இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
செளகார் பேட்டை பக்கத்துல ஒரு பிளாட்லதான் இருக்கார் பாவேஷ் அகர்வால்.அவருடைய சொத்து மதிப்பு அவரோட குடும்பத்தாருக்கே தெரியாது. பொதுவா அவர் குடும்பத்தினர் பணத்தை ஆடம்பரமான வீடு, ஆடைகள், ஆபரணங்களில் செலவு செய்ய மாட்டார்கள். பணத்தை ஏதாவது முதலீடு செய்யணும் லாபம் ஈட்டணும். அவரையும் அவர் வீடு வாகனத்தை பாக்கறவங்க அவர் சென்னையில் வரும் பெரிய ஷாப்பிங் மால், மல்டிபிளெக்ஸ் தியேட்டர், மற்றும் பல காம்ப்ளெக்ஸ்களுக்கு உரிமையாளர் என்று சொல்லவே முடியாது. பழைய ஹுண்டாய் காரில் சிமெண்ட் கலர்ல பைஜாமா குர்த்தா சிவந்த நெத்தியில் குங்குமத்தோடு வருபவரை பாத்தால் யாரோ ஒரு வட நாட்டு டூரிஸ்ட் மாதிரிதான் இருக்கும்.
தொட்டதெல்லாம் துலங்கும் கைகள் என்பார்களே அப்படிப் பட்ட கைகள் பாவேஷ் அகர்வாலுடைய கைகள்.அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவருடைய ஷாப்பிங் காம்ப்ளெக்சில் ஒரு மல்டி நேஷனல் ஸ்டோர் திறப்பு விழாவுக்காக சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார்.தன் 12 வயது பையனையும் அழைத்து வந்திருந்தார்.அதே விழாவில் பிரபல நடிகர் ரூபனும் கலந்து கொள்வதால் அவரை பார்க்க பாவேஷின் பையன், விதுர் அகர்வாலுக்கு ஆர்வம்.
மாலை 5 மணி ஃபங்ஷன் சரியான நேரத்தில் அனைத்து விருந்தினர்களும் ஆஜர்.அதிசயமாக நடிகர் ரூபன் கூட ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்து விட்டார்.
ஃபேஷன் வொர்ல்ட் (மல்டி நேஷனல் ஸ்டோர்) 8000 சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. உலகத்திலுள்ள அனைத்து நாட்டு ஃபேஷன் பொருட்களும் கண்ணை கவரும் வகையில் நிறைந்திருந்து.ரூபன் சரியாக 5.10 மணிக்கு ரிப்பன் கட் பண்ண கடை கோலகலமாக திறக்கப் பட்டது.விழா மேடையை, ரூபன், பாவேஷ் அகர்வால்,சில பிரபல அரசியல் வாதிகள் ,கடையின் முக்கிய மேலாளர் அலங்கரித்தனர்.
முதலில் கடவுள் வாழ்த்து,பின்னர் கடை மேலாளர் வரவேற்புரை,ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஆவேசப் பேச்சு (திறப்பு விழா என்பதை மறந்து அடுக்கு மொழியில் எதிர் கட்சி தலைவரை தாக்கி பேசினார்) கடைசியில் போனால் போகிறதென்று அழகான கடை அமைப்பு, மேற்கத்திய நாடுகளில் தான் பார்த்த கடைகளுக்கு ஒப்ப இருக்கிறது என தன் வெளி நாட்டு பயணங்களை கொஞ்சம் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார்.
பாவேஷ் அகர்வால் சுருக்கமாக வாழ்த்து தன் பிரத்யேக தமிழில் சொல்லி முடித்தார். ரூபன் சற்று ஹ்யூமர் கலந்து பேசி பலத்த கரகோஷம் பெற்றார்.
விழா முடிந்ததும் பாவேஷ் தன் பையன் விதுரை ரூபனுக்கு அறிமுகப் படுத்தினார். விதுருக்கு தன் அபிமான நடிகரை பார்த்ததில் பெரு மகிழ்ச்சி.ரூபன் தன் பாக்கெட்ல இருந்த பார்க்கர் பேனாவை விதுருக்கு பரிசாக கொடுத்தான். பாவேஷ் அகர்வால் ரூபனை காலைச் சிற்றுண்டிக்கு அருகில் இருந்த ரெஸ்டாரன்டுக்கு அழைத்தார்.ரூபன் ஒப்புக் கொள்ள, மூவரும் பக்கத்திலிருந்த மல்டி குசைன் ரெஸ்டாரண்டுக்கு சென்றனர், சொகுசான இடத்தில் அமர வைக்கப் பட்டனர். பேருக்குதான் காலை உணவு இருவர் மனதிலும் தம் தொழில்தான் ஓடியது.
