நொடித்தாள். இவகிட்ட பேசி ஆகாது…. நடந்தான் ராமு.
கோயில் திருவிழா நெருங்க ஊர் களைகட்டத் தொடங்கியது .. திருவிழாவுக்கு பத்து நாள் முன் பந்தக்கால் நட ..ஊர் நாட்டாமைக்கு முதல் மரியாதை.. மாலை மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
“ஐயா சின்னைய்யா வரலையா?” பூசாரி கேட்க..”தம்பி திருவிழாக்கு வந்துடும்” என்றார் நாட்டாமை.
அவர் மகன் சந்துரு திருவிழாவுக்கு வந்து சேர்ந்தான். பட்டணத்தில் படித்தவன். அவனுக்கு கிராமம் என்றால் அலர்ஜி. “கிராமத்துல என்ன இருக்கு பாவாடை தாவணி பொண்ணுங்கள தவிர” என்பது அவன் நினைப்பு.கார் ஒட்டிக்கொண்டிருந்த டிரைவர் தர்மனிடம்…
“என்ன தர்மா சத்தமில்லாம வர்ர? ஊரே கலகலனு இருக்குது ..எங்க பாத்தாலும் கலர்கலரா கண்ணுக்குத் தெரியுது. சாயங்காலம் வாரியா ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம்,”
“ஐயா கிண்டல் பண்ணாதீங்க! நீங்க போயிட்டு வாங்க …”
நாட்டாமையே ஒரு குஷால் பேர்வழி தான் ,அப்பாவுக்கு தப்பாமல் பிள்ளையும் அதே போல இருந்தான் ..
அந்த ஊர் இளம்பெண்கள் சந்துருவை பார்த்தாலே விலகிப் போய்விடுவார்கள்’.பொம்பள பொறுக்கி’ என்று மனதுக்குள் ஏசிக்கொண்டனர்.
########2###########
கருப்பு காப்புக் கட்டிக் கொண்டிருந்ததால், செண்பகம் வேறு வழியில்லாமல் அம்மா வீட்டிற்கு கிளம்பினாள். இங்கேயிருந்தாலும் கிழவி ஒரு வழி பண்ணிடும்.
கருப்பு வாசலில் உள்ள கயிற்றுக் கட்டிலில் படுத்துக் உறங்கிக் கொண்டிருந்தான் . கோடங்கி சொன்னதிலிருந்து பொன்னுதாயிக்கு மனசஞ்சலத்தில் தூக்கம் வர மறுத்தது.
மறுநாள் விடிய ..பொன்னுத்தாயி எழுந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள் கருப்பசாமி”ஆத்தா நான் வயக்காட்டுக்கு போயிட்டு வரேன்.”
போற வழியில் செண்பகத்தை போய் பார்த்துவிட்டு போகலாமா என்று நினைத்தவன் .நினைப்பை மாற்றி கொண்டு நேராக நடந்தான். ராமு வால் ஆட்டியபடி பின்தொடர…” நீ எதுக்கு… இங்கேயே ஆத்தாளுக்கு துணையாக இரு ..”என்றான்.
நாட்டாமை மகன் பொழுது போகாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.சுற்றிக் கொண்டிருந்த சந்துருவின் கண்களில் ஆற்றுக்கு குளிக்கப் போகும் செண்பகம் கண்ணில் பட்டாள் ..என்ன அழகு… அரைத்த சந்தனத்தை பூசியதைப் போல நிறம்.. , வாழைத்தண்டு மாதிரி வழவழப்பாக கைகால்கள். அவளைப் பார்த்ததும் ஆசையில் கண்கள் விரிந்தன
வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கருப்பு, ராமு குறைத்துக்கொண்டு, தவித்து நிற்பதைப் பார்த்தான். அவன் அருகில் வந்ததும் ராமு வேகமாக குரைத்துக்கொண்டு ஆற்றங்கரையை நோக்கி ஓடியது.. கருப்பு பதட்டத்தில் அதன் பின்னே ஓடினான் …
அங்கே அவன் கண்ட காட்சி ..குடலைப் பிடுங்கியெறிந்தது போல இருந்தது “செம்பவம்ம்ம்ம்… “அவன் கதறலில் கிராமமே அங்கு திரண்டது. தலை மட்டும் வெளியே தெரிய ஆற்றில் பிணமாக மிதந்த கொண்டிருந்தாள் செண்பகம்.
ஊரே திகைத்து நின்றது.ஓடிவந்த நாட்டாமை..” என்னல! பார்த்துட்டு நிக்கீக! செம்பவத்தை எடுத்து வெளியே போடுங்க..அவ அப்பன், ஆத்தாவுக்கும், பொன்னுத்தாயிக்கும் சொல்லிவிடு ..குளிக்க வந்த செம்பவம் கால் தவறி பள்ளத்தில விழுந்திருப்பா…”
“ஐயா! போலீசுக்கு சொல்ல வேணாமா?” என்றான் ஒருவன்.
“இந்த கிராமத்தில் போலீசுக்கு என்னல வேல? பொழுது சாயறதுக்குள்ள அடக்கம் பண்ணிடனும்” அவசரப்படுத்தினார் நாட்டாமை.
“ஆத்தங்கரையிலேயே வளர்ந்தவ பள்ளம் தெரியாம எப்படி விழுந்து சாவா? என்ன நடந்தது?” ஊரே பேசியது.
உறைந்து போய் நின்றான் கருப்பு. என்ன நடந்தது? எப்படி நடந்தது? இந்த கேள்வியே அவனை சுற்றி சுற்றி வந்தது.
செண்பகத்தின் உடல் எரிய… கருப்புவின் மனமும் எரிந்தது. பொன்னுத்தாயி அலறல் ஊரே எதிரொலித்தது. இடுகாட்டுக்கு நாட்டாமையும், அவர் மகன் சந்துருவும் சம்பிரதாயத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தனர்.
டிரைவர் தர்மன் ,”ஐயா! வீட்டுக்குப் போகலாமா? “:என்றான் சந்துருவிடம்
கருப்புவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராமு தருமனை கண்டதும் வெறி பிடித்தது போல ஓடி அவன் மேல் பாய்ந்தது.
கருப்புக்கு எல்லாம் ஒரு நொடியில் விளங்கி போனது., அவன் கையில் எப்போதும் வைத்திருக்கும் தொரட்டி கம்பு கீழே கிடக்க அதையெடுத்து ஒரே சீவாய் தருமனின் தலையை சீவினான். அவன் கையிலிருந்த மஞ்சள் காப்பும் தெறித்து கீழே விழுந்தது.
நாட்டாமை தடுக்க “ஐயா! நான் அன்னைக்கே சந்தேகப்பட்டேன்.. இந்த தருமன் முன்னாடியே செம்பவத்துக்கு தவறாக நடக்க முயற்சி பண்ணி அடி வாங்கிட்டு ஓடிப் போனவன் . திருந்தி இருப்பான்னு நினைத்து அலட்சியமாக இருந்துட்டேன். இப்ப ராமு நடந்ததை சொல்லிடுச்சு… ராமு ஒரு நாளும் பொய் சொல்லாது.”
“செம்பகம் உன்னை நாசமாக்குன அசுரனை வதம் பண்ணிட்டேன்டி… நான் கருப்பு இல்லடி கருப்பண்ணசாமி” என்று அலறிய அலறலில் கிராமமே உறைந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
நல்ல கதை . படிப்பவர்கள் மனதை வருடிய செண்பகம், ஆழமாக வருத்தியதும் உண்மை
Thank u ma…தி.வள்ளி