in ,

வேட்கை (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இரவு பத்து மணிக்கு அந்த அலறல் கேட்டவுடன் பாஸ்கரனுக்குப் புரிந்துவிட்டது அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று.

அவனும், அம்மாவும் படுக்கை அறை ஜன்னலைத் திறந்து பார்த்தபோது குழந்தைவேலு அவன் மனைவியை அடிக்கத் துரத்துவதும், அடியிலிருந்து தப்பிக்க அவன் மனைவி தாமரைச் செல்வி அலறிக்கொண்டே வாசலில் சுற்றிச் சுற்றி ஓடுவதும் தெரிந்தது. இது வழக்கமாக மாதம் நான்கு முறையாவது நடக்கும் நிகழ்வு என்பதால், அதிகம் பதட்டம் கொள்ளாமல் பாஸ்கரனும் அவனின் அம்மாவும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடி பலமாக விழுந்தாலோ அல்லது குடிவெறியில் குழந்தைவேலு எல்லையை மீறிப் போனாலோ, தாமரைச்செல்வியின் குரல் ‘அத்தை’ என்றோ அல்லது ‘மாமா’ என்றோ வீரிடும் என்பதும் பாஸ்கரனுக்குத் தெரியும். அந்தச் சமயம் சமாதானம் செய்யப் போனால் போதும் என்று இருவரும் முடிவு செய்து கொண்டு படுக்கைக்குத் திரும்பினர்.

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு குழந்தைவேலுவும், தாமரைச்செல்வியும் புதுமணத் தம்பதிகளாக அந்த வீட்டிற்குக் குடி வந்தபோது பாஸ்கரனும் அவன் அம்மா சிவகாமியும் மகிழ்ச்சியடைந்தனர்.

காரணம் ஊரில் கிழக்குக் கோடியில் இருந்த அவர்கள் வீட்டிற்கு அக்கம் பக்கம் யாரும் குடி இல்லாமல், தனிமையில் மனித அரவம் இல்லாமல் இருந்த அவர்களுக்கு அந்தத் தம்பதியினர் வரவு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. ஊர் நூறு குடும்பம் கொண்ட சிறு கிராமம் என்றாலும், பெரும்பான்மையினர் தங்களின் தோட்டப்பகுதியில் வீடமைத்துக் குடியேறிவிட்டதால் ஏற்பட்டதுதான் இந்தத் தனிமை.

‘குழந்தைவேலு நம்ம பங்காளி வீட்டுப் பையன்… உனக்குத் தம்பி முறை’ என்று அம்மா அவனையும், அவன் மனைவி தாமரைச்செல்வியைப் பற்றியும் சொல்லி வைத்திருந்தாள்.

படிப்பிற்காக வெளியூரில் நீண்ட நாட்கள் தங்கியிருந்ததால் உள்ளூர் உறவுகள் பாஸ்கரனுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அம்மா சொன்னபிறகுதான் குழந்தைவேலுவைப் பற்றிய முழு விபரமும் தெரிந்தது அவனுக்கு.

குழந்தைவேலு சிறுவயது முதலே யாருக்கும் அடங்காமல் வளர்ந்தவன். அதிலும் அவனுக்கு ஆறு வயதாக இருந்தபோது, நோயில் அவன் தாய் இறக்க, அவனுக்கு இருந்த ஒரே ஆறுதலும் போயிற்று. அவன் வெறியை அதிகமாக்குவது போல அவனின் அப்பா இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு சித்தி என்ற பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்தார்.

சித்திக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து அவனுக்கு எரிச்சலை அதிகப்படுத்த அவன் தன் மொத்தக் குடும்பத்தையும் காரணமில்லாமல் வெறுக்கத் தொடங்கினான். பன்னிரண்டு வயதில் பீடி, சிகரெட் பதினைந்து வயதில் குடி என்று சகல பழக்கங்களும் பழகி, ஊரில் உள்ளவர்கள் இவனைக் கண்டால் விலகி ஓடும்படி நடந்துகொண்டான்.

அப்பாவின் அடியெல்லாம் அவனை அசைக்கவில்லை. மாறாக அவனைப் பார்த்து ஒரு கட்டத்தில் அவன் அப்பாவே பயந்து விலகி நிற்கும்படி ஆயிற்று. எப்படியாவது திருந்துவானா என்ற நப்பாசையில் அவனின் இருபதாவது வயதிலேயே, அவனின் சம்மதத்துடன், குழந்தைவேலுக்குப் பெண் பார்க்கத் தொடங்கினார் அவன் அப்பா.