பாவேஷ்தான் முதலில் ஆரம்பித்தார். “பல துறைல எனக்கு பிசினஸ் நடக்குது, சினிமாலயும் ஒரு தடவையாவது முயற்சி பண்ணலாம்னு பாக்கறேன், இந்த துறை எனக்கு ரொம்ப புதுசு யாரையும் சட்னு இதுல நம்பவும் முடியாது, உங்களை கேக்கலாம்னுதான்”
ரூபன்,”ரொம்ப நன்றி அகர்வால் சார், உங்களைப் பத்தி நிறைய கேள்விப் பட்டிருக்கேன். உங்க மாதிரி பெரிய பிசினஸ்மேன் திரையுலகத்துக்கும் வரணும், கண்டிப்பா நான் உங்களுக்கு துணையா நிப்பேன்”
“அப்ப ஒரு டைம் கொடுங்க விரிவா பேசுவோம் இதைப் பத்தி”
ரூபன், “நாளைக்கே லன்சுக்கு வாங்க சார் நம்ம வீட்டுக்கு, நண்டு குழம்பு, தம் பிரியாணி, செட்டி நாட்டு நான்.வெஜ் சமையல் நம்ம வீட்ல பிரமாதமா இருக்கும்”
“சிவ,சிவா, நான் சுத்த சைவம் மன்னிக்கணும்”
“ஓ சாரி சார், அப்ப பல்சுவை பரமேஸ்வர அய்யரை நாளைக்கு சமையலுக்கு கூப்படறேன் நீங்க பேமிலியோட கண்டிப்பா சாப்பிட வரணும்”
“என் மனைவி இப்ப எங்கயும் வெளியே வரதில்லை ஏதோ விரதம்.,பையன் ஸ்கூல், இவ்வளவுதான் என் பேமிலி. நான் வரேன் துணைக்கு என் உதவியாளர் வருவார்”
“கட்டாயம் வாங்க சார், நம்ம பங்களால மினி தியேட்டர் இருக்கு நல்ல படம் கூட பாக்கலாம்”
“அப்ப சரி நாளைக்கு மத்தியானம் 1 மணி வாக்குல வரேன், நன்றி உங்க பிசி டைம்ல என் கூட டைம் கொடுத்ததுக்கு”
“உங்கள மாதிரி பெரிய மனிதர்கள் கூட பேச வாய்ப்பு கிடைக்கறதுக்கு நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்”
பாவேஷ் அகர்வால் தன் பையனுடன் புறப்பட்டு சென்றார். உண்மையில் ரூபனுக்கு மிக்க மகிழ்ச்சி, இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் ஒரு கொழு கொம்பாய் இந்த அகர்வால் கிடைப்பாரோ என்ற ஒரு நம்பிக்கை.
அடுத்த வார அமர்வில், ஒரு வழியா சிவராமனின் ‘ சினம்’கதையை ரைசிங்ஸ்டார் புரொடக்ஷனின் கதைக்குழு செதுக்கி செதுக்கி காமெடி டிராக், ரொமான்ஸ் கலந்து முழு திரைக்கதை அமைத்தது. ராஜமாணிக்கத்தை திருப்திப் படுத்துவது எளிய காரியமில்லை. அவரே மகிழ்ச்சியுடன் கதைக் குழுவை பாராட்டினார். இளம் இசைமேதை அன்பரசனின் இசை, வேலன்தம்பியின் லிரிக்ஸ், அருண், கவிதாவின் குரலில் 5 பாடல்கள். எல்லாம் மெதுவே உருவாகி வந்தன.
முதலில் ஐந்து பாட்டுக்களுடன் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு ஆனது. தினசரி பத்திரிகையில் முழு பக்க விளம்பரங்கள் வந்தன. யூட்யூபில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வைரல் ஆகிக் கொண்டு வந்தது.
அன்பரசனுக்கு இன்னுமொரு இசை மகுடம். ஸ்டுடியோவில் எடுக்க வேண்டிய காட்சிகள் வேகமாக படமாயின. நெதர்லாண்ட், ஜெர்மனியில் படம் ஷூட் பண்ண இடம் தேர்வு செய்ய ஏஜண்ட்டுகள் தீவிரமாய் செயல் பட்டனர். எங்கெங்கு அனுமதி தேவையோ அங்கு பிக்சர் ஷூட்டிங் அனுமதிகள் பெறப்பட்டன.
ஹீரோ வினீத் குமார், ஹீரோயின் வனிதா மற்றும் தேவையான டெக்னீஷியன்களுக்கும் தேவையான பாஸ்போர்ட், விசா, குரூப் டிராவல் இன்ஸ்யூரன்ஸ் எல்லாம் துரிதமாக நடந்தன.
அந்த மொத்த யூனிட் உற்சாகமாக சென்னை ஏர்போர்ட்டில் இருந்து நெதர்லாண்டின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் நோக்கி புறப்பட்டது.ஒரு டூர் கைட், ஒரு பி.ஆர.ஓ. தவிர மற்ற எல்லாரும் முதன் முறையாக வெளிநாடு செல்பவர்கள.
சென்னையிலிருந்து முதலில் மும்பை சத்ரபதி சிவாஜி இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டை அடைந்தது அந்த ஏர் இந்தியா விமானம். அந்த படப்பிடிப்பு குழுவில் பலருக்கு மும்பை ஏர்போர்ட்டே வியப்பை அளித்தது.
வினீத்குமாருக்கும் இதுதான் முதன் முறை விமானப் பயணம். கிராமத்தில் ஒரு செகண்ட் ஹாண்ட் ஓட்டை சைக்கிள் வாங்க தாயாரிடம் முரண்டு பிடித்தது ஞாபகம் வந்தது. அவன் தாயார் அதை வாங்கித்தர எவ்வளவு கை தேய உழைத்திருப்பாள் என்பது அப்ப தெரியலை, இப்ப ஏனோ அந்த ஞாபகம் வந்து கண் கலங்கியது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings