in ,

வெல்வதும் எளிது (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

      நாளை மறுநாள் சாவித்திரி அந்த ஊருக்குப் புறப்படுகிறாள்.

       நினைவுச் சிறகுகள் அந்த ஊரை நோக்கி…. அந்த நாளை நோக்கிப் பறந்தன

       அந்த ஊர்  சாவித்திரி பிறந்து, வளர்ந்த ஊர். பதினேழு வருடங்களுக்கு முன் அந்த ஊரை விட்டு வந்தவள் இப்போதுதான் திரும்பப் போகிறாள்.  நகரத்தில் தான் நடத்திக் கொண்டிருக்கும் நவீனத்துவம் வாய்ந்த மகளிர் அழகு நிலையத்தின் கிளையை அந்த ஊரில் துவக்குவதற்கான ஏற்பாடுகளுடன்.

       காரணம்?… காயம்!.

       வாழ்வின் லட்சியமே அந்த ஊரில் ஒரு அழகு நிலையம் உருவாக்குவதுதான்.  அதற்காகத்தானே அந்த அழகுக் கலை கோர்ஸே படித்தாள்.

       சவங்களுக்கு இறுதி ஜோடிப்பு செய்வதை குலத் தொழிலாய்க் கொண்ட குடும்பத்தில் பிறந்தவள் என்கிற காரணத்திற்காக பதினேழு வருடங்களுக்கு முன் அவள் பட்ட ஒரு அவமானம்தான் அவளுக்கு ஒரு தூண்டுகோல்.  அவளது தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் எல்லோருமே அவமானங்களை ஏற்றுக் கொண்டு மனித ஜடங்களாக வாழ்ந்ததை நினைக்கும் போதெல்லாம் அவளுக்குள்  கோபத்தீ மூளும்.

       பல வருடங்களுக்கு முன், ஒரு நாள் கோபத்தீ மூண்டது.

       அப்போது சாவித்திரிக்கு வயது பத்து.  ஊர்ப் பெரியவர் பொன்னுரங்கம் வீட்டு மாட்டுக் கொட்டிலில் எடுபிடி வேலைக்கு அவளை விட்டிருந்தார் அவள் தந்தை.  கல்வி கற்க வேண்டும், எதிர்காலத்தில் பெரியதொரு நிலைக்கு வர வேண்டும், என்கிற ஆசையை தனக்குள் வைத்திருந்த சாவித்திரி, சற்றும் பிடிக்காத அந்த வேலையைத் தந்தையின் அடிக்கு பயந்து செய்து கொண்டிருந்தாள்.

       அன்று காலையில் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தவளை “தர…தர”வென்று இழுத்து வந்து பொன்னுரங்கம் முன் நிறுத்தி, “சாமி… இந்தக் கழுதையை…“வேலைக்குப் போக மாட்டேன்…. இஸ்கூலுக்குத்தான் போவேன்”ன்னு அடம் பிடிக்கறா சாமி!… நீங்க ரெண்டு போடுங்க சாமி… அப்பத்தான் கேட்பா”என்று மகளை அடிக்கும் உரிமையைத் தன் முதலாளிக்குத் தாரை வார்த்தார் சாவித்திரியின் தந்தை.

       ஒரே எட்டில் அவள் தலை முடியைப் பற்றி வெறி கொண்ட மட்டும் இழுத்து “ஏலேய் சவம் ஜோடிக்கற இனத்துல பொறந்த கழுதைக்குப் படிப்புக் கேட்குதாலேய்?” என்றபடி வேகமாய்த் தள்ளி விட எகிறிப் போய் விழுந்தாள் சாவித்திரி.

      விழுந்தவள் வேகமாய் எழுந்து பொன்னுரங்கம் அய்யாவை முறைக்க பதறியபடி வந்த தந்தை.

       “அய்யாவையே மொறைக்கறியா?” என்று சொல்லி அவள் முதுகில் நாலு வைக்க,

       “ச்சீய்…பெத்த மகளை இன்னொருத்தன் அடிக்கறதைப் பார்த்திட்டு நிக்கறியே?… நீயும் ஒரு அப்பனா?” சீறினாள்.

       “ஏலேய்… உங்கொப்பன் என்ன பெரிய கலெக்டரா?…. ஊருல எங்க சாவு விழுகுது… போய் சவத்தை… ஜோடிச்சு… காசு வாங்கலாம்!னு குந்திக்கிட்டிருக்கற கூறு கெட்டவன்!” கெக்கலித்தார் பொன்னுரங்கம்.

       “நாளைக்கு நீங்களே வாயைப் பொளந்துக்கிட்டுப் போனாலும் எங்கப்பந்தான் வருவான் ஜோடிக்க…” சாவித்திரி கொந்தளித்தாள்.