அப்பாவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரைச்செல்வி. தனக்கென்று வாழாமல், குடும்பத்திற்கென்று வாழ்ந்த கவலை ரேகைகள் உடலிலும், முகத்திலும் தனது முத்திரையை அவர்மீது பதித்திருந்தன. அம்மா இன்னும் கொஞ்ச நாட்களேனும் உயிரோடு இருந்திருந்தால், அவரின் கவலைச் சுமை கொஞ்சம் குறைந்திருக்கக்கூடும் என்று நினைத்தாள்.

‘பையன் பக்கத்து ஊருதான் தாமரை. பேர் குழந்தைவேலு. வேற மாநிலத்துக்கெல்லாம் போய் புகையிலை வியாபாரம் செய்கிறாராம். இவர் மூத்த தாரத்துக்குப் பிறந்த பையன். இளைய தாரத்துக்கு ஒரு பையன் இருக்கிறானாம். பையனுக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் இருப்பதைத் தவிர வேறு குறைகள் எதுவும் இல்லை என்று கேள்விப்பட்டேன். ஜாதகமெல்லாம் பொருந்தி வருகிறது. கல்யாணச் செலவு பூராவும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். நம்மோட நிலைமைக்கு இதுதான் சரியான சம்பந்தம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?’ என்றார் அப்பா.

‘இப்போது எனக்கு இருபது வயசுதான் ஆகுது அப்பா. தங்கச்சி ஆறாவது படிக்கிறாள். தம்பி நாலாவது. இப்ப நான் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால் நீங்கள் எப்படி சமாளிப்பீங்கப்பா? இன்னும் இரண்டு வருசம் போகட்டுமே?’ என்றாள் கெஞ்சலுடன்.

அப்பா அந்தக் காலத்திலேயே பத்தாவது பாஸ் செய்தவர். வீட்டில் பல வசதிக் குறைவுகள் இருந்தாலும், படிப்பதற்கு ஏதாவது புத்தகங்கள் இருந்துகொண்டே இருக்கும். முக்கியமாக கவிதைப் புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பார். கண்ணதாசனின் பரம ரசிகர். அந்த ரத்தத்தில் வந்ததாலோ என்னவோ பத்தாம் வகுப்பில் சிறப்புத் தமிழில் மாநிலத்தில் இரண்டாவதாக மதிப்பெண் பெற்றிருந்தாள் தாமரைச்செல்வி.

‘நீ சொல்வது எல்லாம் சரிம்மா. உங்கள் மூன்று பேரையும் கரை சேர்க்க வேண்டுமே என்ற கவலையினாலேயே என் உடல் தளர்ந்துவிட்டது. எனக்கு ஏதாவது ஒன்று என்றால், நீங்கள் மூவரும் அநாதையாய் தனிமையில் ஆதரவின்றி நிற்க வேண்டி வரும். உனக்குத் திருமணம் நடந்துவிட்டால், அந்த வழியில் வரும் உறவுகள் என் காலத்திற்குப் பிறகு உங்களுக்குத் துணை நிற்கும். மேலும் உனக்கு செலவு செய்து திருமணம் செய்து வைக்கும் நிலையிலும் நான் இல்லை என்பது உனக்குத் தெரியும். உன்னை நான் வற்புறுத்தவில்லை. நீ புத்திசாலிப் பெண். முடிவெடுத்துச் சொன்னால் பையன் வீட்டுக்குத் தகவல் அனுப்புகிறேன்.’

பருவத்துக்கான கல்யாண‌ ஆசையென்று பெரிதாக தாமரைச்செல்விக்கு இல்லையென்றாலும், அப்பாவின் பேச்சில் இருந்த நியாயம் அவளை ஒப்புக்கொள்ளச் செய்தது.

குடும்ப வாழ்க்கையையும், குழந்தைவேலுவையும் புரிந்து கொள்ளவே தாமரைச்செல்விக்கு ஒரு வருடம் பிடித்தது. கல்யாணத்திற்குப் பிறகு தன் குடும்பத்தை, முக்கியமாக அப்பாவையும், சித்தியையும் அருகில் அண்ட விடவில்லை குழந்தைவேலு. ஊரில் யாரிடமும் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டித்துச் சொல்லியிருந்தான்.

பாஸ்கரனும் அவன் அம்மாவும் மாத்திரம் இதற்கு விதிவிலக்கு. வியாபாரத்திற்காக கர்நாடகம், ஆந்திரா என்று போனால், மாதத்தில் இருபது நாட்கள் வெளியூரில் இருப்பான் குழந்தைவேலு.

ஊரில் இருக்கும் அந்தப் பத்து நாட்களில் குடியும், அடியும் என்று வீட்டை அமர்க்களப் படுத்துவான். அவனின் கோபத்துக்கு ஒரே வடிகால் தாமரைச்செல்விதான். பிறந்த வீட்டுக்கு கோபித்துக் கொண்டு போகும் நிலையில் இல்லை அவள். அவர்களுக்கு அழகான ஒரு பையன் பிறந்த பிறகும், அவனின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் பொருளாதார ரீதியாக அவளை நல்ல முறையிலேயே வைத்திருந்தான் குழந்தைவேலு. வெளியூர் போகும்போது தாமரைச்செல்வியின் கையில் தாராளமாக பணம் கொடுத்துச் சென்றுவிடுவான். வெளியூரிலிருந்து வரும்போது பையனுக்கு வித விதமாக துணிமணிகள், அவளுக்குப் புடவை என்று வாங்கி வந்து அசத்துவான்.

இரவு ஒன்பது மணிக்கு ‘பட் பட்’ என்று அவளை அவன் அடிக்கும் சப்தமும், அதைத் தொடர்ந்து தாமரைச்செல்வியின் அழுகைக் குரலும் கேட்டதும், அப்போதுதான் படுக்கச்சென்றிருந்த‌ பாஸ்கரனும் அவன் அம்மாவும் எழுந்து வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.

தெருவில் குழந்தைவேலு கையில் சிறிய‌ குச்சியுடன் தாமரைச் செல்வியைத் துரத்திக் கொண்டு வருவதும், தோளில் சாத்திய‌ குழந்தையுடன் அவள் அடிக்குத் தப்பித்து ஓடி வருவதும் தெரிந்தது. நல்ல போதையில் உளறிக்கொண்டு தள்ளாடியபடி வந்தான் குழந்தைவேலு.

‘எதுக்கடா அவளை அடிக்கறே?’ என்றாள் அம்மா சத்தமாக.

அம்மாவின் குரலைக் கேட்டவுடன் தலையைத் தூக்கிப் பார்த்தவன், ‘ஒண்ணுமில்லைங்க பெரியம்மா..’ என்று நல்ல பிள்ளையைப் போல பம்மினான்.

‘நீ உங்க‌ வீட்ல போய் படு. அவ எங்க வீட்ல படுத்திருந்துவிட்டு காலைல வருவா’ என்றாள் அம்மா.

ஒன்றும் பேசாமல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான் குழந்தைவேலு. தேம்பிக் கொண்டிருந்த தாமரைச் செல்வியையும், நடந்தது எதையும் அறியாமல் தோளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் அம்மா.

குழந்தைக்கு வீட்டிற்குள் தொட்டில் கட்டி படுக்கவைத்துவிட்டு, தாமரைச்செல்வியின் கையில் இருந்த காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டே அம்மா சொன்னாள், ‘பாசு, நீ கயித்துக் கட்டிலைப் போட்டு ஹால்ல படுத்துக்கோ… நானும் செல்வியும் உள்ளே படுத்துக்கறோம்’.

‘சரிம்மா… இரு….. அவன் என்ன பண்றான்னு பார்க்கிறேன்’ என்று சொல்லி ஜன்னலைத் திறந்து பார்த்தான் பாஸ்கரன்.

கட்டிலில் தாறுமாறாகப் படுத்திருந்த குழந்தைவேலுவின் உருவம் மங்கலாகத் தெரிந்ததும், ‘அவன் தூங்கிட்டான்… நீங்களும் தூங்குங்க’ என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தான்.

‘சாரிங்க மாமா… உங்களை வெளிய படுக்க வெச்சுட்டேன்’ என்றாள் தாமரைச்செல்வி வருத்தத்துடன் .

‘அவனுக்கு வெளியே படுப்பது பழக்கம்தான்… நீ தூங்கு…’ என்று அம்மா அவளைச் சமாதானப்படுத்தினாள். உள்ளே தாமரைச்செல்வி அம்மாவிடம் கேட்பது காதில் விழுந்தது,

‘யாருக்கும் அடங்காத இந்த ஆளு உங்களையும், மாமாவையும் பார்த்தா மாத்திரம் பொட்டிப்பாம்பா அடங்கிடறாரு.. அது எப்படிங்க அத்தை?’.

‘அதுதான் எனக்கும் தெரியல… என்னைக்கு எங்களையும் குச்சியை எடுத்துக்கிட்டு தொரத்தப் போறானோ உம்புருசன்’ என்று அம்மா சொன்னவுடன் இருவரும் சிரிப்பது மெலிதாகக் கேட்டது பாஸ்கருக்கு.

குழந்தைவேலு உள்ளூரில் இருக்கும் பத்து நாட்களையும் அடிபட்டு, மிதிபட்டு ஓட்டிவிட்டால், பாக்கி உள்ள இருபது நாட்கள் தாமரைச்செல்விக்கு இனிமையான நாட்கள்தான். பையனைத் தூக்கிக் கொண்டு பாஸ்கரனின் வீட்டிற்கு வந்துவிட்டால் அம்மாவின் சமையலுக்கு உதவியாக இருந்து, பாஸ்கரனின் வீட்டில் உள்ள குட்டி நூலகத்தில் உள்ள புத்தகங்களை மேய்ந்து, பின் அவளின் சாப்பாட்டையும் அங்கேயே முடித்துக் கொள்வாள்.

பாஸ்கரனின் வீடும் கலகலப்பாகிவிடும். தளிர் நடை போடும் அவளின் குழந்தையினால், பாஸ்கரனுக்கும் அவன் அம்மாவிற்கும் பொழுது நன்றாகப் போயிற்று.

‘மாமா.. இதைப் பாருங்க..’ என்று ஒருநாள் கொஞ்சம் வெட்கத்துடன் ஒரு நோட்டை கொண்டு வந்து நீட்டினாள்.

‘வ்வாவா…. கவிதையா? நீ எழுதியதா? படிச்சுட்டுக் கொடுக்கிறேன்’ என்று வாங்கிக் கொண்டான் பாஸ்கரன்.

‘படிச்சுட்டு பரிகாசம் பண்ணக்கூடாது…. சரியா?’ என்றாள் தாமரைச்செல்வி.

‘ச்சேச்சே.. படிச்சுட்டுச் சொல்றேன்..’ என்றான்.

கவிதைகள் நன்றாகவே இருந்தன. காதலும், ஏழ்மையும், இயற்கையின் சிறப்பும் மேலோங்கி இருந்தன அவளின் கவிதைத் தொகுப்பில்.

அன்று பாஸ்கரனின் அம்மா நெருங்கிய சொந்தத்தில் நேர்ந்திருந்த ஒரு துக்க காரியத்திற்காக பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தார். இரவு அங்கு இருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், அடுத்த நாள் காலையில் வருவதாகச் சொல்லிச் சென்றிருந்தார். இரவு பத்து மணிக்கு குழந்தைவேலுவின் வீட்டிலிருந்து வழக்கம்போல் சண்டைச் சப்தம் கிளம்பியது. கொஞ்ச நேரத்தில் பாஸ்கரனின் வீட்டுக் கதவு ‘பட பட’ வெனத் தட்டப்பட்டது.

கையில் குழந்தையுடனும், கசங்கிய உடையுடனும், நெற்றியில் ரத்தக் காயத்துடனும் வாயிற்கதவின் முன் நிற்றிருந்தாள் தாமரைச்செல்வி. அன்று அடி அதிகம் போலும். கண்ணிலிருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.

கையிலிருந்த குழந்தை வேறு தூக்கத்திலிருந்து விழித்து அழத் தொடங்கியது. பின்னால் துரத்திக்கொண்டு வருகிறானா என்று எட்டிப் பார்த்தான் பாஸ்கரன். அரவம் இல்லை… வீட்டிற்குத் திரும்பிப் போயிருப்பான்.

‘மாமா .. என்னை அடிச்சே கொன்னுருவான் போல.. அத்தை எங்க? வரச் சொல்லுங்க… இன்னிக்கு இரண்டில ஒண்ணு தீர்மானிக்க வேண்டும்.. முடியலைங்க மாமா’ என்று கதறினாள்.

அவளை உள்ளே வரச் சொல்லி, நெற்றியில் ஒழுக்கிக் கொண்டிருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து, வீட்டில் இருந்த ஆயிண்மென்ட் போட்டு விட் டான். நெற்றிக்காயத்திற்கு மருந்து போடும்போதும், வீங்கியிருந்த அவள் உதட்டைத் துடைத்து மருந்து போட்ட போதும் பாஸ்கரனின் முகமும் அவள் முகமும் அரை அடி இடைவெளியில் நெருங்கி இருந்தது.

அந்த இளம் முகத்தில் அவன் விரல் மூலம் ஸ்பரிசித்த அவளின் மென்மை அவன் இளமையின் உணர்வுகளைத் தூண்டியது. பாஸ்கரனின் அம்மா வீட்டில் இருந்திருந்தால் இந்த சங்கடம் நேர்ந்திருக்காது. பாஸ்கரன் கொடுத்த தண்ணீரை மூச்சு விடாமல் முழுவதும் குடித்து முடித்தாள்.

‘சரி வா.. உன்னை கொண்டு போய் உன் வீட்டில் விடுகிறேன்’ என்றவுடன் பதறினாள் தாமரைச்செல்வி.

‘வேண்டாம் மாமா.. இன்னிக்கு கொல வெறில இருக்கான். குடி ஓவர்…இருந்திட்டு காலைல போறன்’ என்றாள்.

‘பாரு செல்வி.. அம்மா வீட்ல இல்ல. இன்னைக்கு நீ இங்க தங்கினா தப்பா போயிடும். நான் உன்னை கூட்டிக்கிட்டுப் போய் விடறேன். குழந்தைவேலுகிட்ட நான் பேசறேன்.. வா’ என்றவுடன் தயக்கத்துடன் பாஸ்கரன் பின்னால் ஆட்டுக் குட்டி போல நடந்தாள்.

கட்டிலில் படுத்து குடி வெறியில் பினாத்திக் கொண்டிருந்தான் குழந்தைவேலு.

‘டேய் குழந்தை.. இங்க பாரு’ என்ற பாஸ்கரனின் குரலைக் கேட்டவுடன் தலையைத் தூக்கிப் பார்த்தான்.

அந்தப் போதையிலும் அரக்கப்பரக்க எழுந்து பாஸ்கரனை குழப்பத்துடன் பார்த்தான்.

‘இதோ பார்…அம்மா ஊர்ல இல்ல. இவளை எங்க வீட்ல படுக்க வைக்க முடியாது. விடியற வரைக்கும் இவ கூட சண்டை போடக்கூடாது. உன் கை இவ மேல படக்கூடாது. என்ன?’ என்றான் பாஸ்கரன்.

மந்திரித்து விட்டவன் போல சொன்னான் குழந்தைவேலு,

‘சரிங்கண்ணா… தாமரை… நீயும் குழந்தையும் உள்ள படுத்துக்குங்க… நான் இங்க படுத்துக்கறேன்’ என்றான் நல்லவனாக‌. இதுதான் சமயம் என்று வீட்டிற்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள் தாமரைச்செல்வி.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் தபால்காரர் வந்து தபாலில் வந்திருந்த ‘குங்குமம்’ வார இதழை பாஸ்கரனிடம் கொடுத்துவிட்டுப் போனார். குங்குமத்தில் அவன் எதிர்பார்த்தது பிரசுரமாகியிருந்தது.

அன்று அம்மா பக்கத்து ஊரிலிருக்கும் தன் அண்ணனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். மாலை ஏழு மணி வாக்கில் மாமா மொபட்டில் கொண்டு வந்து அம்மாவை விட்டுவிட்டுப் போவார். மாதம் ஒரு முறை வழக்கமாக நடக்கும் பாசமலர் கதை இது.

வீட்டில் பொழுது போகாததால், குங்குமம் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தாமரைச்செல்வியின் வீட்டிற்குப் போனான் பாஸ்கரன். வீட்டின் தாழ்வாரத்தில் கட்டியிருந்த தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் உள்ளே தாமரைச்செல்வி மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.

‘செல்வி..’ என்று குரல் கொடுத்தான்.

குரலை அடையாளம் கண்டு கொண்டாள் போலும், ‘உள்ள வாங்க மாமா’ என்றாள்.

தாளிடாமல் சாத்தியிருந்த கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பாஸ்கரன். அரிவாள்மணையில் காய் நறுக்கிக் கொண்டிருந்த தாமரைச்செல்வி முகமலர்ச்சியுடன் சிரித்துக் கொண்டே, ‘இன்னிக்கு மழை வரப்போகுது. மாமா எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க..’ என்றாள்.

அப்போதுதான் குளித்திருப்பாள் போலும். எழுந்து அவள் அருகில் வந்தபோது சந்தன சோப்பின் வாசம் அவளோடு கூட‌ வந்தது.

‘இதோ பார்… இதை உனக்கு காண்பிக்கத்தான் வந்தேன்’ என்று குங்குமத்தின் ஒரு பக்கத்தைக் காட்டினான் பாஸ்கரன்.

‘தாபம்’ என்ற தலைப்பில் வந்திருந்த கவிதையின் கீழ் ‘தாமரைச்செல்வி’ என்ற பெயரைப் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியில் ஒரு நிமிடம் கண் இமைக்காமல் நின்றாள்.

‘நான்தான் குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பினேன். நீ கொடுத்த உன் கவிதை நோட்டிலிருந்து தேர்ந்தெடுத்து. நூறு ரூபாய் பரிசோடு வெளியிட்டு இருக்கிறார்கள். இனிமேல் நீ கவிதாயினி என்று தைரியமாக வெளியே சொல்லிக் கொள்ளலாம்’ என்றான் பாஸ்கரன்.

அடுத்த கணம் நடந்ததுதான் பாஸ்கரன் எதிர்பார்க்காதது. உணர்ச்சி மிகுதியில் புத்தகத்தை கையில் பிடித்தபடி ஓடி வந்து அவனை இறுகக் கட்டிக்கொண்டாள் தாமரைச்செல்வி. அதிர்ச்சியில் உறைந்து நின்ற பாஸ்கரனுக்கு அவளின் பிடி இறுகுவது நன்கு தெரிந்தது.

இதுவரை அவனுக்குப் பரிச்சயம் இல்லாத பெண்ணின் மென்மையான ஸ்பரிசமும், உரசலும் அவனை நிலைகுலையச் செய்தது. குளிர்ந்த அவளின் கன்னம் அவன் கழுத்தில் உரசி அவனின் உணர்வுகளை மீட்டிவிட்டது. ஒரு கணம்தான் அந்த நிலை. சுதாகரித்துக் கொண்டு அவளை பலவந்தமாகப் பிரித்தான் பாஸ்கரன்.

ஏக்கத்துடன் அவனின் முகத்தைப் பார்த்த அவ‌ளின் கண்களைப் பார்த்துச் சொன்னான், ‘வேண்டாம் செல்வி… பழைய உறவில் இருந்த கண்ணியமும், எதார்த்தமும் ஐந்து நிமிடத்தில் தொலைந்து போக விட வேண்டாம். நீயும் நானும் இனி வரும் காலங்களிலும் தலை நிமிர்ந்தே நடக்க வேண்டும். நீ அடிக்கடி அம்மாவிடம் கேட்பாயே? குழந்தைவேலு ஏன் அம்மாவையும், என்னையும் பார்த்து பயந்து போகிறான் என்று… அது பயத்தினால் அல்ல. அவன் பயமறியாதவன். எங்களின் நேர்மைக்கும், உண்மைத்தன்மைக்கும் அவன் கொடுக்கும் மரியாதை அது. உனக்கு இருக்கும் ஒரே புகலிடம் எங்கள் வீடு ஒன்றுதான். அதையும் நம் நடத்தையினால் நீ இழந்து விடக்கூடாது. புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்’.

திரும்பி நடந்த அவன் உருவத்தைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் தாமரைச்செல்வி. நடக்க நடக்க அவன் உயரம் கூடிக்கொண்டே போவது போல் தோன்றியது அவள் கண்களுக்கு.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மாவின் புடவை (சிறுகதை) – தெய்வநாயகி அய்யாசாமி

    ஒரு காதல் கதை (பகுதி 1) – ராஜா ஹரி