       “தெரியுதல்ல?….அப்புறம் “படிக்கப் போறேன்… இடிக்கப் போறேன்!”னு குதிக்கறே?”

       “நாங்கெல்லாம் படிக்கக் கூடாது!ன்னு எந்தச் சட்டம் சொல்லுது?” கேட்டாள் சாவித்திரி.

       ஆவேசமுற்ற பொன்னுரங்கம் கையை ஓங்கிக் கொண்டு அவளை நெருங்க

       “இதுக்கு மேலே உனக்கு மரியாதை கெடையாது!… பொணம் ஜோடிக்கற வேலையெல்லாம் எங்கப்பனோட கடைசி… இனி அது எங்க பரம்பரைல இருக்காது!…. நான் படிக்கத்தான் போறேன்!…. படிச்சு அந்த நிலைமையை மாற்றத்தான் போறேன்!”

       சொல்லி விட்டு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் அன்று புறப்பட்டு வந்தவள்….

       பதினேழு வருடங்களுக்குப் பிறகு… அந்த ஊரின் மண்ணை மிதிக்கப் போகிறாள்.

       கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்திற்கு வந்தவள். திக்குத் தெரியாமல் நிற்க, அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார் புனித இம்மானுவல் சர்ச் ஃபாதர். சர்ச் வளாகத்திற்கு இருக்கும் அனாதை இல்லத்திலேயே அவளைச் சேர்த்துக் கொண்டு கல்வியும் பயிற்றுவித்தார்.

       ஒரு கால கட்டத்திற்குப் பின் “நீ என்ன கோர்ஸ் படிக்க ஆசைப்படறே?” என்று ஃபாதர் கேட்ட போது

       “பியூட்டிஸியன் கோர்ஸ் ஃபாதர்!… அது என் லட்சியம் ஃபாதர்”என்று சொல்லி அந்தக் கோர்ஸில் சேர்ந்து படித்தாள்.  கால ஓட்டத்தில் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றாள். 

*****

       சொந்த மண்ணில் கால் பதித்ததும் மேனி சிலிர்த்தது சாவித்திரிக்கு.

       ஒப்பனை பூசப்பட்டிருந்த பழைய தெருக்கள் அவளை கை நீட்டி வரவேற்றன.

       வயல்கள் குறைந்திருந்தாலும் ஊரில் வளமை அதிகரித்திருந்தது. ஓட்டுக் கட்டிடத்திலிருந்த பள்ளிக் கூடம் கான்கிரீட் கட்டிடத்திற்கு குடி புகுந்திருந்தது. 

       அவளைக் கடந்து சென்ற பலர் முகத்தில் பெரிய கேள்விக் குறியொன்றை அடைகாத்துச் செல்ல ஒரு பெரியவரிடம், தன் தந்தையைப் பற்றி விசாரித்தாள்.

       “சவம் ஜோடிக்கற சடையனா?… அவன் செத்துப் போயி வருஷக்கணக்காச்சே?… வயல்ல பூச்சி மருந்தடிக்கும் போது மூச்சடைச்சு செத்துப் போயிட்டானே?… ஹூம்… ஊர் சவத்தையெல்லாம் ஜோடிச்சு சுடுகாட்டுக்கு அனுப்பின பயலோட சவம் ஜோடனை இல்லாமலே போனதுதான் தாயி…ரொம்பப் பரிதாபம்!”

       தந்தையின் மீது வெறுப்பு மிகுந்திருந்தாலும் ஆழ் மனப் பாசம் அவளை அழச் செய்தது.

       அந்த ஊரில் அவள் துவக்கிய “வசந்தம் மகளிர் அழகு நிலையம்” ஊர்ப் பெண்களின் கவனத்தைத் திருப்பியது.  ஆரம்பத்தில் தயக்கத்துடன் வருகை தந்த அவ்வூர்ப் பெண்கள் ஒரு கட்டத்தில் எந்தவித தயக்கமுமின்றி வாடிக்கையாக வரத் துவங்கினர்.

       தான் எதிர்பார்த்ததை விட அங்கு தன் அழகு நிலையத்திற்கு ஆதரவு கிட்டி விட தன் தனித்திறமையைக் காட்டி அவ்வூர்ப் பெண்களிடம் பெயர் வாங்கினாள்.  அவ்வூரில் நடைபெறும் திருமணங்களிலும் சாவித்திரியின் மணப்பெண் அலங்காரம் சிறப்புச் சீராக சேர்த்துக் கொள்ளப்பபட்டது.  சில உள்ளூர் தொலைக்காட்சிகள் அவளைத் தேடி வந்து பேட்டியெடுத்துச் சென்றன.

       “பொண்ணுக்கு நீங்க எது செய்யறீங்களோ இல்லையோ?… கல்யாணத்துல பொண்ணோட அலங்காரம் மட்டும் வசந்தம் பியூட்டி பார்லர் சாவித்திரி மேடத்தோடது தான் இருக்கணும்!…”என்று மாப்பிள்ளை வீட்டார்கள் குறிப்பிட்டுக் கேட்கும்படி கொடி நாட்டியிருந்தாள் சாவித்திரி.

       மூன்று மாதங்களுக்குப் பிறகு,

       காலை பதினோரு மணி.

      யாரோ அழைக்கும் குரல் கேட்க எழுந்து சென்று பார்த்தாள் சாவித்திரி.

       தலையில் முண்டாசுடன் ஒருத்தன் நின்று கொண்டிருந்தான்.  சற்றுத் தள்ளி பண்ணை இரட்டைக் குதிரை சாரட் வண்டி நின்று கொண்டிருந்தது.  “அம்மாவ… பெரிய வீட்டுல கூட்டிட்டு வரச் சொன்னாங்க!” அவன் குரலில்  பவ்யம்.

       “பெரிய வீடா?… அப்படின்னா…?” கேட்டாள்.

       “ஆமாம்மா…ஊர்ப் பெரியவர் வீடுங்க”

       “பொன்னுரங்கம் அய்யா…..வீடா?” என்று சாவித்திரி இழுக்க

       “.அவரு பெரிய அய்யா… இறந்திட்டாரு!… இவரு சின்னவரு… பரமேஸ்வர் அய்யா”என்றான் அவன்.

       “ஓ…”என்றவாறே யோசித்தாள் சாவித்திரி.  “நான் அவமானப்படுத்தப்பட்ட அதே இடத்துல போய் இவங்களை அவமானப்படுத்திட்டு வரணும்!”

       “சரி… புறப்படலாம்!” என்றாள்..

       பதினேழு வருடங்களுக்கு முன்தான் அடித்து உதைக்கப்பட்ட பண்ணை வீட்டின் கேட்டிற்குள் பண்ணை வீட்டு சாரட் வண்டியில் நுழையும் போது சாவித்திரியின் உள்ளம் உற்சாகத்தில் கூவியது. 

       அன்று அவளை அசிங்கப்படுத்திய அந்த வீட்டு மனிதர்கள் இன்று போட்டி போட்டுக் கொண்டு வரவேற்றனர்..

       முன் ஹாலில் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து அவளை வரவேற்ற பரமேஸ்வர் அய்யாவின் முகத்தில் பொன்னுரங்கம் அய்யாவின் சாயல் அச்சு அசலாய்.

       “வாம்மா… உட்காரும்மா”

       சுவரில் பெரிய மாலையுடன் பொன்னுரங்கள் அய்யாவின் புகைப்படம்.

      “எனக்கு நிறைய வேலையிருக்கு… எது சொல்றதுனாலும் கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க!… நான் போகணும்”என்றாள் அமர்த்தலாய்.

       தொண்டையைக் கனைத்துக் கொண்ட பரமேஸ்வர் அய்யா “இவள் என் மகள்!… செண்பகம்!… அடுத்த வாரம் புதன்கிழமை இவளுக்குக் கல்யாணம்!… கல்யாணத்துல பொண்ணுக்கு நீங்கதான் அலங்காரம் பண்ணனும்!னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்தக்கால்ல நிக்கறாங்க!… என்ன சொல்றீங்க?… நீங்களே பண்ணிக் குடுத்துடறீங்களா?” கேட்க

       ஒரு சிறிய யோசிப்பிற்குப் பின் “சரிங்க பண்ணிடலாம்”என்றாள்.

       மகிழ்ந்து போன மணப்பெண் தாவி வந்து சாவித்திரியின் கைகளைப் பற்றி முத்தமிட்டாள்.

       சாவித்திரிக்கான அட்வான்ஸை பரமேஸ்வர் அய்யா வந்து நீட்ட சந்தோஷமாய் வாங்கிக் கொண்டாள்..

       “அன்னிக்கு பொணத்தை ஜோடிக்கற வம்சத்துல வந்த ஈனப்பிறவின்னு என்னைத் துரத்தியடிச்ச அதே வீட்டில் இன்னிக்கு மணப்பெண் அலங்காரத்துக்காக அட்வான்ஸ் குடுக்கறாங்க!” புகைப்படத்திலிருந்த பொன்னுரங்கம் அய்யாவை வெற்றிப் பார்வை பார்த்தாள்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                                    

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பொரி உருண்டை ஆத்தா! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    பார்வைக்குப் புரியாது (சிறுகதை) – முகில் தினகரன், கோவை